இங்கே நிலன் அதிர்ச்சி என்கிற சொல்லையும் தாண்டிய ஒரு நிலையில் இருந்தான். மனம் மிக ஆழமாய் அடி வங்கிற்று. தன்னிடம் சொல்லாமல் தன்னிடம் விடைபெறாமல் அதுவும் ஒன்றரை மாதத்திற்கு போக முடிந்திருக்கிறதே. அதுவும் அவள் புறப்படுகையில் அவன் கொழும்பில்தான் இருந்தான்.
அந்தளவில் அவன் அவளுக்குப் பொருட்டே இல்லையா? கோபம் வந்தது. அவளைப் போட்டு உலுக்கும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.
அவன் செய்ததற்குப் பதிலாக இதைச் செய்திருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. அது அவள் இல்லை. எதையும் முகத்திற்கு நேராகச் சொல்லிவிட்டுச் செய்கிறவள்.
பிறகும் ஏன் இப்படி நடக்கிறாள்? காரணத்தை அவனால் கணிக்க முடியவில்லை. அவளுக்கு உடனேயே புலனத்தின் வாயிலாக அழைத்தான். அழைப்புப் போகவில்லை.
திரும்ப விசாகனுக்கு அழைத்து, அவள் நம்பர் கேட்டு வாங்கி, மறுபடியும் அவளுக்கு அழைத்தான்.
சோங்சிங்(Chongqing) நகரத்தின் தரமான ஹோட்டல் ஒன்றின் இருபத்தி ஏழாவது மாடியில் ஒரு அறையின் யன்னலோர இருக்கையில் சாய்ந்திருந்த இளவஞ்சிக்கு அவன் அழைக்கிறான் என்கிற அந்த ஒற்றை வரியிலேயே மனத்தின் உணர்வுகள் எல்லாம் பெரும் அலையாய்ப் பொங்கின.
புதுமையாய் அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்தாள்.
அவளுக்கு மாறான ஆக்ரோசத்தில் கொதித்தான் நிலன்.
“நீ இப்பிடி நடந்திருக்கக் கூடாது வஞ்சி. என்னைப் பற்றி என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறாய்? நீ என்ன செய்தாலும் உனக்குப் பின்னால வாற லூசு எண்டா? கட்டின மனுசி எங்க போயிருக்கிறாள், அவளின்ர நம்பர் என்ன எண்டு இன்னொருத்தனிட்ட கேட்டுத் தெரியிற நிலையில என்னை நிப்பாட்டிப்போட்டாய் என்ன?”
அவள் உதட்டைப் பற்றிக்கொண்டு கண்ணீரை அடக்கினாள்.
“சொல்லு, ஏன் இப்பிடி நடந்தனி? எனக்கு முறையான விளக்கம் வேணும் வஞ்சி. சொல்லு!”
விளக்கம் வேண்டும் என்றவன் அவளுக்குப் பேசச் சந்தர்ப்பமே கொடாமல் கத்திக்கொண்டிருந்தான்.
“ஒரு கிழமை கொழும்புக்குப் போனதுக்கே ஆயிரம் கேள்வி கேட்டனி எல்லா? முகத்தைத் தூக்கி வச்சுக்கொண்டு இருந்தனி எல்லா? இப்ப சொல்லு, நீ செய்தது மட்டும் சரியா?” அவனுக்கு ஆத்திரம் அடங்கவேயில்லை.
“ஏய் கதையடி!” என்று சீறினான்.
“என்ன கதைக்க?” அவனுக்கு மாறான அமைதியுடன் வினவினாள் அவள்.
சட்டென்று ஒரு கணம் நிதானித்தான் நிலன். “ஏன் என்னட்ட சொல்லாம போனனீ?” நம்பிக்கை இல்லாதபோதும் ஏதும் முறையான காரணம் இருக்குமோ என்றெண்ணி வினவினான்.
“இவ்வளவு நாளும் உங்களிட்டச் சொல்லிட்டா போனனான்?”
இறங்கவா என்று கேட்ட சினம் மறுபடியும் உச்சியைத் தொட்டுவிட, “அடி வெளுத்து விட்டுடுவன் ராஸ்கல்! என்னட்டயே உன்ர திமிரக் காட்டுறியோ? அண்டைக்கும் இளவஞ்சி குணாளன் எண்டு சொன்னணி என்ன? நீ இப்ப இளவஞ்சி குணாளன் இல்ல. இளவஞ்சி நிலன். என்னட்டச் சொல்லிட்டுத்தான் போகோணும் விளங்கிச்சா?” என்றான் சினத்துடன்.
“விலகி நில்லுங்க எண்டு சொன்னனான் நிலன்.”
அவளின் பதில்கள் ஒவ்வொன்றும் அவன் கோபத்தைக் குறைப்பதற்குப் பதிலாகக் கூட்டின.
“வஞ்சி, சத்தியமா சொல்லுறன், பக்கத்தில இருந்தியோ என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது. நீ முதல் வேலைய முடிச்சுக்கொண்டு வா, உனக்கு இருக்கு!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
ஆனாலும் மனம் ஆறவேயில்லை. அவன் மாமனார் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே. சொல்ல விடாமல் இவள்தான் தடுத்திருப்பாள். அன்றே சொன்னாளே, அவள் தந்தை இனி அழைக்கமாட்டார் என்று. அவள் சொன்னால் கேட்டுக்கொண்டு சொல்லாமல் இருப்பீர்களா என்று அந்த மனிதரிடமும் கத்தும் ஆத்திரம் வந்தது. ஆனால் அவரிடம் கோபப்பட்டுப் பயன் என்ன?
பெரிய பெரிய மூச்சுகளை இழுத்துவிட்டவனுக்குத் தன்னை நிதானப்படுத்திக்கொள்ள நிறைய நேரம் பிடித்தது. கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் திரும்புகையில் எதை மனத்தில் வைத்துக்கொண்டு இப்படி எல்லாம் நடக்கிறாள் என்கிற கேள்வி உண்டாயிற்று.
கூடவே தனியாகப் போயிருக்கிறாளே, பாதுகாப்பாக இருக்கிறாளா என்கிற கவலையும்.
இவளைக் கேட்கக் கூடாது. அவனை மதிக்காமல்தானே போனாள் என்று பிடிவாதமாகப் பேசாமல் இருந்தான். அதுவும் கொஞ்ச நேரத்திற்குத்தான்.
அவள் மீது மலையளவு கோபம் உண்டுதான். அதற்காக அவளுக்கு ஒன்று என்றால் தாங்குவானா?
மனம் கேட்காமல், “எல்லாம் ஓகேயா?” என்று கேட்டுக் குறுந்தகவல் அனுப்பினான்.
கண்ணீர் அரும்பிற்று அவளுக்கு. இந்த அன்பில்தானே சிக்குப்பட்டு நிற்கிறாள். கொஞ்ச நேரம் அந்த இரண்டு சொல் கேள்வியில் நிறைந்து கிடந்த அவன் அன்பையே உள்வாங்கிவிட்டு, “ம்!” என்று அனுப்பிவிட்டாள்.
அவனுக்கு அந்த ‘ம்’ போதவில்லை. அவன் தவிக்கிற தவிப்பிற்கும் படுகிற பாட்டுக்கும் ‘ம்’மாம்! “ஏய் ஒழுங்கா உண்மையைச் சொல்லடி. எல்லாம் ஓகேயா?” என்று திரும்பவும் அனுப்பிவிட்டான்.
“ஓம், பாதுகாப்பான இடம்தான்.” கண்களைக் கண்ணீர் மறைக்க எழுதி அனுப்பினாள் அவள்.
“ஏன் போனனீ? அதுவும் ஒண்டரை மாதத்துக்கு.”
“ஒரு ட்ரெயினிங்.”
“என்ன ட்ரெயினிங்?” ஒரு வேகத்துடன் கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“ஆம்பிளைகளின்ர உடுப்பும் தைக்கப்போறன்.” கொஞ்சம் தயங்கினாலும் மறைக்கும் எண்ணமில்லையாதலால் சொன்னாள்.
அவன் இருந்த மனநிலைக்கு அவள் தமக்கு எதிராக அதை ஆரம்பிக்கிறாள் என்று யோசித்துப் பிடிக்க முடியவில்லை. அந்தளவில் அவள் செய்கையில் சூடாகிப்போனது மட்டுமல்லாமல் காயப்பட்டுமிருந்தான்.
“அதுக்காக இப்பிடித்தான் சொல்லாமப் போவியா? என்னைப் பற்றி யோசிக்கவே இல்லையா வஞ்சி நீ? இத நான் கேள்விப் படேக்க எனக்கு எப்பிடி இருக்கும் எண்டு யோசிக்கவே இல்லையா நீ?” என்றவன் அதற்குமேல் டைப் பண்ண முடியாமல் அவளுக்கு அழைத்தான்.
நெஞ்சு வெடிக்கும் துயருடன் அதை ஏற்றாள் அவள்.
“கொழும்புக்குப் போகோணும் எண்டு எப்பவோ உனக்குச் சொன்னனான் வஞ்சி. ஆனா உன்னை விட்டுட்டுத் தனியா கொழும்புக்குப் போகேலாம இருந்தது. நீயும் இப்பதான் தையல்நாயகிக்க திரும்பப் போயிருக்கிறாய். வேலை நிறைய இருக்கும். உன்னையும் வா எண்டு கூப்பிடேலாது எண்டு தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தனான். உன்னில இருந்த கோவத்துல போனாலும் அந்த ஒரு கிழமைக்கே தலைகீழா நிண்டவன் நான். ஆனா நீ ஒண்டரை மாதம் சொல்லாம கொள்ளாம போயிருக்கிறாய் என்ன?”
அவன் கோபத்தைக் கூடத் தாங்கிக்கொண்டவளால் இந்த மனவருத்தத்தைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அப்படியே விழிகளை மூடிக்கொண்டு இருக்கையில் தலையைச் சரித்தாள். மூடிய விழிகளுக்குள்ளிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.
“உண்மையிலேயே உன்ர அம்மா அப்பா கட்டாயப்படுத்தினதாலதான் என்னைக் கட்டினியோ வஞ்சி? மற்றும்படி என்னைப் பிடிக்கேல்லையா உனக்கு? எனக்கும் உனக்குமான இந்த வாழ்க்கைல நீ சந்தோசமா இல்லையா?” என்றான் அடிபட்ட குரலில்.
விக்கித்துப்போனாள் இளவஞ்சி. அவனை இழுத்துத் தன் மார்புக் கூட்டுக்குள் பொத்திக்கொண்டு, அப்படியெல்லாம் இல்லை என்று கதற வேண்டும் போலாயிற்று.
பேசக்கூட முடியாதவளாய் வாயை மற்றக் கையால் மூடிக்கொண்டு கண்ணீரில் கரைந்தாள்.
அவனுக்கும் மேலே பேச வரவில்லை. நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. “கவனமா இரு!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.