அழகென்ற சொல்லுக்கு அவளே 27 – 1

இளவஞ்சி போய் மூன்று வாரங்களாகிப் போயின. நிலன் தினமும் அவள் நலன் விசாரித்துக்கொள்வான். இரவில் வீடியோ கோலில் பேசுவான். இரண்டுமே கிட்டத்தட்ட உத்தியோக பூர்வப் பேச்சுப் போலவே இருக்கும்.

அதைத் தாண்டிக் கணவன் மனைவிக்கான பேச்சுக் கொஞ்சமும் இல்லை. இருவருமே கவனமெடுத்து அதைத் தவிர்த்தனர். அவள் தன்னிடம் சொல்லாமல் போனதைப் பற்றிக் கூட அவன் பேசுவதில்லை. இனி அது பற்றிய பேச்சை அவளாகத்தான் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.

அவள் அதைப் புரிந்துகொண்டாளா இல்லையா என்று தெரியாது. ஆனால், அவளாக வந்து விளக்கம் தரவோ, அவனைச் சமாதானம் செய்யவோ முயலவில்லை.

அது இன்னுமே அவனைக் காயப்படுத்திற்று. தன்னோடான வாழ்க்கை அவளுக்குத் திருப்தியாய் இல்லையோ, அதில் அவள் மகிழ்ச்சியாய் இல்லையோ, அன்று அவன் கேட்டதுபோல் கட்டாயத்தின் பெயரில்தான் அவனை மணந்தாளோ என்கிற கேள்விகள் எல்லாம் எழுந்து வந்து அவனைப் புரட்டிப் போட்டன. தான் கேட்டபோது பிடிக்கும் என்று சொன்னாளே என்கிற கேள்வியும் ஓடாமல் இல்லை. ஆனாலும் அவன் காயப்பட்டுத்தான் போனான்.

திரும்ப திரும்ப அதைப் பற்றிப் பேசிச் சண்டை பிடிக்காத நிலனின் இந்த விலகல், அவள் எடுத்திருந்த முடிவிற்கு வசதியாக இருந்தபோதிலும் வலிக்காமல் இல்லை. ஆனாலும் தாங்கிக்கொண்டாள்.

இப்படி இருக்கையில்தான் ஆண்களுக்கான தொழிற்சாலை அமைக்க என்று இளவஞ்சி முடிவு செய்த காணியில் பற்றைகளை, தேவையற்ற மரங்களை, புற்களை எல்லாம் அழித்து, அந்த நிலத்தைத் தொழிற்சாலை எழுப்புவதற்கான இடமாக மாற்றும் வேலை ஆரம்பமாயிற்று. அதை மேற்பார்வையிடும் பொறுப்பை மிதுனிடம் கொடுத்திருந்தாள் இளவஞ்சி.

அவளின் வரைபடமும் தொழிற்சாலை அமைப்பும் அரசாங்கத்திற்கு காட்டப்பட்டு, அனுமதி கிடைத்த அடுத்த நிமிடமே கட்டட வேலையை ஆரம்பித்துவிடும் வேகம் இருந்தது அவளுக்கு.

இதை அறிந்த சக்திவேலர், “உன்னையே கட்டிப்போட்டு உனக்கு எதிரா அவள் வேலையை ஆரம்பிக்கப் போறாளாம். நீ பாத்துக்கொண்டு இருக்கிறியோ பேரா?” என்று நிலனிடம் கோபப்பட்டார்.

“அதென்ன அப்பப்பா என்னையே கட்டிப்போட்டு எண்டு சொல்லுறீங்க? என்னைக் கட்டினா அவள் அவளின்ர தொழிலை வளக்கக் கூடாதா?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

கூடாது என்றார் அவர். “அவள் அதை ஆரம்பிச்சா எங்களுக்கு வாற ஓடர்ல பாதி அவளுக்குப் போகும். எங்களுக்கு உற்பத்தி குறையும். ஏற்கனவே பொம்பிளைகளின்ர உடுப்பில அவளை விழுத்தேலாம இருக்கு. இதுலயும் அப்பிடி நடந்தா என்ன செய்வாய்?”

“அவளை விடத் தரமா, ட்ரெண்டியா எப்பிடிக் குடுக்கிறது எண்டு பாப்பன்.” என்றான் அவன் இலகுவாக.

“அவள் ஏன் இதத் தொடங்கிறாள் எண்டு உனக்கு விளங்கேல்லையா பேரா?”

“ஏன் விளங்காம? அதைத் தொழில் போட்டியா பாக்கோணுமே தவிர செய்யாத எண்டு சொல்லேலுமா? இதுவே அவள் ஆரோ ஒரு வஞ்சியா இருந்தாலும் இதைத்தான் சொல்லுவீங்களா?” என்று அவனும் விடாமல் கேட்டான்.

பேரனுக்கு இதை எப்படி விளங்க வைப்பது என்று தெரியாமல் நின்றார் சக்திவேலர். “இதுக்குத்தான் தையல்நாயகிய சக்திவேலுக்கு கீழ கொண்டுவர நினைச்சனான். நடுவில புகுந்து கெடுத்துப்போட்டாள். அவள் அப்பிடியே அவளின்ர அப்பம்மா மாதிரி. இது சரி வராது. நீ குணாளனுக்கு ஃபோனை போடு. என்ன எண்டு கேக்கிறன்.” என்று நின்றவரை அவன் விடவில்லை.

“தொழிலுக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லை அப்பப்பா. அப்பிடியே இருந்தாலும் இதையெல்லாம் நீங்க கதைக்கேலாது.”

“அப்ப நீ கதை.”

“நானும் கதைக்கேலாது. அது அவளின்ர தொழில். அவள் ஆரம்பிக்கிறாள். இதுல நான் சொல்ல என்ன கிடக்கு?”

“நீ அவவின்ர மனுசனடா. நீ சொன்னா அவள் கேட்டுத்தான் ஆகோணும்!”

‘ஆரு அவள்?’ என்று உள்ளே நக்கலாக ஓடினாலும், “என்ன அப்பப்பா, ஆம்பிளத் திமிரக் காட்டச் சொல்லுறீங்களோ?” என்றான் சிறு சிரிப்புடன்.

“பேரா, இது விளையாட்டு இல்ல. இத நீ வளர விட்டியோ அது சக்திவேலுக்கு அழிவிலதான் முடியும். போட்டி போட நினைக்கிறதை விடப் போட்டிக்கே ஆள் இல்லாம செய்றதுதான் கெட்டித்தனம். சக்திவேல் என்ர மூச்சு. அது சின்னதா சரியிறதக் கூட என்னால பாக்கேலாது.”

“அப்ப நீங்க என்னை நம்பேல்லையா அப்பப்பா. அவள் அழிக்க நினைச்சா நான் விட்டுடுவனா?” என்று கேட்டுவிட்டுப் போனான் அவன்.

பிரபாகரனுக்கும் இந்த விடயத்தில் இளவஞ்சி மீது அதிருப்திதான். அவள் யாரோவாகவும் அவர்கள் யாரோவாகவும் இருந்து அவள் இதைச் செய்திருந்தால் மகன் சொன்னது போன்று போட்டியாக நினைத்திருப்பார்.

இங்கே அவள் அவர்கள் வீட்டு மருமகள். ஆண்களின் உடைகள்தான் அவர்களின் பிரதான உற்பத்தி என்று அவளுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் இதை அவள் ஆரம்பிப்பதை அவர் விரும்பவில்லை.

மகனிடம் தானும் பேசிப் பார்த்தார். சக்திவேலரிடம் சொன்னதையேதான் அவரிடமும் சொன்னான் நிலன்.

அவர்களிடம் என்னதான் பேசிச் சமாளித்தாலும் இந்த விடயத்தில் இனியும் தன் தலை உருளும் என்று அவனுக்கு நன்கே தெரிந்தது. அன்று அவள் ஆண்கள் உடைத் தயாரிப்பிற்கான பயிற்சிக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னபோது அவனுக்குப் பிடிபடாதபோதும் பிறகு பிடிபட்டிருந்தது.

மனைவி தன்னுடன் நேரடியாகப் போட்டியில் இறங்கப்போகிறாள் என்றெண்ணி முறுவல் பூத்திருந்தான். போட்டி அவனுக்கும் பிடித்த ஒன்றுதானே. அதுவும் கட்டிய மனைவியோடு என்றால் கசக்குமா?

*****

அத்தனை காலமும் நான் என்றே வாழ்ந்து பழகியவர் ஜானகி. பிறந்ததிலிருந்து இன்றுவரை யாரையும் அனுசரித்துப் போனதும் இல்லை. அப்படி ஒரு நிலை வந்ததும் இல்லை.

இதே வீட்டில்தான் பிறந்தார். இங்கேதான் வளர்ந்தார். மணமுடித்ததும் இங்கேதான். மிச்ச வாழ்க்கையும் இங்கேதான்.

ஆசைப்பட்ட கணவர், நினைப்பதை எல்லாம் நடத்தித் தரும் தந்தை, அனுசரித்தே போகும் தமையன், குறையாத செல்வம் என்று எதிலும் குறையே இல்லை.

அவரின் அதட்டல் உருட்டல்களுக்கு அடங்கியே போய்விடுவதால் பாலகுமாரனின் இயலாமைகள் ஒரு பிரச்சனையாக அவருக்கு இருந்ததில்லை. இன்னுமே சொல்லப்போனால் தான் நினைத்ததை எல்லாம் நடத்திக்கொள்வதற்கு அது வசதியாகத்தான் இருந்திருக்கிறது.

இப்படி இத்தனை காலமும் மொத்த வீடும் அவர் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. பிரபாகரன் தமையனான இருந்தாலும் அதட்டி உருட்டும் ரகமில்லை. அவருக்கு ஏற்ற மனைவிதான் சந்திரமதி. நிலனும் கூடத் தவறு என்றால் தவறு என்பானே தவிர்த்து நான் என்று நிற்கிறவனில்லை.

இப்படி இருந்த ஜானகியின் நிம்மதி, மகனின் திருமணத்திலிருந்து குலைந்துபோயிற்று. அவனைக் கைக்குள்ளேயே வைத்து வளர்த்தார். அப்படியான மகனின் திருமணப் பேச்சை அவர் இல்லாமலேயே தமையன் பேசி முடித்தது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

ஆனாலும் மகன் அவளைத்தான் கட்டுவேன் என்று நின்றதும், தையல்நாயகியில் குறைந்தது பாதியாவது வருமே என்கிற மனக்கணக்கிலும்தான் விருப்பம் இல்லாதபோதிலும் சம்மதித்தார்.

ஆனால், தையல்நாயகியில் கொஞ்சமும் அவனுக்கு வராதாம் என்பது பேரதிர்ச்சி. பிறகு எதற்கு இந்தத் திருமணம் என்று கொதிக்க ஆரம்பித்திருந்தார். அதைவிட தையல்நாயகி முற்றிலுமாக நிலனைச் சேரப்போவதை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock