எடுத்த முடிவுகளில் நிலைத்து நிற்கிறவள்தான் இளவஞ்சி. இந்தமுறை அப்படி இருக்க முடியவில்லை. தையல்நாயகியைக் கொடுத்தது தவறோ என்கிற கேள்வி இடையறாது அவளைப் போட்டுத் தின்றுகொண்டேயிருந்தது.
என்னதான் அவர்கள் சொத்து எனக்கு வேண்டாம், நான் அவர்களின் வளர்ப்புப் பிள்ளை என்றெண்ணிக் கொடுத்துவிட்டு வந்திருந்தாலும், எந்தக் காலத்திலும் தையல்நாயகியை விட்டுவிடாதே என்று தையல்நாயகி அம்மா திரும்ப திரும்பச் சொன்னது செவிகளில் அறைந்துகொண்டேயிருந்தது.
இவள் பார்த்துக்கொள்வாள் என்கிற நம்பிக்கையில்தான் அவர் போயிருப்பார். இவளுக்குத்தான் தெரியாது. ஆனால், இவள் தன் இரத்தம் இல்லை என்று அவருக்குத் தெரிந்திருக்குமே. அப்படி இருந்தும் அவர் இருந்த காலத்திலேயே இவளை நிர்வாகியாக்கி அழகு பார்த்தவர். இவளை மட்டுமே நம்பித் தந்துவிட்டுப் போனவர். அப்படியான அவருக்கு இன்று அவள் செய்திருப்பது நியாயமான ஒன்றா?
இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து தையல்நாயகியின் அடையாளத்தையே அழித்துவிட்டால் என்ன செய்வாள்? அதை நினைக்கையிலேயே நெஞ்சு பதறியது. தன்னைச் சொந்தப் பேத்தியாகவே வளர்த்த பெண்மணிக்குத் தான் கொஞ்சமும் நியாயம் செய்யவில்லையோ என்று நினைத்த மாத்திரத்தில் துடித்துப்போனாள்.
அவளுக்குள் நடந்துகொண்டிருக்கும் இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் வடிகால் என்ன என்று அவள் தவித்துக்கொண்டு இருக்கையில்தான் ஜானகியும் சக்திவேல் ஐயாவுமாகச் சேர்ந்து அவளைச் சீண்டினர்.
தக்க பதில் கொடுத்துவிட்டு வந்துவிட்டாள். ஆனால், உள்ளம் சோர்ந்து துவண்டு போயிற்று. இனி இதுதானா அவள் வாழ்க்கை? மனத்தினுள் புழுங்கிக்கொண்டும், தன்னைச் சீண்டுகிறவர்களுக்கு எல்லாம் மெனக்கெட்டுப் பதில் சொல்லிக்கொண்டும், இப்படி யார் முகமும் பாராமல் அறைக்குள் அடைந்துகொண்டும் என்று ஒன்றுமே பிடிக்கவில்லை அவளுக்கு.
அப்போது வேகமாக அறைக்குள் வந்த நிலன், கதவை அடைத்த வேகத்திலேயே, “உன்ன விடாமக் கலியாணத்துக்குக் கேட்டுக்கொண்டு இருந்தனான்தான். ஆனா, நான் வற்புறுத்தினதாலதான் என்னைக் கட்டினியா நீ?” என்று அவள் முகத்துக்கு நேரே சீறினான்.
அவனிடமிருந்து இப்படி ஒரு கோபத்தை எதிர்பாராத இளவஞ்சி கொஞ்சம் அதிர்ந்துபோனாள். அதற்கென்று வாயடைத்து நிற்கும் ரகமில்லையே அவள்!
“அப்ப என்ன, உங்களில் ஆசைப்பட்டா கட்டினனான்?” என்று திருப்பிக் கேட்டாள்.
அது அவனைச் சீண்ட, “கீழ கதைச்ச மாதிரியே தேவை இல்லாம வார்த்தைகள விடாத வஞ்சி!” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
“இப்ப நான் என்ன வார்த்தைய விட்டனான்? ஆசைப்பட்டா உங்களைக் கட்டினனான் எண்டு கேட்டன். அது ஒண்டும் பொய் இல்லையே.”
“நான் சொன்னதுக்காகவும் நீ கட்டேல்ல. இன்னுமே சொல்லப்போனா உன்ர வீட்டு ஆக்கள் சொன்னதுக்காகக் கட்டினனி. உன்ர அம்மா கையேந்திக் கேட்டதுக்காகக் கட்டினனி. உன்ர அப்பா…” வளர்த்த கடனைத் தீர்க்கச் சொல்லிக் கேட்டதால் கட்டினாய் என்று சொல்ல வந்தவன் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டான்.
இமைக்காது அவனையே பார்த்தாள் இளவஞ்சி.
அவன் தலையைத் திருப்பித் தன் சினத்தை அடக்க முயன்றுகொண்டிருந்தான். அந்தளவில் கீழே அவனுக்கு மண்டகப்படி நடந்திருந்தது.
“அவளை ஒரு வார்த்த கதைக்க விடாம என்ன துள்ளுத் துள்ளினான். ஆனா அவள், இந்த நிமிசமும் இவனை விட்டுட்டுப் போக ரெடியாம். தேவையா இவனுக்கு? இதுக்குத்தான் சொன்னனான் அப்பா, தராதரம் பாத்துப் பொம்பிளை எடுத்திருக்கோணும் எண்டு.” என்ற ஜானகியின் வார்த்தைகளில் இறுகிப்போனான் நிலன்.
அவர் கூடப் பரவாயில்லை. பிரபாகரனும் அந்தப் பொருளில் பேசியதுதான் அவனை இன்னுமே பாதித்திருந்தது.
அவருக்கு இளவஞ்சி மீது அன்பு உண்டு. பரிவும் உண்டு. தற்சமயம் அவளுக்கு எதுவும் நல்லதாக நடக்கவில்லை என்றும் தெரியும். ஆனாலும் அவர்களின் மகனை மதிக்காமல், இந்த நிமிடமே வீட்டை விட்டுப் போகத் தயார் என்று சொன்னதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
அந்தளவில் தூக்கியெறிந்துவிட்டுப் போகும் இடத்திலா அவர்கள் மகன் இருக்கிறான் என்கிற ஆதங்கத்தில், “கலியாணம் ஒண்டும் சின்ன பிள்ளை விளையாட்டு இல்ல தம்பி, இப்பிடி எல்லாம் கதைக்க. அதே மாதிரி எல்லா நேரமும் நாங்க கேட்டுக்கொண்டும் இருக்கேலாது.” என்று கண்டிப்போடு அவர் சொல்லிவிட, பெருத்த அவமானமாயிற்று அவனுக்கு.
அந்தக் கோபத்தோடுதான் மேலே வந்திருந்தான்.
அவன் நிலை அறியாத இளவஞ்சி, “ஏன் நிப்பாட்டிட்டீங்க சொல்லுங்க! என்ர அப்பா மிச்சம் என்ன?” என்று விடாமல் கேட்டாள்.
“இஞ்ச பார். தேவை இல்லாத கத வேண்டாம். விசயம் இதுதான், நான் உன்னை வற்புறுத்தினாலும் அதுக்காக நீ என்னைக் கட்டேல்ல. உன்ர அம்மாவும் அப்பாவும் உன்னை அப்பிடி ஒரு நிலைல நிப்பாட்டாம இருந்திருந்தா, மிதுனையும் சுவாதியையும் கூட்டிக்கொண்டு போய், நீயே கலியாணம் செய்து வச்சிருப்பாயே தவிர என்னைக் கட்டியிருக்க மாட்டாய். சோ நீ என்னைக் கட்டினது உனக்காக. உன்ர தேவைக்காக.” என்றான் எரிச்சல் அடங்காமல்.
அப்படியே நின்றுவிட்டாள் இளவஞ்சி.
அன்று அவன் அந்தப் பேச்சை எடுக்காமல் இருந்திருந்தால் அவர்கள் அவளை அந்த நிலையில் நிறுத்தியிருக்க மாட்டார்களே. இன்னுமே சொல்லப்போனால் அவனை இளம் வயதில் அவளுக்குப் பிடிக்கும் என்று இவன் சொன்னதுதான் பெரும் காரணமாகிப் போனதும்.
ஆனாலும் அவளுக்கு அதைச் சொல்லி வாதிட மனமற்றுப் போயிற்று. வாதாடியோ, எதையும் நிரூபித்தோ என்ன காணப்போகிறாள்? கசப்பா வெறுப்பா அவளால் இனம் பிரிக்க முடியவில்லை, நெஞ்சில் எதுவோ மண்டிற்று.
அதைவிட இவ்வளவு நாள்களாக அவளை அனுசரித்துப்போன நிலன் இல்லை இவன். இவன் சக்திவேலரின் பேரன். உள்ளே உள்ளத்தில் ஒருவித விரக்தி பரவ, “உண்மைதான்.” என்றுவிட்டு பால்கனிக்கு நடந்தாள்.
“அதேமாதிரி அப்பப்பாவை மரியாதை இல்லாமக் கதைச்சது இதான் கடைசியா இருக்கோணும்.” என்றான் அவன் உத்தரவிடும் குரலில்.
அந்தக் குரல், அந்தத் தொனி நான் சொன்னதைக் கேட்டுக்கொண்டுதான் நீ இங்கே இருக்க வேண்டும் என்பதுபோல் அவள் மனத்தில் பட்டுவிட, சரக்கென்று ஏதோ ஒன்று அவள் இதயத்தைக் கீறிக்கொண்டு போயிற்று.
அவள் மறுக்கவில்லை. பால்கனியில் சென்று எப்போதும்போல் நின்றுகொண்டாள். இந்தக் கொஞ்ச நாள்களாக நடப்பதுபோல் உள்ளமெல்லாம் பச்சைப் புண்ணாக வலித்தது. தொண்டையில் எதுவோ வந்து அடைத்தது. எப்போதும் அவளை வழிநடத்தி, மடி சாய்த்துக்கொள்ளும் தையல் பெண்ணைத் தேடினாள்.
அவர் எப்படி வருவார்? அவர்தானே அவள் வாழ்வில் இத்தனை பூசல்களையும் உருவாக்கிவிட்டுப் போனவர். ஒருவிதக் கோபமும் வந்தது. அவள் யார் என்று தெரிந்தாலாவது அந்த வழியில் போவாளே. இது இவ்வளவு நாளும் பயணித்த பாதையிலும் பயணிக்க முடியாமல், தன் வழி என்னவென்றும் தெரியாமல் என்ன வேதனை இது?
அப்படிச் சட்டென்று அமைதியாகிப் போனவள் நிலை அவன் நெஞ்சையும் அறுக்காமல் இல்லை. ஆனால், அவள் மீதான கோபமும் குறைய மாட்டேன் என்றது.
அவள் அவனோடு தனிமையில் என்ன சொல்லிச் சண்டையிட்டிருந்தாலும் வேறு. அப்பப்பா, பெற்றோர், அத்தை, கூடப்பிறந்த தங்க எல்லோர் முன்னும் நீ எனக்கு ஒன்றுமே இல்லை என்பதுபோல் சொன்னது கோபமூட்டியிருந்தது.
இப்போது கூட இங்கிருந்து போகத் தயார் என்றால் என்ன அர்த்தம்? அவள் உள்ளத்தில் திருமணத்தின் பின்னும் அவன் எந்த இடத்தையும் பிடிக்கவில்லை என்பதா?
அதே கோபத்தோடு, “விசாகன அந்த கேஸ்ல இருந்து வெளில எடுத்துவிடப் போறன்!” என்று அறிவித்தான்.
அன்று செய்யவா என்று கெஞ்சிக் கேட்டவன் இன்று அறிவிக்கிறான். உன் அனுமதி எனக்குத் தேவையில்லை என்கிறானா, இல்லை உன் மறுப்பை நான் மதிக்கப் போவதில்லை என்கிறானா?
ஆனால், தையல்நாயகியே அவளை விட்டுப் போயிற்று. அந்தத் தையல்நாயகி பற்றிய இரகசியங்களைச் சொன்னவனைத் தண்டித்து மட்டும் என்ன காணப்போகிறாள்?
“நானே வாறன்!” என்றுவிட்டு அவனோடு புறப்பட்டுச் சென்றாள்.
பயணம் முழுக்க அவர்களுக்குள் பரவிக்கிடந்தது கனமான அமைதி மட்டுமே. அங்கே காவல்நிலையத்தில் கொடுத்த கேஸினை திரும்பப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது, அவளிடம் வந்து மன்னிப்புக் கேட்டான் விசாகன்.
கண்களை எட்டாத சிறு புன்னகையோடு அவள் விசாகனையும் அவன் கேட்ட மன்னிப்பையும் கடக்க முயல, “மேம், நான் திரும்பவும் வேலைக்கு வரலாமா?” என்றான் விசாகன்.
“நானே இப்ப வேலை வெட்டி இல்லாதவள் விசாகன். இன்னொருத்தருக்கு வேலை குடுக்கிற நிலமைல நான் இல்ல.” என்றுவிட்டுச் சென்று நிலனின் காரில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
“இப்போதைக்கு வேற எங்கயும் வேலையப் பார். பிறகு நானே கோல் பண்ணுறன்.” என்றுவிட்டு வந்து காரினுள் அமர்ந்தான் நிலன்.