அன்றைக்கும் அவன் சக்திவேலை விட்டு வெளியில் வருகையில் இரவு பத்தைத் தாண்டியிருந்தது. வீட்டுக்குப் போக மனமில்லை. நேராக இளவஞ்சி வீட்டுக்கே வந்தான்.
அங்கே அவன் எதிர்பார்த்ததுபோல் அவளின் பால்கனி கூடைக்குள்தான் புதையுண்டு கிடந்தாள் அவள்.
இவனைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பவெல்லாம் இல்லை. காலையில் போன்று கோபப்படவும் இல்லை. அவனையே விடாது பார்த்தாள்.
அந்தப் பார்வை என்னவோ செய்தது. அன்று போலவே டீப்போவை இழுத்து அவள் முன்னே போட்டு அமர்ந்துகொண்டு, “என்ன வஞ்சி?” என்றான்.
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தாள் அவள்.
இல்லை. ஏதோ உள்ளது.
“சும்மா சும்மா பிடிவாதம் பிடிக்கக் கூடாது. என்ன எண்டு சொன்னாத்தானே எனக்கும் தெரியும். என்ன எண்டு சொல்லு?” சற்றே அழுத்தி வினவினான்.
“ஏன் இந்தக் கலியாணம் நடந்தது நிலன்?”
திரும்பவும் முதலில் இருந்தா என்று தோன்றாமல் இல்லை. ஆனால், அவள் மனத்தில் எதையோ வைத்துக்கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறாள் என்று அவன் மனம் சொல்ல, “எனக்கு உன்னைப் பிடிச்சதால நடந்தது.” என்றான்
“உங்கட மாமாக்காக இல்லையா?”
“சத்தியமா இல்லை. அவர் என்ர மாமாவா இருந்தாலுமே அவருக்காக எல்லாம் கலியாணம் கட்டேலாது வஞ்சி. உன்னை எனக்குப் பிடிச்சிருக்காட்டி கடைசி வந்திருந்தாலும் இந்தக் கலியாணம் நடந்திருக்காது.”
“இப்ப என்னட்ட இருந்து என்ன எதிர்பாக்கிறீங்க நிலன்?”
“வஞ்சி?”
“நீங்கதானே பேசித் தீர்க்கச் சொன்னீங்க?”
“வஞ்சி என்னடி?” என்றான் அவள் எதை மனத்தில் வைத்து இதையெல்லாம் கேட்கிறாள் என்று கண்டிபிடிக்க முடியாமல்.
“சொல்லுங்க நிலன்.”
“அவரிட்ட கேக்க நினைக்கிறதுகளை கேளு. கதைக்க நினைக்கிறத கதை. சண்டை பிடிக்கிறதா இருந்தாலும் பிடி. உனக்கு அதுக்குப் பிறகு ரிலீபா இருக்கும். இவ்வளவு அழுத்தம் இருக்காது.” இதனால்தான் அன்றும் அவரை அழைத்துக்கொண்டு வந்தான். அதில் தெளிவாகவே சொன்னான்.
“இதெல்லாம் பேசினா தீருற கோவம் இல்ல நிலன். யோசிச்சுப் பார்த்தா என்ன செய்தாலும் எனக்குள்ள இருக்கிற கோபம் தீரும் மாதிரி இல்ல.” என்றாள் அவனைப் பாராமல்.
அவன் கொஞ்சம் பயந்துபோனான். “வேற என்ன செய்யப் போறாய்? வேற என்னதான் செய்றதும்? இத அவருக்காகக் கேக்கேல்லை. உனக்காகத்தான் சொல்லுறன். கோபதாபத்தை தள்ளி வச்சுப்போட்டு யோசி.” என்றான் அவளுக்குப் புரிய வைத்துவிடும் வேகத்துடன்.
“இந்தக் கலியாணம் நடந்திருக்க கூடாது நிலன். நடந்திருக்கவே கூடாது.” தலையையும் குறுக்காக அசைத்தபடி சொல்ல, அவனுக்குக் கோபம்தான் வந்தது.
“வஞ்சி கோவத்தை கிளப்பாத!” என்றான் அதை மறையாது.
“முதல் நீ என்னத்த மனதில வச்சுக்கொண்டு இப்பிடி எல்லாம் கதைக்கிறாய்? அதைச் சொல்லு. அண்டைக்கு அவரோட கதை எண்டு உன்னை நான் வற்புறுத்தினது பிழைதான். எனக்கு விளங்குது. அதுக்காக நீ கதைச்சதும் பிழைதான்.” என்றவனை இடையிட்டு, “சொறி!” என்றாள் அவள் குரலடைக்க.
ஒரு கணம் அவளையே பார்த்தவன் அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்தான். அவளுக்குக் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. “விடுங்க!” என்று அவனிடமிருந்து விடுபடப் போராடினாள்.
அவள் போராட்டம் பலவீனமானதா, இல்லை அவன் பிடி பலமானதா தெரியவில்லை. அவன் விடவில்லை. மாறாக மார்போடு சேர்த்தணைத்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
அப்படியே அவன் மார்புக்குள் முகம் புதைத்துக்கொண்டாள் இளவஞ்சி. இந்த அன்பு, அரவணைப்பு, ஆறுதல் எல்லாம் நிரந்தரமில்லாதவை. அவன் இன்னுமின்னும் தன்னை பலகீனமாக்குகிறான் என்று கோபம் வந்தது. “எனக்கு உங்களைப் பிடிக்கேல்ல!” என்றாள் கண் முகமெல்லாம் சிவந்திருக்க.
அவன் உதட்டில் சிரிப்பு முளைத்தது. “எனக்கு இந்த வஞ்சிய இன்னுமின்னும் பிடிச்சிருக்கே!” என்றான் நெற்றியில் முத்தமிட்டு.
“அதுதான் ஒரு கிழமை சொல்லாம கொள்ளாம விட்டுட்டுப் போனீங்களா?” கேட்கக் கூடாது என்று நினைத்தாலும் கேட்டிருந்தாள்.
“ஏய் என்னடி என்னவோ உன்ன விட்டுட்டு எங்கயோ போன மாதிரிச் சொல்லுறாய்?” அவள் முறுக்கிக்கொண்டு கேட்ட அழகில் முறுவல் மலரச் சொன்னான் அவன்.
“ஆனாலும் போனனீங்கதானே.”
“திரும்ப நானாவே வந்திட்டன்தானே.” அவளைக் கட்டிலில் சரித்து, முத்தங்கள் பதித்து, அவளோடு ஒன்றப்போனவன் சட்டென்று நிதானித்து அமைதியானான்.
அதன் காரணத்தை அறிந்தவளுக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலாயிற்று. அவன் சொன்னது போன்று அவன் அன்பையே கொச்சைப்படுத்திவிட்டாள். அதுதான் அவனால் அவளை அணுக முடியவில்லை. இமைக்காது அவனையே பார்த்தாள்.
அவனால் அந்தப் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. அவள் நெற்றி முட்டித் தன்னை சமாளித்துக்கொள்ள முயன்றான்.
இருவர் உள்ளத்திலும் போராட்டம். மற்றவரை நன்றாகவே காயப்படுத்திவிட்டது புரிந்தது. எப்படி இதைக் கடக்க என்றுதான் தெரியவில்லை. “பசிக்குது வஞ்சி.” என்றான் நிலன் அப்படியே இருந்தபடி.
“எழும்பி உடுப்பை மாத்துங்க. எடுத்துக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு எழுந்துபோனாள் அவள்.
கட்டிலில் எழுந்து அமர்ந்தவன் தலையைப் பற்றிக்கொண்டான். தன் தயக்கம் அவளைக் காயப்படுத்திவிட்டது புரிந்தது. நெருங்காமல் இருந்திருந்தால் கூட வேறு. நெருங்கி நிறுத்துவது? “ப்ச்!” தன்னை நினைத்தே சலித்தபடி எழுந்து குளித்து உடையை மாற்றிக்கொண்டு வந்தான்.
அவள் உணவைக் கொண்டு வர அவளுக்கும் கொடுத்து உண்டான். அவளைத் தன் கையணைப்பில் வைத்துக்கொண்டு முதுகுக்குத் தலையணையைக் கொடுத்துக் கட்டிலில் சரிந்துகொண்டான்.
இருவருக்குமே எதைப் பேசவும் தயக்கமாக இருந்தது. அவளும் கிடைக்கும் அவன் அண்மையை அனுபவித்துவிடுகிறவளாக அமைதியாகவே இருந்தாள்.
“இன்னும் ரெண்டு நாளில திரும்பவும் கொழும்புக்கு போகவேண்டி வரும்போல இருக்கு வஞ்சி.” என்றான்.
“ம்”
“நீயும் வாறியா?” என்றான் கைகளுக்குள் இருந்தவள் முகம் பார்த்து.
“போன கிழமை உங்களோட ஆர் வந்தது?”
“உன்னில் இருந்த கோவம் வந்தது.” என்றான் சின்ன முறுவலோடு.
“இப்பவும் அதோட போங்க.”
“இப்பதான் கோவம் இல்லையே.”
“ஓ!”
“வஞ்சிம்மா. அப்பிடி எல்லாம் இல்லையடி. அது ஏதோ நினைப்பில… ப்ச் உனக்கே தெரியும் நீ எண்டு வந்தா நான் எப்பிடி ஆகிடுவன் எண்டு. ஆனா நீ…” என்றவனை மேலே பேச விடாமல் அவன் உதட்டின் மீது விரல் வைத்துத் தடுத்துவிட்டு, அவனைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள் இளவஞ்சி.
அப்போதும் அவளின் அணைப்பில் கட்டுண்டு கிடந்தானே தவிர்த்து அதைத் தாண்டிப் போகவில்லை. போக அவனால முடியவில்லை. அவள் செயற்பாடுகள் அவனை எங்கோ உறுத்தின.
அந்த உறுத்தல் சரிதான் என்று சொல்வதுபோல் அவன் கொழும்புக்குச் சென்று இரண்டாம் நாள் அவளுக்கு அழைத்தான். அவள் எடுக்கவில்லை என்றதும் விசாகனுக்கு அழைத்து விசாரித்தான்.
அப்போதுதான் தெரியவந்தது, ஒன்றரை மாத பயிற்சி ஒன்றுக்காக அவள் சீனா சென்றிருக்கிறாள் என்று.
திகைத்து நின்றுவிட்டான் நிலன்.