ஒரு நெடிய மூச்சடன் போய் மெஷினில் இரண்டு கோப்பிகளை வார்த்துக்கொண்டு வந்து ஒன்றை அவளிடம் கொடுத்தான்.
“மெஷின்தான் போட்டது. நம்பிக் குடி!” என்றதற்கு ஒன்றும் சொல்லாமல் வாங்கிப் பருகினாள்.
அவனுக்கு வேலைகள் இருந்தன. அந்தப் பெண் பிள்ளைகள் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. இவளை இப்படி இங்கே தனியே விட்டுவிட்டுப் போக மனமில்லை.
“எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நீயும் வாறியா?” என்றான் கோப்பியைப் பருகியபடி.
“நான் என்னத்துக்கு?” என்றாள் அவள்.
பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தான் நிலன். எதையாவது செய்து, எதற்குள்ளாவது அவளை இழுத்துவிட்டு அவளின் இறுக்கத்தைத் தளர்த்திவிடத்தான் அவனும் முயல்கிறான். எதற்கும் அசைந்துகொடுக்கவே மாட்டேன் என்று நிற்கிறாள் அவள்.
“ஒரு… ஒரு மணித்தியாலம்தான். ஆனாலும் வேகமா முடிச்சுக்கொண்டு வரப்பாக்கிறன். தனியா இருப்பியா?”
இருப்பேன் என்பதுபோல் தலையை அசைத்தாள் அவள்.
“சாப்பாட்டுக்குச் சொல்லிப்போட்டுப் போறன். வரும், சாப்பிடு.” என்றுவிட்டுப் போனான்.
அந்தக் கடலொக்குகளை பார்த்து முடித்தாள் இளவஞ்சி. உணவு வந்தது. சற்று முன்னர்தான் கோப்பி அருந்தியதால் பசிக்கவில்லை. இப்படிச் சும்மா இருந்து பழக்கமில்லாததால் எழுந்து அந்த அறைக்குள்ளேயே நடந்தாள். ஒரு பக்கம் கதவுபோல் இருக்கக் கண்டு திறந்து பார்த்தாள்.
அது அவன் தனக்கான டிசைன்களை உருவாக்கும் இடம் என்று புரிந்தது. இப்படி ஒரு தனிப்பகுதி அவளும் அவளின் அலுவலக அறையில் வைத்திருக்கிறாள். மெல்ல நடந்து உள்ளே போனாள். நீள் சதுர வடிவ மேசை ஒன்றில் பல வர்ணங்களில் துணிகள் கலைந்து கிடந்தன. அருகில் டேப், மார்க்கர், பேனாக்கள், நோட் புக், கத்தரிக்கோல் என்று நாளாந்தம் அவள் புழங்கிய பொருள்கள். அவற்றைக் காண்கையில் நெஞ்சினில் துயரம் பெருகிற்று.
இது அவள் உலகம். அவள் ஆத்மார்த்தமாக இயங்கும் இடம். எதையாவது எடுத்து வரையவும் வெட்டவும் கைகள் துறுதுறுத்தன. வேண்டாம் என்று விட்டது விட்டதுதான் என்கிற பிடிவாதத்தோடு திரும்பியவள் அப்போதுதான் எதிர் சுவரைக் கவனித்தாள்.
பெண் குழந்தைகளுக்கான உடைகளை மினியேச்சர் வடிவத்தில் குட்டி குட்டியாக உருவாக்கி, அந்தச் சுவர் முழுக்கக் கொழுவி வைத்திருந்தான் நிலன். குறைந்தது நூற்றுக்கும் மேலான உடைகள்.
அவள் கணனியில் 3D படங்களாக வரைவாள். இப்படிச் செய்து வைப்பதில்லை. கெட்டிக்காரன்தான். உள்ளே அவனை மெச்சிக்கொண்டபோதும் தன் உலகம் மொத்தமாகச் சிதைந்துபோன சோகம் இன்னும் அதிகமாக அவளைத் தாக்கிற்று.
அதனோடே அவள் அந்த அறையை விட்டு வெளியில் வர, அவனும் கதவைத் திறந்துகொண்டு வந்தான். அணிந்திருந்த கோர்ட்டை கழற்றி அங்கிருந்த கொழுவியில் மாட்டிவிட்டு, டையையும் தளர்த்திவிட்டான்.
“இன்னும் சாப்பிடேல்லையா?” அங்கே மூடி வைக்கப்பட்டிருந்த உணவைத் திறந்து பார்த்துவிட்டு வினவினான்.
“பசிக்கேல்ல.” என்றாள் அக்கறையற்ற குரலில்.
திரும்பி அவள் முகத்தை ஒரு கணம் ஆராய்ந்துவிட்டு, “இவ்வளவு நேரத்துக்கு அப்பிடி எப்பிடிப் பசிக்காம இருக்கும்? வந்து சாப்பிடு!” என்று அழைத்தான்.
“பிள்ளைகள் இன்னும் வரேல்லையா?” உணவு விடயத்தை அப்படியே புறம் தள்ளிவிட்டு வினவினாள் இளவஞ்சி.
திரும்பவும் அவளையே சில கணங்களுக்கு விடாமல் பார்த்தவன் வேறு பேசவில்லை. பேசாமல் வந்து அவளைத் தூக்கிக்கொண்டு போய்த் தன் மேசையின் மீது அமர்த்தினான்.
“நிலன்! என்ன இது? சும்மா சும்மா நீங்க தூக்க நான் என்ன பொம்மையா?” என்று அதட்டினாள் இளவஞ்சி.
“இந்த சாறில பொம்மை மாதிரித்தான் இருக்கிறாய். நடமாடும் பொம்மை.” என்றபடி உணவை எடுத்துக் கரண்டியினால் குழைத்து அவனே அவளுக்கு நீட்டினான்.
அவளுக்குள் மெல்லிய வியப்பு. அவனையே பார்த்தாள். “என்ன பார்வை. வாயத் திற. இல்ல அதுக்கும் ஏதும் செய்யோணுமா?” என்றதும் திறந்து வாங்கினாள்.
அவள் மேசையில் அமர்ந்திருக்க அவள் முன்னே நின்று அவளுக்கு ஒவ்வொரு கரண்டியாகத் தந்துகொண்டிருந்தான் அவன்.
சக்திவேல் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் தலைமகன். அனைத்துப் பொறுப்புகளையும் தன் தோள்களில் தாங்குகிறவன். அவனின் இந்த இணக்கமான செய்கையில் அவள் உள்ளமும் இலேசாய் இளகிற்று.
“நீங்க சாப்பிட்டீங்களா?” தன்னை மீறி வினவினாள்.
மீட்டிங்கில் நடந்ததைப் பற்றிச் சொல்லியபடி, புட்டோடு தக்காளிப்பழம் போட்ட உருளைக்கிழங்கு குழம்பையும், பருப்புக் கறியையும் சேர்த்துக் கரண்டியால் பிரட்டிக்கொண்டிருந்தவன் சட்டென்று கை வேலையை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.
அப்போதுதான் தான் கேட்ட கேள்வி அவளுக்கும் உறைத்தது. இது எப்படி நடந்தது என்கிற குழப்பமும் தடுமாற்றமுமாக அவன் பார்வையைச் சந்திக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவன் உதட்டில் மெல்லிய முறுவல். முதன்முதலாக அவள் தடுமாற்றத்தைப் பார்க்கிறான். மிக மிகப் பிடித்திருந்தது. அவளை அள்ளியணைத்துக் கொஞ்சித் தீர்க்க ஆசை எழுந்தாலும் அடக்கி, “நான் அங்க மீட்டிங்கிலேயே சாப்பிட்டன். ஆனா இப்ப நீ கேட்டதாலயே பசிக்குது.” என்றவன் தன் வாயிலும் ஒரு கரண்டி உணவைப் போட்டுவிட்டு அவளுக்கும் நீட்டினான்.
அவன் கண்களில் இருந்த சிரிப்பு வாங்கிவிடாதே என்று எச்சரித்தாலும் அவனைப் பாராமல் வாங்கியிருந்தாள் இளவஞ்சி.
அப்போது நாசூக்காய்க் கதவைத் தட்டிவிட்டு யாரோ திறக்கவும் வேகமாகத் தட்டை அவளருகில் வைத்துவிட்டு ஓடிப்போய்த் தன்னிருக்கையில் அமர்ந்துகொண்டான் நிலன்.
அதாவது நிலன் பிரபாகரன் அவன் மனைவிக்கு உணவினை ஊட்டிவிடவில்லையாம். அந்தளவில் கௌரவம் பார்ப்பானா இவன்? ஆச்சரியமும் வியப்புமாக அவனைப் பார்த்தாள் இளவஞ்சி.
இதில், மகனின் அலுவலக அறை என்கிற உரிமையில் காத்திராமல் கதவைத் திறந்துவிட்ட பிரபாகரன், மருமகளிடமிருந்து விலகி மகன் வந்த வேகத்தை வைத்து என்னவோ வில்லங்கமாக எண்ணிக்கொண்டு, சங்கடப்பட்டு வாசலிலேயே நின்றுவிட்டார்.
அப்பா மகன் இருவரையும் பார்த்த இளவஞ்சி சட்டென்று கலக்கலத்துச் சிரித்தாள்.
பிரபாகரன் வேறு அவர்களை நிமிர்ந்தும் பாராமல், “நான் பிறகு வாறன்!” என்றுவிட்டு அங்கிருந்து ஓடியே போக அவளால் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியாமல் போயிற்று.
இல்லத்துப் பிள்ளைகள் வந்துவிட்டார்கள் என்று சொல்வதற்குத்தான் வந்தார். ஆனால், அவர் பார்த்த காட்சி?
இருவரும் இரு திசையில் இருக்கிறார்களே, இவர்கள் வாழ்க்கை என்னாகும் என்று கலங்கிக்கொண்டிருந்த பிரபாகரனுக்கு மிகுந்த சந்தோசம். கவலை நீங்கியவராக நடந்தார்.
இங்கே, “வஞ்சி! சிரிக்காம சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடு!” என்று அதட்டிக்கொண்டிருந்தான் நிலன்.
“அதுதானே பாத்தன்! எங்கட கம்பஸ் ஹீரோ, மிஸ்டர் சக்திவே…” என்று ஆரம்பித்தவள் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டாள். அன்று அவன் அவரை அப்படிச் சொல்லாதே என்று உத்தரவிட்டது நினைவில் வந்தது. அதுவரையில் அவள் முகத்திலிருந்த சிரிப்பு துணிகொண்டு துடைத்தாற்போல் காணாமல் போயிற்று.
அப்படி அவள் பேச்சை நிறுத்தித் தன்னை அடக்கிக்கொண்டதைக் கண்ட நிலனுக்குமே ஒரு மாதிரியாகிப் போயிற்று. முதல் வேலையாகப் போய்த் தன் அலுவலக அறையின் கதவைப் பூட்டிவிட்டு வந்து, அவளை அணைத்துக்கொண்டான்.
ஒன்றும் பேசவில்லை. எந்த ஆறுதல் வார்த்தைகளும் சொல்லவில்லை. ஆனால், உனக்கு நானிருக்கிறேன் என்று சொல்வது போன்ற இறுக்கமான அணைப்பு.
அவள் முதுகை அவன் கரம் வருடிவிட்டுக்கொண்டிருக்க, அவளுக்குத் தன் துக்கமெல்லாம் பெருகிக்கொண்டு வருவது போலிருந்தது. அவன் காட்டும் இந்த அன்பும் அரவணைப்பும் அவளைப் பலகீனப் படுத்துவது போலிருக்க அவனிடமிருந்து விலக முயன்றாள்.
அவன் விடவில்லை. தன்னைப் பார்க்க மறுக்கும் அந்த விழிகளின் மீது தன் உதடுகளை ஒற்றி எடுத்தான் நிலன்.
அவளுக்குள் என்னவெல்லாமோ உடையும் சத்தம். இன்னும் இறுக்கமாக விழிகளை மூடிக்கொண்டாள்.
அவள் கன்னம் தாங்கி, “என்னட்ட நீ எப்பிடி வேணுமெண்டாலும் கதை. ஆனா நாலு பேருக்கு முன்னாலயோ, வீட்டாக்களுக்கு முன்னால வச்சோ அப்பிடிக் கதைக்காத. என்ன இருந்தாலும் வயசான மனுசன். என்ர அப்பப்பா. என்னைப் பாசமா வளத்தவர். இண்டைக்கு நாங்க எல்லாரும் இந்தளவுக்கு நல்லாருக்கக் காரணமானவர். எனக்கு முன்னால அவரை நீ அப்பிடிக் கதைக்கிறத என்னால பாத்துக்கொண்டு இருக்கேலாது வஞ்சி. யோசிச்சுப் பார், உன்ர அப்பம்மாவை ஆராவது ஒரு வார்த்த சொன்னா விடுவியா நீ? அதே மாதிரித்தான் இதுவும்.” என்று தன் நிலையை நல்ல விதமாகவே அவளுக்கு எடுத்துரைத்தான்.
அன்றைக்கு விடவும் இன்றைக்கு அவன் நிலை நன்றாகப் புரிந்ததில் அவளும் மறுத்து எதுவும் சொல்லப்போகவில்லை. மௌனமாகவே அவனிடமிருந்து விலகினாள்.
ஆனால், அவள் இன்னும் தன்னை விளங்கிக்கொள்ளவில்லை போலும் என்றெண்ணிய நிலன், “வஞ்சிமா! ஒரு குறை இல்லாம அவரப் பாக்கிற கடமை எனக்கு இருக்கெல்லாடி?” என்றான் கெஞ்சலாக.
“அப்ப என்னைப் பாக்கிற கடம உங்களுக்கு இல்லையா?” நிமிர்ந்து அவன் முகம் பார்த்து நிதானமாய் வினவினாள் அவள்.
ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டான் அவன். அவள் அவன் சொந்தம் என்கிறாளா? உள்ளே ஜில் என்று எதுவோ இனித்துக்கொண்டு ஓட, “அதான் அண்டைக்கு நான் கேட்டும் உன்னைப் பாக்க விடேல்லையே நீ!” என்றான் அவன் குறை சொல்வதுபோல்.
தன் கேள்வியின் பொருளையே மாற்றிவிட்டவனை முறைத்தாள் அவள்.
“இனியாவது உன்னைப் பாக்கட்டா? உனக்கு ஓகேயா?” என்றான் கிசுகிசுப்பாக.