அழகென்ற சொல்லுக்கு அவளே 12 – 1

கம்பீரம் குறையாமல் தொழிற்சாலைக்குச் சென்று, தனக்கும் சுவாதிக்கும் திருமணமாகிவிட்டதை முறையாக அறிவித்து, பணியாளர்களின் வாழ்த்துகளை எல்லாம் ஒட்டவைத்த ஒற்றை முறுவலோடு ஏற்று, இனிமேல் சுவாதிதான் தன் கணவனோடு இணைந்து தொழிலைக் கவனித்துக்கொள்வாள் என்று அறிவித்தாள் இளவஞ்சி.

இதுவரை காலமும் அவளோடு பயணித்த அத்தனை முகங்களிலும் பேரதிர்ச்சி. அந்தத் தொழிற்சாலையின் ஆணிவேரே இனி இல்லையென்றால் யார் பொறுப்பெடுத்தும் என்ன பயன்? இது என்ன சிறுபிள்ளை விளையாட்டா தையல்நாயகியைத் தூக்கிச் சுவாதியின் கையில் கொடுக்க?

இதுவரை காலமும் அவளோடு இணைந்து பயணித்தவர்கள், அவளுக்குத் தோள் கொடுத்தவர்கள், அவளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள், அவள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்கள் அத்தனை பேர் விழிகளிலும் கண்ணீர் மல்கிப் போயிற்று. என்னவோ தம் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்துவிட்டதைப் போன்று அவள் சொல்வதை நம்ப முடியாமல் திகைத்துப் பார்த்தனர்.

அவளை நெருங்கிக் காரணம் அறியவும், இது வேண்டாம் என்று சொல்லவும் முயன்றனர். அவள் அதற்குச் சந்தர்ப்பம் வழங்கவில்லை. ஒரு நாள் முழுக்க அங்கேயே இருந்து, பொறுப்புகளை எல்லாம் சுவாதியிடமும் மிதுனிடமும் ஒப்படைத்துவிட்டு, இதையும் தாண்டி எதுவும் தெரிய வேண்டுமாயின் எப்போது வேண்டுமானாலும் தன்னைத் தொடர்புகொள்ளும்படி சுவாதி, மிதுன், ஆனந்தி மூவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

எப்போதும் அவளை வரவேற்பதற்காக வாசலில் காத்திருக்கும் தையல்நாயகி அம்மா, இன்று அவளை அங்கிருந்து அனுப்பிவைப்பதற்கும் சிரித்த முகத்தோடு அதே வாசலில் காத்திருந்தார்.

அவரைப் பார்த்தவள் நெஞ்சினில் ஹோ என்று பெரும் இரைச்சல். அடிவயிற்றிலிருந்து பெரும் கேவல் ஒன்று வெடித்துக்கொண்டு கிளம்பிற்று. அவள் கண் முன்னாலேயே அவள் உயிரைப் பிடுங்கி யாரோ எறிவதுபோல் ஒரு வலி.

அவள் அவர்கள் மகள் இல்லை என்றபோதும் துடித்தாள்தான். ஏன், இன்று வரையிலும் கூட நம்ப முடியாமல், அதை ஜீரணித்துக்கொள்ள முடியாமல்தான் நடமாடுகிறாள்.

ஆனால் இது? இந்தத் தொழிற்சாலை? அதை அதற்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிடலாம் என்கிற முடிவை அவர்களுக்கு முதல் அவளே எடுத்துவிட்டாள்தான்.

ஆனால், முடிவெடுப்பது என்பது வேறு, அதன்படி நடப்பது என்பது வேறாயிற்றே!

இது அவள் உணர்வுகளோடும், நாளாந்த வாழ்வோடும் இரண்டரக் கலந்ததாயிற்றே. இனி இங்கே வராமல் எப்படி இருப்பாள்? இதைத் தாண்டிய ஒரு உலகம் அவளுக்குத் தெரியாதே!

நண்பர்கள் வட்டமில்லை. பொழுதுபோக்கிற்கு என்று ஒன்றுமில்லை. ஓராயிரம் கனவுகளைச் சுமந்திருந்தாளே. அவற்றை இனி என்ன செய்யப்போகிறாள்? போட்டு வைத்திருந்த திட்டங்கள்?

கண்ணைக் கட்டிக் காட்டில் அல்ல, கையைக் கட்டிக் கடலில் தள்ளிவிட்டதுபோல் உள்ளம் துடித்தது.

மெல்ல நடந்து அவரிடம் சென்றாள். அவரையே பார்த்தாள். எல்லோரிடமும் இரும்புப் பெண்மணியாக இருக்கிறவர் அவளிடம் மட்டும் கனிவோடு குழைத்த கண்டிப்பைத்தான் காட்டுவார். இன்றும் தன் புன்னகையாலும் கனிவான பார்வையாலும் அவள் உள்ளத்தினுள் அமைதியைப் பரப்ப முயன்றுகொண்டிருந்தார்.

கடவுளிடம் எதையும் மனதார வேண்டிய நிகழ்வுகள் அவளுக்கு மிக மிகச் சொற்பமாகவே நிகழ்ந்திருக்கின்றன. இன்னுமே சொல்லப்போனால் அவர் உயிர்போகும் தருவாயில்தான் ‘என் அப்பம்மாவை என்னிடமே திருப்பித் தந்துவிடு’ என்று வேண்டிய நினைவு.

மற்றும்படி அவர் இருந்தபோதும் சரி, அவர் இல்லாதபோதும் சரி ஆத்மார்த்தமான உரையாடல்களையும் தன் வேண்டுதல்களையும் அவரிடம்தான் அவள் இதுவரையில் பகிர்ந்திருக்கிறாள்.

இன்றும் அவரிடம்தான் பகிர்ந்தாள்.

‘என்னைச் சுத்தி என்ன நடக்குது எண்டு எனக்கு இன்னுமே தெளிவாத் தெரியேல்ல அப்பம்மா. நான் உங்கட பேத்தி இல்லை எண்டா, கடைசிவரையும் தையல்நாயகிய விட்டுடாத எண்டு ஏன் சொன்னீங்க? அப்பிடிச் சொன்ன நீங்க ஏன் என்னைப் பற்றிச் சொல்லேல்ல? சொல்லியிருக்க எல்லாத்துக்கும் தயாரா இருந்திருப்பேனே.’

‘இப்ப நீங்க சொன்னதையும் மீறித் தையல்நாயகியக் குடுத்திட்டுப் போறன். நான் எடுத்த இந்த முடிவு சரியா? ஆனா உரிமை இல்லாத ஒண்ட எப்பிடிச் சொந்தம் கொண்டாடுறது சொல்லுங்க?’

இன்னொருமுறை அந்த இடத்திற்கு யாரோ ஒருத்தியாக வருகிற தைரியம் அவளுக்கு வருமா தெரியாது. அதில் நெஞ்சு நிறைய அவரைப் பார்த்துவிட்டு, எப்போதும்போல் அவருக்குப் பூக்கள் போட்டு வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

நிலனின் வீட்டுக்குள் நுழைகையில் பல பக்கமிருந்தும் பார்வைகள் அவளை ஊசியாகக் குத்தும் உணர்வு. அத்தனையையும் கடந்து மாடியேறினாள். சாப்பிட வரச்சொல்லி அழைத்த சந்திரமதியிடம் பசியில்லை என்றாள்.

அவளை வற்புறுத்தி உண்ண வைக்கத் தைரியம் இல்லாமல் நின்றார் சந்திரமதி. உன் தொழிலுக்கும் நடக்கவிருக்கும் திருமணத்திற்கும் சம்மந்தமில்லை என்று அன்று அவரும்தானே அழுத்திச் சொன்னார்.

ஆனால் இன்று, அதை அவள் மொத்தமாகக் கொடுத்துவிட்டு வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறார். அவருக்கே நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. அவளுக்கு?

அவள் அந்தத் தொழிற்சாலையின் நிர்வாகியாக நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பிரமிப்போடு பார்த்தவராயிற்றே.

“இனி வந்து சமையலப் பாக்கச் சொல்லுங்க அண்ணி. சும்மா என்னவோ வெட்டி முறிக்கிறவள் மாதிரி ஊரைச் சுத்தினது எல்லாம் போதும். முதல் சமைக்கத் தெரியுமா எண்டு கேளுங்க.” என்ற ஜானகியின் எள்ளல் அவளைத் தாக்கவும் இல்லை.

“என்ன ஜானகி இது? பேசாம இரு!” என்ற பாலகுமாரனின் பரிவு அவள் மனத்தைத் தொடவும் இல்லை.

அத்தனையையும் தாண்டி நிலனின் அறைக்குள் நுழைந்தாள்.

இன்னுமே அவளுக்கு அது நிலனின் அறைதான்.

*****

நிலன் அவள் முகம் பார்க்கவே வெட்கினான். என்னவோ அவள் முதுகில் தானே குத்திவிட்டது போலொரு உணர்வு. சும்மாவே காரணத்தைச் சொல்லாமல் மணந்துகொண்டான் என்கிற கோபத்தில் இருக்கிறாள். இப்போது இதுவும் சேர்ந்துகொண்டது.

ஆனால், அன்று அவளோடு வீட்டுக்கு வந்தபிறகு நீ தொழிலைக் கொடுக்கக் கூடாது என்று சண்டையே போட்டான். எவ்வளவோ சொல்லிப்பார்த்தான். அவள் அசையவே இல்லை.

இதுவே பழைய இளவஞ்சியாக இருந்திருக்க சக்திவேலரால் அவளை அசைத்திருக்க முடியுமா என்ன? ஆணிவேரையே ஆட்டம் காண வைத்துவிட்டதில் அவளும் நிலையிழந்து நிற்கிறாள்.

அவன் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் தொழிலை முழுமையாக அவர்கள் வசம் கொடுத்துவிட்டு வந்துவிட்டாள் என்று அவனுக்கு அழைத்துச் சொன்னார் சந்திரமதி.

அவ்வளவு நேரமாக அலுவலகத்தில் இருந்தவன் வீட்டுக்குப் புறப்பட்டான். பயணம் முழுக்க அவளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்கிற யோசனைதான். விறாந்தையில் சக்திவேல் ஐயா அமர்ந்திருந்தார். அவரைக் கடந்து அவன் நடக்க, “என்னடா பேரா, பாத்தும் பாக்காத மாதிரிப் போறாய்?” என்று அவனைத் தடுத்தார்.

நின்று திரும்பி அவர் முகம் பார்த்தவன் அவரிடம் வந்து, “பாத்து என்ன கதைக்கோணும் அப்பப்பா?” என்றான் நிதானமாக.

அவர் அவனையே பார்க்க, “சுவாதி உங்கட பேத்தி. வஞ்சி என்ர மனுசியா? நீங்க பிரிச்சுக் கதைச்சது அவளை இல்ல. என்னை!” என்றவனுக்கு நெஞ்சினுள் நிறையக் குமுறல்கள் முட்டி மோதின. அவர் மீது கோபம் பெருகியது. அவன் வீட்டில் அவனே அறியா விடயங்கள் பல புதைந்து கிடக்கின்றன என்று அவனுக்கும் இந்தக் கொஞ்ச நாள்களாகத்தான் தெரிய வந்துகொண்டிருக்கிறது.

இன்னுமே என்ன என்று சரியாகத் தெரியாதபோதும் ஏதோ இருக்கிறது என்பது வரை புரிந்தது.

“ஒருத்தருக்கு வலிக்கோணும் எண்டுறதுக்காகவே கதைக்கிறது இருக்குத்தானே, அது பெரிய மனுசத்தனம் இல்ல அப்பப்பா. அத நீங்க செய்திருக்கக் கூடாது. இந்த வீட்டு மருமகளா இருக்கிறது அவளுக்குப் பெருமையா? சக்திவேல் குடும்பம் மொத்தத்துக்கும் தலையிடியா இருந்த ஒருத்தி அவள். அவளைப் பாத்து…” என்றவன் மேலே பேசப் பிடிக்காமல் நிறுத்திவிட்டு, “இப்பிடி ஒரு முகம் உங்களுக்கு இருக்கு எண்டு தெரியாமயே இவ்வளவு காலமும் இருந்திருக்கிறன் பாருங்களன்.” என்று விரக்தியோடு சொல்லிவிட்டு விறுவிறு என்று மாடியேறினான்.

போகிறவனையே பார்த்திருந்த சக்திவேல் ஐயா அவன் சொன்னதற்காகக் கலங்கிவிடவெல்லாம் இல்லை. அவளைப் பற்றி அறிந்ததிலிருந்து அவருக்குள் பல யோசனைகளும் சில கணக்குகளும். அதன் படி அவர் சரியாகத்தான் நடக்கிறார்.

அவன் அறைக்குள் அவள் இல்லை. எங்கே நிற்பாள் என்று தெரிந்தவன் பால்கனிக்கு நடந்தான். அங்கேதான் நின்றிருந்தாள்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock