இருவருமே நாள் முழுக்க அவரவர் வேலைகளிலேயே மூழ்கிப் போகிறவர்கள். இந்த இரவுகள் மட்டுமே அவர்களுக்குச் சொந்தமானவை. அந்த நேரத்தில் இப்படியான பேச்சுகளை முடிந்தவரையில் இருவருமே தவிர்த்துவிடுவர். அப்படி இன்றைக்கும் நிலனால் இருக்க முடியவில்லை. முடிந்தவரையில் வேகமாக அவளுடையதை அவளிடம் சேர்த்துவிட முயன்றான்.
அதே நேரத்தில் ஒரு வஞ்சகத்தின் பெயரில் கைமாறியதை வாங்கத்தான் வேண்டுமா என்று அவளின் ரோசம் கொண்ட நெஞ்சம் கேள்வி எழுப்பிற்று. கூடவே அதைத் திருப்பித் தந்து, அந்த மனிதன் தன் பாவக்கணக்கைக் குறைக்கப் பார்க்க, அதற்கு அவள் துணை போவதா என்று உள்ளம் கொதித்தது.
ஆனால், அவளின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது தையல்நாயகி. அது எத்தனையோ பேரின் வாழ்வாதாரம். தலைமுறை தலைமுறையாக அவளின் அப்பம்மாவின் பெயரைச் சுமந்து நிற்பது.
அதனால் அவள் மறுக்கவில்லை. அதே நேரத்தில் வருகிறேன் என்று சொல்லவும் விருப்பமில்லை.
ஒன்றுமே சொல்லாமல் இருக்கும் மனைவியின் முகம் பார்த்தான் நிலன்.
சுனாமியையே தன் நெஞ்சுக்குள் அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறாள் என்று புரிந்தது. இது நல்லதும் அல்ல. இப்படி இருவரும் பார்த்து பார்த்துக் கவனமாகப் பேசுவது ஆரோக்கியமானதும் இல்லையே.
“வஞ்சி!”
“…”
“வஞ்சி ஏதாவது சொல்லன்.”
“…”
“வஞ்சிம்மா”
“ப்ச் உங்களுக்கு என்ன சொல்லி இருக்கிறன் நிலன்? எனக்கும் உங்களுக்குமான நேரத்தில இதை எல்லாம் கதைக்காதீங்க எண்டு எல்லா?” என்று கோபப்பட்டாள் அவள்.
தன்னோடான இணக்கமான பொழுதுகளை எதைக்கொண்டும் அவள் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று புரிந்தது. மனம் கனிய தன் அணைப்பை இதமாக இறுக்கினான்.
அடுத்த நாள் பாலகுமாரனை அழைத்துவரும் பொறுப்பை மிதுனிடம் கொடுத்துவிட்டு, வஞ்சியோடு நின்றுகொண்டான் நிலன். நிச்சயம் அவளால் இது இலகுவாய் முடியாது என்று தெரியும்.
அவன் எண்ணியது போலவே விடிந்ததிலிருந்து ஒருவித இறுக்கத்தோடுதான் இருந்தாள் அவள். புறப்பட்டு வெளியே செல்லப் போனவள் கரம் பற்றி நிறுத்தி அணைத்துக்கொண்டான் அவன்.
அதற்காகவே காத்திருந்தாள் போலும். “எனக்கு அந்தாளின்ர முகத்தில முழிக்கவே விருப்பமில்லை நிலன்.” என்றாள் அவன் முகம் பார்த்து.
அந்த முகத்தையே பார்த்தான் நிலன். அலைப்புறுகிற விழிகளும் அலைபாயும் மனமுமாய் நின்றாள். மென்மையாக முகம் தாங்கி, நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தான்.
“ஒரு தொழிலையே நடத்திறவள் நீ. உனக்கு நான் ஒண்டும் சொல்லத் தேவையில்லை. ஆனா, எல்லா நேரமும் எங்களுக்குப் பிடிச்ச மனுசரோட மட்டுமே சந்திப்புகள் நடக்கிறேல்ல வஞ்சி. ஒரு கொஞ்ச நேரம். நீ சமாளிப்பாய். சும்மா மனதைப் போட்டு வருத்தாத!” என்று மட்டும் சொன்னான்.
வேறு நிறையப் பேசப்போகவில்லை. அவளுக்கே இதை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரியும். அவன் ஒருவன் தன்னைத் தாங்க இருக்கிறான் என்றதும் குழந்தையாகிப்போனாள்.
அவளும் அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள். தள்ளாடித் தடுமாறிக்கொண்டிருந்த மனத்திற்கு இந்த ஆறுதலும் ஆசுவாசமும் தேவையாய் இருந்தன.
ஒரு வழியாக அங்கே அவர்கள் சென்று, பதிவிற்கான ஆயத்தங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கையில் மிதுனோடு வந்து சேர்ந்தார் பாலகுமாரன். அவள் தேகத்தின் இறுக்கம் கூடிப்போயிற்று. அவர் புறம் திரும்பவேயில்லை.
கண்ணில் நீருடன் அவர் பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது. அதைக் கண்டு அவள் முகம் சிவந்து கொதிக்க ஆரம்பித்தது.
அவள் கரம் பற்றி அமைதிப்படுத்தினான் நிலன். தன் கைப்பிடியிலேயே அவளை வைத்திருந்து பத்திரப்பதிவை நல்லபடியாக முடித்தான்.
அவளையே பார்த்திருந்த மிதுனுக்கு நெஞ்சை என்னவோ செய்தது. தூரத்திலிருந்து பார்க்கையில் திமிரான, அகங்காரமான, ஆணவமான பெண்ணாக நினைத்திருக்கிறான்.
பக்கத்திலிருந்து பார்க்கையில்தான் மனத்தின் கொந்தளிப்புகளை வெளியில் காட்டிவிடாமல் இருக்க அவள் போடும் அரிதாரங்கள் அவை என்று புரிந்தது.
ஓடிப்போய்க் குளிர்பானம் வாங்கி வந்தான். எல்லோருக்குமாகக் கொண்டு வந்தாலும் வேகமாய் ஒன்றை எடுத்து அவளிடம்தான் முதலில் கொடுத்தான்.
மறுக்காமல் வாங்கிப் பருகிவிட்டு, “போவம்!” என்றாள் நிலனிடம். என்னவோ அந்த மனிதர் நிற்கும் இடத்தில் நிற்பதே தேகமெல்லாம் பற்றி எரிவது போன்று காந்தியது.
“தம்பி, எனக்கு அவாவோட ஒருக்காக் கதைக்கோணுமப்பு…” என்றார் பாலகுமாரன் வேண்டுதலுடன்.
நிலன் திரும்பி அவளைக் கேள்வியாகப் பார்த்தான். அவ்வளவுதான். சினத்தில் முகம் சிவந்துவிட, “காரை எடு மிதுன்!” என்றுவிட்டுப் போய் மிதுனின் காரில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
அவன் நிலனைக்கூட திரும்பிப் பார்க்கவில்லை. தமக்கை சொன்னதே வேத வாக்காகிவிட, ஓடிப்போய்க் காரை எடுத்தான்.
“தையல் நாயகிக்கு விடு!” என்றுவிட்டுக் கண்களை மூடிக்கொண்டு சாய்ந்துவிட்டாள். நடந்தவை எல்லாம் தெரியாத பொழுதுகளிலேயே அவரிடம் அவளுக்கு ஒரு ஒவ்வாமை இருந்திருக்கிறது. அப்படியிருக்க இன்று. அவளின் அப்பம்மா எழுதிய ஒவ்வொரு வார்த்தைகளும் நினைவில் வந்து அவளைச் சுழற்றி அடித்தன.
ஆனாலும் இப்படி இதையெல்லாம் உணர்வு ரீதியாக அணுகுவது மகா தவறு என்று அவள் அறிவு எடுத்துச் சொன்னது. அப்படி அணுகுகிறவளும் இல்லையே அவள். இந்த நிலன்தான் நேசத்தைக் காட்டி, அவளை நெகிழ்த்தி வைத்திருக்கிறான். அவன் மீது கண்மண் தெரியாத கோபம் உண்டாயிற்று.
அப்போது மிதுனுக்கு அழைத்தாள் கீர்த்தி.
“டேய் மிதுன், இண்டைக்காவது அண்ணிட்ட கேட்டியாடா?” என்றாள் எடுத்ததுமே. இருவருக்குமே கிட்டத்தட்ட ஒரே வயது என்பதில் அவனுக்கு இவள் டேய் தான். காரின் ப்ளூடூத்தில் நேரடியாக அவன் கைப்பேசி இணைக்கப்பட்டிருந்ததில் அவள் குரல் கார் முழுக்க நிறைந்து வந்தது.
அவள் பேச்சில் தான் அடிப்படவும் மிதுனைக் கேள்வியாக ஏறிட்டாள் இளவஞ்சி. அவனுக்கு இலேசாக உதறியது. “நீ வை. நான் பிறகு எடுக்கிறன்.” என்றான் அவசரமாக.
“எருமை எருமை எருமை! பிறகு பிறகு எண்டு எப்பயடா கேப்பாய்? இன்னும் ரெண்டு நாளில கலியாணம். அது முடிஞ்ச பிறகா? அண்ணாவும் மாட்டாராம். கேளனடா.” என்று கோபம் கெஞ்சல் என்று கலந்துகட்டினாள் அவள்.
“என்ன கேக்கோணும் உனக்கு?” திடீரென்று வந்த இளவஞ்சியின் குரலில், “ஐயோ அண்ணி, ஒண்டுமில்ல. அது சும்மா.” என்று உளறிக்கொட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள் அவள்.
மிதுனோடு இளவஞ்சியும் இருப்பாள் என்று சாத்திரமா பார்த்தாள்.
இளவஞ்சி உதட்டில் மெல்லிய முறுவல். “என்ன கேக்கோணுமாம்?” என்றாள் மிதுனிடம்.
“அக்கா அது உங்கட பிளவுஸ் மாதிரி…”
எந்த பிளவுஸ் என்று கேட்கப்போனவள் சட்டென்று ஓடிப் பிடித்தாள்.
ஆக, நிலன் சொன்னதுபோல் அவள் கேட்டிருக்கிறாள். அன்று அவள் சொல்லமாட்டேன் என்றதில் அவன் மறுத்திருக்கிறான். அவன் மறுத்ததினால் இவள் மிதுனைப் பிடித்திருக்கிறாள் என்று விளங்க, கீர்த்தனாவின் கைப்பேசி இலக்கத்தைக் கேட்டுத் தானே அவளுக்கு அழைத்தாள்.