அழகென்ற சொல்லுக்கு அவளே 23 – 1

காலையில் விழித்ததும் ஜெயந்திக்கு மூத்த மகளின் நினைவுதான். மருமகன் வேறு வந்திருக்கிறானே. விறுவிறு என்று காலை உணவைத் தடல்புடலாகத் தயார் செய்தார். கணவருக்குத் தேநீர் கொண்டுபோகையில் அவர் பார்வை அவரையும் மீறி மாடியில் சாற்றப்பட்டிருந்த அவளின் அறைக்கதவில் படிந்து மீண்டது.

அவர் முகத்தில் தென்பட்ட பரப்பரப்பைக் கவனித்துவிட்டு என்னவென்று விசாரித்தார் குணாளன்.

“இரவு நிலனும் இஞ்சதான் வந்தவர். அதான் வேகமா எழும்பிச் சமச்சிட்டன். ஆனா இன்னும் ரெண்டு பேரும் கீழ வரக் காணேல்ல.” என்று, இன்னுமே அந்தப் பரபரப்பு நீங்காமல், குரலைத் தணித்து இரகசியம்போல் சொன்னார்.

குணாளனின் பார்வை தானாகச் சுவர் மணிக்கூட்டிற்குத் தாவிற்று. இந்த நேரத்திற்கு இளவஞ்சி எழுந்துவிடுவது வழக்கம் என்றாலும், “விடு, வாற நேரம் வரட்டும்.” என்று சொன்னார்.

“ஓமோம். இப்ப நான் என்ன எழுப்பப்போறன் எண்டா சொன்னனான். தம்பியும் வந்தது சந்தோசமா இருந்தது. இரவு தம்பிக்கு இளா முட்டை பொரிச்சுக் குடுத்தவா.” என்று இரவு நடந்ததையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.

இப்படிப் பூரித்துப் பேசும் இதே ஜெயந்திதான் நடந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்தவர். அவரின் இளவஞ்சி மீதான பாசத்தில் குணாளனுமே என்றும் குறை கண்டதில்லை. அன்று மட்டும்தான்.

“என்னப்பா, ஏன் என்னையே பாக்கிறீங்க?” கணவரின் பார்வையின் பொருள் புரியாமல் வினவினார் ஜெயந்தி.

அவரின் உதவியாளன் பாலன் அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, “அண்டைக்கு நீ வாய விடாம இருந்திருந்தா இண்டைக்கு இவ்வளவு பிரச்சினைகள் நடந்தே இராது.” என்றார் குணாளன்.

சட்டென்று ஜெயந்தியின் முகம் சுருங்கிப்போயிற்று. “இன்னும் அதையே சொல்லிக் காட்டுவீங்களா?” என்றார் மனத்தாங்கலாக.

“சொல்லிக் காட்டேல்ல ஜெயந்தி. ஆனா நீ அண்டைக்கு அத மட்டும் சொல்லேல்ல. சொத்து சுகத்தை எல்லாம் இளாதான் அனுபவிக்கிறா எண்டும் சொன்னனீ.” என்று நினைவூட்டினார் குணாளன்.

ஜெயந்திக்கு முகம் கன்றிப் போயிற்று.

“இப்ப எனக்குத் தெரியவேண்டியது உண்மையாவே உனக்கு அப்பிடி ஒரு நினைப்பிருக்கா எண்டுறதுதான்.” என்றார் விடாமல்.

இல்லை என்பதுபோல் மறுத்துத் தலையசைத்தார் ஜெயந்தி. “அண்டைக்கு எந்தப் பேய் பிசாசு வந்து என்னை ஆட்டி வச்சது எண்டு தெரியாது. ஆனா மனசில இருந்து கதைக்கேல்ல நான். இதத் தவிர வேற என்ன விளக்கம் சொல்லுறது எண்டு உண்மையா எனக்குத் தெரியேல்ல.” என்றார் மிகவுமே வருத்தம் தோய்ந்த குரலில்.

குணாளனுக்கும் இப்போது அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சொத்தைப் பற்றித் தெளிவுபடுத்துகிறவராக, “தையல்நாயகி முழுக்க முழுக்க இளாக்குச் சொந்தம் ஜெயந்தி. அது எவ்வளவு பிரமாண்டமான வளைந்து நிண்டாலும் அவாக்கு மட்டும்தான். அதால கிடைக்கிற லாபம், வாங்கிப்போடுற சொத்து எல்லாமே மூண்டு பேருக்கும் சரி சமமாப் பிரியும். இத எண்டைக்கும் மறந்திடாத. தையல்நாயகில நாங்க நாலு பேரும் ஒரு துரும்பையும் அசைக்கிறேல்ல. ஆம்பிளைக்குச் சமனா நிண்டு, பாடுபட்டு உழைச்சு லாபம் பாக்கிற பிள்ளை அவா மட்டும்தான். ஆனா அதின்ர பலாபலனை நாங்க எல்லாரும் அனுபவிக்கிறம். சுவாதி எவ்வளவு சுகபோகமா வளந்தவா, இளா எப்பிடி வளந்தவா எண்டு யோசி.” என்று இறுக்கமான குரலிலேயே எடுத்துரைத்தார்.

இது அன்று தான் சொத்துப் பற்றிப் பேசியதற்கான விளக்கம் என்பதை மிகுந்த வருத்தத்தோடு உணர்ந்துகொண்ட ஜெயந்தி, தெரியும் என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு அமைதியாகிப்போனார். என்னதான் அவர் விளக்கம் கொடுத்தாலும் பேசியது பேசியதுதானே!

*****

இளவஞ்சியின் அறையில் தன் கைகளுக்குள் இருந்த மனைவியின் அசைவில்தான் விழித்தான் நிலன். விழித்தவன் விழிகள் ஆனந்தமாக அதிர்ந்து பின் சிரித்தன. அந்தளவில் அந்தரங்கக் கோலத்தில் அவன் கைகளுக்குள் அடித்துப்போட்டதுபோல் உறங்கிக்கொண்டிருந்தாள் அவனுடைய அருமை மனைவி.

இதே அவள்தான் முதல் நாள் இரவு அவன் இருக்கிறான் என்று கோர்ட்டை எடுத்து அணிந்தவள். சிரிப்பு மிக அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

அப்போதும் அவள் விழித்துக்கொள்வதாக இல்லை. இரவு முழுக்க அவன் கொடுத்த தொந்தரவு அப்படி! பின்னே, நெடுநாள் விரதமிருந்தவனிடம் கொண்டுவந்து பிரியாணியை நீட்டினால் என்னாகும்?

இரவு எதையும் திட்டமிட்டு அவன் வரவில்லை. ஆனால், உள்ளத்தில் இருப்பதை எல்லாம் அவளிடம் கொட்டிவிட்டதே அவனுக்குள் இருந்த தடையை நீக்கி நெருக்கத்தை உண்டாக்கிற்று. கூடவே, அவளின் அழகுக் கோலமும் அவனுக்குள் இருந்த அடங்காத ஆசையும் சேர்ந்து எல்லாவற்றையும் மிக அழகாய் நிகழ்த்தி முடித்திருந்தன.

மெல்ல மெல்ல அன்று பார்க்க வேண்டிய வேலைகள் வரிசையாக நினைவில் வந்தன. எட்டிக் கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தான். இனி எழுந்து புறப்பட்டால்தான் சரியாக இருக்கும்.

ஆனால், உடலின் சுகமான அயர்ச்சியும் உள்ளத்தின் நிறைவும் அவனை அதன் பிறகும் அவளை விட்டு எழுந்துகொள்ள விடவில்லை. அவளை இன்னும் வாகாகத் தனக்குள் கொண்டுவந்து முகம் முழுக்க முத்துமுத்தாக முத்தமிட்டான்.

“நிலன்! படுக்க விடுங்க!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் அவள்.

பாவமாகப் போயிற்று அவனுக்கு. எழுந்ததும் அவளும் இன்றைய நாளுக்குப் பின்னால் ஓட வேண்டுமே.

அதில், “சரிசரி. ஒண்டும் செய்யேல்ல. நீ படு!” என்று அவளைத் தன் மார்பில் சேர்த்துத் தட்டிக்கொடுத்து, போர்வையையும் இழுத்து ஏசி குளிருக்கு இதமாகப் போர்த்திவிட்டான்.

இன்னும் கொஞ்ச நேரம் மனைவியின் அண்மையை அனுபவித்துவிட்டு மெல்ல எழுந்துகொண்டான். குளித்துவிட்டு வந்து, மாற்ற ஏதாவது இருக்குமா என்று சத்தமில்லாமல் அவள் அலமாரியைத் திறந்து பார்த்தான். அங்கே, அவனுக்குத் தோதான உடைகள் சில செட்டாகவே தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு புருவங்களை உச்சி மேட்டுக்கே உயர்த்தினான்.

நேற்றிரவும் அவன் கேட்டதும் எடுத்துத் தந்தாளே. ஆக, முதலே வாங்கி வைத்திருந்திருக்கிறாள். உள்ளே சில்லென்று ஒரு நீரூற்றுப் பொங்க, அதில் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டான்.

அவன் தயாராகி முடித்த வேளையில் பிரபாகரன் அழைத்தார். அவள் எழுந்துவிடக் கூடாது என்கிற கரிசனையோடு அவன் பால்கனிக்கு நடக்க, இங்கே இளவஞ்சி விழித்து இலேசாகப் புரண்டாள்.

மெல்ல மெல்ல நடந்தவை எல்லாம் நினைவில் வந்தன. பட்டென்று விழிகளைத் திறந்து பார்த்தாள். நிலனைக் காணவில்லை. கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தபோதும் உள்ளே மெல்லியதாகச் கூச்சம் பரவாமலும் இல்லை.

ஆனால், அவன் கழற்றிப் போட்டிருந்த முதல் நாளைய உடைகள், ஈரத் துவாய் எல்லாம் அவன் குளித்துத் தயாராகிவிட்டதைச் சொல்லின. தானும் வேகமாக எழுந்து குளியலறைக்கு நடந்தாள்.

அவள் குளித்து, பாத் ரோப் அணிந்து, தலைமுடியைத் துவாயினால் சுற்றிக்கொண்டு வந்த அழகைக் கண்டு நிலனால் தள்ளியிருக்க முடியவில்லை. உள்ளே வந்து அவளைப் பின்னிருந்து அணைத்து வாசம் பிடித்தான்.

இளவஞ்சி அவனை எதிர்கொள்ள மிகவுமே தடுமாறினாள். தொழில்துறையில் அத்தனை ஆண்களையும் நேர் பார்வையில் கூறு போடுகிறவள். நெஞ்சத்தில் நிறைந்து, நேற்றைய நாளில் ஊனிலும் உயிரிலும் கலந்து போனவனின் பார்வையைச் சந்திப்பது சவாலான ஒன்றாகிற்று.

அவளைத் தன் புறம் திருப்பி, பனியில் நனைந்த ரோஜாவாகக் குளித்ததில் சிவந்திருந்தவளின் முக வடிவைக் கண்டு ரசித்தவன், இதழ்களில் அழுத்தி முத்தமிட்டான். பின் முகம் முழுவதும்.

“நிலன்!” அவள் இதழ்கள் முணுமுணுத்தன.

திரும்பவும் அந்த இதழ்களைச் சிறை செய்தான்.

அணைப்பு இறுகி, முத்தங்கள் பெருகி, மூச்சுகள் சூடாக ஆரம்பிக்கையில் அவன் விடுத்த அழைப்பிற்கு அவளால் மறுக்க முடியாது போயிற்று. உணர்வுகள் பெருகி வழிய நாழிகைகள் நழுவி ஓடியிருந்தன. அவனைப் பாராமல் அவளும், சின்ன சிரிப்புடன் அவனும் எழுந்து தயாராகி வருவதற்குள் நன்றாகவே நேரமாகியிருந்தது.

அடுத்த ஒரு வாரம் மின்னலாகக் கடந்திருந்தது. நிலனின் இரவுகள் இங்கே இளவஞ்சியோடுதான். அதில் ஜானகிக்கு மிகுந்த கோபம். கொஞ்சம் கொஞ்சமாகத் தம் இரு பிள்ளைகளையும் தம்மிடமிருந்து பிரிக்கப் போகிறாள் என்று கோபப்பட்டார்.

அதையெல்லாம் அவன் பொருட்டில் கொள்ளவில்லை. அவனிடம் பேசி ஆகாது என்று மிதுனுக்கு அழைத்து, சுவாதியுடன் அவனை அங்கு வந்துவிடச் சொன்னார் ஜானகி.

அவன் மறுத்துவிட்டான். அங்கே வீட்டில் நடக்கும் அனைத்தும் அவனுக்கும் தெரியும். தங்குதல் இங்கு என்றாலும் தினமும் சுவாதியுடன் அங்குப் போய் வருவான்.

ஒரு நாளும் அவளை அங்கே தனியாக விட்டதில்லை. அவனுக்கு அறிமுகமான நாள்களில் பட்டாம் பூச்சியாகச் சிறகடித்துக்கொண்டிருந்தவள் இப்போது அப்படியே மாறிவிட்டது அவனையும் உறுத்திக்கொண்டிருந்தது.

தாய்மை உற்றதினால் உண்டான உடல் சோர்வா, இல்லை நடந்த நிகழ்வுகளால் அதிகமாகக் காயப்பட்டுப் போனாளா தெரியாது. எப்போதுமே ஒரு அமைதி அவளிடத்தில். எங்காவது கூட்டிக்கொண்டு போய் அவள் மனநிலையை மாற்றலாம் என்றால் குழந்தை தடுத்தது.

அதில் முடிந்தவரையில் யாரும், குறிப்பாகத் தன் அன்னை அவளைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தான்.

பிரபாகரன் சந்திரமதிக்கு மகன் அங்குத் தங்குவதைக் குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மகன் முகத்தில் தெரியும் வெளிச்சம் கண்டு இன்னும் சந்தோசமே.

அன்று இரவும் ஆசையாய் அவளை நாடி, தேடல்களில் தொலைந்து, தேவைகள் தீர்த்து, தேகங்கள் களைத்த நிலையில் அவளைக் கைகளுக்குள் வைத்திருந்தான் நிலன்.

அவள் கேசம் கோதி முத்தமிட்டுவிட்டு, “நாளைக்கு விடியவே நிலம் மாத்திப் பதியப் போகோணும் வஞ்சி.” என்று நினைவூட்டினான்.

அவ்வளவு நேரமாகக் கணவனின் கையணைப்பில் இவ்வுலகையே மறந்திருந்தவள் மனநிலை அப்படியே மாறிப்போயிற்று. அதை எந்தச் சூழ்நிலையில் தன்னைப் பெற்றவர் எழுதிக் கொடுத்தார் என்பதும், அதை வைத்துத் தான் உருவாவதற்குக் காரணமான மனிதர் என்னவெல்லாம் செய்தார் என்பதும் மனக்கண்ணில் மின்னி மறைந்தன. நிம்மதியே இல்லாமல் இவ்வுலகை விட்டு நீங்கிய தையல்நாயகி அம்மாவும் நினைவில் வரத் தனக்குள் இறுகினாள்.

“வஞ்சிம்மா!” என்று அவளை அள்ளி அணைத்துக்கொண்டான் நிலன். அவனுக்குள் பேசாமல் அடங்கினாலும் ஒன்றும் சொல்லவில்லை அவள்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock