அவள் சம்மதித்துவிட்டதை அறிந்து அதற்கும் குதித்தார் ஜானகி. இதுதான் அவள் திட்டம், இனிச் சக்திவேல் அழிந்துவிடும் என்று திட்டித் தீர்த்தார்.
சக்திவேலர் மட்டும் இன்னும் அமைதி காத்தார். என்னவோ அவர் ஏதோ ஒரு உலகில் தன்னை தொலைத்துவிட்டது போலொரு நிலை. நிலன் மிதுன் இருவர் முகமும் பார்க்க மறுத்தார்.
ஆனால், நிலனும் மிதுனும் விடவில்லை. அவரோடு தொடர்ந்து பேசி, மன்னிப்புக் கேட்டு, சமாதானம் செய்து, திருமணத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இரு தரப்புக் குடும்பங்களும் யாழ்ப்பாணத்தில் பெயர் சொல்லும்படியான குடும்பங்கள். ஆனாலும் மிக எளிமையாக, தொழில்துறை வட்டாரத்திலிருந்து யாரையும் அழைக்காமல், நல்லூரானின் முன்னே, நிலன் இளவஞ்சி, மிதுன் சுவாதி திருமணங்கள் நல்லபடியாகவே நடந்து முடிந்தன.
தன் இரண்டு பெண்களையும் மணக்கோலத்தில் கண்டதில் மிகவுமே நெகிழ்ந்துபோயிருந்தார் குணாளன். சுவாதி மீதிருந்த கோபம் கூடக் கரைந்துவிட்ட உணர்வு.
கண்ணுக்கு நிறைவாய்க் கணவனின் அருகில் நின்றிருந்த இளவஞ்சியைக் கண்ணீரினூடு கண்டு மகிழ்ந்தார்.
தான் அவளை மிக ஆழமாகக் காயப்படுத்திவிட்டோம் என்று அவருக்குத் தெரியாமல் இல்லை. இன்னுமே சொல்லப்போனால் அதைத் தெரிந்தேதான் செய்தார்.
அவளுக்கு அவள் பற்றிய உண்மை தெரியவராமல் இருந்திருந்தால் கூட வேறு. இனி அவள் அதை அப்படியே விடமாட்டாள். அவளிடம் இருக்கும் அமைதி கூட முதற்கட்ட அதிர்வினால் உண்டானது. அது நீங்கியதும் தோண்டித் துருவி எப்படியாவது உண்மையை அறிந்துகொள்வாள். ஏன், அவரிடமிருந்துகூட அத்தனையையும் கறந்துவிடக் கூடியவள்.
அப்படியொன்று அவள் திருமணத்தின் முன்னே நடக்குமாயின் உலகின் மொத்த ஆண்களையும் வெறுத்துவிட்டு, காலம் முழுக்கத் தனியாகவே இருந்துவிடுகிறேன் என்று சொல்லிவிடக் கூடியவள்.
அதைவிட அவளைப் போன்ற ஒருத்திக்கு அவரால் நிலனைத் தவிர்த்துப் பொறுத்தமான ஒருவனைத் தேட முடியவில்லை. அப்படியே தேடிக் கொண்டுவந்த ஒரு சில வரன்கள் கூட அவள் மனத்தைக் கவரும் வல்லமை இல்லாமல் தோற்றுத்தான் போனார்கள்.
என்றோ ஒரு நாள் என்றாலும் நிலன் அவள் உள்ளத்தைச் சலனப்படுத்தியவன் என்கையில் வேறு யோசிக்கவில்லை அவர். எதைச் சொன்னால் அவள் கட்டுப்படுவாளோ அதைச் சொல்லித் திருமணத்தை முடித்துவிட்டார். கூடவே இதை ஆண்டவன் போட்ட முடிச்சாகவே நினைத்தார்.
என்ன, அதுவரையில் அவர்களிடமிருந்து மனத்தளவில் மட்டுமே விலகி நின்றவள் அதன் பிறகு அவரோடு பேசுவதைக் கூட நிறுத்திவிட்டாள்.
நிலன் தனியாக அகப்பட்டபோது, “வெளில சாதாரணமா காட்டிக்கொண்டாலும் உள்ளுக்க படாதபாடு பட்டுக்கொண்டிருப்பா. இனியும் அவாவை அழ விட்டுடாதீங்க தம்பி. உங்கள நம்பித்தான் அவாவத் தந்திருக்கிறன்.” என்றார் கலங்கிவிட்ட விழிகளோடு.
அவர் கரத்தைப் பற்றி அழுத்திக்கொடுத்து, “கவலைப்படாதீங்க மாமா. அவளைச் சந்தோசமா வச்சிருக்க வேண்டியது என்ர பொறுப்பு.” என்றான் அவன் ஆறுதலாக.
இரண்டு தம்பதியரும் முதலில் சக்திவேலரிடம்தான் ஆசிர்வாதம் வாங்க வந்தனர்.
நிலன் இளவஞ்சி வணங்கி எழுந்ததும், “என்னவோ என்ர பேரனைக் கட்டுற எண்ணமே இல்லை எண்டு சொன்னா. இப்ப என்னவாம்?” என்றார் நிலனிடம்.
பதிலேதும் சொல்லாமல் அமைதியாகவே நின்றாள் இளவஞ்சி. என்னவோ அன்றைக்குப் போன்று இன்று அவளுக்குக் கோபம் வரவேயில்லை. நடந்துகொண்டிருப்பது அவள் திருமணம். ஆனால், யாரோ ஒருத்தியாக மனத்தளவில் தள்ளி நின்றாள்.
அவள் முகம் பார்த்த நிலன், “நீ போ!” என்று அவளை அனுப்பிவிட்டு, “அப்பப்பா! உங்களுக்கு உங்கட பேரன் நல்லாருக்கோணுமா இல்லையா?” என்றான் மெல்லிய அதட்டலாக.
“உனக்கு என்னடா பேரா குறை? நீ நல்லாத்தான் இருப்பாய்.”
“அப்ப பேசாம இருங்க.” என்றதும் அவனை முறைத்தவர் தன் ஊன்றுகோளாலேயே அவனுக்கு ஒரு அடியைப் போட்டார்.
“திமிறாடா உனக்கு? என்னையே பேசாம இருக்கச் சொல்லுவியா நீ?” என்றவரிடம், “சரி சரி கோவப்படாதீங்க! அதே மாதிரி அவளோட வம்புக்கும் போகாதீங்க.” என்று அவரைச் சமாதானம் செய்துவிட்டு அவளிடம் வந்தான்.
பிரபாகரன் சந்திரமதி, பாலகுமாரன் ஜானகி தம்பதியரையும் வணங்கி எழுந்தனர்.
ஜானகிக்கு அனைத்தையும் பார்க்க பார்க்க நெஞ்சு எரிந்தது. தன் வீட்டின் இரண்டு ஆண் வாரிசுகளையும் வளைத்துப்போட்டுவிட்டார்களே! அதைவிட அவர் மகனின் திருமணம் இப்படியா நடக்க வேண்டும்? ஆனால், நிலனின் எச்சரிக்கையும், மகன் எல்லோர் முன்னும் ஏதாவது சொல்லிவிடுவானோ என்கிற பயமும், தந்தையின் அமைதியும் அவர் வாயையும் கட்டிப் போட்டிருந்தன.
அடுத்ததாக மணமக்கள் குணாளன் ஜெயந்தியிடம் வந்தனர். அவர் முகம் கூடப் பாராது வணங்கி எழுந்தவளை உச்சி முகர்ந்த குணாளன், கட்டுப்பாட்டை இழந்து உடைந்து அழுதார்.
“அப்பாவும் சேந்து உங்களைக் காயப்படுத்திப்போட்டன் எண்டு எனக்குத் தெரியும் பிள்ளை. ஆனாம்மா…” என்றவரால் தன் மனத்தில் உள்ளவற்றைச் சொல்ல முடியவில்லை.
அன்னைக்குத் தன்னை விளங்கும் என்றே நம்பினார். அதேபோல் என்றாவது ஒரு நாள் மகளும் தன்னை உணர்வாள் என்கிற நம்பிக்கையோடு, “நீங்க நல்லா இருந்திடோணும் குஞ்சு. அது மட்டும் தானம்மா இந்த அப்பான்ர ஆசை. அதுக்காகத்தானம்மா இந்தக் கலியாணம்.” என்றார்.
அவரிடமும் அவள் எதுவும் பேசத் தயாராயில்லை.
தாய் தந்தையரை மிதுனோடு விழுந்து வணங்கிய சுவாதி, தகப்பனைக் கட்டிக்கொண்டு அழுது மன்னிப்பைக் கேட்டாள்.
மிச்ச சொச்சமாய் இருந்த அவள் மீதான குற்றம் குறைகள் எல்லாம் கரைந்துபோய்விட, அவளைத் தேற்றிக் கண்ணீரைத் துடைத்துவிட்டார் குணாளன்.
*****
நிலனின் அறையில் அவன் கட்டிலில் உறங்கமுடியாமல் புரண்டுகொண்டிருந்தாள் இளவஞ்சி. நேரம் இரவு பத்தைக் கடந்திருந்தது. பக்கத்தில் படுத்திருந்த நிலனிடமிருந்து வந்துகொண்டிருந்த சீரான சுவாசம், அவன் நல்ல உறக்கத்தில் இருக்கிறான் என்று சொல்லிற்று.
இரண்டு தம்பதியரையும் ஒரே வீட்டில் தங்க வைக்க விரும்பாமல் யாரை எங்கே வைக்கலாம் என்கிற பேச்சு வருகையிலேயே தங்கள் வீட்டில் தாங்கள் இருந்துகொள்வதாகச் சுவாதி சொல்லிவிட்டாள்.
அவளுக்கு அங்கு ஜானகி ஏதும் சொல்லிவிடுவாரோ என்று பயம். தமக்கையானால் எதையும் சமாளிப்பாள் என்று ஒரு நினைப்பு.
கடைசியில் அதுவே முடிவாகிற்று. அதன்படி இதோ அவள் அவன் அறையில். சந்திரமதி அவளிடம் மிகவும் பாசமாகவும் உள்ளன்போடும் நடந்துகொண்டார். தன் அறையில் அவளைச் சந்தித்த நிலனும் எதையும் அவளிடம் எதிர்பார்க்கவில்லை.
அவள் முகம் தாங்கி நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, “நிறைய யோசிக்காத. வாழ்க்கை போற போக்கிலயே நீயும் கொஞ்ச நாளைக்குப் போய்ப் பார். அதுவும் நல்லாத்தான் இருக்கும்.” என்றுவிட்டுப் படுத்துக்கொண்டான்.
யார் என்ன ஆறுதல் சொன்னாலும் எத்தனை இதமாக நடந்தாலும் உள்ளத்தின் இரைச்சலுக்கு மத்தியில் உறங்கமுடியாமல் தன்னோடு தானே போராடிக்கொண்டிருக்கிறாள் அவள். ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் மெதுவாக எழுந்து பால்கனிக்கு வந்தாள்.
இரவு நேரத்துக்குக் குளிர் காற்று மேனியைச் சிலிர்க்க வைத்தது. கொஞ்ச நேரம் அப்படியே நின்றாள். அந்தக் குளிர் உடலை ஊடுருவியபோதும் உள்ளத்தினும் நுழைந்து அவளை அமைதிப்படுத்த முடியாமல் தோற்று நின்றது.
திரும்பவும் சத்தமில்லாமல் அறைக்குள் வந்து பார்த்தாள். அவள் பொருள்கள் அந்த அறையில் எங்கு இருக்கின்றன என்று அவளுக்குத் தெரியவில்லை. அந்த மெல்லிய இருட்டினுள் விழிகளைச் சுழற்றியபோது அங்கே தொங்கிக்கொண்டிருந்த அவனுடைய ஷர்ட்டை கண்டாள்.
ஒரு நொடி தயங்கினாலும் அதை எடுத்துத் தன்னைச் சுற்றிப் போட்டுக்கொண்டு திரும்பவும் சென்று பால்கனியில் நின்றுகொண்டாள்.
சாய்ந்துகொள்ளத் தோள் வேண்டும் போலிருந்தது. கைகளைக் கட்டிக்கொண்டு பால்கனியின் பக்கச் சுவரில் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.
அவள் உள்ளத்தைப் போலவே இருண்டுபோய்க் கிடக்கும் வானத்தையே பார்த்திருந்தாள். தினந்தோறும் வருகிற விடியல்கள் இந்த உலகத்துக்கானவை. உனக்கான விடியல் உன் விடாமுயற்சியில் மட்டுமே உண்டு என்பதை நம்புகிறவள் அவள்.
அப்படியானால் அவள் இன்னும் எதில் விடாமுயற்சியோடு இருக்க வேண்டும்?
அவளின் வேரைப் பற்றி அறிந்துகொள்வதிலா? அவள் இல்லற வாழ்விலா? இல்லை தொழிலிலா?
அப்போது பின்னால் வந்து மென்மையாய் அவளை அணைத்தான் நிலன். ஒரு நொடி அமைதியாக நின்றுவிட்டு, “உங்கட மனதில நான் இல்லாம எனக்குப் பக்கத்தில நீங்க வரக் கூடாது நிலன்.” என்றாள் உறுதியான குரலில்.
அவள் சொன்னதற்குப் பதில்போல் அவன் அணைப்பு இறுகியது. பின்புறக் கழுத்தோரத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான்.
அவள் தடுக்கவும் இல்லை தள்ளிப்போகவும் இல்லை. அதற்கென்று தளர்ந்துகொடுக்கவும் இல்லை.
அணைப்பை இன்னுமே கொஞ்சம் இறுக்கி, அவள் தோளில் தாடையை வைத்து, “இஞ்ச என்ன செய்றாய்?” என்று பேச்சுக் கொடுத்தான்.
அவள் நின்ற நிலை மாறாமல் அப்படியே நின்றிருந்தாள்.
“நித்திரை வரேல்லையா?”
“…”
“புது இடம் எண்டுறதாலயா?”
எந்தக் கேள்விக்கும் பதில் இல்லாமல் போகவும் அவளைத் தென்புறம் திருப்பினான். இலேசாகக் கலைந்திருந்தாலும் புதிதாக வகிட்டில் வைத்துக்கொண்ட குங்குமமும் கழுத்தில் மின்னிய தாலியும் அவளைப் பேரழகியாய்க் காட்டின.
“அடியேய் அழகி! என்னோட கோவமா இருக்கிறியா?” ஒற்றைக் கரத்தால் அவள் தாடையைத் தாங்கி வினவினான்.
அப்போதும் அவள் பதில் சொல்ல மறுக்க, அவள் நெற்றியில் தன் உதட்டினைப் பதித்துவிட்டு, அப்படியே அவளை அள்ளிக்கொண்டான்.
பயந்துபோனாள் இளவஞ்சி. “என்ன செய்றீங்க? இறக்கி விடுங்க!” சத்தமில்லாமல் அதட்டினாள்.
அவன் கேட்கவில்லை. அவளைக் கொண்டுபோய்க் கட்டிலில் கிடத்தினான்.
அவளின் இரு புறமும் கைகளை ஊன்றி, “என்ர மனதில நீ இல்லாட்டி நான் பக்கத்தில வரக் கூடாது சரி! என்ர ஷேர்ட் உன்ர உடம்புக்கு வந்திருக்கே, அப்ப நான் உன்ர மனதில இருக்கிறனா?” என்றான் அவள் முகம் பார்த்து.
பார்வையாலேயே அவனை எரித்தவள், அணியாமல் தன்னைச் சுற்றி போட்டிருந்த சேர்ட்டை தன் முதுகுப் பக்கமிருந்து இழுத்து எடுத்து அவன் முகத்திலேயே தூக்கி எறிந்தாள்.
அவன் முகத்தில் பட்டுத் திரும்பவும் அவள் மீதே விழப்போனதை எடுத்து அந்தப் பக்கம் போட்டுவிட்டு, “மூக்குக்கு மேல வாற இந்தக் கோவத்துக்கு மட்டும் குறைச்சல் இல்ல.” என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டிவிட்டு அவள் அருகில் தானும் சரிந்தான்.
அவள் உடனேயே விலகிப் படுக்க அவன் தடுக்கவில்லை. ஆனால், “நான் விலகி இருக்கிறதால நீ என்ர மனதில இல்லை எண்டு நினைச்சிடாத. நீ இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளுறதுக்கான டைம்தான் இது.” என்றுவிட்டு விழிகளை மூடிக்கொண்டான்.