அழகென்ற சொல்லுக்கு அவளே 14 – 1

மலர்கள் இல்லத்திற்குத் தானே நேரில் சென்று, தன்னை இளவஞ்சியின் கணவன் என்று அறிமுகப்படுத்தி, அந்தப் பிள்ளைகளைத் தானே பொறுப்பெடுத்துக்கொள்வதாகச் சொன்னான் நிலன்.

சரஸ்வதி அம்மாவிற்கு என்ன சொல்வது என்று தெரியா நிலை. என்னதான் இந்த உலகத்தைப் பற்றியும், மனிதர்களின் குணநலன் பற்றியும் சொல்லிக்கொடுத்து வளர்த்திருந்தாலும் அத்தனையும் ஏட்டுச் சுரைக்காய்தான். அந்த இல்லத்தை மட்டுமே உலகமாகப் பாவித்து வளர்ந்த பிள்ளைகள் அவர்கள்.

இளவஞ்சி என்கையில் எந்தப் பயமும் இல்லாமல் அனுப்பி வைப்பார். அவ்வளவு நம்பிக்கை. அவளை இவர்கள் எல்லோருக்கும் ஏற்கனவே நன்றாகத் தெரியும். அதோடு ஒவ்வொரு வருடமும் இப்படியான பிள்ளைகளை அவள் வேலைக்கு எடுப்பதால் அங்கே இவர்களோடு வளர்ந்த பிள்ளைகள் ஏற்கனவே இருப்பார்கள். ஆக, சமாளித்துக்கொள்வார்கள்.

அதே நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கிற வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கும் உரிமை அவருக்கு இல்லை. அதில் இளவஞ்சிக்கு அழைத்துப் பேசினார்.

“பிள்ளைகள் புது இடம் எண்டு பயந்துகொண்டு இருக்கினம் இளவஞ்சி. நீங்களே கூடப்போய் என்ன ஏது எண்டு பாத்துச் சேத்துவிட மாட்டீங்களாம்மா?” தயவாக அவர் வேண்டிக் கேட்டபோது அவளால் மறுக்க முடியாமல் போயிற்று.

என் கணவனின் தொழிசாலைக்கு நான் போகமாட்டேன் என்று சொல்லவா முடியும்? திரும்பவும் நிலன் தன்னை வலை போட்டுச் சக்திவேலுக்குள் இழுப்பது போலிருக்க சினமும் எரிச்சலும் பொங்கின.

கடந்த சில நாள்களாகவே அதிகமான சஞ்சலத்தில் உழன்றுகொண்டிருந்தாள் இளவஞ்சி. காரணம் ஆனந்தியிடமிருந்து வருகிற குறுந்தகவல்கள். சக்திவேலர் தையல்நாயகிக்கு வந்திருக்கிறார் என்று அவள் அனுப்பிய செய்தியிலேயே அவள் இதயம் ஒரு நொடி நின்று போயிற்று.

அது போதாது என்று தொழிசாலையையே சுற்றி சுற்றி வந்தபடி, முக்கிய பொறுப்பிலிருக்கிறவர்களை அழைத்து ஆதியோடு அந்தமாக அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம் என்று அறிந்ததில் இருந்தே அவள் உள்ளத்து அமைதி மொத்தமாகத் தொலைந்துபோயிற்று.

அங்கிருப்பவை எல்லாம் அவளின் தனித்துவத்தைச் சொல்பவை; தையல்நாயகியின் தரத்தைச் சொல்பவை; அவள் பார்த்து பார்த்துச் செய்து வைத்தவை.

இனி அது எல்லாம் பறிபோய்விடும். தையல்நாயகி தன் தனித்துவத்தை இழந்துவிடும்.

எவ்வளவு பெரிய தவறான முடிவை எடுத்துவிட்டாள் என்று உழன்றுகொண்டிருந்தாள். அது போதாது என்று இப்போது சக்திவேலுக்குப் போகும் நிலை.

எதெல்லாம் அவள் வாழ்வில் நடந்துவிடவே கூடாது என்று எண்ணினாளோ அதெல்லாம்தான் நடந்துகொண்டிருந்தது.

சக்திவேல் குடும்பத்தைச் சாதாரணமாக எதிர்கொள்வதையே அவள் விரும்பியதில்லை. இன்று அந்த வீட்டு மருமகள் மட்டுமில்லை அங்கேயே வாழும் நிலை அவளுக்கு.

தையல்நாயகி ஆடைத் தொழிற்சாலை இல்லாத ஒரு வாழ்க்கையை அவள் கனவில் கூட யோசித்ததில்லை. ஆனால் இன்று அவளுக்கும் தையல்நாயகிக்கும் உறவே இல்லை.

சக்திவேல் தொழிற்சாலையினுள் அவள் நுழைவாள் என்று எண்ணிப் பார்த்ததே இல்லை. இப்போது அதையும் செய்யப்போகிறாள்.

அவன்தான் சேலை கொண்டுவந்து கொடுத்தான். அவள் கேள்வியாக ஏறிட, “நீ எப்பவும் கட்டுற மாதிரி கொட்டன் சாறிதான்.” என்றான்.

எடுத்துப் பார்த்தாள். கையால் நெய்யப்பட்ட, உடல் முழுவதும் பஞ்சு போன்ற வெண்மையில் இருக்க, சிவப்பு மெல்லிய போடர் கொண்ட கொட்டன் சேலை.

போடர் அடர் சிவப்பிலும், அதன் அடுத்த அரை சான் அளவுக்கான பகுதி மென் சிவப்பிலும், அதற்கு அடுத்த அரை சான் பகுதி வெளிர் சிவப்பிலும் வந்து வெண்மையோடு கலந்து, உள்ளத்தையே இதமாகத் தாலாட்டுவது போலிருந்தது சேலை.

ஏதாவது சொல்வாளா என்று பார்த்து நின்றவனிடம் ஒன்றும் சொல்லாமல் சேலையை மாற்றச் சென்றாள் இளவஞ்சி.

தனிச் சிவப்பில் முழங்கை தாண்டிக் கைகள் இருக்க, கழுத்துவரை மூடிய பிளவுசின் கழுத்தோரத்தில் வெள்ளை நிறத்தில் கேரளா நெக்லஸ் டிசைன் போட்டிருந்தான். முதுகுப் பகுதியில் பெரிய வெற்றிலை வடிவத்தில் வெற்றிடம் விட்டு, கீழே இடுப்புப் பகுதியை வெளிர் சிவப்புப் பட்டிகளால் இழுத்துக் கட்டி, போ ஒன்று போட்டு, அதன் பட்டிகளைத் தொங்கவிட்டிருப்பது போல் வடிவமைத்திருந்தான். அந்த பிளவுசுக்கு சிப், சைட் பக்கத்தில் இருந்தது.

அந்தச் சேலைக்குப் பொருத்தமாக நகைகளும் அணிந்துகொண்டு வந்தவளைக் கண்டு மலைத்துப்போனான் நிலன். கைப்பை, கைப்பேசி என்று தன் பொருள்களை எடுக்க அவள் அங்குமிங்குமாக நடமாடுகையில் தெரிந்த அவளின் வாளிப்பான முதுகைப் பார்த்தவனின் உதடுகள் அங்கே முத்தமிடத் துடித்தன.

அப்படி எதையாவது இப்போது செய்தான் என்றால், ஊசியால் அவன் வாயைத் தைத்தாலும் தைத்துவிடுவாள் என்கிற பயத்தில் தன்னை அடக்கிக்கொண்டான்.

அவர்கள் இருவருமாக இறங்கி வருகையில் எதிர்ப்பட்டார் பாலகுமாரன். இவளைக் கண்டதும் அப்படியே நின்றார். அன்று நிலனின் கடையில் வைத்துப் பார்த்த அதே பார்வை.

ஜானகி அம்மாள் பக்கத்தில் இல்லை போலும். இல்லாவிட்டால் அவராவது அவளை நிமிர்ந்து பார்ப்பதாவது. உள்ளே எள்ளலாக எண்ணியபடி அவரை அவள் கடக்க முயல, அவள் கரம் பற்றித் தடுத்து நிறுத்தி, “சக்திவேலுக்குப் போறம் மாமா.” என்றான் நிலன்.

தடுமாற்றத்துடன் பார்வை இளவஞ்சியிடம் சென்று வர, “கவனமப்பு. சந்தோசமாப் போயிற்று வாங்கோ.” என்று சொல்வதற்கிடையிலேயே அவர் குரல் கரகரத்தது.

தையல்நாயகியைப் போன்று இரண்டு மடங்கு பெரிய தொழிற்சாலை சக்திவேல். அதைக் கண்டபோது அவளுக்குள் பிரமிப்போ மலைப்போ உண்டாகவில்லை. மாறாகத் தையல்நாயகிதான் கண்முன்னே வந்து நின்றது.

தாய்மடி தேடும் கன்றுக்குட்டியாக அங்கே ஓடிவிடத் துடித்தாள். முடியாதே. கம்பீரமாக நிமிர்ந்து நின்ற சக்திவேல் அவள் இழப்பைப் பல மடங்காக்கிக் காட்டியது. அதைத் தனக்குள் விழுங்கிக்கொண்டு நிலனோடு நடந்தாள்.

இரண்டு பெண்கள் வாசலுக்கே வந்து, பூங்கொத்து ஒன்றினைத் தந்து அவளை வரவேற்றனர்.

நிலன் அவள் வருகையை ஒட்டி ஒன்றுகூடல் ஒன்றினை ஒழுங்குசெய்திருந்தான். பிரபாகரனும் அங்கேதான் இருந்தார். முறையான மரியாதையோடு அவளை அங்கு அழைத்துச் சென்று, தன் மனைவி என்று அறிமுகம் செய்துவைத்தான் நிலன். இனி அவளும் தொழிற்சாலையைக் கவனித்துக்கொள்வாள் என்பதுபோல் பேசினார் பிரபாகரன்.

எல்லோரினதும் வாழ்த்தையும் வணக்கத்தையும் அழகான மௌனத்தோடும் கனிவான முறுவலோடும் ஏற்றுக்கொண்டாள்.

அப்படியே தொழிற்சாலையைச் சுற்றிக் காட்டினான் நிலன். முழுமனத்தோடு அவளால் அவனோடு நடக்க முடியாதுபோனாலும் அவள் இரத்தத்திலேயே ஊறிப்போன தொழிலும், தொழில் அறிவும் அவளையும் மீறி அவளைக் கவனிக்க வைத்தன.

பல வசதிகளோடு நவீன முறையில் அனைத்தையும் செய்திருந்தான் நிலன். தையல்நாயகியில் இன்னுமே உடைக்கான அளவுகளைத் துணியின் மீது கீறி, மெஷினினால் வெட்டும் முறைதான் இருந்தது.

ஆனால் இங்கே, அதற்கென்று தனியாக மெஷின் போட்டிருந்தான் நிலன். அளவுகளை அதில் கொடுத்து, செட் பண்ணிவிட்டால் போதும். தானே அளவு டிசைனை தயாரித்து, தனி தனி துண்டுகளாக அதுவே வெட்டித் தந்துகொண்டிருந்தது. துணியைக் கட்டாக, சுருக்கம் எதுவும் இல்லாமல் அதற்குள் வைத்தால் மட்டும் போதும்.

இதில் அளவும் பிழைக்காது, அதனாலேயே மொத்தத் துணியும் வீணாகிப் போகும் அபாயமும் இல்லை. தன்னை மீறி, இந்த மெஷினை எங்கே வாங்கினீர்கள் என்று கேட்க வந்துவிட்டு, வேகமாக வாயை மூடிக்கொண்டாள் இளவஞ்சி.

அப்படிப் பல மெஷின்கள். அயர்னிங் பகுதியில் கூட நீராவியில் செய்யும் வழி கொண்டுவந்திருந்தான்.

முத்துமாணிக்கமும் சக்திவேலும் கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டவை. முத்துமாணிக்கம் பழமையை அப்படியே பறைசாற்றிக்கொண்டிருக்க, அனைத்து நவீன வசதிகளோடும் கூடவே தன் பழமையையும் சுமந்தபடி சக்திவேல் நிற்பதைக் கண்டு மெச்சிக்கொண்டாள்.

“எப்பிடி இருக்கு?” அவனின் அலுவலக அறைக்குள் வந்ததும் வினவினான்.

“நல்லாருக்கு.”

இன்னும் ஏதாவது சொல்வாளா என்று பார்த்தான். அவள் வாயைத் திறக்கவேயில்லை.

“ஏதாவது மாத்தினா நல்லாருக்கும் மாதிரி இருந்தா சொல்லு.” என்றான்.

தலையாட்டிக் கேட்டுக்கொண்டாளே தவிர்த்து எதுவும் சொன்னாளில்லை.

அவனுடைய அலுவலக அறை விசாலமானது. அதன் ஒரு மூலையில் ஒரு சின்ன வட்ட மேசையும் அதன் முன்னே இரண்டு குஷன் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. அதில் அமர்ந்து, அந்த மேசையில் கிடந்த சக்திவேல் பிராண்டினைச் சுமந்த ஆடைகளின் கட்லொக்கில் (Catalog) ஒன்றினை எடுத்துப் புரட்டினாள்.

கொஞ்சமும் இளகுகிறாள் இல்லையே என்றிருந்தது அவனுக்கு. அவள் தாங்கி நிற்பது மிகப்பெரிய வலியை என்று அவனுக்கும் தெரியும். ஆனால், முத்துமாணிக்கத்தைத் தருகிறேன் என்றதற்கு மறுத்துவிட்டாள். தையல்நாயகியைக் கொடுக்காதே என்றதையும் கேட்கவில்லை. இனி அவனும்தான் என்ன செய்ய?

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock