அழகென்ற சொல்லுக்கு அவளே 17 – 1

எண்ணங்கள் ஆளுமையும் ஆதிக்கமும் கொண்டவை. மொத்தமாய் மனித மனங்களைச் சிதைத்துவிடும் வல்லமை அவைக்கு உண்டு. மனநோய் என்பது தாங்க முடியா எண்ணங்களின் இரும்புக் கரங்களுக்குள் அகப்பட்டுக்கொள்கிற பொழுதுகளில் உண்டாவது.

அந்தளவில் வலுக்கொண்ட எண்ணம்தான், நான் இந்த வீட்டுப் பிள்ளை இல்லை, இங்கிருக்கும் எதிலும் எனக்கு உரிமை இல்லை என்று இளவஞ்சியை நினைக்க வைத்து, அனைத்திலிருந்தும் விலகி நிற்க வைத்தது.

ஆனால் இன்றைக்கு அந்தத் தளையிலிருந்து விடுபட்டிருந்தாள். தன் அன்னைக்கும் அப்பம்மாவிற்கும் நடந்த அநியாயத்தை அறிந்து, அவள் உள்ளம் நெருப்பெனத் தகித்துக்கொண்டிருந்த அந்தப் பொழுதிலும், நீ இந்த வீட்டுப் பிள்ளைதான், உனக்கு அனைத்திலும் சகல உரிமை உண்டு என்கிற அந்த எண்ணம், நெஞ்சில் இருந்த அடைப்பை எல்லாம் நீக்கி, சீரான சுவாசத்தைத் தந்தது போல் உணர்ந்தாள்.

விடுவிடுவென்று குளியலறை சென்று முகத்தை அடித்துக் கழுவினாள். துவாயில் முகத்தை அழுத்தித் துடைத்துவிட்டு நிமிர்ந்தபோது, அவள் உலகமே வெளிச்சமிட்டுக்கொண்டது போன்றதொரு தெளிவு அவளுள்.

தயாராகி வெளியே வந்தாள்.

அதுவரையில் இனி என்னாகுமோ என்கிற நடுக்கத்தில் வெளிறிப்போன முகமும், படபடக்கும் நெஞ்சும், பரிதவித்த விழிகளுமாக மாடியையே பார்த்துக்கொண்டிருந்தார் குணாளன்.

படிகளில் வேகமாக இறங்கிக்கொண்டு இருந்தவள் நடை, அவரைக் கண்டு ஒரு கணம் நின்றுபோயிற்று. ‘மணமாக முதலே தந்தையானவன்.’ அப்பம்மாவின் வரிகள் நினைவில் வந்து நிற்க நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி.

மணமாக முதலே தந்தையாவதற்கு எவ்வளவு பெரிய விசாலமான மனம் வேண்டும்? ஒப்பற்ற அன்பு இருந்தாலேயொழிய முடியாது. அப்படியான மனிதரைப் போய் ஒதுக்கி, முகம் திருப்பி, பேசாமல் இருந்து என்று எப்படியெல்லாம் காயப்படுத்திவிட்டாள்?

என்னவோ அவர் மலையாக உயர்ந்து நிற்க, தான் மடுவாகி மிகவும் சிறுத்துத் தெரிவது போல் ஒரு தோற்றம். நெஞ்சம் ஒரு நொடி அழுத்தம் கூடித் துடித்தது.

இந்த மனிதர் இல்லாமல் போயிருந்தால் அவள் என்ன ஆகியிருப்பாள்? நிச்சயம் அவளின் அப்பம்மா அவளை விட்டிருக்கப் போவதில்லைதான். ஆனால், அவரின் பேத்தியாக மட்டும்தானே வளர்ந்திருப்பாள். அம்மா, அப்பா, தங்கை, தம்பி என்று அழகான ஒரு கூடு அவளுக்கு அமைந்திருக்காதே. ஏன், அந்த நாள் வருகிற வரைக்கும் அவளாக ஒரு பொழுதிலேனும் தன்னை வேற்று ஒருத்தியாக உணர்ந்ததே இல்லையே.

அவளுடைய அன்னை ஜெயந்தியின் தியாகமும் பெரிதுதானே. கணவனின் பிள்ளைக்கு அன்னையாக இருப்பதற்கே ஒரு மனம் வேண்டும். இங்கானால் அவள் யார் என்றும் தெரியாமல், வந்த வழியும் அறியாமல், கணவர் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக அந்த இளம் வயதிலிருந்தே அன்னையாகவே மாறிப்போனவரிடமும் அவள் ஒன்றும் பெரிய மனத்தோடு நடக்கவில்லையே.

அவர் நினைத்திருந்தால் என்றைக்கோ அதைச் சொல்லியிருக்கலாம். எத்தனையோ வழிகளில் வேற்றுமை காட்டியிருக்கலாம். அவளைத் தனித்துவிட்டிருக்கலாம். அதற்கெல்லாம் மாறாகத் தான் பெற்ற குழந்தைகளைக் கூட அவளின் சொல் கேட்டு நடக்க விட்டாரே.

இப்போதும் கூட அவள் என்ன சொல்லப்போகிறாளோ என்று அவளையே பரிதவிப்புடன் பார்த்து நின்ற இருவரையும் கண்டு உள்ளமும் விழிகளும் கசிந்துபோயின. வேகமாக இறங்கி வந்து, ஜெயந்தியை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

“நீங்க ரெண்டு பேரும் எனக்குச் செய்தது எவ்வளவு பெரிய விசயம். அது விளங்காம…” என்றவள் வாயில் வேகமாகக் கையை வைத்துத் தடுத்து, மறுப்பாகத் தலையையும் அசைத்தார் ஜெயந்தி.

“அப்பிடிச் சொல்லாதயம்மா. நான்தான் அவசரப்பட்டு வாய விட்டுட்டன் எண்டுறதுக்காக நீயும் எங்களைப் பிரிச்சுப் பாத்திடாத. எங்கட மகளுக்கு நாங்க செய்யாம வேற ஆர் செய்றது சொல்லு? உன்ர தங்கச்சி காதலிச்சுக் கலியாணம் வரைக்கும் போயிருக்கிறாள் எண்டுறதே பெரிய அதிர்ச்சி. இதில குழந்தையுமாம் எண்டதும் நிலகுலஞ்சே போனேன் பிள்ளை. இனி என்ன நடக்கப் போகுதோ எண்டுற பயத்தில இருக்கேக்க நீ அப்பிடிச் சொல்லவும் பதறிப்போய்…” என்றவருக்கு மேலே பேச முடியவில்லை. “ஆனா நீ எங்கட மகள்தானம்மா.” என்றார் திரும்பவும்.

அவளும் மறுக்கவில்லை. அவள் அவர்களின் மகள்தானே! இதில் மறுத்துப் பேச என்ன இருக்கிறது?

கண்ணீருடன் சோபாவில் அமர்ந்திருந்து அவளையே பார்த்திருந்த மனிதரின் முன்னே மண்டியிட்டவள், அவர் கரங்கள் இரண்டையும் பற்றி, அதில் முகம் புதைத்தாள்.

இழைத்த தவறுகளுக்கு மன்னிப்பைக் கேட்டாளா, இல்லை இத்தனை காலங்களும் அவர் அவளுக்குச் செய்தவற்றுக்கு நன்றி சொன்னாளா அவளுக்கே தெரியாது.

ஆனால், மனிதர் பரிதவித்துப்போனார். அவரால் அவரின் பெண்ணை அப்படிப் பார்க்கவே முடியவில்லை.

“அம்மாச்சி என்னம்மா இது? இப்பிடியெல்லாம் நடந்து அப்பாவை அழ வைக்காதீங்கோ குஞ்சு.” குணாளனின் உடைந்து கரகரத்த குரலில் மெல்ல நிமிர்ந்தவளின் விழிகள் இலேசாகக் கண்ணீரில் நனைந்திருந்தன.

அதற்கே தவித்துப்போனார் அந்தத் தந்தை. “இல்லையாச்சி! இப்பிடி நீங்க கலங்கக் கூடாது! இத நான் பாக்கக் கூடாது! பாக்கவே கூடாது.” என்றார் அரற்றலாக.

அவளின் அப்பம்மாவும் இதைத்தானே எழுதியிருந்தார். புன்னகையுடன் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, “இது அழுகை இல்லையப்பா. சந்தோசக் கண்ணீர். நான் பிறக்கக் காரணமா இருந்த மனுசர் என்னைக் கைவிட்டாலும் அந்தக் கடவுள் எனக்கு எவ்வளவு அருமையான அம்மாவையும் அப்பாவையும் தந்திருக்கிறார் எண்டுற சந்தோசம். ஆனா, இனி ஒண்டுக்கும் யோசிக்காதீங்க அப்பா. நான் இருக்கிறன். உங்கட மகள் இருக்கிறாள். இனியும் நீங்க எதுக்கும் கவலைப் படக் கூடாது!” என்றுவிட்டு எழுந்து அவள் புறப்பட, அவள் கரம் பற்றி நிறுத்தினார் குணாளன்.

“உங்க ரெண்டு பேரையும் அந்த வீட்டுக்குக் குடுத்ததால அப்பாவோட கோவமா பிள்ளை?” என்றார் அவள் முகத்தையே இமைக்காது பார்த்தபடி.

அது இத்தனை நாள்களும் இருந்ததுதான். இன்று இல்லை. அவரின் அளப்பரிய அன்பின் முன்னே அவளுக்கு அது ஒரு விடயமாக இல்லை. அனைத்தையும் சமாளிக்கத்தான் அவள் இருக்கிறாளே. பிறகென்ன?

“அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்லையப்பா.” என்றாள் மனத்திலிருந்து.

நம்ப மாட்டேன் என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “சுவாதியப் போலவேதானம்மா வாசவியும் அழுதுகொண்டு வந்து நிண்டவள். அண்டைக்கு அவள் ஆசைப்பட்ட அந்த வாழ்க்கையை எங்களால அமைச்சுக் குடுக்கேலாமப் போச்சு. அதால அவளும் இல்லாமப் போயிட்டாள். சுவாதியும் அப்பிடி ஒரு முடிவை எடுத்துட்டா? வாசவியப் பாத்த கோலத்தில பெத்த மகளையும் பாக்கிற தைரியம் எனக்கு இல்லையம்மா” என்று அவர் முகத்தை மூடிக்கொண்டு அழவும் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டாள் அவள்.

எவ்வளவு பெரிய வேதனையை யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே போட்டு அழுத்திக்கொண்டு அத்தனையையும் செய்திருக்கிறார். இது எதுவும் தெரியாமல் அவரைத் தண்டித்துவிட்டாளே. நெஞ்சு சுட்டது.

ஜெயந்திக்கும் இன்றுதான் இதெல்லாம் தெரிய வந்துகொண்டிருந்தது. அதில் அதிர்ந்துபோய் நெஞ்சைப் பற்றிக்கொண்டார் அவர்.

“நான் தூக்கி வளத்த முதல் குழந்தை அவள். அவளை மாதிரி…” என்றவரை மேலே பேச விடாமல் அவர் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தவள் அவர் கண்களையும் துடைத்துவிட்டாள்.

“எனக்கு உங்களில் எந்தக் கோவமும் இல்லை அப்பா. மனதைப் போட்டு வருத்தாதீங்கோ.” என்றாள் இதமாக.

அவர் விடுவதாக இல்லை. எப்படியாவது தன் பக்கத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். இத்தனை நாள்களும் அவள் விலகி நிற்க, எதையும் சொல்ல முடியாமல் மனத்துக்குள்ளேயே போட்டு அடைத்து வைத்தவை எல்லாம் அவள் வந்ததும் வெளியே வந்தன.

“அதே மாதிரித்தானம்மா உனக்கும். அவேயா கேட்டுக்கொண்டு வரவும் அடி நெஞ்சில இருந்த கோவம், ஆரை வேண்டாம் எண்டு சக்திவேலர் சொன்னாரோ, அவளின்ர மகளை அந்த வீட்டுக்கே மருமகளாக்கிப் பார் எண்டு சொல்லும். இன்னொரு நேரம் என்ர பிள்ளையும் அங்க போய்த் துன்பம் அனுபவிப்பாளோ எண்டு இருக்கும். ரெண்டு மனதா தடுமாறிக்கொண்டு இருந்தனான். அதே நேரம் என்னால உனக்குப் பிடிச்சவனா, உனக்கு ஏற்றவனா ஒருத்தனைக் கண்டுபிடிக்கவும் முடியேல்ல. இதுல நிலன உனக்குப் பிடிக்கும் எண்டதும்…” என்றுவிட்டு அவளையே பார்த்தார்.

உண்மையிலேயே அவளுக்கு அவனைப் பிடிக்குமா என்று கேட்கிறார். இனியுமா அவரைத் தவிக்க விடுவாள்?

“பிடிக்கும்தான் அப்பா.” என்றாள் சிறு முறுவலுடன்.

குழந்தையாய் அவர் முகம் மலர்ந்து போயிற்று. “உண்மையாத்தானே குஞ்சு? அப்பாக்காகச் சொல்லேல்லையே?” என்று திரும்ப திரும்பக் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார்.

அவர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள் இளவஞ்சி. தையல்நாயகியை நோக்கிப் போகிறோம் என்கிற அந்த உணர்வே ஒருவிதப் பரவசத்தையும் பரபரப்பையும் உண்டாக்கிற்று. அவளின் ராஜாங்கம். அரசன் இல்லா அரியணை எப்படி அதன் சோபையை இழந்துவிடுமோ, அப்படித் தன் ராஜாங்கம் இல்லாமல் ஒன்றுமே இல்லாதவளைப் போல் ஆகியிருந்தாளே.

எதிரில் பேருந்து ஒன்று மிக வேகமாக வரவும் ஒதுங்கி வழி விட்டவள் சட்டென்று தடுமாறி, ஓரமாகக் காரை நிறுத்திவிட்டாள்.

இப்படி ஒரு பேருந்தில்தானே அவள் அன்னை அடிபட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இதே போலொரு வீதியில்தானே இரத்தம் உறைய மடிந்து கிடந்திருப்பார்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock