அழகென்ற சொல்லுக்கு அவளே 18 – 2

சினச் சிவப்பைத் தவிர்த்து வேறு எதையும் அவனால் அங்கே காண முடியவில்லை.

“அவர் எவ்வளவோ கேட்டும் நான் அசையவே இல்லை எண்டதும் சக்திவேல்ல அவரின்ர ஒபீஸ் ரூம்ல இருந்து சில டொக்கியூமெண்ட்ஸை எடுத்துக்கொண்டு வரச் சொன்னார். அப்பிடி ஒரு லொக்கர் அவரிட்ட இருக்கு எண்டு எனக்கு அண்டைக்குத்தான் தெரியும். அதுக்கயும் சீல் வச்ச மாதிரி மூடிக்கட்டின ஒரு கவர். அதைக் கொண்டுபோய்க் குடுத்தனான். அதைத் திரும்ப என்னட்டையே தந்து, அது உனக்குச் சேர வேண்டியதாம், எங்கட வீட்டில வேற ஆருக்கும் தெரியக்கூடாதாம் எண்டு சொல்லிப்போட்டு, ‘இதையாவது கட்டாயமாக் குடுத்துவிடு தம்பி, செய்த பாவமே போதும்’ எண்டு சொன்னார்.” என்றுவிட்டு நிறுத்தினான்.

உண்மையில் இன்றைக்கு இதையெல்லாம் ஜீரணித்துக்கொள்ள அவனுக்கே இடைவெளி தேவையாய் இருந்தது.

“அந்த நேரம் அது பிழையா வந்திருக்கும் எண்டு நான் நினைக்கேல்ல. தொழில்ல சில வளைவு நெளிவு இருக்கிறதுதானே எண்டுதான் நினைச்சனான். அதவிட, எங்கட நிலம் எண்டு தெரியாம ஆரிட்டயோ ஏமாந்து அந்த நிலத்த வாங்கி, அதுல தையல்நாயகியக் கட்டி எழுப்பி இருக்கிறா உன்ர அப்பம்மா எண்டுதான் நினைச்சனான். அதோட எண்டைக்காவது எங்களை மீறி நீ வளந்து வந்தா, அத வச்சே உன்னை ஒரு ஆட்டு ஆட்டோணும் எண்டெல்லாம் நினைச்சிருக்கிறன்.” என்றவனைப் பார்வையாலேயே சுட்டுப் பொசுக்கினாள் அவள்.

“சும்மா சும்மா முறைக்கிறேல்ல. அண்டைக்கு எனக்கு நீ எதிரி. சோ அப்பிடி யோசிச்சன். பிஸினஸ்ல அது ஒண்டும் பிழை இல்லையே. அதைவிட அப்ப நான் நினைச்சது அது எங்கட சொந்த நிலம் எண்டுதான்.” என்றுவிட்டு,

“ஆனா, நானும் கொஞ்சம் நியாயவான்தான். என்னதான் போட்டி எண்டாலும் ஒரு தொழிலை வளக்கிறது எவ்வளவு பெரிய சவால் எண்டு தெரியும். அப்பிடி வளந்துகொண்டு வாறவளை நான் தட்ட நினைக்கிறது சரியா எண்டும் அப்பப்ப நினைப்பன். அதாலயே அதுக்குப் பிறகு என்னை அறியாம உன்னைக் கவனிக்க ஆரம்பிச்சிட்டன். பாக்க பாக்க அவ்வளவு பிரமிப்பா தெரிஞ்சாய் நீ. அதுவே நாளாக நாளாக ஒரு தாக்கம். உன்னைக் கட்டினா என்ன எண்டு. அந்தத் தாக்கத்தில ஒரு நாள் போய் அவளை நான் கட்டுறன் மாமா எண்டு சொல்லவும் அழுதிட்டார்.” என்றதும் அவள் உதட்டோரம் வெறுப்புடன் வளைந்தது.

அதைக் கவனித்தாலும் அதற்கு ஒன்றும் சொல்லாமல், “அந்த அழுகைதான் எனக்குச் சந்தேகத்த விதைச்சது. அந்த உறுதிப் பத்திரத்தப் பற்றி விசாரிச்சுக்கொண்டு போனா, அத மாமாக்குக் குடுத்தது உன்ர அம்மா…” என்றவனை வேகமாக இடைமறித்து, “அத்த!” என்றாள் அவள் அழுத்தம் திருத்தமாய்.

அவளையே பார்த்தான் நிலன். அவளும் பார்வையைத் தளர்த்தவில்லை.

“ஓகே! உன்ர அத்த எண்டதும் ஒரு சந்தேகம். என்ன மாமா காதலா, இல்ல காதலிக்கிறன் எண்டு சொல்லிச் சொத்தை வாங்கிட்டீங்களா எண்டு கேக்க வாயையே திறக்கேல்ல அவர். சரி, எப்பவோ நடந்தத மருமகனிட்ட சொல்ல விருப்பம் இல்லை போல எண்டு விட்டுட்டன். ஆனா அதுக்குப் பிறகு மனதில ஒரு உறுத்தல். மாமா செய்தது பிழை, என்ன இருந்தாலும் அப்பிடி நடந்திருக்கக் கூடாது எண்டு. அதே நேரம் அதை எப்பிடி உன்னட்டக் கொண்டு வந்து சேர்க்கிறது எண்டும் தெரியேல்ல. அவர் வெளில சொல்ல வேண்டாம் எண்டதை நான் காக்கலாம். உன்னட்டச் சொன்னா நீ காக்கவே மாட்டாய். முதல் வேலையா சக்திவேல் குடும்பம் ஏமாற்று குடும்பம் எண்டு வெளில சொல்லிப்போட்டுத்தான் இருப்பாய் எண்டு தெரியும். அதே நேரம் நானே வந்து கேட்டாலும் என்னைக் கட்டுவாய் எண்டுற நம்பிக்கையும் எனக்கு இல்ல.” என்றுவிட்டு அங்கிருந்த தண்ணீரை எடுத்துப் பருகினான்.

அவளிடமும் நீட்ட, “சொல்ல வேண்டியது எல்லாத்தையும் சொல்லி முடிங்க முதல்!” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் அவள்.

“கலியாணத்தை முறையா கொண்டு போவம் எண்டு அப்பாட்டச் சொன்னா அவரும் இது நடக்காது, வேண்டாம் எண்டுதான் நிண்டார். சோ, அவருக்கும் மாமான்ர காதல் கத தெரிஞ்சிருக்கு எண்டு நினைச்சாலும், அது எனக்கும் தெரியும் எண்டு நான் காட்டிக்கொள்ள இல்ல. எப்பவோ நடந்துகளைப் பற்றிக் கதைச்சு என்னாகப் போகுது எண்டு நினைச்சன். அம்மாக்கு உன்னப் பிடிக்கும். அதால அம்மாவை வச்சே அப்பாவைச் சமாளிச்சிட்டன். அப்பப்பாதான் பெரும் பிரச்சினை தந்தவர். முதல் ரெண்டு தரம் அவருக்குத் தெரியாமத்தான் கலியாணத்துக்கு கேட்டு விட்டனான். நீ ஓம் எண்டு சொல்லேல்ல.” என்றுவிட்டு தலையைப் பற்றிக்கொண்டு கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான்.

பிறகு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “அந்த இருவது வயதிலேயே வேணாம் எண்டு நினைச்ச என்னை வேணவே வேணாம் எண்டு உறுதியா நிண்டு மொத்தமா ஒதுக்கினவள் நீ. நில விசயம் தெரிஞ்சா கடைசி வந்தாலும் என்னைக் கட்ட மாட்டாய் எண்டு தெரியும். அதே நேரம் இந்தத் தையல்நாயகிக்காக என்னவும் செய்வாய் எண்டும் தெரியும். கடைசி வரைக்கும் முயற்சி செய்து பாப்பன். நீ மாட்டனே மாட்டன் எண்டு நிண்டா, அந்த நிலத்தைக் காட்டியாவது உன்னைக் கட்டியே தீருறது எண்டுற முடிவில இருந்தனான்.” என்றான் அவளையே பார்த்து.

“ஆக, நீங்க கூட எல்லாத்தையும் மூடி மறச்சிட்டீங்க!” கசப்பும் வெறுப்புமாகச் சொன்னவளைப் பார்த்து வேகமாக இல்லை என்று தலையை அசைத்தான் நிலன்.

“எனக்கும் எந்த உண்மையும் தெரியாது வஞ்சி. எல்லாமே என்ர ஊகங்கள்தான். அண்டைக்கு நீ மாமான்ர மகள் இல்லை எண்டுற உண்மை தெரிஞ்ச நேரம், எங்கட வீட்டு ஆம்பிளைகள் மூண்டு பேரின்ர முகங்களும் சரியே இல்ல. அதே நேரம் உனக்கு, மாமாக்கு, வாசவி அம்மாக்கு ஏதும் தொடர்பு இருக்குமோ எண்டுற சந்தேகம் எனக்கு வந்தது உண்மை. ஆனா அது சந்தேகம்தான். திரும்பவும் மாமாவைப் பிடிச்சுக் கேக்க, அப்பவும் அவர் வாயத் திறக்கேல்ல. எரிச்சல் வந்தாலும் வருத்தக்கார மனுசனை ஒரு அளவுக்கு மேல என்னால நெருக்கவும் முடியேல்ல. அதே நேரம் எதுவும் உறுதியாத் தெரியாம உன்னட்ட வந்து சொல்லவும் முடியேல்ல.” என்றவன்,

“ஆனா இது எல்லாத்துக்கும் பின்னால அப்பப்பா இருப்பார் எண்டு கனவிலயும் நினைக்கேல்ல வஞ்சி. அதுதான் ஆர் உனக்கு இருந்தாலும் இல்லாட்டியும் நான் உனக்காக இருக்கோணும் எண்டு நினைச்சன்.” என்று முடித்தான்.

“என்ன பரிதாபமா?” என்றாள் மனம் கொந்தளிக்க.

“அடிதான் வாங்கப் போறாய். என்னைப் பாத்தா பரிதாபத்தில உன்னைக் கட்டினவன் மாதிரியா இருக்கு?” என்று அதட்டினான்.

அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். என்னவோ மனமெல்லாம் மரத்துவிட்ட ஒரு உணர்வு. இன்னும் எத்தனை இரகசியங்கள் அவளுக்குப் பின்னால் இருக்கிறதோ தெரியாது.

மனத்தில் கசப்பும் வெறுப்பும் மண்ட அவனிடம் எதுவும் பேசத் தோன்றாமல் பேசாமல் அமர்ந்திருந்தாள் அவள்.

அவளையே பார்த்திருந்தவன் எழுந்து அவளிடம் வந்தான். ஒரு கால் நிலத்தில் இருக்க, இலேசாய் மேசையில் அமர்ந்து, அவள் முகத்தைப் பற்றித் தன்னை நோக்கி நிமிர்த்தினான்.

“எனக்கு உன்னை என்னை நினைக்க வைக்கோணும். பேசிப் பழகிக் காதலிக்க வைக்கிற ரகம் இல்ல நீ. உன்னோட நான் பேசின மொழிதான் தொழில்ல உனக்கு நான் தந்த தொந்தரவுகள். ஆரம்பம் போட்டில செய்தாலும் பிறகு செய்தது எல்லாம் உன்னைச் சீண்டுறதுக்குத்தான். முத்துமாணிக்கத்த நான் வாங்கினாலும் உனக்குத்தான் வந்து சேரும் எண்டு ஒரு நம்பிக்கை. செஞ்ச எல்லாத்துக்கும் பின்னால இருந்தது, கோவமா சண்டை பிடிக்கிறதுக்கு எண்டாலும் நீ என்னட்ட வரோணும் எண்டுற எண்ணம் மட்டும்தான். உனக்கு என்னை விளங்குதா?” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.

அவள் அவனையே பார்த்திருக்கக் குனிந்து அவள் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “எப்பவோ நடந்துகளை எங்களால மாத்தேலாது வஞ்சி. அதே மாதிரி இப்ப நடந்தது எல்லாம் நல்லதுக்கு எண்டே நினை. இல்லாட்டி இதெல்லாம் உனக்குத் தெரிய வந்திருக்காதுதானே? போதும் வஞ்சி. எல்லாரும் பட்ட துன்ப துயரங்கள் போதும். உன்ர அம்மாக்கு… சொறி அத்தைக்கு இதெல்லாம் நடந்திருக்க வேண்டாம்தான். என்ர குடும்ப ஆக்களில எனக்கே அவ்வளவு கோவம் வருது. ஆனாலும் விடு. இனியாவது நிம்மதியா இருப்பம்.” என்று இதமான குரலில் சொன்னான்.

அவனை ஒரு மாதிரிப் பார்த்து, “இதையெல்லாம் கதைக்கிறது சக்திவேலரின்ர பேரன் நிலன் பிரபாகரனா?” என்றாள் இதழோரம் வளைய.

“வஞ்சி!”

“இளவஞ்சி குணாளனுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிட்டுதாம் எண்டு சக்திவேலரிட்டயும் பாலகுமாரனிட்டயும் போய்ச் சொல்லிவிடுங்க. போங்க!” என்றாள் சினத்துடன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock