நெஞ்சம் திரும்பவும் கொந்தளிக்க ஆரம்பித்தது. கூடவே மலர்கள் இல்லத்தின் நினைவும் வந்தது. அவள் கணிப்புச் சரியாக இருந்தால் அந்த மலர்கள் இல்லத்தில்தான் அவள் இருந்திருக்க வேண்டும்.
அந்தளவில் மாதத்தில் இரண்டு முறை அங்கே போய் வருவாள். அதுவும் தையல்நாயகி அம்மா பழக்கிய பழக்கம்தான். என்றைக்கும் அந்த இல்லத்தையும் அங்கிருப்பவர்களையும் கைவிட்டுவிடாதே என்பார்.
அவரின் காலம் தொட்டே வயோதிபர் இல்லங்களுக்கு, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வருடா வருடம் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிக் கொடுப்பது வழமையாக அவர்கள் செய்வதுதான். புண்ணியத்திற்கு புண்ணியமாகவும் வரிவிலக்கிற்கு ஏதுவாகவும் இருக்கும் என்று சொல்லுவார்.
ஆனால், அந்த இல்லத்தை அவர் தன் மனத்திற்கு மிக நெருக்கமாக உணர்வார் என்று அவளுக்கே தெரியும். அங்கிருக்கும் பல கட்டிடங்கள் அவரும் அவருக்குப் பிறகு அவளும் கட்டிக்கொடுத்தவை.
அந்த இல்லத்திற்குத் தேவையான பெரும்பான்மைச் செலவை அவளேதான் கவனிக்கிறாள். அப்படித்தான் அங்கே வளர்ந்த பிள்ளைகளுக்குத் தையல்நாயகியில் வேலை கொடுக்க ஆரம்பித்ததும்.
உதவியாக எண்ணித்தான் இவ்வளவு காலமும் செய்தாள். இன்றுதான் தன் உயிர் பாதுகாக்கப்பட்ட இடம் அது என்று புரிந்தது.
அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் காரை அவள் ஸ்டார்ட் செய்தபோது, அடுத்த பக்கத்தின் கதவைத் திறந்து, உள்ளே ஏறி அமர்ந்தான் நிலன்.
சட்டென்று அவள் முகத்தில் ஒரு இறுக்கம். அவன் பக்கம் அவள் திரும்பவே இல்லை. சிலைபோல் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தாள்.
அவள் முகத்தையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான் நிலன். நேரம்தான் சென்றுகொண்டிருந்ததே ஒழிய அவள் திரும்புவதாக இல்லை.
அதற்குமேல் அமைதியாக இருக்க முடியாமல் அவள் முகத்தைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பி, “என்னைப் பிடிக்கும் எண்டு சொன்னியாம். உண்மையா?” என்றான்.
விழியாகலாது அவனையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, ஆம் என்பதுபோல் தலையை அசைத்தாள்.
“அப்ப நீயே சொல்லு, உனக்குப் பிடிச்சவன் இதையெல்லாம் தெரிஞ்சுதான் உன்னைக் கட்டி இருப்பானா?”
அவள் பதில் சொல்லவில்லை. அசையாத பார்வையை அவனை விட்டு விலக்கவும் இல்லை.
“சொல்லு வஞ்சி!”
வார்த்தைகளுக்கு அவன் கொடுத்த அழுத்தத்தைக் கவனித்தாலும், “அப்ப என்னத்துக்கு இந்தக் கலியாணம் நடந்தது?” என்று தன் அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டாள் இளவஞ்சி.
“இனியும் அதைச் சொல்லாம இருக்கிறதால ஒண்டும் வரப்போறேல்ல. நீ இண்டைக்குத் தெரிஞ்சுகொண்டதுகளோட ஒப்பிடேக்க அது ஒண்டுமே இல்லையும்தான். ஆனா அதை நான் உனக்குச் சொல்ல முதல் எனக்கு உன்ர பதில் வேணும்.” என்றான் அவனும் பிடிவாதமாக.
“கோழைக்கெல்லாம் உண்மையச் சொல்லுற தைரியம் வந்திருக்காது.” என்றாள் அவள்.
அப்படிச் சொன்னவளையே சில கணங்களுக்குப் பார்த்தவன் இழுத்து அணைத்துக்கொண்டான்.
நடுவில் கிடந்த கியர் பொக்ஸ் பெரும் தொந்தரவு கொடுத்தாலும் அதைச் சட்டை செய்யாது அவளைத் தன் இறுகிய அணைப்பில் அடக்கினான்.
அவளைத் தேடிக்கொண்டு அவன் அவர்கள் வீட்டுக்குப் போனபோது, அந்த வீடே உணர்வுகளின் தத்தளிப்பில் மிதந்திருந்தது. இனி மறைக்க எதுவுமில்லை என்று நினைத்தாரா, இல்லை எப்படியும் தெரியவந்துவிடப்போவதை மறைத்து என்ன காணப்போகிறேன் என்று நினைத்தாரா தெரியவில்லை. நிலனிடமும் அனைத்தையும் பகிர்ந்துகொண்டிருந்தார் குணாளன்.
கொஞ்ச நேரத்திற்கு இவர் என்ன சொல்கிறார் என்றுதான் இருந்தது அவனுக்கு. அந்தளவில் நம்பவே முடியா பெரும் அதிர்ச்சி. அதிர்ச்சி நீங்க நீங்க அந்த இடத்தை ஆத்திரம் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது. கூடவே இளவஞ்சிக்காக அவன் உள்ளம் அழுதது. என்னவோ தானே அநாதையாய் அநாதை இல்லத்தில் கிடந்ததுபோல் துடித்துப்போனான்.
அங்கிருந்து புறப்பட்டவன் எப்படியும் தையல்நாயகிக்குத்தான் போவாள் என்று கணித்து வருகையில்தான் அவன் காரைக் கண்டான்.
மிதுனை அழைத்து, தந்தையின் காரை எடுத்துக்கொண்டு போகச் சொல்லிவிட்டு, ஓடி வந்து இந்தக் காரினுள் ஏறிக்கொண்டான்.
அவளைப் பார்த்த கணம் அள்ளியணைக்கத்தான் அவன் உடலும் உள்ளமும் துடித்தன. ஆனால், அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று தெரியாமல் அவளையே பார்த்தான்.
இப்போது தன் கைகளுக்குள் அடங்கிவிட்டவளை உயிருக்குள்ளேயே பொத்திக்கொள்ள வேண்டும் போலொரு துடிப்பு. அவள் முகத்தைக் கைகளில் தாங்கி, முகம் முழுக்க முத்தமிட்டு, “சொறி!” என்றான், அவள் விழிகளோடு தன் பார்வையைக் கலந்து.
சட்டென்று நிலைகுலைந்துபோனாள் இளவஞ்சி. என்னவோ அவள் உள்ளத்தின் வேதனை அடுக்குகள் எல்லாம் படபடவென்று வெடித்துச் சிதறுவது போலிருந்தது. அழுகை வந்தது. ஆத்திரம் வந்தது. காரணமே இல்லாதபோதும் அவன் சட்டையைப் பற்றிக்கொண்டு சண்டை பிடிக்க வேண்டும் போலிருந்தது.
அதையெல்லாம் அடக்க அவள் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தபோது, “என்ர வீடு இவ்வளவு பெரிய துரோகத்தை உனக்குச் செய்திருக்கு எண்டு எனக்குத் தெரியாது வஞ்சி. ஆனா ஒண்டு. இது முதலே எனக்குத் தெரிஞ்சிருந்தாலும் உன்னைத்தான் கட்டி இருப்பன்.” என்றான் உறுதியான குரலில்.
அவனையே சில கணங்களுக்குப் பார்த்தவள் பிடிவாதமாக அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள். பார்வையையும் ஜன்னலுக்கு வெளியே திருப்பிக்கொண்டாள்.
இன்னுமே அவள் தன் உணர்வுகளை அவனிடம் காட்டத் தயாராயில்லை என்பது, அவனைத் தாக்கிற்று.
தான் தம் திருமணத்தின்போது அவளுக்கு நியாயமாய் நடக்கவில்லை என்று தெரிந்திருந்தாலும் அவளின் அந்த விலகல் அவனுக்குள் சிறு வலியைத் தோற்றுவிக்காமல் இல்லை.
காரை விட்டு இறங்கி, அவள் புறம் வந்து கதவைத் திறந்து, “இறங்கி அந்தப் பக்கம் போ!” என்றான்.
அவள் அசையாமல் அமர்ந்திருக்க, “இறங்கு வஞ்சி!” என்று பிடிவாதமாக அவளை இறக்கி, அந்தப் பக்கம் இருத்தி, தானே பெல்ட்டையும் மாட்டிவிட்டு வந்து, காரை எடுத்தான்.
என்றும்போல் அவளைக் கண்டதும் தையல்நாயகி ஆடைத் தொழிற்சாலையின் கேட், உருண்டோடிப்போய் ஒரு ஓரமாக நின்று வழிவிட்டது. அதனுள்ளே நுழைந்த நிலனின் கார் சீரான வேகத்தில் பயணித்து, அதற்கான இடத்தில் சென்று நின்றது.
இறங்க வேண்டும் என்கிற உணர்வே இல்லாமல் அதையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் இளவஞ்சி. அவளால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவேயில்லை. கத்தி அழ வேண்டும் போலிருந்தது. சந்தோசத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும்போலிருந்து. அந்தத் தொழிற்சாலையை மொத்தமாகக் கட்டிக்கொண்டு கொஞ்ச வேண்டும் போலிருந்தது. இன்னுமின்னும் பெயர் சூட்ட முடியா உணர்வுகள் எல்லாம் பொங்கி பொங்கி அலையடித்தன.
நிலனுக்கு இப்போதும் அவள் உணர்வுகள் புரிந்தது. நெஞ்சம் கனிந்துபோயிற்று. சிறு முறுவலுடன் அவள் தலைமீது கையை வைத்து ஆட்டிவிட்டு காரை விட்டு இறங்கினான். அவள் பக்கம் வந்து கதவைத் திறந்து பிடித்து, “இறங்கு வஞ்சி!” என்றான்.
அவனைப் பார்த்து அழகாய் முறுவலித்துவிட்டு இறங்கினாள் அவள்.
மொத்தத் தொழிற்சாலையும் ஓடி வந்து அவளுக்குப் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். எல்லோர் முகத்திலும் பூரிப்பும் ஆனந்தமும். இளவஞ்சி மறுபடியும் வந்து பொறுப்பேற்கப்போகிறாளாம் என்று ஆனந்தி அறிவித்த கணத்திலிருந்து அவர்கள் அவர்களாகவே இல்லை.
அன்பாய்ப் பேசி, ஆசையாய் வரவேற்றனர். அவள் மறுபடியும் வந்ததால் தமக்குண்டான மகிழ்வைப் பகிர்ந்தனர். இப்போதுதான் தையல்நாயகிக்கே களை வந்திருக்கிறது என்று அவர்கள் பேசிக்கொண்டது நெஞ்சில் இதத்தைப் பரப்பிற்று.
அங்கே தொழிற்சாலையின் வாசலில் என்றும்போல் இன்றும் அவளை வரவேற்க அவளின் தையல் பெண் தன் கனிந்த முறுவலுடன் காத்திருந்தார். அவ்வளவுதான். அன்னையைக் கண்டதும் குடுகுடு என்று ஓடும் குழந்தையாக அவரிடம் ஓட்டமும் நடையுமாக விரைந்தாள் இளவஞ்சி.
அவள் விழிகளில் மெல்லிய நீர்க்கசிவு. ஏன் என்றே தெரியாமல் அவள் இதழ்களும் புன்னகையில் விரிந்தன. உள்ளத்தில் நெகிழ்ச்சி. உடலில் ஒரு பரவசம்.
தொழிலில் மாத்திரமல்லாமல் வாழ்க்கையிலும் எத்தனை கடினமான சூழ்நிலைகளை எல்லாம் தாண்டி வந்த பெண்மணி அவர். தான் அவரின் பேத்தி என்பதை மிக மிகப் பெருமையாய் உணர்ந்தாள். என்னவோ அவரைப் புதிதாகப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
தான் அவர் வாரிசு இல்லை என்றதும் உடைந்து நின்றதை எண்ணி இன்று வெட்கினாள். இன்னும் தைரியமாகவும் திடமாகவும் தான் அதை அணுகியிருக்க வேண்டுமோ என்று நினைத்தாள்.
ஆணாதிக்கமும் நான் என்கிற அகங்காரமும் இன்றைக்கு விடவும் அன்றைக்கு ஓங்கி நின்ற காலம் அவருடைய காலம். அப்போதே இத்தனையையும் தளராமல் தாங்கி வந்த பெண்மணியின் பேத்தி, இன்னும் சிறப்பாய் அனைத்தையும் கையாண்டிருக்க வேண்டாமா?
பரவாயில்லை. யானைக்கும் அடி சறுக்குவது நடப்பதுதானே! திரும்பி நிலனைப் பார்த்தாள்.
சின்ன சிரிப்போடு நட என்பதுபோல் தலையை அசைத்தான் அவன். அவனைப் பார்த்து அழகாகப் புன்னகைத்துவிட்டு, அவன் கரத்தைப் பற்றி அழைத்துக்கொண்டு நடந்தாள் இளவஞ்சி.
அதோ ராணியின் அரியணை! முற்றிலும் கண்ணாடியால் உருவாக்கப்பட்டு, முழுமையான வெண்திரையினால் மறைக்கப்பட்டிருந்த குளிரூப்பட்ட அறை அவளுடையது.
அதன் கண்ணாடிக் கதவில் Ms. Ilavanji Kunaalan, Managing Director, Thaiyalnayagi Garments (Pvt)Ltd என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டதுமே அவள் எவ்வளவோ தடுத்தும் முடியாமல் விழிகளில் நீர் கோர்த்துக்கொண்டது.
நிலனோடு உள்ளே நுழைந்தாள். அவள் அறை அவள் விட்டுவிட்டுப் போனது போலவே இருந்தது. ஆனந்தி அப்படி ஆக்கிவைத்திருந்தாள். ஒரு கணம் அங்கேயே நின்று ஆழ்ந்து சுவாசித்தாள். இதுதான் அவள் உலகம். இங்கேதான் அவள் அவளாக இருப்பாள். அவளை உயிர்ப்புடன் வைத்திருப்பது இதுதான்.
கைப்பையை தன் மேசையில் வைத்துவிட்டு, மேசையைச் சுற்றிக்கொண்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்த கணத்தில் உடைந்தாள் வஞ்சி.
“வஞ்சி!” என்று நெருங்கியவனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு, வயிற்றில் முகம் புதைத்தவளின் விழிகள் ஈரமாகிக் கசிய ஆரம்பித்தன.