அழகென்ற சொல்லுக்கு அவளே 20 – 1

அவன் பாலகுமாரனின் அலுவலக அறையை விட்டு வெளியில் வந்த அதே நேரத்தில் சக்திவேலர் ஆத்திரமும் அவசரமுமாக அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அந்தத் தள்ளாத வயதிலும் அவருக்கு உதவிக்கென்று இருந்தவரின் கையைக் கூட உதறிவிட்டு, ஊன்றுகோல் டொக் டொக் என்று தரையில் சத்தம் எழுப்ப வந்தவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது.

“டேய் பேரா! வாடா இஞ்ச!” என்றார் அவனைக் கண்டுவிட்டு.

அவன் போகவில்லை. முகத்தில் இறுக்கத்தோடு ஒரு கணம் நின்று அவரைப் பார்த்துவிட்டு, அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த அவனுடைய அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டான்.

சக்திவேலரும் குடுகுடு என்று அங்கே போக முயன்றார். அவரைத் தடுத்து, “அப்பா கொஞ்சம் நிதானமா இருங்கோ. அவன் இப்ப கோவத்துல இருக்கிறான்.” என்ற பிரபாகரனின் பேச்சை அவர் கேட்கவில்லை.

“அவன் என்ன அவ்வளவு பெரிய மனுசனா? நான் கூப்பிட கூப்பிடக் கேக்காத மாதிரிப் போறான். நீயும் அவன் கோவமா இருக்கிறான் எண்டுறாய். என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க ஆளாளுக்கு? நீ தள்ளு!” என்றுவிட்டு அவனுடைய அலுவலக அறைக்குள் வந்தார்.

அங்கே அவருக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்ற நிலனுக்குத் தன் ஊன்று கோளாலேயே ஒன்று போட்டார்.

“என்னடா திமிரா? நான் இல்லாம நீங்க எல்லாரும் வந்தனீங்களாடா? இந்தக் கிழவனுக்கு வயசு போயிட்டுது, இனியும் என்னத்துக்கு இவன் சொல்லுறதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கோணும் எண்டு நினைக்கிறியோ?” என்றவரின் வார்த்தைகள் அவன் நெஞ்சைத் தைத்தன.

திரும்பி அவரைப் பார்த்தான். எப்போதும் காலையில் எழுந்ததும் நல்லூரானைத் தொழுதுவிட்டு நெற்றியில் பட்டையாகத் திருநீறு பூசி, குளிர்ச்சியாகச் சந்தனப் பொட்டு நெற்றியை நிறைப்பதுபோல் வைத்துக்கொள்வார். இன்றும் அப்படித்தான் இருந்தார். கூடவே கண்கள் சிவந்து உக்கிர மூர்த்தியாகக் காட்சி தந்தார்.

பேசாமல் வந்து அவரைப் பிடிவாதமாக அழைத்துப்போய் அமர வைத்து, அருந்தக் கொடுத்தான். தண்ணீரை அருந்தி முடித்த பிறகு நெஞ்சை நீவி விட்டார். நிலனும் அவர் நெஞ்சை இதமாக நீவி விட, “கூப்பிட கூப்பிடக் கேக்காத மாதிரிப் போறாய் என்ன? அந்தளவுக்கு அப்பப்பா வேண்டாதவனா போய்ட்டன் உனக்கு.” என்றார், கோபமாக மனத்தாங்கலா என்று பிரிக்க முடியாமல்.

“சொறி அப்பப்பா!” என்றான் உடனேயே. என்னதான் அவர் மீது பெரும் கோபம் வந்தாலும் இந்த வயதில் இருக்கும் மனிதரை எப்படிக் கையாள்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.

அவன் மீது கோபத்தைக் காட்டினாலும் குழந்தையாகத் தெரிந்தார் மனிதர்.

“நீ கதைக்காத சொல்லிப்போட்டன். இப்ப என்னத்துக்கு குமாரை தனியா கூட்டிக்கொண்டு வந்து கதச்சனி? அவள் சொல்லி அப்பினவளா உனக்கு?” என்று ஆத்திரப்பட்டார்.

“அப்பப்பா சும்மா சும்மா அவளை இழுக்காதீங்க!” சட்டென்று மூண்டுவிட்ட கோபத்துடன் அதட்டினான்.

“அடி வெளுத்து விட்டுடுவன் ராஸ்கல்! உனக்கு அவளைச் சொன்னா கோவம் வருதோ?” என்றவரை இடையிட்டு,

“அவளும் உங்கட பேத்திதான் அப்பப்பா.” என்றான் வேதனையோடு.

“அப்பிடிச் சொல்லாத!” என்றார் அவர் உடனேயே. “அவள் எனக்குப் பேத்தியே இல்ல. அந்தத் தையல்நாயகின்ர பேத்தி எனக்குச் சொந்தமா இருக்கவே ஏலாது.”

அந்தளவில் அவள் செய்த தவறு என்ன? உள்ளே வலிக்க, “ஏன் அப்பப்பா இன்னுமே இப்பிடி இருக்கிறீங்க? அவளின்ர அம்மான்ர சாவுக்கு ஆர் காரணம்? அவள் அம்மா அப்பா இல்லாம இருக்கிறதுக்கு ஆர் காரணம்? எல்லாம் தெரிஞ்சும் தையல்நாயகில அந்த அம்மான்ர படத்தை எடுத்துப்போட்டு உங்கட ஃபோட்டோவை வைக்கிற அளவுக்குப் போயிருக்கிறீங்களே. கொஞ்சம் கூடவா உங்களுக்கு உறுத்த இல்ல?” என்று வினவினான்.

“திரும்பவும் என்னட்ட அடி வாங்காத பேரா! இண்டைக்கு அவளின்ர அம்மா உயிரோட இல்ல. அப்பன் அவளுக்கு அப்பன் இல்ல. தேவை இல்லாம இந்தக் கதையை எல்லாம் திரும்ப ஆரம்பிச்சு, என்ர மகளின்ர வாழ்க்கைல பிரச்சனைகளைக் கொண்டு வராத சொல்லிப்போட்டன். இன்னும் சொல்லப்போனா என்ர பிள்ளைக்கும் சேர்த்துத் துரோகம் செய்தவன் உன்ர மாமன். ஆனாலும் என்ர பிள்ளைக்காகத்தான் அவனை விட்டு வச்சிருக்கிறன். ஆனா நீ, எவளோ ஒருத்திக்காக என்ர பிள்ளையின்ர குடும்ப நிம்மதியப் பறிக்கப் பாக்கிறாய் என்ன?” என்றவரை வேதனையோடு பார்த்தான்.

இவ்வளவையும் பேசியதற்கே அவருக்கு மூச்சிரைத்தது. அந்த மனிதரிடம் அவனால் கோபப்படக்கூட முடியவில்லை.

ஆனால், இவருக்கு இன்னுமே இளவஞ்சியைப் புரியவில்லை என்றே தோன்றிற்று. அவர் வீட்டின் நிம்மதி இனி அவர்கள் யாரினதும் கையில் இல்லை. அதைச் சொல்ல முடியாமல் ஒரு நெடிய மூச்சுடன் எழுந்துகொண்டான்.

தன் தகப்பனிடம் அவரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே வந்து இளவஞ்சிக்கு அழைத்தான். அப்போதும் அவள் கைப்பேசியில் இவன் இலக்கம் தடையில்தான் இருந்தது. சுர்ரென்று கோபம் வந்தது. அடக்கிக்கொண்டு பாலகுமாரனைப் போய்ப் பார்த்தான்.

அங்கே அவர் அமர்ந்திருந்த இருக்கையிலேயே சாய்ந்து விழிகளை மூடியிருந்தார். பயந்துவிட்டான் நிலன்.

“மாமா, என்ன செய்யுது? உடம்புக்கு ஏதும் ஏலாம இருக்கா?” என்றபடி அவரை வேகமாக நெருங்கினான். அவர் மீது நெஞ்சுள் வெறுப்பு மண்டிக்கிடந்த போதிலும் எப்படியாவது போகட்டும் என்று விடமுடியவில்லை.

அதற்குப் பதில் சொல்லாதவர் விழிகளைத் திறந்து அவனையே பார்த்தார். அவர் விழிகள் மீண்டும் கலங்கிக்கொண்டு வந்தன. அருகில் வந்தவனின் கையைப் பற்றி, “இந்தப் பாவித் தகப்பன் மன்னிப்புக் கேட்டவனாம் எண்டு சொல்லிவிடய்யா.” என்றார் கண்ணீர்க் குரலில்.

இப்போதும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவர் தயாராயில்லை. அதை அவள் ஏற்கப்போவதில்லை. அது வேறு. அவளிடம் தன்னும் வந்து பேச அவர் தயாராக இல்லையே. வருத்த முறுவல் ஒன்றை மட்டும் சிந்திவிட்டு, அவரையும் சக்திவேலரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான்.

அங்கே ஜானகி இவனைக் கண்டதும் இளவஞ்சியைத்தான் விசாரித்தார்.

காலையில் ஒன்றாகப் போய்விட்டு அவன் மட்டும் திரும்பி வந்தது அவரைக் கேட்க வைத்தது.

“அவள் தையல்நாயகிக்கு போய்ட்டாள் அத்த.”

“அவள் ஏன் போனவள்? இனி அது மிதுனுக்கும் சுவாதிக்கும் எண்டு குடுத்தாச்சே.” என்றார் உடனேயே.

“இல்ல, அவளும் தையல்நாயகி அம்மான்ர பேத்திதான் அத்த.” அடுத்த பிரளயத்தைக் கிளப்பப் போகிறார் என்று தெரிந்தே சொன்னான். மறைக்கிற விடயமும் இல்லையே.

“என்னடா நேரத்துக்கு ஒரு கதை சொல்லிக்கொண்டு இருக்கிறீங்க? அவளுக்கு அந்தச் சொத்தில பங்கு இல்லை எண்டுதானே நானும் இந்தக் கலியாணத்துக்குப் பேசாம இருந்தனான். இப்ப அவளுக்கும் உரிமை இருக்கு எண்டா என்ன அர்த்தம்? சுவாதிக்கு ஒண்டும் இல்லையா?” என்று படபடத்தார்.

ஆக இவர் இந்தத் திருமணத்தில் இப்படி ஒரு திட்டம் போட்டிருந்தாரா? அன்று அவர்களின் மொத்தச் சொத்தில் நான்கில் மூன்று பங்கு மிதுனுக்குச் சொந்தம் என்றார். இன்று தையல்நாயகி.

நிலனுக்கு ஆயாசமாக இருந்தது. இது அவன் பிறந்து வளர்ந்த வீடு. இங்கிருக்கும் அனைவரும் அவனைத் தூக்கி வளர்த்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் முழுமையாகத் தெரியும் என்று இத்தனை நாள்களும் நினைத்திருந்திருக்கிறான்.

ஆனால் இன்றைக்கு அவர்களின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறான். மனிதர்கள் இத்தனை பொல்லாதவர்களா என்கிற அதிர்ச்சியும் அவனைச் சாய்க்கப் பார்த்தது.

“அத்த அவள் தையல்நாயகி அம்மான்ர பேத்தி இல்லை எண்டு இருந்தாலுமே தையல்நாயகி அவளுக்கு மட்டும்தான் சொந்தம். தையல்நாயகி அம்மா தையல்நாயகிய முழுசா அவளின்ர பெயர்லதான் எழுதி இருக்கிறா. அது தெரியாம நீங்களா ஒரு கற்பனைய வளக்காதீங்க.” என்றதும் இன்னுமே துள்ளினார் ஜானகி.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock