அழகென்ற சொல்லுக்கு அவளே 15 – 1

பார்வையைக் கொஞ்சமும் அசைக்காது அவனையே பார்த்தாள் இளவஞ்சி. அன்றும் இப்படித்தான். அவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் பார்வையாலேயே அவனை அடக்கியிருந்தாள்.

இன்றும் அதையே அவள் செய்ய, “திமிர் பிடிச்சவளே, கொஞ்சமாவது அசஞ்சு குடுக்கிறியாடி!” என்று கடுப்புடன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் நிலன்.

“நீங்க மட்டும்? நான் கேட்ட கேள்விக்குப் பதில…” என்றவளை வேகமாக இடையிட்டு, “அந்தக் கேள்வியக் கேட்டியோ உன்னக் கொன்டுடுவன் ராஸ்கல்!” என்று விரல் நீட்டி எச்சரித்தான் அவன்.

சட்டென்று சிரித்துவிட்டாள் இளவஞ்சி. அவனும் அதை அவளிடம் சொல்லாமல் வைத்துக்கொண்டு சந்தோசமாக இல்லை என்று புரிந்தது.

ஆனால், காலம் அவள் இரகசியத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் நாளாக அந்த நாளை நிர்ணயித்திருந்தது போலும். ஆனந்தியிடமிருந்து குறுந்தகவல்கள் படபடவென்று வந்து விழ ஆரம்பித்தன.

முகத்திலிருந்த சிரிப்பு மறைய வேகமாக அதை எடுத்துப் பார்த்தாள். பார்த்தவள் உள்ளம் மட்டுமில்லை முகமும் சேர்ந்து கொதித்தது.

பட்டென்று அவனிடமிருந்து விலகி, “உங்கட கார எடுக்கிறன்.” என்றபடி மேசையில் இருந்த அவன் கார் திறப்பை எடுத்துக்கொண்டு விரைந்தாள்.

“எங்க போறாய்? நில்லு! நான் கூட்டிக்கொண்டு போறன்.” என்று பின்னால் வந்தவனிடம், “இல்ல, நீங்க வர வேண்டாம்!” என்றுவிட்டுத் தனியாகவே புறப்பட்டாள்.

அப்படி அவளைப் போக விட்டுவிட்டு அவனால் இங்கே நிம்மதியாக இருக்க முடியவில்லை. அந்தளவில் மலர்ந்து சிரித்தவள் முகம் நொடியில் சிவந்து கொதித்ததைக் கண்டு, என்னவோ என்று அவன் மனமும் அந்தரித்தது.

ஜீன்ஸ் பொக்கெட்டினுள் இருந்த கைப்பேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான். அவள் எடுக்கவில்லை. குறைந்த பட்சமாக எங்கே போகிறேன் என்றாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். அவன் நிம்மதியாக வேலையையாவது பார்த்திருப்பான்.

அவள் அங்கிருந்து போனதைக் கண்ட பிரபாகரன் மகனுக்கு அழைத்து, அந்தப் பிள்ளைகள் வந்து காத்திருப்பதைத் தெரிவித்தார். அப்படியே அதைச் சொல்லத்தான் சற்று முன் தான் வந்ததாகவும் சொல்லிவிட்டு அவர் வைக்க, அந்தப் பிள்ளைகளிடம் போனான் நிலன்.

இளவஞ்சியை எதிர்பார்த்திருந்தவர்கள் இவனைக் கண்டுவிட்டு மருண்டு விழித்தனர்.

தான் அவளின் கணவன் என்று அறிமுகம் செய்துகொண்டு, அவர்களின் பயத்தைப் போக்கி, இவ்வளவு நேரமும் அவர்களுக்காகக் காத்திருந்த இளவஞ்சி அவசர அலுவலாக வெளியே போயிருக்கிறாள் என்று சொன்னான். அங்குப் பணிபுரியும் இரண்டு வயதான பெண்களை அழைத்து, அவர்களோடு தானும் சென்று, அவர்கள் பார்க்க வேண்டிய வேலைகளைச் சொல்லிவிட்டு வந்தான்.

இத்தனை வேலைகளையும் பார்த்தாலும் இளவஞ்சி பற்றிய யோசனை அவனுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அதற்கு மேலும் பேசாமல் இருக்க முடியாமல் அன்னைக்கு அழைத்து விசாரித்தான். அவள் அங்கே வரவில்லை என்று சொன்னார் அவர். சில கணங்களுக்கு யோசித்துவிட்டு மிதுனுக்கு அழைத்தான்.

அவன் அங்கே தையல்நாயகியில் இருந்தான். இளவஞ்சி வரவில்லை என்று சொன்னவன் சக்திவேலர் அங்கிருப்பதைச் சொல்லவும் இவன் புருவங்கள் சுருங்கின.

“அவருக்கு அங்க என்னடா அலுவல்?”

“இப்ப ரெண்டு மூண்டு நாளா அவர் இஞ்சதானே அண்ணா வாறவர். உங்களுக்குத் தெரியாதா?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

நிலனுக்கு இது புதுச் செய்தி. கூடவே சக்திவேலர் அங்குப் போனதை அவன் விரும்பவும் இல்லை. இளவஞ்சி விலகிவிட்டாள்தான். அதற்காக அது ஒன்றும் இவர்களுக்குச் சொந்தமானது இல்லையே.

கூடவே இளவஞ்சி கோபமாகப் போனதன் பின்னால் சக்திவேலர் அங்குப் போனதுதான் காரணமோ என்று தோன்றிற்று. மிதுனை வைக்கச் சொல்லிவிட்டுத் தன் தந்தைக்கு அழைத்து விசாரித்தான்.

“அங்க போறதப் பற்றி அப்பப்பா உங்களிட்ட ஏதும் சொன்னவராப்பா?”

“மிதுனும் சுவாதியும் சின்னாக்கள். அதுவும் ஷோர்ட் பிலிம் எடுக்கிறன் எண்டு சுத்திக்கொண்டு திரிஞ்ச மிதுனைப் பிடிச்சு அங்க விட்டிருக்கிறம். என்ன செய்யினம் எண்டு பாத்துக்கொண்டு வரப்போறன் எண்டு அண்டைக்குச் சொன்னவர் தம்பி. ஆனா, அதுக்குப் பிறகு ஒண்டும் சொல்லேல்ல.” மகன் ஏன் இதைக் கேட்கிறான் என்று விளங்காதபோதும் தனக்குத் தெரிந்ததைச் சொன்னார் பிரபாகரன்.

இப்போது இளவஞ்சி போனதற்கும் அவருக்கும் நிச்சயமாகத் தொடர்புண்டு என்று உறுதியாகத் தெரிந்துபோயிற்று. அதன் பிறகு அவன் தாமதிக்கவில்லை. பிரபாகரனின் காரை எடுத்துக்கொண்டு தானும் புறப்பட்டான்.

ப்ளுடூத்தை காதில் கொழுவிக்கொண்டு திரும்பவும் மிதுனுக்கு அழைத்து, தையல்நாயகியில் நடப்பதைப் பற்றி விசாரித்தான். அப்போதுதான் சக்திவேல் ஐயா தையல்நாயகியின் வரவு செலவு முதற்கொண்டு அது இயங்கும் விதம் அனைத்தையும் தோண்டித் துருவி விசாரித்திருக்கிறார் என்று தெரியவந்தது.

அவர் மீது கோபம் எழுந்த அதே நேரத்தில் இவை எல்லாம் நிச்சயம் இளவஞ்சியின் காதுக்கும் வந்திருக்கும் என்று கணித்தான். ஆனாலும் கோபமாகவேனும் அவனிடம் அவள் கேட்டுக்கொண்டு வரவில்லை.

ஆனால், உள்ளுக்குள் நிச்சயம் உடைந்துபோயிருப்பாள். அவளின் தனித்துவத்தையும், அது வரும் வழியையும் இவர்கள் அறிந்துகொண்டு, அதை இவர்களின் தொழிலில் புகுத்தினால் தையல்நாயகி மொத்தமாக அடிபட்டுப் போகும்.

இதே நிலை அவனுக்கு வந்தால் விடுவானா? மனம் கனக்க, “வேற என்ன செய்தவர்? அதுவும் இண்டைக்கு?” என்று குறிப்பாக இன்றைய நாளைக் குறித்து வினவினான்.

“அது அண்ணா…” அவன் தயங்க, “எதையும் மறைக்க நினைக்காத மிதுன். இவ்வளவு காலமும் அவே ஆரோ, நாங்க ஆரோ. இனி அப்பிடி இல்ல. அவே எங்கட சொந்தம். நாங்க அவேன்ர சொந்தம். ரெண்டு வீட்டு மரியாதையும் மானமும் எந்தக் காரணத்துக்காகவும் போயிடக் கூடாது. அதால ஒழுங்கா உண்மைய சொல்லு!” என்று அதட்டினான்.

அதன் பிறகு மிதுன் தயங்கவில்லை. உண்மையில் ஆடைத் தொழிற்சாலை பற்றி அரிச்சுவடி கூட அவனுக்குத் தெரியாது. நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கும் மனநிலையோடு அல்லாடும் சுவாதியை, அவள் வயிற்றில் இருக்கும் அவன் குழந்தையை, குழப்பத்துடன் இருக்கும் இரு வீட்டு நிலை எல்லாம் சரியாகும் வரையில் எதையும் குழப்ப வேண்டாம் என்கிற முடிவோடுதான் அவன் தையல்நாயகிக்குப் போய்வருவதே.

அப்படியான அவனுக்கே சக்திவேலரின் செய்கை உறுத்தியதில், “அண்ணா அது தையல்நாயகி அம்மான்ர ஃபோட்டோ வாசல்ல இருந்தது. நீங்களும் பாத்திருப்பீங்க எண்டு நினைக்கிறன். அதை எடுத்திட்டார் அப்பப்பா. அதுக்குப் பதிலா இனி அவரின்ர போட்டோவை வைக்கப்போறாராம். பெயரையும் மாத்தப்போறாராம்.” என்றதும் சட்டென்று பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தியிருந்தான் நிலன்.

தையல்நாயகியில் தையல்நாயகிக்கே இடமில்லை என்றால் என்ன இது? ஒரு பெண் படாத பாடெல்லாம் பட்டு, தன் மொத்த வாழ்நாட்களையும் அதற்காய்ச் செலவழித்து, ஒரு தொழில் நிறுவனத்தை வளர்த்துவிட, குறுக்குவழியில் புகுந்து மொத்தமாக வாரிச் சுருட்டிக்கொள்ள நினைப்பதெல்லாம் என்னமாதிரியான செய்கை?

தனக்குள் வெட்கிப்போனான் நிலன். இனி எப்படி இளவஞ்சியின் முகம் பார்ப்பான்? என்ன நினைப்பாள் அவர்களைப் பற்றி? அவரைத் தெய்வமாகவே எண்ணித் தினமும் வணங்குவாள் என்று விசாகன் மூலம் அறிந்திருந்தான். அப்படியானவரின் புகைப்படத்தைத் தூக்கி எறிவது என்றால்?

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock