அதுதான் அவளுக்கு அவ்வளவு கோபம் வந்திருக்கிறது. நிச்சயம் இதைச் சும்மா விடமாட்டாள் என்று விளங்க, அவள் அங்கே வந்தால் தன்னிடம் தெரிவிக்கும்படி சொன்னான். கூடவே சக்திவேலரை அழைத்துக்கொண்டு அப்போதே அங்கிருந்து புறப்படும்படியும் சொல்லிவிட்டு குணாளன் வீட்டுக்குக் காரை விட்டான்.
*****
வெளிப்பார்வைக்கு மிகுந்த அமைதியாகத் தெரிந்தார் குணாளன். ஆனால், அவருக்குள் நடந்துகொண்டிருப்பவை மிகப்பெரும் போராட்டம். யாரிடமும் பகிர முடியாத, அவரோடு மடிந்துவிட வேண்டும் என்று நினைக்கிற பல பொல்லாத இரகசியங்களை தனக்குள் வைத்து அல்லாடிக்கொண்டிருந்தார்.
அதோடு சேர்த்து இளவஞ்சியின் முற்றிலுமாக ஒதுக்கம் அவரைப் போட்டு வாட்டியது. அன்று விருந்திற்கு வந்துவிட்டுப் போனதிலிருந்து அவள் இந்தப் பக்கம் வரவும் இல்லை.
என்றும்போல் அன்றும் அவளை எண்ணிக் கவலையுற்றவாறு அவர் அமர்ந்திருக்க, புயலின் வேகத்தோடு உள்ளே நுழைந்தாள் இளவஞ்சி.
அவளைக் கண்டதும் அவர் முகம் பூவாக மலர்ந்து போயிற்று.
“அம்மாச்சி, இப்பதானம்மா என்ர பிள்ளை என்னைப் பாக்க வரவே இல்லை எண்டு கவலைப்பட்டுக்கொண்டு இருந்தனான். அதுக்கிடையில கண்ணுக்கு முன்னால வந்து நிக்கிறீங்க.” என்றார் குழந்தையைப் போலப் பூரித்துக்கொண்டு.
ஆனால், அவள் அவரை உணரும் நிலையில் இல்லை. “நான்தான் நீங்க பெத்த மகள் இல்ல. கடனைத் தீத்துப்போட்டுப் போ எண்டு விட்டுட்டீங்க. ஆனா அந்த மனுசி உங்களைப் பெத்த தாய்தானே? அவாவையும் விட்டுடீங்களா? தையல்நாயகிய அவ்வளவு ஈஸியா நானும் விடமாட்டன் எண்டு அண்டைக்கு என்னவோ பெருசா சொன்னீங்க. இண்டைக்கு உங்களால என்ன செய்ய முடிஞ்சது? இதுக்குத்தானா அப்பம்மா அந்தப்பாடு பட்டுத் தையல்நாயகிய வளத்தவா? இப்பிடி எல்லாம் நடக்கும் எண்டு தெரிஞ்சுதானே இந்தக் கலியாணம் எல்லாம் வேண்டாம் எண்டு சொன்னனான். கேட்டீங்களா?” என்று தன் மனத்தின் கொதிப்பை எல்லாம் அவரிடம் தங்குதடையின்றிக் கொட்டினாள்.
குணாளனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. என்னவோ நடக்கக் கூடாத எதுவோ நடந்துவிட்டது என்று மட்டும் புரிந்தது. நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பிக்க, “என்னம்மா சொல்லுறீங்க? எனக்கு ஒண்டும் விளங்கேல்ல பிள்ளை. கோவப்படாம சொல்லுங்கோ.” என்றார் தவிப்புடன்.
“என்ன தெரியாது உங்களுக்கு? சக்திவேலர் தையல்நாயகிக்கு வாறது தெரியாதா? இல்ல, அப்பம்மான்ர போட்டோவை எடுத்துப்போட்டு அவரின்ர போட்டோவை வைக்கப் போறாராம். பெயரையும் மாத்தப் போறாராம். அது தெரியாதா?” என்றவள் சீற்றத்தில் நெஞ்சைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டார் அவர்.
அவர் மனம் கொதித்தது. கோபம் கொண்டு சினந்தது.
அப்போது சரியாக அங்கே வந்த சுவாதியைப் பார்த்தவரின் விழிகளில் வெறுப்பும் கசப்பும்.
அவள் தலை தானாகக் குனிந்தது.
“அக்கா சொல்லுறது உண்மையா?”
பதில் சொல்லும் வகையறியாது நின்றாள் அவள்.
“சொல்லு சுவாதி! அக்கா சொன்னது எல்லாம் உண்மையா?” இயலாத அந்த நிலையிலும் ஆத்திரத்திலும் ஆவேசத்திலும் அவர் குரல் உயர்ந்தது.
“ஐயோப்பா, கொஞ்சம் அமைதியா கதைங்கோ. இப்பிடி உணர்ச்சிவசப்படுறது உங்களுக்குக் கூடாது!” என்றுகொண்டு ஓடி வந்தார் ஜெயந்தி.
“உனக்கு இதைப் பற்றி ஏதும் தெரியுமா?” என்றார் அவரிடம்.
பதறிப்போனார் ஜெயந்தி. “அந்த நல்லூரான் சத்தியமா தெரியாது.” என்றார் அவசரமாக.
குணாளனின் பார்வை திரும்பவும் சின்ன மகளிடம் தாவிற்று.
அவளைத் துரத்திக்கொண்டிருப்பது ஒருவித அவமானம். திருமணத்திற்கு முதலே வயிற்றில் குழந்தை என்கிற விடயம், மிதுன் வீட்டினரை நிமிர்ந்து பார்க்க அவளை விடுவதில்லை. அதுவும் ஜானகி பாசமாகப் பேசுவதுபோல் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவளைக் குத்தீட்டியாய்க் குத்திக்கொண்டிருந்தது.
இப்படி இருக்கையில்தான் தையல்நாயகிக்குச் சக்திவேல் ஐயா வந்தார். வந்தவர் ஒவ்வொன்றாக அவளிடம் கேட்டு கேட்டு அறிந்துகொண்டு, ஒவ்வொரு மாற்றங்களாகக் கொண்டு வருகையில் அதைத் தடுக்கும் தைரியம் அவளுக்கு இல்லாது போயிற்று.
எப்படியாவது அவருக்குப் பிடித்ததுபோல் நடந்து, அந்த வீட்டின் மதிப்பு மரியாதையைப் பெற்றுவிட மாட்டோமா என்கிற நினைப்பில்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தாள். வீட்டில் கூட யாரிடமும் சொல்லவில்லை.
ஆனால் இன்றைக்கு அவர் அவளின் அப்பம்மாவின் படத்தைக் கழற்றியபோது, தையல்நாயகி ஆடைத் தொழிற்சாலை முற்றிலுமாக வெறுமையாகிப் போனதுபோல் ஆயிற்று அவளுக்கு.
அப்போதுதான் தான் என்ன செய்து வைத்திருக்கிறோம் என்பதும், அதன் பாரதூரம் என்ன என்பதும், தான் அமைதியாக இருந்ததினால் சக்திவேல் ஐயா எதுவரைக்கும் துணிந்துவிட்டார் என்பதும் புரிந்தன. நொடி நேரம் கூட அங்கிருக்க முடியாமல் ஓடி வந்துவிட்டாள்.
வந்தவள் வீட்டினரிடம் சிக்கிக்கொண்டாள்.
“சொல்லு சுவாதி. இதெல்லாம் நடக்கேக்க நீயும் அங்கதானே இருந்தனி? கொஞ்சம் கூடவா உனக்கு மனம் துடிக்கேல்ல. நீ இந்த வீட்டுப் பிள்ளைதானே? அந்த மனுசி உன்ர அப்பம்மாதானே? அந்தப் பாசமும் கோவமும் உனக்கு வரேல்லையா?” என்று அவளிடமும் கொதித்தாள் இளவஞ்சி.
அவள் சத்தமே போடவில்லை.
“எப்பிடி அப்பா இப்பிடி விட மனம் வந்தது உங்களுக்கு? நான் இல்லாட்டியும் நீங்க எல்லாரும் இருக்கிறீங்க எண்டு நம்பித்தானே விட்டுட்டுப் போனனான். மொத்தமா அழிச்சிட்டிங்களே!” என்றவளின் அழிச்சிட்டீங்களே என்ற வார்த்தையில் விழுக்கென்று நிமிர்ந்தார் குணாளன்.
என்னென்னவோ காட்சிகள் எல்லாம் கண்முன்னே மின்னி மறைந்தன. அவரின் இரத்தம் கொதித்தது. சினமும் சீற்றமும் அவர் நெஞ்சில் எரிமலையெனப் பொங்கிற்று. இறந்தகாலத்திற்கான நியாயத்தை வாங்கிக்கொடுக்கிறேன் என்று என்ன செய்துவிட்டார்?
சக்திவேலரின் இந்த ஆணவமும் அகங்காரமும்தானே அவர் தங்கையின் உயிரைப் பறித்ததும். இனியும் பொறுப்பதில் அர்த்தமே இல்லை.
அவரைப் பிடிக்க வந்த மனைவியின் கையைக் கூட உதறிவிட்டு, தானே மெல்ல மெல்ல நடந்துபோய், ஒரு சிறு கொப்பி(நோட் புக்) போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து இளவஞ்சியிடம் கொடுத்தார்.
கை தானாக அதை வாங்கிக்கொண்டாலும் அட்டை கிழிந்த, இலேசாகக் கறையான் அரித்த அந்தக் கொப்பியையும் அவரையும் மாறி மாறிப் பார்த்தாள் அவள்.
“நடந்தது எல்லாம் முடிஞ்சதாவே இருக்கட்டும் எண்டு நினைச்சனம்மா. வாழ வேண்டிய பிள்ளைகளின்ர மனதில தேவை இல்லாம கசப்பையும் வெறுப்பையும் விதைக்க வேண்டாம் எண்டு நினைச்சன். ஆனா…” என்றவர் நிறுத்திவிட்டு அவள் முகத்தைத் தன் கைகளில் தாங்கினார்.
கண்ணீரால் நிறைந்துகிடந்த விழிகளால் அவளை நோக்கி, “நீங்க என்ர சொந்த மகள் இல்லதானம்மா. ஆனா அது மட்டும்தான் உண்மை. மற்றும்படி நீங்க இந்த வீட்டுப் பிள்ளைதான். இந்த வீட்டுப் பிள்ளை மட்டுமில்லை அந்த வீட்டுப் பிள்ளையும்தான். இன்னுமே சொல்லப்போனா ரெண்டு வீட்டிலயும் உங்களுக்கு இல்லாத உரிமை வேற ஆருக்கும் இல்லை. என்ர தங்கச்சி வாசவிக்கும் சக்திவேல் ஐயான்ர மருமகன் பாலகுமாரனுக்கும் பிறந்த பிள்ளை நீங்க.” என்றார் குணாளன்.