“ஆனா ராஜேந்திரன் வேற சொன்னானேம்மா?”
“சின்ன சின்ன சறுக்கல் வாறதெல்லாம் ஒரு விசயமாப்பா? அதக் கூடச் சமாளிக்கத் தெரியாட்டித் தையல்நாயகின்ர பேத்தி எண்டு சொல்லுறதிலேயே அர்த்தமில்லாமப் போயிடும்.” என்றவள் அதற்குமேல் அதைப் பற்றிப் பேச அவரை அனுமதிக்கவில்லை.
அவரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.
அவர் கேள்விப்பட்டது போன்று கடந்த சில வருடங்களாகத் தொழிலில் நெருக்கடிதான். பல சறுக்கல்கள். நடக்கிற அத்தனை பிரச்சனைகளும் அவளின் அனுபவத்திற்கும் திறமைக்கும் சவால் விட்டுக்கொண்டேயிருந்தன.
முக்கியமாக அவளின் கை தட்டிப் போகிற அத்தனை வாய்ப்புகளும் எதிராளியின் கைக்குப் போய்க்கொண்டிருந்தன. அதுதான் இன்னுமே அவளைத் தொந்தரவு செய்வது.
இலங்கை முழுவதும் கிளைகள் பரப்பிப் படர்ந்திருந்த ஆடையாகங்கள் பல இத்தனை காலமும் அவளின் வாடிக்கையாளராக இருந்தவர்கள். இப்போது அவளின் எதிரியின் கைவசம் போய்க்கொண்டிருந்தனர். அல்லது, இவர்களிடம் கொடுக்கும் ஆர்டரின் அளவு குறைந்திருந்தது.
அம்மா ஜெயந்தி முழுமையான இல்லத்தரசி. அவரின் ஒரே கவலை, இவள் இருபத்தி எட்டு வயதாகியும் திருமணம் செய்யாமல் தொழில் தொழில் என்று இருக்கிறாளே என்பது. தந்தை மனத்தளவிலும் உடலளவிலும் நொடிந்துபோயிருப்பவர்.
அவர்கள் இருவரிடமும் தொழில்பற்றிய எந்தக் கெட்டதுகளையும் அவள் கொண்டுபோவதில்லை. முதலில் அவளுக்கு அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கத் தெரியாது.
அவளுக்கு உதவிக்கு வரும் சுவாதிக்குக் கூட இதைப் பற்றி எதுவும் தெரியாது. தெரிவதற்கு பார்க்கும் வேலையில் ஒரு ஆர்வமும் ஈடுபாடும் வேண்டும். தமக்கை என்ன செய்கிறாள் என்கிற கவனிப்பு இருக்க வேண்டும்.
இது படிப்பை முடித்துவிட்டேன், அக்கா வரச் சொல்கிறாள் என்று வருகிறவள், இவள் சொல்கிறவற்றை மட்டும் கடமைக்கு முடித்துவிட்டுப் போய்விடுவாள்.
அதனால் அத்தனை நெருக்கடிகளையும் இளவஞ்சி தனியொருத்தியாகத்தான் சமாளித்துக்கொண்டிருந்தாள். குறைந்துபோயிருக்கும் உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும். அதற்கான ஒரு வழியாகத்தான் இன்று இரவு கொழும்பு போகிறாள்.
தையல்நாயகி அம்மாவின் காலத்திலிருந்தே பழக்கமானவர்தான் முத்துமாணிக்கம். அங்கே கொழும்பில் அவரும் ஆடைத் தொழிற்சாலைதான் வைத்திருக்கிறார்.
பிள்ளைகள் இருவரும் அவுஸ்திரேலியாவில் இருப்பதில் மனைவியோடு தானும் அங்கே சென்றுவிட முடிவெடுத்தவர், தொழிற்சாலையை விற்கலாமா என்று யோசிப்பதை அவளிடம்தான் முதன்முதலில் பகிர்ந்துகொண்டார்.
சட்டென்று உள்ளே உள்ளம் பரபரப்புற்றுவிட, அப்படி ஒரு முடிவை எடுத்தால் என்னிடம்தான் முதன்முதலில் சொல்ல வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவரும் முடிவானதும் அவளிடமே சொன்னார். ஏற்கனவே அவரின் தொழிற்சாலையைப் பார்த்திருந்தவள் விலை பேசி முடிப்பதற்கு இன்று இரவு புறப்பட்டு, நாளைக்கு அங்கு வருவதாகச் சொல்லியிருந்தாள்.
நியாயமில்லாத விலை கேட்கும் எண்ணம் அவளுக்கு இல்லை. அவரும் அதிகவிலை சொல்லப்போவதில்லை என்கையில் இது கைகூடும் என்கிற நம்பிக்கையில் இருந்தாள் இளவஞ்சி.
அன்று மதியமே விசாகனை வீட்டுக்கு அனுப்பி ஓய்வெடுக்கச் சொன்னவள், திட்டமிட்டது போலவே இரவு பத்துமணிக்கு அவளின் பிரத்தியேகக் காரியதரிசி ஆனந்தி சகிதம் கொழும்புக்குப் புறப்பட்டாள்.
எப்போதும் கொழும்பு வந்தால் தங்கும் நம்பிக்கையான ஹோட்டலில் தங்கி, குட்டியாக இளைப்பாறி, புத்துணர்ச்சியோடு தயாராகி, முத்துமாணிக்கம் வீட்டிற்குச் சென்றாள்.
முத்துமாணிக்கமும் அவர் துணைவியார் இராசம்மாவும் வாசலுக்கே வந்து வரவேற்றனர்.
“அப்பிடியே தையல்நாயகியப் பாத்த மாதிரியே இருக்கிறீங்கம்மா. அதே கம்பீரம். அதே நிமிர்வு. அதே தைரியம்.” மிகுந்த வாஞ்சையுடன் சொன்னார் மனிதர்.
தையல்நாயகி அம்மாவை அறிந்த பலரும் இதையே சொல்லக் கேட்டிருந்தவள் அழகான முறுவலோடு அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டாள்.
“நீங்க வாறீங்க எண்டு சொன்னதில இருந்து இதே தானம்மா கதை. இவர் உங்கட அப்பம்மாவை சைட் அடிச்சாரோ எண்டு எனக்குச் சந்தேகமா இருக்கு.” என்றபடி அவளுக்குக் காலை உணவைப் பரிமாறினார் இராசம்மா.
அவரின் பேச்சு மூட்டிய சிரிப்புடன், “அப்பிடியா அங்கிள்?” என்றாள் இளவஞ்சி.
“நான் ஏன் பொய் சொல்லப்போறன்? நான் ப்ரப்போஸ் பண்ண முதல் தையல்நாயகி கட்டிட்டா. இல்லாட்டி அவவத்தான் கட்டியிருப்பன். அப்பிடி ஒண்டு நடந்திருந்தா இந்தக் கொடுமைக்காரக் கிழவிட்ட இருந்து விடுதலை கிடச்சிருக்கும். எங்க?” என்று அவர் பெருமூச்சு விட்டார்.
முகத்தைத் தோளில் இடித்துவிட்டு, “அவாவை மாதிரி கெட்டிக்காரி எல்லாம் இவரைத் திரும்பிப் பாத்திருப்பாவோ எண்டு கேளுங்கோம்மா. என்னவோ நானா இருக்கப்போய் தெரியாத்தனமாக் கட்டிட்டனே எண்டு வச்சு வாழுறன்.” என்று இவளை நடுவில் வைத்து அவர்கள் செல்லச் சண்டை இட்டுக்கொள்ள, அப்பம்மாவும் இருந்திருக்கக் கூடாதா என்று ஒருகணம் கலங்கிப்போனாள் இளவஞ்சி.
ஆனாலும் சமாளித்துக்கொண்டு உணவை முடித்தாள்.
அவர் தன் தொழிற்சாலைக்குச் சொன்ன தொகை சற்று அதிகமாக இருக்க, “கூடவா இருக்கே அங்கிள்.” என்றாள் மனத்தை மறைக்காமல்.
“சக்திவேல் கார்மெண்ட்ஸ்சின்ர காதுக்குப் போனா இதவிடக் கூடத் தந்து வாங்குவினம்.” என்று புன்னகைத்தார் அவர்.
மறைமுக மிரட்டல். கை தேர்ந்த வியாபாரி இல்லையா? அவளும் சளைத்தவளா என்ன?
“அது நான் போட்டிக்கு நிக்கிறன் எண்டு தெரிஞ்சாத்தான் அங்கிள். எனக்கு வேண்டாம் எண்டு நான் சொன்னா நான் கேக்கிறதில பாதிதான் கேப்பினம்.” என்று அவளும் முறுவலித்தாள்.
அதிலிருக்கும் உண்மையில், “கெட்டிக்காரிதான்.” என்று பாராட்டிவிட்டு,
“ஆனாம்மா பாரம்பரியமான கார்மெண்ட்ஸ் எங்கட. இதால காலத்துக்கும் நீங்க லாபம் மட்டும்தான் பாப்பீங்க. அப்பிடியிருக்க நான் சொல்லுற தொகையக் குடுக்கிறதால உங்களுக்கு நட்டம் வரப்போறேல்ல.” என்று, தான் சொன்ன தொகைக்கே முடித்துவிட நின்றார் அவர்.
“உண்மைதான் அங்கிள். ஆனா நீங்க சொன்ன சக்திவேல் கார்மெண்ட்ஸ் இத வாங்கினா உங்கட பெயர் இருக்குமா எண்டு யோசிங்க. ஆனா நான் உங்கட பெயரை மாத்த மாட்டன். சோ உங்கட பெயரும் அதுக்குண்டான மரியாதையும் காலத்துக்கும் இருக்கும்.”
அந்தப் பெயர் அவருக்கு மிக மிக முக்கியம்தான். அவரும் சக்திவேலரும் வெள்ளைக்காரனின் காலத்திலிருந்தே கடல் கடந்து சென்று துணிமணிகளைக் கொண்டு வந்தும், நெசவு செய்தும் தொழில் செய்தவர்கள். அதனாலேயே அவருக்கு அவர் பெயர் நிலைத்திருப்பது முக்கியம். இதை மனத்தில் வைத்துத்தான் விற்பதைப் பற்றி அவர் அவளிடம் முதலில் சொன்னதும்.
“நல்லா யோசிங்க அங்கிள். உங்களிட்ட இருக்கிற மெஷின்ஸ் எல்லாம் பழசு. அது இன்னும் எத்தின நாளைக்கு உழைச்சுத் தரும் எண்டு தெரியாது. நீங்க பழமை மாறாம அப்பிடியே வச்சிருக்கிறீங்க. எனக்கு அது செட்டாகாது. அதுக்கும் நான் காசு போடோணும். ஆனாலும் அறா விலைக்கு நான் கேக்கேல்ல. உங்களுக்கும் எனக்கும் நியாயமான விலைதான் இது.”
அவர் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தபோதிலும் தொழில் என்று வந்தபிறகு நேர்த்தியாகவும் தெளிவாகவும் பேசினாள் அவள்.
அவள் சொன்ன அத்தனையும் உண்மை என்பதை அவரும் அறிவார். இதை விற்றுவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்ததில் இருந்தே அதன் மீதான கவனிப்பைக் குறைத்திருந்தார்.
அதில், “எதுக்கும் பொறுங்கோம்மா. மகனாக்களோட கதைச்சுப்போட்டுச் சொல்லுறன்.” என்றுவிட்டு எழுந்து உள்ளே சென்றார்.
அரை மணி நேரத்தில் திரும்பி வந்தபோது முகம் முழுக்கச் சிரிப்போடு வந்தார்.
“தம்பியாக்களுக்கும் ஓக்கேயாம். அப்ப அந்த விலைக்கே முடிப்பம்.” என்று அவர் சொன்னதும் அவள் முகமும் மலர்ந்துபோயிற்று.
“உறுதியான முடிவுதானே அங்கிள்? நான் உங்கட வார்த்தையை நம்பி இதுக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்தானே?”
“உறுதியான முடிவுதானம்மா. முத்துமாணிக்கம் கார்மெண்ட்ஸ் இனி உங்களுக்குத்தான். தேவையான ஏற்பாடுகளைப் பாருங்கோ.” என்று சொல்லி அவளை அனுப்பிவைத்தார்.
நிறைய நாள்களுக்குப் பிறகு அவள் உள்ளம் மிகுந்த உற்சாகத்தில் இருந்தது. ரெயின்கோட் தயாரிப்பில் இறங்கி, குடை, வாகனங்களை மூடப் பயன்படுத்தும் ரெட் என்று அதை வளர்த்து, அதிலும் தையல்நாயகியைப் பிரபலமான ஒரு பிராண்ட்டாக நிறுவ வேண்டும் என்பது அவளின் நெடுநாள் ஆசை.
இனி அது நிறைவேறிவிடும். தலைநகரில் இயங்கப்போகும் தொழிற்சாலை அவளின் வளர்ச்சியை இன்னும் பலபடிகள் ஏற்றிவிடப் போகிறது.
அப்போதே அதற்கான திட்டங்கள் உள்ளத்தில் கடகடவென்று உதயமாக ஆரம்பிக்க, ஐபாடை எடுத்துவைத்து அவற்றைக் குறித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.
ஆனால், அடுத்தநாள் காலையே அவளுக்கு அழைத்த முத்துமாணிக்கம் அவளிடம் மன்னிப்பைக் கேட்டுவிட்டு, அவள் கேட்ட தொகையை விடவும் அதிக தொகையில் சக்திவேல் கார்மெண்ட்ஸ் கேட்டதாகவும், பெயரையும் மாற்றிக்கொள்ள மாட்டோம் என்று சொன்னதாகவும், மகன்கள் அவர்களுக்கே கொடுக்க முடிவு செய்துவிட்டதாகவும் சொன்னார்.
அப்படியே அமர்ந்துவிட்டாள் இளவஞ்சி. இதே மனிதர்தான் முதல் நாள் உறுதியான நம்பிக்கையைத் தந்தார். மனத்தின் கொந்தளிப்பை காட்டிக்கொள்ளாமல், “அவேக்கு எப்பிடித் தெரியும் அங்கிள்? ஆர் கதச்சதாம்?” என்று விசாரித்தாள்.
“நிலன் கதச்சவனாம்.”
“ஓ!”
நிலன் பிரபாகரன்! கடந்த சில வருடங்களாக அவளின் சறுக்கல்கள் எல்லாவற்றுக்கும் காரணமாயிருப்பவன்.