அழகென்ற சொல்லுக்கு அவளே 25 – 1

ரெயின்கோர்ட் தயாரிப்பிற்கு முத்துமாணிக்கம் கார்மெண்ட்ஸை நம்பியிருந்தாள் இளவஞ்சி. அது இல்லை என்றானதும் இங்கேயே அதற்கென்று ஒரு தனிப்பிரிவினை அமைப்பதற்கான திட்டத்தினை அப்போதே தீட்டியிருந்தாள்.

கூடவே முத்துமாணிக்கம் கைவிட்டுப் போன நேரத்தில்தான் அவ்வளவு காலமும் சக்திவேல் தருகிற இடர்களிலிருந்து மீள்வது எப்படி என்பதில் மட்டுமே கவனம் செலுத்திய தான், அவர்களுக்குத் திருப்பியடிக்கத் தவறியிருக்கிறோம் என்கிற உண்மையே புலப்பட்டிருந்தது.

அதனால் அவர்கள் சிறந்து விளங்குகிற ஆண்களின் உடை உற்பத்தியில் இறங்கி, அதன் மூலமே அவர்களுக்குத் திருப்பியடிக்க வேண்டும் என்று அப்போதே முடிவும் செய்திருந்தாள்.

ஆனால், அந்த நேரம் அவள் வாழ்வில் நடந்த குளறுபடிகள், அதனால் அவள் தையல்நாயகியை விட்டு விலகியது போன்ற காரணங்களினால் அவள் போட்ட திட்டங்கள் திட்டங்களாகவே நின்றுபோயிருந்தன.

இப்போது அவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்துவது பற்றிப் பேசுவதற்குத்தான் அன்றைய கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தாள்.

தையல்நாயகி இருக்கிற இடத்தில் அவளுக்கு அதற்கான போதிய இடம் இல்லாது போனாலும் கொஞ்சம் தள்ளி உட்புறமாகக் கிடைக்கிறபோதெல்லாம் நிலங்களை வாங்கிப்போட்டுக்கொண்டிருந்தாள்.

அங்கே தொழிற்சாலையை நிறுவுவது, அதற்கு எடுக்கும் காலம், வாங்கவேண்டிய மெஷின்கள், இவற்றுக்கான செலவு, அனுபவம் மிக்க ஆண்களுக்கான ஆடை வடிவமைப்பாளர்கள், அதற்கான தொழிலாளர்கள் என்று பேசுவதற்கும், கலந்தாலோசிப்பதற்கும் நிறைய இருந்தன.

அனைத்தையும் ஒற்றை நாளில் முழுமையாகப் பேசி முடிக்க முடியவில்லை. ஆனாலும் முடிந்தவரையில் தன் திட்டங்களை எல்லாம் தெளிவாக விளக்கி, அவர்களிடமிருந்து காத்திரமான கருத்துகளைக் கேட்டுக் குறித்துக்கொண்டாள்.

தையல்நாயகி தன் பயணத்தில் அடுத்த பெரிய காலடியை எடுத்து வைக்கப்போவதை அறிந்து அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும்.

ஆனால், அவளின் திட்டங்களைச் செயலாற்ற இன்னுமின்னும் நிறையத் தரவுகள், விளக்கங்கள், தெளிவுகள் எல்லாம் தேவையாய் இருந்தன. அந்தப் பொறுப்புகளை அதற்குத் தகுந்தவர்களிடம் ஒப்படைத்து, கூட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்தபோது பொழுது பகலை எட்டியிருந்தது.

காலையில் ஒழுங்காக உண்ணவும் இல்லை. விட்ட இடைவேளையின் போதும் ஜூஸ் மட்டுமே பருகியிருந்தாள். மனநிலை வேறு கொஞ்சமும் சரியில்லை. இப்படி வேலையில் கவனத்தைக் குவிக்க முடியாமல் அல்லாடுவது இதுதான் முதல் முறை.

