அழகென்ற சொல்லுக்கு அவளே 11 – 1

இரண்டு பெண் பிள்ளைகளின் திருமணத்தையும் நல்லபடியாக முடித்த ஆசுவாசம் குணாளனை அண்டவேயில்லை. ஒரு பாரம் நெஞ்சைப் போட்டு அழுத்திக்கொண்டே இருந்தது. விழிகளை மூடினால் வெறுமையைச் சுமந்து நிற்கும் மூத்த மகளின் முகம் வந்து நின்றது.

இங்கே மிதுன் சுவாதிக்கிடையிலும் எதுவும் சரியாக இருப்பதுபோல் தெரியவில்லை. இருவர் முகத்திலும் காதலித்து மணந்த மகிழ்ச்சி கொஞ்சமும் இல்லை.

சுவாதிக்கு ‘அவளும்தானே என்னோடு பழகினாள்’ என்ற மிதுனின் வார்த்தைகளைக் கடப்பது இலகுவாய் இல்லை. இருவரும்தான் பழகினார்கள். இருவரும்தான் எல்லை தாண்டினார்கள். ஆனால், அதன் பாரத்தைச் சுமப்பது அவள். அதனால் உண்டான பழியைச் சுமப்பதும் அவள். இன்னுமே மற்றவர் முகம் பார்க்க முடியாமல், தனக்குள் கூனிக் குறுக்கிக்கொண்டிருப்பதும் அவள்.

மிதுனுக்குத் திருமணம் முடிந்தும் முகம் கொடுக்காமல் இருக்கிறவள் மீது எரிச்சல் உண்டாயிற்று.

தளைகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்தே பழகியவன். ஆசைப்பட்டுத்தான் அவளோடு பழகினான். காதல் என்று பல பெண்களோடு பழகியிருந்தாலும் எல்லை தாண்டியதில்லை.

ஊர் சுற்றுவான், பார்ட்டிகள் செய்வான், கிளப்புகள் போவான், அவர்களோடு நன்றாகவே நேரம் செலவழிப்பான், கொஞ்ச நாள்களில் ஏதோ ஒரு கருத்து முரண் வரும், அவர்கள் தருகிற நெருக்கடிகள் அவனுக்குத் தாங்க முடியாததாக இருக்கும், பிரிவைச் சொல்லி விலகிவிடுவான்.

திரும்பவும் இன்னொரு பெண்ணின் மீது ஆர்வம் வரும். பிறகு அதுவும் இதே கதைதான்.

இவளோடு அப்படி இருக்க முடியவில்லை. அவர்களுக்குள் பலமுறை சண்டைகள் வந்தாலும் அதைப் பிரிவை நோக்கி நகர்த்தியதில்லை. மாறாக அதை ஊடலாக மாற்றி, அவளை எப்படியாவது சமாதானம் செய்துவிடுவான். அவ்வளவு அவளைப் பிடிக்கும். அளவுமீறிய பிடித்தம்தான் அளவைத் தாண்ட வைத்ததும்.

தவறுதான். இல்லை என்று அவனும் சொல்லவில்லை. அதுதான் திருமணமே முடிந்தாயிற்றே. வாழ்க்கையை வாழுவோம் என்று அவளை நெருங்கினால் முகம் திருப்புகிறாள். கோபம்தான் வந்தது. சரிதான் போடி என்று அவளை அவள் பாட்டுக்கு விட்டுவிட்டான்.

அவர்கள் இருவரையும் பார்த்த ஜெயந்திக்கு இன்னுமே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கும் நிலைதான். சுவாதியைக் கூப்பிட்டுக் கண்டித்தார். கணவனோடு இணக்கமாக இருக்கும்படி புத்தி சொன்னார்.

ஒரு வாரம் கடந்திருந்தது. இவர்களின் திருமணச் செய்தி கிசுகிசு என்று ஊர் முழுக்கப் பரவ ஆரம்பித்திருந்தது. அன்று மூத்த மகளையும் மருமகனையும் விருந்துக்கு அழைத்திருந்தார் குணாளன்.

அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த இளவஞ்சியின் உள்ளத்தில் பெரும் இரைச்சல். என் வீடு என்று வாழ்ந்த இடம். இன்றோ வாழப்போன வீட்டுக்கு நிகராக இந்த வீடும் அந்நியமாகத் தெரிந்தது.

ஆனாலும் அந்த வீட்டில் நிற்கையில் உயிரின் ஆழம் வரை ஒரு வலி ஊடுருவாமல் இல்லை. தையல்நாயகி அம்மாவின் கரம் பிடித்துத் தொழிற்சாலை செல்ல ஆரம்பித்ததில் தொடங்கி, கடைசியாக அவள் தலையில் இடி விழுந்த நொடி வரை நினைவில் வந்து போக, ஒரு நொடி நிலைகுலைந்துபோனாள்.

சம்பிரதாய விருந்து சிறப்பாகவே நடந்து முடிந்தது. குணாளனும் ஜெயந்தியும் அவள் முகத்தை முகத்தைப் பார்த்தனர். அது தெரிந்தும் அவர்கள் பார்வையைச் சந்திக்க மறுத்தாள் இளவஞ்சி.

சுதாகர் அவளையே சுற்றி சுற்றி வந்தான். அவளுக்கு ஆறுதலாக இருக்க முயன்றான். அவனோடு கூட மனத்திலிருந்து பேச முடியாமல் மாடியில் இருக்கும் தன் அறைக்கு வந்திருந்தாள் இளவஞ்சி.

புதிதாகப் பார்ப்பதுபோல் அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். குளியலறை, உடை மாற்றுவதற்குத் தனியாய் ஒரு பகுதி, அலுவலக வேலைகள் பார்க்கத் தனிப்பகுதி என்று விசாலமான அறை அவளுடையது.

அந்த அறைக்கு அரைவட்ட வடிவிலான பால்கனி. அதில் பாதியைக் கூரை முதற்கொண்டு கண்ணாடியால் உருவாக்கிக் கண்ணாடி வீடுபோல் மாற்றியிருந்தாள்.

அமைதியான இரவுகளை அனுபவிக்கவும் ஆழ்ந்து சிந்திக்கவும் விரும்பினால் அங்கேதான் வருவாள். அங்கு, தொங்கும் கூடை நாற்காலி ஒன்று உண்டு. அதுதான் அவளின் சிம்மாசனம். எப்போதும் அதனுள் கால்களையும் சேர்த்துப் போட்டுக்கொண்டு அமர்கையில் தன்னை மிகவுமே சின்னப்பெண் போல் உணர்வாள். உற்சாகமாகவும் இருக்கும்.

இன்றும் வந்து அமர்ந்தாள். இன்று அந்த உணர்வு வரமாட்டேன் என்றது. எதையும் சிந்திக்க முடியாத அளவில் ஒரு அழுத்தம் நிரந்தரமாக அவளைப் போட்டு அழுத்திக்கொண்டே இருந்தது.

அவளால் இங்கும் ஒட்ட முடியவில்லை. அங்கும் ஒட்ட முடியவில்லை. இப்படியேதான் போகப்போகிறதா அவள் வாழ்க்கை? அமைதியான, அழகான, இதமான ஒரு திருமண வாழ்க்கைக்கு ஆசைப்பட்டாளே! அது பேராசையோ? அதுதான் நடக்கவில்லை போலும்.

ஒரு நெடிய மூச்சுடன் அவள் நிமிர, “நல்ல வடிவா இருக்கு வஞ்சி, உன்ர ரூமும் இந்த பால்கனியும்.” என்றுகொண்டு வந்தான் நிலன்.

கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள் இளவஞ்சி. இதுவரையில் இப்படி அவள் பகுதிக்குள் யாரும் சட்டென்று வந்ததில்லை. இளையவர்கள் கூட அக்கா என்று அழைத்துவிட்டுத்தான் வருவார்கள். திடீரென்று தன் பகுதிக்குள் வந்தவனை எதிர்கொள்ள முடியாமல் பார்த்தாள்.

“என்ன பார்வை? என்னை எதிர்பாக்கேல்லயோ?” என்றான் அவன்.

கடந்த சில நாள்களாகவே மௌனத்தின் பிடியில் சிக்கிக்கொண்டவளால் இப்போதும் எதையும் பேச முடியவில்லை.

“அங்க எங்கட அறைலயும் இதே மாதிரி கிளாஸ் ரூம் செய்வமா? இரவில அதுவும் மழை நேரம் இன்னுமே நல்லா இருக்கும் எண்டு நினைக்கிறன்.”

கூடைக்குள் கோழிக்குஞ்சாகச் சுருண்டு கிடந்தவள் இப்போதும் பதில் மொழிந்தாள் இல்லை. உச்சி வெயிலைச் சுமந்தபடி கழுவித் துடைத்ததைப் போல் பளிச்சென்று இருந்த வானில் பார்வையை நிலைக்கவிட்டிருந்தாள்.

அவளையே பார்த்தான் நிலன். இங்கு வந்ததிலிருந்து யாரோடு என்ன கதைத்துக்கொண்டிருந்தாலும் அவன் கவனம் முழுக்க அவளில்தான். தாய் தந்தையரின் முகம் பாராமல், தம்பி தங்கையரோடு பெரிதாகப் பேசாமல், உணவை முடித்துக்கொண்டு இங்கே வந்துவிட்டாள். இப்போது அவனோடு பேசவும் தயாராக இல்லை.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock