அழகென்ற சொல்லுக்கு அவளே 19 – 1

கோபத்தின் உச்சியிலும் கொதிப்பிலும் இருக்கிறவளை ஆற்றுப்படுத்தும் நோக்குடன்தான் அப்படிச் சொன்னான் நிலன். தன் வீட்டினரை அவளிடமிருந்து காக்கும் எண்ணத்துடனோ, அவர்களுக்காக நிற்கும் நோக்குடனோ சொல்லவில்லை. இன்னுமே சொல்லப்போனால் அவள் கணவனாய்ச் சொன்னான்.

கோபத்தில் எதையாவது செய்துவிட்டு, எதிர்காலத்தில் அதற்கும் சேர்த்து அவள் வருந்தக் கூடாது என்கிற அக்கறையில் அனைத்தையும் கடந்து வா என்றான்.

ஆனால், அவன் அந்த வீட்டின் வாரிசு என்பதாலேயே அவன் அவர்களுக்காகப் பேசுகிறான் என்று அவள் பொருள்கொண்டுவிட்டாள். இளவஞ்சி குணாளனாமே! அவள் இளவஞ்சி நிலனாகிக் கொஞ்ச நாள்களாகிவிட்டது என்று அவளிடம் யார் சொல்வது?

மிதுன் மூலம் அவள் காரினைத் தருவித்துத் தையல்நாயகியில் நிறுத்திவிட்டு, அவனுடையதில் மிதுனோடு புறப்பட்டான். அவன் கொண்டுபோய் அவள் காரின் திறப்பினை நீட்டியபோது, ‘அங்கே வைத்துவிட்டுப் போ’ என்பதுபோல் மேசையைக் காட்டியிருந்தாள்
அந்தத் திமிர் பிடித்தவள்.

இப்படி நிமிர்ந்து நின்றே தன்னை நோக்கி அவனை இழுத்துக்கொண்டிருக்கிறாள் அவள். சொன்னால் நம்ப மாட்டாள்.

மிதுன் முகமே சரியில்லை. இருண்டு, கறுத்துச் சிறுத்திருந்தது. எப்போதும் நிலனிடம் வழவழக்கிறவன் இன்று அமைதியாகவே வந்தான். தனக்குள் உழன்றுகொண்டிருந்த நிலனும் முதலில் அவனைக் கவனிக்கவில்லை.

கவனித்த பிறகு, “என்னடா?” என்றான்.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையாட்டினான் அவன்.

சிறிய அமைதிக்குப் பிறகு, “சுவாதி சொன்னவளா?” என்றான்.

ஆம் என்பதுபோல் இப்போதும் தலையை மட்டுமே அசைத்தான் மிதுன்.

நிலன் அழைத்து இளவஞ்சியைப் பற்றிக் கேட்டதும், சக்திவேலரைத் தையல்நாயகியிலிருந்து உடனடியாக அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்படு என்று சொன்னதும் என்னவோ சரியில்லை என்று உணர்த்த, சுவாதிக்கு அழைத்திருந்தான்.

அவளோ கோபத்துடன் அவன் குடும்பத்தையே இழுத்துவைத்துத் திட்டினாள். தன் அத்தைக்கு நடந்தது போலவே அவனும் தன்னை ஏமாத்திவிட்டானாம் என்று சொல்லவும் அதிர்ந்துபோனான். முதலில் அவனுக்கு ஒன்றும் முழுதாக விளங்கவும் மாட்டேன் என்றது. விளங்கியதும் என்ன சொல்வது என்று தெரியாது நின்றுவிட்டான்.

கூடவே தன் தகப்பனைப் போலவே தானும் நடந்திருக்கிறோம், அதுவும் அந்த வீட்டுப் பெண்ணுக்கே என்கிற விடயங்கள் அவனை முழுமையாகப் பாதித்திருந்தன.

இத்தனை காலமும் அப்பா அருமையான மனிதர், அமைதியான சுபாவம் கொண்டவர் என்கிற பிம்பம் முற்றிலுமாக நொருங்கிப் போயிற்று. அம்மா பொல்லாதவர், அப்பாவை இருத்தி எழுப்புவார் என்று இருந்தது மாறி, அம்மாவுக்கும் சேர்த்து அந்த மனிதர் துரோகமிழைத்திருக்கிறார் என்கிற விடயம் அவன் இரத்தத்தைக் கொதிக்க வைத்தது.

தந்தையை வெறுத்தான், இது எல்லாவற்றுக்கும் முழுமுதற் காரணமாக இருந்த தாத்தாவை முற்றிலுமாக வெறுத்தான், தன் வீட்டை வெறுத்தான். சுவாதி வீட்டினரை எப்படி நிமிர்ந்து பார்ப்பது என்று அவனுக்குத் தெரியவேயில்லை.

“அவா எனக்கு அக்காவா அண்ணா?” எழும்பவே எழும்பாத குரலில் வினவினான்.

“மறந்தும் அவளுக்கு முன்னால அப்பிடிக் கூப்பிட்டுடாத. முதல் நீ அப்பிடிச் சொல்லியிருந்தாக் கூட விட்டிருப்பாள். இப்ப கூப்பிட்டியோ அடிச்சாலும் அடிச்சிடுவாள். என்னை அண்ணா எண்டுதானே கூப்பிடுறாய். அப்பிடியே அவளையும் அண்ணி எண்டே சொல்லு.” அவள் இருக்கும் மனநிலைக்குக் கட்டாயம் செய்வாள் என்பதில் அவசரமாகச் சொன்னான் நிலன்.

சரி என்று தலையாட்டிக் கேட்டுக்கொண்டான் மிதுன்.

அவனுக்கு அவளைப் பிடிக்கும். ஆனால் பிடிக்காது. தூரத்தில் நின்று ரசிக்கையில் என்ன மாதிரியான பெண் இவர் என்று பிரமிப்பாக இருக்கும். அதுவே தன் குடும்பத்திற்கு தலையிடியாக இருக்கிறார் என்பதில் பிடிக்காது. ஆனால் இன்று அவள் அவனுக்குத் தமக்கையாம். விசித்திரமாக இருந்தது.

“இனி என்ன நடக்கும் எண்டு என்னால சொல்லவே ஏலாம இருக்கு மிதுன். வஞ்சி இதையெல்லாம் சும்மா விடுற ஆள் இல்ல. ஆனா என்ன நடந்தாலும் சுவாதியோட நிண்டுடு. அதே மாதிரி வஞ்சிக்கு எதிரா எதுவும் கதைக்கக் கூடாது நீ. அவள் பாதிக்கப்பட்டவள். பெத்த தாய் தகப்பன் ரெண்டு பேருமே அவளை விட்டுட்டினம். அவளின்ர தாயாவது செத்துப் போயிற்றா. ஆனா அப்பா எண்டு இருந்த மனுசன் இப்ப வரைக்கும் அவளைத் தேடேல்ல. அவளுக்கு ஏன் இப்பிடி ஒரு நிலை சொல்லு? அந்தளவுக்கு என்னடா பிழை செய்தவள்? இவ்வளவு பிரச்சனைகளை, மன உளைச்சலை எல்லாம் அவள் ஏன் சந்திக்கோணும்?” என்றவனுக்குத் தன்னைக் குறித்துத்தான் பெரும் பயமாய் இருந்தது.

அவள் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்பதற்காகத் தன் குடும்பத்தினருக்கு அவள் கொடுக்கப்போகும் குடைச்சல்களை எவ்வளவு தூரத்திற்கு அவனால் பொறுத்துப் போக முடியும் என்று அவனுக்குத் தெரியவில்லை.

அவர்களை அவள் துன்புறுத்தினால் அதை எப்படி அவன் பார்த்தும் பாராமல் கடப்பான்? முடியுமா என்ன? வளந்த பிள்ளை என்று நீ இருந்தும் எங்களுக்கு இந்த நிலையா என்று பெரியவர்கள் கேட்க மாட்டார்களா?

அவனுக்கும் அவளுக்குமான உறவு பெரும் சிக்கலுக்குள் சிக்கப்போவது மட்டும் நன்றாகப் புரிந்தது அவனுக்கு.

ஒரு நெடிய மூச்சுடன் அவனைத் தங்கள் வீட்டு வாசலில் இறக்கிவிட்டான். உள்ளுக்குள் போகவில்லை. இருக்கும் மனநிலைக்குச் சக்திவேலரை எதிர்கொள்ள அவன் தயாராக இல்லை. அதைவிட பாலகுமாரனோடு தனியாகக் கதைக்க வேண்டும். அதில் ஜானகி அறியாமல் பாலகுமாரனை சக்திவேலுக்கு அழைத்துவரும் பொறுப்பை மிதுனிடம் ஒப்படைத்துவிட்டு, அவனும் சக்திவேலுக்கு காரை திருப்பினான்.

வெளிப்பார்வைக்கு ஒரே வீடுபோல் இருந்தாலும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது அவர்கள் வீடு. மேலும் கீழுமாக ஒரு பக்கம் அவர்களுக்கு என்றால், மறுபக்கம் இவர்களுக்கு.

அப்படி இருந்தாலுமே வீட்டில் வைத்துப் பாலகுமாரனோடு தனியாகக் கதைப்பதற்கு வழி கிடைக்கவே கிடைக்காது. முக்கியமாகப் பேசிக்கொள்கிறார்கள், பிறகு என்னவென்று கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்று நினைக்கு ஒதுங்கி நிற்கும் குணமெல்லாம் ஜானகிக்கு இல்லை. எல்லாவற்றுக்கும் நடுவில் வந்துவிடுவார்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock