அழகென்ற சொல்லுக்கு அவளே 16 – 1

என் அன்புக் கண்மணிக்கு இந்த அப்பம்மாவின் அன்பும் ஆசியும் என்று ஆரம்பித்திருந்த அந்த வரிகளிலேயே இளவஞ்சிக்குக் கண்களில் கண்ணீர் மணிகள் திரள ஆரம்பித்தன.

அவள் குழந்தையாக மாறுமிடம் அந்தத் தையல் இல்லையா!

என் இறப்பின் இறுதி வரையிலும் அந்த நல்லூரானிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். என்றைக்கும் இதை வாசிக்கும் நிலை உனக்கு வந்துவிடவே கூடாது என்பதுதான். நீ என் பேத்தி. குணாளனின் மகள். தையல்நாயகியின் தைரியமும் நிமிர்வும் கொண்ட நிர்வாகி. அப்படித்தான் என்றும் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை!

ஆனால், இதை வாசிக்கும் நிலை என்றாவது ஒரு நாள் உனக்கு வந்தால் நீ கலங்கக் கூடாது கண்ணம்மா!

இரத்தக்கறையில் மிதந்தபடி நடு வீதியில் உயிரற்றுக் கிடந்த மகளை என் இரண்டு கைகளாலும் தூக்கியிருக்கிறேன். என் வாழ் நாளுக்கு மட்டுமில்லை, உன் வாழ் நாளுக்கும் அந்தத் துன்பம் போதும்.

என் பேத்தியின் கண்ணீர் துடைக்க நானில்லா நாள்களில் நீ கலங்கிவிடக் கூடாது என்று நினைத்தேன். அதனால்தான் என்றும் உனக்கு இது தெரிய வந்துவிடக் கூடாது என்று உன் அப்பாவிடம் சொல்லியிருந்தேன்.

ஆமாம், உன் அப்பா குணாளன்தான்! என்றைக்கும் அவன் மட்டும்தான் உன் அப்பா! மணமாக முதலே உன்னை மகளாக வரித்தவன். ஒருவன் தந்தையாக இருக்க இதைவிட வேறென்ன தகுதி வேண்டும் சொல்?

ஆனாலும் என் மனத்தில் ஒரு அந்தரிப்பு. நான் இல்லா நாள்களில் என் பேத்தி எதையெல்லாம் சந்திக்க நேரிடுமோ என்கிற பயம். அதனால் மட்டுமே இதை எழுதுகிறேன்.

உன்னால் சமாளிக்கவே முடியாது என்கிற நிலை வந்தால் மட்டுமே என் பேத்தியிடம் இதை நீ கொடுக்க வேண்டும் என்று உன் அப்பாவிடம் சொல்லியிருக்கிறேன் என்கிற பெரிய அறிமுகத்தின் கீழே, இளவஞ்சியின் கதையை எழுதியிருந்தார் தையல்நாயகி.

தன் இளமைக்காலத்தில் கனவுகளைச் சுமந்து சுற்றிய வாசவி,
டைப்பிங் கிளாஸ் சென்று வருகையில்தான் பாலகுமாரனுக்கு அறிமுகமானார்.

துருதுருவென்று இருக்கும் சூட்டிகையான பெண்ணான அவரை, பாலகுமாரனுக்கு மிக மிகப் பிடித்தது. விடாமல் பின்னாலேயே சுற்றினார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்தார்கள். ஒரு நாள் கோயிலில் வைத்து நெற்றியில் திலகமிட்டு, பூவையும் வைத்துவிட்டவரைக் கணவராகவே வரித்துக்கொண்டிருந்தார் வாசவி.

அப்படி மனத்தளவில் கணவனாக ஏற்ற மனிதருக்குத் தன்னிடம் இல்லை என்று சொல்ல எதுவுமில்லை என்றெண்ணி நம்பிப் பழகினார். அதன் எதிரொலி வயிற்றில் குழந்தை.

அவர்களுக்கு வேண்டுமானால் யாருமில்லா நேரத்தில் கோயிலில் வைத்து அவர் தீட்டிவிட்ட குங்குமம் போதுமான இருக்கலாம். சமூகத்துக்கு அது போதாதே! வாசவி திருமணத்திற்கு கேட்டபோதுதான் பிரச்சனையே ஆரம்பமாயிற்று.

தன் தாய்மாமனைக் குறித்து மிகவுமே கலங்கினார் பாலகுமாரன். வாசவியைப் பொறுக்கச் சொன்னார். அப்படி வாசவியே பொறுக்கத் தயாராக இல்லை என்கையில் அவர் வயிற்றில் இருக்கிற குழந்தை பொறுக்குமா?

மிகவுமே கண்டிப்பான அன்னையிடம் எதையும் சொல்லப் பயந்து பாலகுமாரனை இன்னுமின்னும் நெருக்க ஆரம்பித்தார் வாசவி. அதனால் பாலகுமாரன் ஓடி ஒளியத் தொடங்கினார். கோபமடைந்த வாசவி அவரை அவர் வீட்டுக்கே சென்று பார்த்தபோதுதான் விடயம் சக்திவேல் பார்வைக்கு வந்தது.

கொதித்துப்போனார் மனிதர்.

அவரின் இளம் வயதில் பாலகுமாரனின் அன்னை சாவித்திரியின் நகைகளை வைத்துத்தான் தொழில் ஆரம்பித்தார். இருவரும் சரி சமமான பங்குதாரர்கள். பாலகுமாரனுக்கு வெளியில் பெண் பார்த்துக் கட்டி வைத்தால் தொழிலில் சரி பங்கு அவருக்குக் கொடுக்க வேண்டி வரும். அதிகாரம் பிரிக்கப்படும். அவர் மட்டுமே ராஜாவாகக் கோலோச்ச முடியாது.

இங்கேயானால் அவர் காட்டுவதுதான் லாபம். அவர் கொடுப்பதுதான் அவர்களின் பங்கு. இதுவே வெளியிலிருந்து வருகிற பெண் எப்படி இருப்பாள், அவள் வீட்டினர் என்னவெல்லாம் செய்வார்கள் என்று அவரால் சொல்ல முடியாது.

இப்படி இருக்கையில்தான் வாசவி பற்றித் தெரிய வந்தது. யாரோ ஒரு பெண்வீட்டை எண்ணியே பலதையும் யோசித்தவர் அவர். அதுவே தொழிலில் முழுமுதல் எதிரியாக உருவெடுத்துக்கொண்டிருக்கும் தையல்நாயகியின் மகள் என்றால் விடுவாரா?

அவர்களின் தொடர்பை வேரோடு அறுத்தெறிய நினைத்தார்.

இதில் ஜானகிக்கு வேறு பாலகுமாரனின் மீது காதல். அவரும் தடுக்கவில்லை. இன்னுமே சொல்லப்போனால் அவன்தான் உன் வருங்காலக் கணவன் என்று சொல்லி, அந்த ஆசையை ஆழமாகப் பதித்துவிட்டதே அவர்தான்.

வாசவி மீது ஆத்திரம் கொண்டவர் வீடு தேடி வந்தவளைத் தகாத வார்த்தைகள் பேசி விரட்டி அடித்தார். திருமணத்திற்கு முதலே வயிற்றில் வாங்கியவள் எப்படியானவளாக இருப்பாள் என்று சாவித்திரியின் நெஞ்சில் நஞ்சை விதைத்தார். என்னைத் தாண்டிப் போனாயானால் தொழிலில் நயா பைசா தரமாட்டேன் என்று பாலகுமாரனை மிரட்டி அடக்கிவைத்தார்.

பாலகுமாரனுக்குச் சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தார். தொழிலில் சரி பாதிப் பங்கு இவர்களதாக இருந்தாலுமே மாமனின் தயவில் மாமனை அண்டி வாழ்ந்து பழகியவர். இயல்பிலேயே அமைதியான சுபாவமும், அன்னைக்கு அடங்கிய மகனாவும் இருந்த பாலகுமாரனும் அன்னை, மாமனின் பேச்சுக்கு அடங்கிப்போனார். இன்னுமே வாசவியின் பார்வையில் படாமல் ஓடி ஒளிய ஆரம்பித்தார்.

வாசவியால் அதற்குமேல் அந்த நாள்களில் பாலகுமாரனைச் சந்தித்துப் பேச முடியவில்லை. அதில் வேறு வழியற்று அன்னையிடம் விடயத்தைப் பகிர்ந்தார்.

அனைத்தையும் அறிந்த தையல்நாயகி வாசவியைப் போட்டு அடித்தார். சக்திவேலிடம் நியாயம் கேட்டுக்கொண்டு போனார்.

அன்னை, மகள் இருவர் மேலும் இருந்த வன்மம் மொத்தத்தையும் சக்திவேல் தையல்நாயகியிடம் கொட்டினார். தொழிலில் போட்டிபோட்டு வெல்ல முடியாமல் மகளைக் கொண்டு பிழைக்கப் பார்க்கிறாயா என்று கேட்டார்.

மனத்தளவில் மடிந்தே போனார் தையல்நாயகி. ஆனாலும் மகள் வாழ்க்கையை எண்ணிப் பொறுமை காத்தார். உங்கள் சொத்தில் ஒரு ரூபாய் வேண்டாம், உங்கள் மருமகனையும் சேர்த்து நான் பார்த்துக்கொள்கிறேன், மகள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உரிய மதிப்பை வாங்கிக் கொடுங்கள் என்று கெஞ்சிப் பார்த்தார்.

எதற்கும் அசையவில்லை சக்திவேலர். இன்னுமே சொல்லப்போனால் தொழிலில் தன்னைச் சீண்டும் அந்தப் பெண், தன்னிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதைக் கண்டு வக்கிரமாக ரசித்தார். அதனால் அவர் பேச்சில் ஆணவமும் அகங்காரமும் அளவுக்கதிகமாகவே தெறித்தன.

ஆனாலும் அவரையும் தாண்டிப் பாலகுமாரனோடு பேச முயன்றார் தையல்நாயகி. மகளின் இந்த நிலைக்கு நீ என்ன நியாயம் சொல்லப்போகிறாய் என்று கேட்டார்.

அவருக்குப் பதில் சொல்லாமல், அந்த முதுகெலும்பு அற்ற மனிதர், மாமனின் பின்னே பதுங்கிக்கொண்டதைக் கண்டு தையல்நாயகிக்கு வெறுத்தே போயிற்று.

இப்படியான ஒரு கோழையை தன் மகள் நேசித்தது மாத்திரமல்லாமல் தன்னையே கொடுத்திருக்கிறாளே என்றெண்ணி வேதனை கொண்டார்.

அதையும் விட மாமனின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டு, வாசவியோடு பழகியது உண்மை, ஆனால் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நான்தான் தந்தை என்பதற்கு என்ன சாட்சி என்று கேட்ட பாலகுமாரனை அடிக்கவே போய்விட்டார் தையல்நாயகி.

இந்தளவில் கேவலமான ஒருவனோடு வாழப்போகும் வாழ்க்கை என்றுமே தன் மகளுக்குச் சுகிக்காது என்று புரிந்து போயிற்று. கூடவே, இப்படியான உறவுகளுக்கு மத்தியில் என்ன வாழ்க்கையை அவள் வாழ்ந்துவிடுவாள் என்றும் தோன்றிவிட, மண்ணள்ளித் திட்டிவிட்டு வந்துவிட்டார்.

ஆனால், மனத்தில் மட்டும் அவர்கள் முன்னாலேயே என் மகளை வாழவைத்துக் காட்டுகிறேன் என்று ஒரு ஓர்மம். முதலில் குழந்தை பிறக்கட்டும் என்று எண்ணிக்கொண்டார்.

பாலகுமாரன் குழந்தையைக் குறித்து அப்படிச் சொன்னதைக் கேட்ட வாசவியும் மொத்தமாக நொருங்கிப்போனார். சட்டப்படி போவோமா என்று கேட்ட அன்னையிடம் இன்னும் அவமானப்பட்டுச் சந்தி சிரிக்கத் தெம்பில்லை என்றுவிட்டார்.

தையல்நாயகி தன் வாழ் நாளில் இடிந்து அமர்ந்தது அந்த நாள்களில்தான். அவர்கள் சொன்ன வார்த்தைகளினால் நெஞ்சில் தீப்பற்றி எரிந்தாலும், சதா கண்ணீரிலேயே கரையும் மகளையும் கவனித்துக்கொண்டு, தொழிலையும் பார்த்துக்கொண்டு, இன்னுமின்னும் எகத்தாளத்தோடும் எக்களிப்போடும் போட்டி போட்ட சக்திவேலரையும் சமாளித்துக்கொண்டு என்று அத்தனையையும் தனியொருத்தியாகவே தாங்கிக்கொண்டார்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock