இத்தனைக்கு மத்தியிலும் புத்திசாலித்தனமாக யோசித்து, ஊருக்குள் செய்தி கசிய முதல், வாசவியின் கழுத்தில் தாலிச்செயின் போல் ஒன்றைப் போட்டு, திருகோணமலையில் இருக்கும் தங்கை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருந்தார். கேட்கிறவர்களிடம் எல்லாம் கணவன் தொழிலுக்காகச் சிங்கப்பூர் சென்றிருக்கிறான் என்று சொல் என்றும் சொல்லிக்கொடுத்திருந்தார்.
குழந்தை பிறக்கட்டும், அதன் பிறகு அவள் வாழ்க்கைக்கு ஏதாவது செய்யலாம் என்று தனக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்.
ஆனால், சக்திவேலர் மீதிருக்கும் கோபம் அத்தனையையும் தொழிலில் வெறியோடு காட்டினார். அவரால் சக்திவேலருக்குத் திருப்பி அடிக்க முடிந்த ஒரே இடம் அதுவாகத்தான் இருந்தது.
சக்திவேலரும் அதன் பிறகு தாமதிக்கவில்லை. அவசரம் அவசரமாக ஜானகிக்கும் பாலகுமாரனுக்கும் திருமணம் முடித்துவைத்தார்.
அதையறிந்த வாசவி மொத்தமாய் உடைந்துபோனார். தன்னை உயிராக நேசித்து, தன்னோடு உறவாடிய மனிதரால் இன்னொரு பெண்ணை நெருங்க முடிகிறதா என்ன என்று எண்ணியெண்ணி அழுதார்.
நாளடைவில் இளவஞ்சி பிறந்தாள். அச்சு அசல் தையல்நாயகியைப் போலவே இருந்தாள். ஆனால், இடுப்புக்குக் கீழே, பின் பக்கத்தில் இருந்த பெரிய கரிய மச்சம், அவள் யார் பிள்ளை என்று அடித்துச் சொல்லிற்று.
அதைப் பார்க்கும் பொழுதுகளில் எல்லாம் அழுதே தீர்த்தார் வாசவி. ஒரு மாதம் கடந்த நிலையில் யாரிடமும் சொல்லாமல் மகளையும் தூக்கிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தார்.
இவள் உன் மகள்தான். நீ சொன்னதுபோல் நான் ஒழுக்கம் தவறியவள் இல்லை என்று நிரூபித்துவிடும் வேகம். அவரின் கெட்ட காலமா, இல்லை பாலகுமாரனுக்கு அந்தக் கடவுள் இன்னுமே துணைபோக நினைத்தாரா தெரியாது, அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்த பாலகுமாரன், வீதியில் வைத்தே வாசவியைக் கண்டுவிட்டார்.
கண்டவர் நடுங்கியே போனார். சக்திவேலரைப் போல் பத்து மடங்கு ஆணவமும் அகங்காரமும் கொண்ட பெண் ஜானகி. அவருக்கு இது தெரியவந்தால் தன் வாழ்க்கை மொத்தமாக நரகமாகிவிடும் என்கிற பயத்தில் தன் மனிதத் தன்மை மொத்தத்தையும் இழந்துவிட்ட பாலகுமாரன், தன்னைத் தேடி வந்த வாசவியைத் தகாத வார்த்தைகளால் விளாசினார்.
அதுவும் மகளின் பின் பக்கத்தில் இருந்த மச்சத்தை வாசவி காட்டியபோது, அவர் கழுத்தைப் பற்றி நெரித்த பாலகுமாரன், “இந்தப் பிள்ளை வேணுமெண்டா எனக்குப் பிறந்ததா இருக்கலாம். ஆனா நீ என்னோட மட்டும்தான் அப்பிடியெல்லாம் இருந்தாய் எண்டுறதுக்கு என்னடி சாட்சி?” என்று கேட்டுவிட, சுவாசிக்க கூட முடியாமல் அப்படியே நின்றுவிட்டார் வாசவி.
மார்பு துடித்தது. ஆங்காரம் எழுந்தது. கண்மண் தெரியாத ஆத்திரம் கிளம்பிற்று. அழுகை வெடித்தது. அத்தனை உணர்வுகளையும் காட்ட முடியாத பேதையாகச் சிலையாகிப்போனார்.
வாழும் ஆசை போயிற்று. தன்னைத் தானே தண்டித்துக்கொள்ளும் ஆத்திரம் உண்டாயிற்று. அதனால் மட்டுமே தன் மனத்தின் கொதிப்பும் கொந்தளிப்பும் அடங்கும் என்று தெரிந்துவிட,
‘என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நீங்கள் சொன்னதையும் கேளாமல் நியாயம் கேட்டுக்கொண்டு போய்த் தோற்றுவிட்டேன் அம்மா.
எனக்கான நியாயம் கிடைக்காமல் போனதைக் கூட என் தவறுக்கான தண்டனையாக எண்ணிப் பொறுத்துக்கொள்ள முடிந்த என்னால், என் பிள்ளைக்கான நியாயம் கிடைக்காமல் போவதைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.
ஆனால், அவளுக்கான நியாயத்தை இன்னும் எப்படி வாங்கிக்கொடுக்க என்று தெரியவில்லை. போராட ஆரம்பித்தால் என் மானம்தான் இன்னுமே சந்தி சிரிக்கும். அதனால் எனக்கு வாழ விருப்பமில்லை. காதலைக் கொட்டிய கண்கள் என்னை வெறுப்புடனும், என்னை அள்ளியணைத்த கைகள் என் கழுத்தைப் பற்றியதையும் கடந்து வாழும் தைரியம் எனக்கில்லை.
இவ்வளவு காலமும் நான் உங்களுக்குப் பாரமாக இருந்தேன். இனி என் மகளுமா? நல்ல மனிதனுக்கு மகளாகப் பிறக்காத பாவத்தை அவளும் அனுபவிக்கட்டும். அநாதை இல்லத்தின் வாசலில் அவளைப் போட்டுவிட்டேன். கடவுளின் கருணை இருந்தால் அவள் எப்படியாவது பிழைத்துக்கொள்ளட்டும்.’ என்று கடிதம் எழுதி, போஸ்ட்டில் அனுப்பிவிட்டு, சொன்னதுபோல் இளவஞ்சியை ஒரு அநாதை இல்லத்தின் வாசலில் போட்டுவிட்டு நடந்து வந்தவர், எதிரில் வந்த பேருந்தில் மோதுண்டு, தன் இறப்பைத் தானே தேடிக்கொண்டிருந்தார்.
என் மகளை இரத்த வெள்ளத்தில் உயிரற்றுப் பார்த்தது போதாது என்று என் வீட்டின் ராணியை அநாதை இல்லத்தில் கண்டெடுத்தேன்.
வாழ்க்கையில் நான் உடைந்த தருணங்கள் மிக மிகக் குறைவு கண்ணம்மா! அன்று என் வம்சம் நான் உயிருடன் இருக்கையிலேயே அநாதையாக இருந்ததைக் கண்டு இன்னொருமுறை மரித்துப் போனேன்.
எனக்குச் சவால்கள் பிடிக்கும். தடைகளைத் தாண்டுகிற ஒவ்வொரு பொழுதுகளிலும் பெருமையாக உணர்வேன். அதற்கென்று இன்னும் எதையெல்லாம்தான் தங்குவது. ஆனாலும் ஒரு பிடிவாதத்தோடு அதிலிருந்தும் மீண்டேன். உன்னையும் தைரியமானவளாக, திடமானவளாக வளர்த்திருக்கிறேன்.
என்றைக்கும் நீ உடையக் கூடாது. துணிந்து நில். எதிர்த்து நில். இந்தத் தையல்நாயகியும் அந்தத் தையல்நாயகியும் என்றைக்கும் உனக்காகத்தான் இருக்கிறோம்.
இப்படிக்கு என் கண்ணம்மாளின் அப்பம்மா என்று எழுதி மிக அழகாகக் கையொப்பமிட்டிருந்தார்.
அதில் கூட அவர் அம்மம்மா என்று தன்னைக் குறிப்பிடவேயில்லை.
அதற்குமேல் முடியாமல் நெஞ்சு வெடித்துவிடுமோ என்கிற பயத்தில் படார் என்று கையிலிருந்த கொப்பியை மூடிவிட்டாள் இளவஞ்சி.
கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. நெஞ்சினில் இரத்தம் வடிந்தது. ஆத்திரத்தில் நெஞ்சு கொதித்தது. ஆவேசத்தில் உடம்பெல்லாம் படபடத்தது. சக்திவேல், பாலகுமாரன் இருவர் கழுத்தையும் நெரித்துக் கொள்ளும் வெறி வந்தது.
அவள் குடும்பத்துக்கு இத்தனையையும் செய்துவிட்டு, ஒரு உயிர் போவதற்கே காரணமாக இருந்துவிட்டு, இன்னுமே அவள் முன்னால் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் நிமிர்ந்து நிற்க எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.
அதைவிட அவள் அன்னையின் உயிரைப் பறித்தவர்களின் வீட்டுக்கே வாழப்போயிருக்கிறாள் அவள். வழிந்த கண்ணீரை ஆத்திரத்தோடு சுண்டி எறிந்தாள்!
இரத்தத்தில் உறைந்து கிடந்த உயிரற்ற மகளின் உடலைத் தூக்கும் நிலை ஒரு தாய்க்கு வந்தால் அவர் என்ன பாடு பட்டிருப்பார்? ஒரு பெண் உயிரைத் துறக்கிற அளவுக்குத் துணிந்திருக்கிறார் என்றால் அவர் எந்தளவில் நொந்துபோயிருப்பார்?
அதனால்தான் அவளின் அப்பம்மா சக்திவேலர் குடும்பத்தின் மீது அத்தனை வெறுப்பைச் சுமந்திருந்தாரா? அவள் மனத்திலும் தீராப் பகையையும் வெறுப்பையும் வளர்த்தாரா? இதனால்தான் உன் விரலை வைத்தே உன் கண்ணைக் குத்துகிறேன் என்று அவளைத் தையல்நாயகிக்குத் தலைவியாக்கினாரா?
இதெல்லாம் தெரியாமல் அந்த நயவஞ்சகக் கூட்டத்திடம் தையல்நாயகியைக் கொடுத்துவிட்டு நிற்கிறாள் அவள்.
அவளின் அப்பம்மாவின் ஆத்மா எத்தனை கொந்தளித்திருக்கும்? கடவுளே!
இல்லை! இனி விடமாட்டாள்! அவளுடையது இல்லை என்கிற வரையில்தான் அவர்களின் ஆட்டம். இனி அவளும் ஆடுவாள். முடிந்தால் சமாளித்துப் பார்க்கட்டும்!
மனம் வீறுகொள்ள ஆனந்திக்கு அழைத்துப் படபடவென்று உத்தரவுகளைப் பிறப்பித்தாள். கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளின் நெஞ்சினில் பெரு நெருப்பொன்று கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருந்தது.