ஆனாலும் கூட்டத்தை வெற்றிகரமாக முடித்தாள். அவளோடு கூட வந்த ஆனந்தியிடம் அடுத்ததாக அவள் செய்ய வேண்டிய ஆயத்தங்களைக் கடகடவென்று சொல்லிவிட்டு அலுவலக அறைக்கு வந்தால் அது வெறுமையாக இருந்தது.

இவ்வளவு நேரம் அவளுக்காக அவனால் காத்திருக்க முடியாது. அவனுக்கும் அங்கே வேலைகள் வெட்டி முறிக்கும் என்றும் தெரியும். என்னிடமிருந்து தள்ளி நில்லு என்று வேறு சொல்லியிருக்கிறாள். ஆனாலும் தனக்காகக் காத்திருக்க மாட்டானா என்கிற சின்ன ஆசை சிறுபிள்ளைத் தனமாக அவளுக்குள் இருந்தது.

அதில் ஏமாந்துபோனதில் ஒரு நொடி மனம் சுருண்டு போனது. பேசாமல் வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள். முழங்கைகளை மேசையில் ஊன்றி, முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டவளால் தன்னை அழுத்தும் கணவனின் எண்ணங்களிலிருந்து வெளிவரவே முடியவில்லை. இத்தனை தூரத்திற்கு தனக்குள் ஊடுருவியிருப்பான் என்றும் அவள் எதிர்பார்க்கவில்லை.

இளம் வயதிலேயே அவள் மனத்தை அசைத்தவன் என்பது காரணமா, அவளுக்கு ஏற்றாற்போல் விட்டுக்கொடுத்து, விளங்கி நடந்தவனின் நற்பண்பு காரணமா, எல்லையற்று அவன் காட்டிய நேசமும் பாசமும் காரணமா தெரியவில்லை. முற்றிலுமாக அவளை முடக்கிக்கொண்டிருந்தான் நிலன்.

ஆனால் அவளின் இந்தத் தவிப்பும் ஏக்கமும் என்றைக்கும் தீரப்போவதில்லை. இதுதான் இனி அவளுக்கு நிரந்தரம். இந்தத் திருமணமே ஒரு பிசகு. இது நடந்திருக்கவே கூடாது. இப்படி அவள் யோசிப்பதற்கு அவன் காரணமன்று. அவன் குடும்பம்.

எப்படி அது அவன் குடும்பம் என்பது என்றைக்கும் மாறாதோ அப்படியே அந்தக் குடும்ப மனிதர்கள் மீதான அவள் வெறுப்பும் ஆவேசமும் தீரப்போவதில்லை. பிறகு எங்கே அவர்கள் இருவரும் கருத்தொருமித்த காதல் வாழ்க்கை வாழ்வது?

அவளுக்குத் தெரிந்து அவள் ஆசைப்பட்ட ஒன்று அமைதியான நிம்மதியான இல்லற வாழ்க்கையை மட்டுமே. அது நடக்கவே நடக்காது என்று இப்போது தெரிந்துபோயிற்று. அப்படி நடக்க வேண்டுமானால் அந்தப் பாலகுமாரன் செய்தவற்றை அவள் மன்னிக்கவும் மறக்கவும் வேண்டும். அது அவளால் முடியவே முடியாத ஒன்று.

ஆக என்றுமே அவள் இல்லற வாழ்வு நல்லபடியாக அமையப்போவதில்லை. ஏதோ ஒரு வகையில் அவள் சாபம் வாங்கிப் பிறந்திருக்க வேண்டும். இல்லாமல் அத்தனை வசதி வாய்ப்புகளையும் கொண்ட ஒருத்திக்கு எல்லோரையும் போல் ஒரு வாழ்க்கையை வாழக் கொடுப்பினை இல்லாமல் போகாதே.

அப்போது கதவைத் தட்டி அவள் அனுமதியைப் பெற்றுக்கொண்டு வந்தான் விசாகன். அவன் கையில் உணவுப் பார்சல்.

“நிலன் சேர் கட்டாயமா உங்களச் சாப்பிடச் சொன்னவர் மேம்.”

அவளிடத்தில் மெல்லிய சீற்றம். “இன்னுமே அவருக்குக் கையாளா இருக்கிறத நீங்க விடேல்லையா?” என்றாள் சுள்ளென்று.

சட்டென்று அவன் முகம் சுருங்கிப் போயிற்று.

“இல்ல மேம். சாப்பாட்டை மட்டும் அவேன்ர வீட்டுக்குப் போய் எடுத்துக்கொண்டு வந்து உங்களுக்குத் தரச் சொன்னவர். நீங்க மீட்டிங் முடிச்சு வந்ததும் தனக்கும் சொல்லிப்போட்டு உங்களிட்ட இதக் குடுக்கச் சொன்னவர். உங்களைப் பற்றியோ தையல்நாயகியப் பற்றியோ அவரும் கேக்கேல்லை. கேட்டாலும் இனி நானும் சொல்லமாட்டன்.” என்றான்.

இதற்குள் அவளுக்கு ஒரு குறுந்தகவல் வந்து விழுந்தது. ‘சாப்பாட்டுல கோவத்தைக் காட்டுறேல்ல வஞ்சி. அப்பிடிக் காட்டினியோ உண்மையா எனக்கும் உனக்கும் பெரிய சண்டை வரும். சாப்பிடு ப்ளீஸ்.’ என்று அனுப்பி இருந்தான் அவன்.

‘இப்ப மட்டும் சின்ன சண்டையா போய்க்கொண்டு இருக்கு. ஒரு கிழமையா பாக்க வரவே இல்ல. வந்திட்டார் மெசேஜ் அனுப்பிக்கொண்டு.’

உள்ளே மனம் முறுக்கினாலும் உணவில் கோபத்தைக் காட்டுவதோ, சிறுபிள்ளைத்தனமாக அர்த்தமற்றுப் பிடிவாதம் பிடிப்பதோ அவள் இயல்பு இல்லை என்பதில் அதை வாங்கி உண்டாள்.

உண்மையில் பசிக்களை போன பிறகுதான் அவளால் தெளிவாகச் சிந்திக்கக் கூடிய மாதிரியே இருந்தது.

*****

இங்கே நிலனாலும் வேலைகளில் ஒன்ற முடியவில்லை. வஞ்சி பேசியவை திரும்ப திரும்ப நினைவில் வந்துகொண்டேயிருந்தன.

அவள் மற்ற ஆண்களோடு தன்னை ஒப்பிட்டதும், விலகியே இருப்போம் என்று சொன்னதும் சினத்தைக் கிளப்பாமல் இல்லை. கூடவே, எதற்காக அவ்வளவு பாசத்தைக் காட்டினாய் என்றும் கேட்டாளே. எத்தனை திடமானவள்! வராமல் இருந்து என்னைத் தண்டிக்கிறாயா என்று கேட்கிறாள் என்றால் அவனுக்காக மிகவுமே ஏங்கிப் போயிருக்கிறாள் என்றுதானே அர்த்தம்?

அவனுக்கும் அவளோடு அந்தச் சண்டையைப் பேசித் தீர்க்காமல் வர விருப்பமில்லை. ஆனால், போன வாரம் கொழும்பு போய் வந்ததால் தேங்கிப்போன வேலைகள் நிறைந்து கிடந்தன. அதில்தான் புறப்பட்டு வந்தான்.

ஆனால், வேலைகளை ஒழுங்காகப் பார்க்க முடியாமல் மனைவியே மண்டைக்குள் நின்று சுழன்றாள். அவளைப் பற்றித் தெரிந்தும் பாலகுமாரனோடு பேசு என்று வற்புறுத்திய தன் மீதும் தவறு உண்டு என்று புரிந்தது நிலனுக்கு.
பேசித் தீர்த்துவிட்டால் அனைத்தும் முடிந்துவிடும் என்று நினைத்தான். கடைசியில் அவர்களின் பேச்சுவார்த்தை தடைப்பட்டுப் போயிற்று.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock