அங்கே அயர்ன் செய்யப்பட்டு, அளவு வாரியாகப் பிரித்து மடிக்கப்பட்டு, பேக்கிங் ஆகி, விற்பனைக்குத் தயாராகும்.
இப்படித்தான் ஒரு துணி ஆடையாக வடிவம் கொள்வது.
இந்தப் பகுதிகளை எல்லாம் தாண்டிக்கொண்டு சென்றால் இருப்பது கொடவுன். அங்கே பனையளவு உயரத்திற்கும் மேலே, எவ்வளவு பெரிய பாரத்தையும் தாங்குமளவுக்கான ராக்குகள் உருவாக்கப்பட்டு, அவை தட்டு தட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
அந்த ராக்குகளில் இராட்சத ரோல்களாகச் சுற்றப்பட்டிருக்கும் துணி வகைகள், நூற்கண்டுகள், பட்டன்கள் டிசைன் ஓராயிரம், தைப்பதற்குத் தேவையான இதர பொருள்கள் எல்லாமே மின்சார ஃபோர்க்லிஃப்ட்(Electric Forklift) மூலம் ஏற்றி அடுக்கப்பட்டிருந்தன.
அதையெல்லாம் பார்த்தபடி, அங்கே பணிபுரிந்தவர்கள் இன்முகத்தோடு சொல்லும் காலை நேரத்து வணக்கத்தையும் பெற்றுக்கொண்டு, அவளே நேரடியாகக் கவனிக்கையில் கண்ணில் படும் தவறுகளையும் குறைகளையும் பற்றி அந்தந்த இடத்திலேயே பேசித் தீர்த்துக்கொண்டு, அந்தத் தொழிற்சாலையை மொத்தமாக அவள் சுற்றி முடிக்கையில் பெருமையும் நிமிர்வும் அவளறியாமலேயே அவளுக்குள் உண்டாயிற்று.
அவளுக்கே இத்தனை தொந்தரவுகளும் துன்பங்களும் சறுக்கல்களும் ஏமாற்றங்களும் கிடைக்கின்றன என்றால், எங்கோ ஒரு மூலையில் இருந்த கிராம வீட்டில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்கி, நகரத்துக்கு நகர்ந்து வந்து, முதலில் யாழ்ப்பாணத்திலேயே மூலப் பொருள்களை வாங்கித் தைத்துக்கொடுத்து, பிறகு தலைநகரிலிருந்து கொள்வனவு செய்யத் தொடங்கி, அதன் பிறகு இந்தியா முதற்கொண்டு ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்தும் இறக்குமதி செய்கிற அளவிற்கு அவள் அப்பம்மா வளர்த்திருக்கிறார் என்றால், அவர் இதைப் போன்ற எத்தனையைக் கடந்து வந்திருப்பார்?
அவர் அவளைப் போன்று சோர்ந்திருந்தால் இன்று தையல்நாயகி என்கிற இந்தத் தொழிற்சாலை உருவாகியிருக்குமா, இல்லை அது இத்தனையாயிரம் பெண்களுக்கான வாழ்வாதாரத்திற்கு தூணாகத்தான் நின்றிருக்குமா?
அதைவிட அங்கிருக்கும் பல பெண்களின் கதை அவளுக்குத் தெரியும். அவர்களோடு ஒப்பிடுகையில் அவள் எதிர்கொள்பவை எல்லாம் ஒன்றுமேயில்லை. அடிப்படை வசதி மட்டுமல்ல அளவுக்கதிகமான வசதிகளும், வருமானமும் அவளிடம் உண்டு. அப்படியானவள் கலங்கி நிற்பதா? அதுவும் தையல்நாயகியின் பேத்தி உடைந்துபோவதா?
கூடவே கூடாது! இயல்பான நிமிர்வுடன் அன்றைய நாளிற்கான தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.
நாள்கள் நகர ஆரம்பித்தன. நிலன், முத்துமாணிக்கத்தின் கார்மெண்ட்ஸை பத்திரப்பதிவு செய்த செய்தி இவள் செவியையும் வந்து எட்டியிருந்தது.
அன்று வீடு வந்தவளை அழைத்தார் குணாளன்.
“அம்மாச்சி… அது… நிலனுக்கு உங்களத் திரும்பவும் கேட்டு விட்டிருக்கினம்மா.” என்றார், மகள் கோபப்படப்போகிறாள் என்று தெரிந்தே.
அதேபோல் அவளுக்கும் சட்டென்று சினம்தான் உண்டாயிற்று. “என்னப்பா இது அரியண்டம்? விருப்பமில்ல எண்டு சொல்லியாச்சே. பிறகும் என்ன?” என்றாள் எரிச்சலுடன்.
அந்தப் பக்கம் அவளுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டே இந்தப் பக்கம் அவளைப் பெண் கேட்கிறார்கள் என்றால் எவ்வளவு தைரியம் என்று மனம் கொதித்தது.
அவருக்கும் இரண்டு மனம்தான். அவள் சொல்வதுபோல் வேண்டாம் என்றும் நினைத்தார். அதே நேரத்தில் வேண்டும் என்றும் நினைத்தார். தன் தடுமாற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல், “ஆனாம்மா நீயும் ஒருக்கா யோசிக்கலாமே. எனக்கும் நிலனுக்கு உங்களக் குடுக்க விருப்பம்தான்.” என்று சொன்னார்.
இது அவள் எதிர்பாராதது. இத்தனை காலமும் வெறுத்து ஒதுக்கிய மனிதர்கள் மீது இதென்ன திடீர் பற்று? அவர் மீது சிறு கோபம் உண்டாக, “யோசிக்கிற அளவுக்கெல்லாம் பெறுமதியான ஆள் இல்லையப்பா அந்த நிலன். வேண்டாம் எண்டா வேண்டாம்தான்.” என்று உறுதியான குரலில் மறுத்தாள்.
“அப்படிச் சொல்லாதயம்மா. என்னதான் இண்டைக்கு நாங்களும் நல்ல வசதி வாய்ப்போட இருந்தாலும் அவே பாரம்பரியமான குடும்பம். அங்க நீ போனா எங்களுக்கும் பெருமைதானே?” என்றதும் அவள் முகம் கோபத்தில் சிவந்தது.
“என்ன கிழிஞ்ச பெருமை? முதல் அந்தளவுக்கு நாங்க எந்தப் பக்கத்தால குறைஞ்சுபோனோம்?” என்று சீறினாள்.
“அம்மாச்சி…”
“கதைக்காதீங்கப்பா. எப்ப இருந்தப்பா இப்பிடி அடுத்தவன்ற பெருமைக்கும் பாரம்பரியத்துக்கும் ஆசைப்பட ஆரம்பிச்சனீங்க? நாங்களும் மூண்டாவது தலைமுறையா நிமிந்துதானேப்பா நிக்கிறம். இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?”
“சரியம்மா. நான் கதைச்சது பிழையாவே இருக்கட்டும். நீங்க அந்தப் பெடியனைப் பற்றி மட்டும் யோசிங்கோ. அவர் நல்லவர்தானே. உங்களை மாதிரி உழைப்பில கெட்டிக்காரனும்.”
“அந்தக் கெட்டிக்காரனும் அவரின்ர வீட்டு ஆக்களும் எதுக்குப் பிளான் பண்ணினம் எண்டு உங்களுக்கு விளங்கவே இல்லையாப்பா?”
“வாழ்க்கையோட தொழிலைத் தொடர்படுத்தக் கூடாதம்மா. வாழ்க்கை வேற. தொழில் வேற.”
“இதெல்லாம் மேடைப் பேச்சுக்கும் பேட்டி குடுக்கவும் நல்லாருக்கும். ரெண்டுக்கும் தொடர்பு இருக்கு. ரெண்டுல எது பிழைச்சாலும் மற்றதும் சேந்துதான் பாதிக்கும்.” தெளிவாகத் தன் கருத்தை உரைத்தாள் அவள்.
“சரியம்மா. கோபதாபத்தை விட்டுப்போட்டு அப்பா சொல்லுற மாதிரியும் ஒருக்கா யோசிச்சுப் பாருங்கோவன். நீங்க ரெண்டு பேரும் ஒரே தொழில். ஒருத்தர் இன்னொருத்தருக்கு உதவியா இருக்கலாம். வாழ்க்கைல ஒண்டு சேர்ந்தா தொழில்ல ரெண்டு பேரும் சேர்ந்தே வளரலாம். குடும்பமும் நல்ல குடும்பம். இது வரைக்கும் அவரின்ர மச்சான்தான் குழப்படி எண்டு கேள்விப்பட்டிருக்கிறனே தவிர இவரைப் பற்றி ஒரு குறையும் காதில விழுந்ததே இல்ல. இந்தக் காலத்தில இப்பிடி எல்லாம் பொருந்தி வாற சம்மந்தம் கிடைக்காதம்மா.” என்றவரை நம்ப முடியாமல் பார்த்தாள் இளவஞ்சி.
“என்னம்மா?”
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “அப்பம்மா இல்லை எண்டதும் எல்லாமே மறந்துபோச்சு என்னப்பா?” என்றாள் கசப்புடன்.
குணாளனின் பேச்சு நின்றுபோயிற்று. குற்றவுணர்ச்சியோடு சேர்த்து ஏதோ ஒரு வலியும் சுருக்கென்று அவருள் பாய்ந்தது.
“சக்திவேலருக்கு முன்னால எந்த இடத்திலயும் நாங்க குறஞ்சு நிண்டுடவே கூடாது எண்டு அப்பம்மா சொல்லுவா. அத மறந்திட்டீங்களா அப்பா? இல்ல, என்னத்துக்கு திரும்ப திரும்ப என்னைக் கேக்கினம் எண்டு விளங்கேல்லையா உங்களுக்கு? அவேக்குச் சமனா வளந்துகொண்டு வாறன் நான். என்னைக் கட்டி, பிறகு என்ர வாழ்க்கையை நடுவுக்க வச்சு தொழிலை ஒண்டு சேர்க்கிறன் எண்டு சொல்லி, தையல்நாயகிய இருந்த இடம் இல்லாம ஆக்குவினம். தேவையா இதெல்லாம்?” அவர்களின் கேவலமான திட்டத்தை அறியாமல் தந்தை இப்படிப் பேசுகிறாரே என்கிற கவலை தொனிக்க வினவினாள் அவள்.
“அதையெல்லாம் பேசி முடிவு செய்து கட்டுறதுதானேம்மா? அம்மா ஆரம்பிச்ச தொழில நானும் அப்பிடி விட்டுட மாட்டனம்மா. அப்பாக்காக யோசிங்கோ செல்லம்.”
சட்டென்று முகத்தில் பரவிய கடினத்தோடு, “ஆருக்காகவும் இதில யோசிக்க ஒண்டும் இல்லை அப்பா. எனக்கு விருப்பம் இல்ல. அவ்வளவுதான்.” என்றுவிட்டு எழுந்துகொண்டாள் அவள்.
“அக்காக்கு விருப்பமில்லை எண்டா விடுங்கோவன் அப்பா.” அக்காவின் செல்லமான சுதாகர், அவ்வளவு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டு இருந்துவிட்டுச் சொன்னான்.
“நீ சும்மா இரு தம்பி! உனக்கு ஒண்டும் தெரியாது.” என்று அவனை அதட்டிவிட்டு, “அம்மா இருந்திருந்தா அம்மாவும் இதத்தானம்மா சொல்லியிருப்பா.” என்று அவர் சொல்லி முடிக்க முதலே, “கடைசி வந்தாலும் இல்லை!” என்று சீறியிருந்தாள் அவள்.
“உங்களை விட அப்பம்மாவை, அவவின்ர மனதை, அதிலிருந்த கனவுகளை எனக்குத்தான் கூடத் தெரியும். நான் சொல்லுறன், அப்பம்மா அப்பிடிச் சொல்லவே மாட்டா!” என்றவளுக்கு அதற்குமேல் அந்தப் பேச்சை வளர்க்க விருப்பமே இல்லை.
அதில், “நீங்களா விருப்பமில்லை எண்டு சொல்லுறீங்களா, இல்லை அந்த வீட்டு ஆக்களோட நானே கதைக்கவா?” என்றாள் அவரைத் தீர்க்கமாகப் பார்த்து.
“இல்லை இல்ல! நானே சொல்லுறன்.” இன்னுமே எப்படியாவது இந்தத் திருமணத்தை நடந்துவிடமாட்டோமா என்கிற எதிர்பார்ப்பு அவர் ஆழ்மனத்தில் இருந்ததில் அவசரமாக மகளைத் தடுத்தார்.