அழகென்ற சொல்லுக்கு அவளே 19 – 2

இன்றும் அப்படி ஏதாவது செய்வார் என்றால் நிச்சயம் அவனால் பொறுமையாக இருக்க முடியாது. பிறகு பேசலாம் என்று தள்ளிப்போடும் நிலையிலும் இல்லை.

அவன் அங்கே சென்றபோது பிரபாகரன்தான் இவனை எதிர்கொண்டார்.

“தம்பி!” என்றார் தயக்கத்துடன். மிதுனும் சுவாதியும் பிடித்த சண்டையில் சக்திவேலருக்கு முதலிலும் பிறகு அவர் மூலம் பாலகுமாரன், பிரபாகரன் இருவருக்குமே செய்தி வந்து சேர்ந்திருந்தது. அதில் மகன் எதற்கு இவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று அறிந்து, அவனை நிலைப்படுத்த முயன்றார் அவர்.

“நீங்க கூட எல்லாத்தையும் மறச்சிட்டீங்க என்னப்பா.” என்றான் கசப்புடன்.

“கோபப்படாத அப்பு. நிதானமா இரு. அதெல்லாம் எப்பவோ நடந்தது.”

“எப்பிடி அப்பா கோவப்படாம இருக்கிறது? எப்பிடி அப்பா எப்பவோ நடந்தது எண்டு சொல்லுறீங்க? அதால முழுசா பாதிக்கப்பட்ட ஒருத்தி உங்கட கண்ணுக்கு முன்னால முழுசா நிக்கிறாளே. தெரியேல்லையா உங்களுக்கு?”

“தம்பி, கடவுள் சத்தியமா இளவஞ்சியைப் பற்றி எனக்குத் தெரியாது. அவே முதல் ஒரு கிராமத்தில இருந்தவே. பிறகுதான் நல்லூருக்கு வந்தவே. குணாளனின்ர மகள் இளவஞ்சி எண்டுதான் எல்லாருக்கும் தெரியும். நடுவுக்க என்ன நடந்தது எண்டு ஆருக்குமே தெரியாது.” என்றார் அவர் அவசரமாக.

தையல்நாயகி அம்மா புத்திசாலித்தனமாக யோசித்து, உடனடியாக வாசவியைத் திருகோணமலை அனுப்பியதில் அவருக்குக் குழந்தை பிறந்தது இங்கே யாருக்கும் தெரிந்திராது. அவரின் இறப்பின் பின் அவள் குணாளனின் மகளாக மாறுகிற காலத்தில் ஊரை விட்டே வந்திருக்கிறார்கள்.

இவன் வீட்டினர் செய்த மொத்த துரோகத்திலிருந்தும் தன் குடும்பத்தையும் இளவஞ்சியையும் காப்பாற்ற அந்தப் பெண்மணி என்ன பாடெல்லாம் பட்டிருக்கிறார்? யோசிக்க யோசிக்க அவனாலேயே தாங்கிக்கொள்ள இயலவில்லை.

அவனின் பெருத்த அமைதி அவரைப் பாதிக்க, “தம்பி, என்னய்யா?” என்றார் அவன் தோளைத் தொட்டு.

“இது எவ்வளவு பெரிய துரோகம் எண்டு உங்களுக்கு விளங்கேல்லையா அப்பா? ஒரு அம்மா சாகிறதுக்கு எங்கட குடும்பம் காரணமா இருந்திருக்கு. ஆனா, அதையெல்லாம் மறைச்சுப்போட்டு அந்தக் குடும்பம் பொல்லாதது, சரியில்லாதது, அவள் பொல்லாதவள் எண்டு எவ்வளவு பழியத் தூக்கிப் போட்டீங்க. நானும் அதையெல்லாம் நம்பி… ச்செய்!” என்றான் தன்னைத் தானே வெறுத்தபடி.

“தம்பி இஞ்ச பார். அந்த நேரம் எனக்கு ஒண்டுமே தெரியாது. அப்ப நான் நீ உன்ர அம்மா எல்லாம் கொழும்பில இருந்தாங்க. நினைவு இருக்கா உனக்கு? இன்னும் சரியா சொல்லப்போனா குமாருக்கும் ஜானகிக்கும் கலியாணம் முடிஞ்ச பிறகும் குமார் ஜானகியோட ஒட்டாம இருந்திருக்கிறான் போல. அது அப்பான்ர காதுக்குப் போயிருக்கு. ‘கண்டவளையும் நினைச்சுக்கொண்டு என்ர மகளோட வாழாம இருக்கிறியா’ எண்டு ஏதோ அப்பா அவனைத் திட்டினதைக் கேட்டுத்தான் விசாரிச்சனான். அப்பதான் ‘வாசவிய விரும்பி இருக்கிறான், அவள் சரியில்ல எண்டு பிரிச்சு உன்ர தங்கச்சிக்கு கட்டி வச்சா வாழமாட்டன் எண்டு நிக்கிறான்’ எண்டு சொன்னவர். எனக்கும் அது பிழையா இருக்கேல்ல.” என்றவரை என்ன மனிதர் நீங்க என்று பார்த்தான் நிலன்.

“தம்பி, அந்த நேரம் உனக்குத் தெரியாது. தையல்நாயகிக்கும் எங்களுக்கும் அப்பிடி ஒரு போட்டி. அந்த அம்மா நாங்க எங்க எல்லாம் போனோமோ அங்க எல்லாம் பின்னால வந்து அடிச்சுக்கொண்டு இருந்தவா. அதால அந்தக் கலியாணம் நடந்தா சக்திவேலுக்கே ஆபத்து எண்டுதான் நானும் நினைச்சனான். அதைவிட ஜானுக்கு குமார்ல நல்ல விருப்பம். கலியாணமும் முடிஞ்சுது. அதால நானும் அவனுக்குப் புத்தி சொன்னதோட விட்டுட்டன். அதே மாதிரி நாங்க இளம் ஆக்களா இருந்த காலத்தில நடந்துகள உங்களிட்டச் சொல்லி என்ன செய்யச் சொல்லுறாய்? முதல் இதெல்லாம் சொல்லுற விசயமா சொல்லு?”

இதற்குள் பாலகுமாரனை அழைத்துக்கொண்டு வந்திருந்தான் மிதுன். பயணம் முழுவதிலும் அவன் அவர் முகம் பார்க்கவே இல்லை. அவர் பேச முயன்றபோதும் வேண்டுமென்றே அவரை ஒதுக்கினான்.

அது போதாது என்று அவரின் அலுவலக அறையில் அவரைத் தனியாகச் சந்திக்க வந்த நிலன் அவரைத் துச்சமாக நோக்கினான். அவனை நிமிர்ந்து பார்க்க முடியாத அளவில் பதற்றம், பயம், பரிதவிப்பு என்று இன்னதென்று பிரிக்க முடியா உணர்வுகளின் ஆதிக்கத்தில் தடுமாறினார்.

“உங்களால ஒரு உயிர் போயிருக்கு என்ன மாமா?” என்றான் அவன் நிதானமாக.

துடித்துப்போனார். வாசவி இனியும் தன்னைத் தேடிக்கொண்டு வரக் கூடாது என்றுதான் கடுமையாக நடந்தார். ஆனால், அவர் தன் உயிரையே மாய்த்துக்கொள்வார் என்று நினைக்கவேயில்லை.

“உங்கட மகள் அநாதையா அநாதை இல்லத்தில இருந்திருக்கிறாள். தெரியுமா?”

“தம்பி”

“பெத்த தகப்பன் கண்ணுக்கு முன்னால இருந்தும் இன்னொரு தாய் தகப்பனுக்கு மகளா வளந்திருக்கிறாள்.”

“த…ம்பி” கண்ணீர் தளும்பி வழிந்தது அவருக்கு.

“எப்பிடி மாமா இப்பிடி ஒரு சுயநலக்காரனா, கோழையா, பச்சோந்தியா இருக்க முடிஞ்சது உங்களால? அதுவும் கடைசி வரையிலும்?”

என்ன காரணம் சொல்லுவார்?

“அந்த நிலம் உங்கட கைக்கு எப்பிடி வந்தது? இப்பயாவது உண்மையச் சொல்லுங்க.”

அவருக்கு நடந்ததைச் சொல்லத் துணிச்சல் இல்லை.

அவன் விடுவதாக இல்லை. “சொல்லுங்க மாமா!” என்றான் அதட்டலாக.

“அந்த நிலம் உங்கட பெயர்ல இருக்கிறது வஞ்சிக்கு தெரிய வந்திட்டுது. நான் சொல்லிட்டன். எப்பிடி வந்தது எண்டு அவளுக்கு நான் சொல்ல வேணாமா?” என்றதும் முகத்தை மூடிக்கொண்டு அழுதார் மனிதர்.

அவன் இளகவே இல்லை. அவர்பால் அவனுக்குள் இரக்கம் சுரக்கவும் இல்லை. இத்தனையையும் தாங்கிக்கொண்டு நான் உடையமாட்டேன் என்று பிடிவாதமாக நிமிர்ந்து நிற்கிறவள்தான் கண்களுக்குள் வந்து போனாள்.

“சொல்லுங்க.” என்றான் திரும்பவும்.

“நான்தான் வாசவிய வெருட்டி வாங்கினனான்.”

“விளங்கேல்ல.”

எப்படிச் சொல்லுவார்? வாசவி வயிற்றில் குழந்தை என்றதும் அவரைப் பெரும் பயம் பிடித்துக்கொண்டது. எப்படியும் சக்திவேல் இதற்கு விடமாட்டார் என்று தெரியும். அவருக்குத்தான் ஜானகி என்று ஏற்கனவே சொல்லி வைத்திருந்தாரே.

ஆனால், வாசவி விடயம் தெரிய வருகையில் தையல்நாயகி சும்மா விடமாட்டார் என்று தெரியும். ஒருமுறை டைப்பிங் வகுப்பில் இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில்தான் வாசவியின் உறவினர் ஒருவர் சொத்து ஒன்றை அவள் பெயரில் வாங்க வேண்டுமாம் என்று அழைத்துப்போனது இவர் நினைவில் இருந்தது.

உன்னை நான் திருமணம் செய்ய வேண்டுமானால் அந்தச் சொத்தை என் பெயருக்கு மாற்று என்று சொல்லி, மாற்றி எழுதி வாங்கிக்கொண்டிருந்தார். அதை வைத்துத்தான் பிள்ளையோடு வந்தவளிடம் ‘இதோடு நீ என்னை விட்டு முற்றிலும் விலகவில்லையானால் உன் அம்மாவின் தொழிலையும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவேன்’ என்று மிரட்டியிருந்தார்.

மண்ணுக்குள் புதைந்துவிட மாட்டோமா என்று கூசியபடி அனைத்தையும் அவனைப் பாராமல் சொல்லி முடித்தார் மனிதர்.

“சீ! எவ்வளவு கேவலமான மனுசன் நீங்க!” அவர் சொல்லி முடித்த கணமே காறி உமிழாத குறையாக, அவர் முகத்துக்கு நேராகவே சீறியிருந்தான் நிலன்.

அதற்குமேல் அவர் முகம் கூடப் பார்க்கப் பிடிக்காமல் போய்விட, சட்டென்று எழுந்து வெளியே வந்திருந்தான் நிலன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock