உடனேயே திருமணத்திற்கு கேட்டார். அவன் மறுத்தது பெரிய அதிர்ச்சியாக இல்லாதபோதும் பெரும் மனக்கவலையை உண்டாக்கிற்று.
அவனும் அவருக்கு உதவவில்லையானால் யாராலும் அவருக்கு உதவ முடியாதே. அவளை நேரில் சென்று சந்திக்கிற அளவுக்கு அவருக்குத் தைரியமில்லை. அதில்தான் யாரிடமும் சொல்லாது அவளிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று வாக்கைப் பெற்றுக்கொண்டு அவனிடம் கொடுத்தார்.
அவளைப் பிடித்திருக்கிறது, அவளையே மணக்கப்போகிறேன் என்று அவனே வந்து சொன்னது அவரே எதிர்பாராதது மிகவுமே புளகாங்கிதம் அடைந்துபோனார். என்னவோ அவள் அன்னைக்கும் அன்னையின் அன்னைக்கும் ஆற்றிய துரோகத்திற்கு சிறிதளவிலேனும் நல்லது செய்துவிட்டது போல் தளர்ந்தே போனார்.
அதுவும் தன் மகள் தான் வாழும் வீட்டிற்கே வரப்போகிறாள் என்பது அவரை என்னவெல்லாமோ செய்தது. அத்தனை வருடங்களும் எப்போதடா சாவோம் என்று காத்திருந்த மனிதர், இப்போதைக்கு இறப்பு வேண்டாம், இன்னும் கொஞ்சக் காலம் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தார். அவளும் அந்த வீட்டிற்கு மருமகளாக வந்தாள். அவள் அவரை என்றுமே மதித்ததில்லை. அதன் பிறகும் அப்படித்தான். திரும்பியே பார்க்கவில்லை. அதனால் என்ன, என் மகள் என்னுடன் இருக்கிறாள் என்கிற நினைப்போடு அவர் வாழ்க்கை ஓடிற்று.
எப்போதும் நாம் வகுக்கும் பாதையிலேயே வாழ்க்கை நகர்ந்துவிடுவதில்லையே. அப்படித்தான் அவள் பற்றிய உண்மை இரு வீட்டிற்கும் தெரிய வந்தது.
அன்றிலிருந்தே அவர் மனம் ஏதோ ஒரு வகையில் எல்லாவற்றுக்கும் தயாராகிப் போயிற்று. அதுவரை காலமும் திக்குத் தெரியாமல் அங்குமிங்குமாய் அலைந்தலைந்து வந்த தன் வாழ்க்கைப் படகு, தரை தட்டிய உணர்வு.
அதில்தான் அவர் வீட்டில் நடந்த எதிலும் அவர் மூக்கை நுழைக்கவோ, தன் கருத்துகளைச் சொல்லவோ போகவில்லை. அதை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவுமில்லை. அவர் அப்படித்தானே என்று விட்டுவிட்டார்கள்.
இப்படி இருக்கையில்தான் அவர் மகள் அவரைச் சந்தித்தாள்.
அன்றைய நாள் மாதாந்திரச் செக்கப்பிற்காக மிதுனோடு வைத்தியசாலைக்கு வந்திருந்தார். எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு அவரும் மிதுனும் காரடிக்கு வந்தபோது, தன் காரில் சாய்ந்து, கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள் அவர் மகள்.
என்னவோ கருவரைச் சுவாமியையே கண்டுவிட்டதுபோல் அவர் உடலும் உள்ளமும் புல்லரித்துப் போயிற்று. அப்படி ஒரு பரவசம்.
எத்தனை கம்பீரமாக நிற்கிறாள். பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை அவருக்கு.
ஆனால் அவள் அவர் முகம் பார்க்கவேயில்லை. அவளிடத்தில் பெரும் இறுக்கம். அதுவும் அவர் தன்னை என்னவோ காணவே கிடைக்காத பொக்கிசத்தைக் கண்டுவிட்டதைப் போல் பார்ப்பதைக் கண்டு முகத்தைச் சுளித்தாள்.
“எனக்கு அவரோட தனிய கதைக்கோணும் மிதுன்.” என்றாள் அவள் மிதுனிடம்.
அவன்தான் அவள் என்ன சொன்னாலும் செய்வானே. சரி என்றுவிட்டு அவர்களை விட்டு அகன்று போனான்.
அவளால் அவர் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அவரால் அவள் முகத்திலிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை.
அப்படி, வரம் கொடுக்கப்போகும் சுவாமியையே பார்க்கும் பக்தனைப் போல் தன் முன்னே நிற்கும் மனிதரைக் கண்டு அவள் நெஞ்சின் நெருப்பு இன்னும் கோரா முகம் கொண்டு ஓங்கி எரிந்தது.
அவரோ தன்னைத் திட்டுவதற்காகவேனும் அவள் வார்த்தைகளை உதிர்க்க மாட்டாளா என்று காத்து நின்றார். அவரால் நிற்க முடியவில்லை. கால்கள் நடுங்கின. மெல்ல நடந்து வந்து அவள் காரையே பற்றிக்கொண்டு நின்றார்.
சட்டென்று தள்ளிப்போய் நின்றுகொண்டாள் இளவஞ்சி. சரக்கென்று ஏதோ ஒரு ஆயுதம் கூறாய் அவர் நெஞ்சில் கீறிக்கொண்டு போயிற்று.
“சுகமா இருக்கிறீங்களாம்மா?” பேச வந்தவள் பேச முடியாமல் நிற்க அவர் கேட்டார்.
“என்ன கதைக்கோணும் பிள்ளைக்கு?” பாசத்தில் கனிந்து உருகியது அவர் குரல்.
செந்தணலுக்கு ஒப்பாக முகம் சிவந்து கொதிக்க, “கதைக்கிறதா? நீங்க இருக்கிற திசைல கூட நிக்க எனக்கு விருப்பம் இல்ல. ஆனா…” என்றவள் ஒரு நெடிய மூச்சை இழுத்து வாயால் ஊதி வெளியேற்றினாள்.
“எனக்குச் சக்திவேலில இருக்கிற உங்கட பங்கு வேணும்!” என்றாள் சுற்றி வளைக்க விரும்பாமல்.
அவர் அதிர்வெல்லாம் இல்லை. மறுக்கவும் இல்லை. அவள் எதற்காய்க் கேட்கிறாள் என்று கணிக்கவும் முடிந்தது. வாழ்க்கை ஒரு வட்டமாயிற்றே. எல்லாவற்றையும் விட அதற்கான முதல் உரிமைக்காரி அவள்தானே.
உதட்டோரம் விரக்தியாய் ஒரு முறுவல் வந்துவிட்டுப் போக, “தாறன்.” என்றார்.
அவ்வளவுதான். அவள் அவரை விட்டு வேகமாக விலகி நடந்தாள். நினைவு வந்தாற்போல் சட்டென்று நின்று திரும்பி, “இதையாவது நம்பலாமா? இல்ல துரோகிக்குத் துரோகம் கைவந்த கலையா?” என்றாள் சீற்றமாக நோக்கி.
சாட்டையால் அடிப்பது என்பது இதைத்தான் போலும். “நம்பலாம். இது நடக்கேல்லை எண்டால் நான் உயிரோட இல்லை எண்டு அர்த்தம்.” என்றார் அவர்.
அதையெல்லாம் அவள் சட்டையே செய்யவில்லை. “மிதுன் சொல்லுவான். அவனோட வாங்க!” என்று மட்டும் சொல்லிவிட்டுப் போனாள்.
இரண்டே நாளில் அவள் மிதுன் மூலம் சொல்லிவிட, சொன்னதுபோல் வந்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டுப் போனார் மனிதர்.
நிலவின் வீடே பற்றி எரிந்தது. விடயமறிந்த நிலன் அவளுக்கு மிதுன்தான் ஒத்தாசையாக இருந்திருக்கிறான் என்று தெரிந்து அவனுக்கு அழைத்து, “என்னடா வேலை பாஎன்று அதட்டினான். என்றான் அவனிடமும்.
அவன் மறைக்கவெல்லாம் இல்லை. “அக்கா கேட்டவா. செய்து குடுத்தனான்.” என்றான்.
“அவள் கேட்டா செய்வியாடா நீ?”
“அக்கா கேட்டா செய்வன்.”
அப்போதுதான் அவன் அலைக்கும் விதத்தைக் கவனித்து, “அடேய்! அவளை அக்கா எண்டு சொல்லாத எண்டு சொன்னனான் எல்லா. அவளுக்குத் தெரிஞ்சுது கிழிப்பாள்.” என்று அவசரமாகச் சொன்னான் நிலன்.
“எத்தனையோ தரம் அவாவை அப்பிடிக் கூப்பிட்டான். இனியும் அவா அடிச்சாலும் அக்கா எண்டு மட்டும்தான் கூப்பிடுவன்.” என்றான் அவன் உறுதியான குரலில்.
நிலனுமே நெகிழ்ந்துபோனான்.
“டேய் என்னடா?”
“அவா என்ர அக்கா அண்ணா.” என்றான் அவனும் உடைந்து.
“கோவம் வரேல்லையா உனக்கு?”
“அக்கா அப்பிடி என்னக் கைவிட மாட்டா. அவா ஒண்டும் என்ர அப்பாவோ அம்மாவோ இல்லையே அண்ணா.” மனத்தாங்கலுடன் சொன்னான் மிதுன்.
“அவள் மட்டுமில்லை. நானும் இருக்கிறன். அவள் மனதில நிறையக் காயம் மிதுன். அதாலதான் இதையெல்லாம் செய்றாள். அவள் அமைதியாகட்டும். வாங்கினத விடக் கட்டாயம் கூடவே திருப்பித் தருவாள். சரியா!” இதமாக எடுத்துச் சொன்னான் நிலன்.
“எனக்கு அக்கா மட்டும் போதும்.”
“பார்றா. வாழ்க்கையை அனுபவிக்கோணும் எண்டு வாழ்ந்த மனுசன் பாசக்காரனா மாறிட்டான்.” என்று கேலி செய்துவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்குத் தன் கில்லாடி மனைவி கேடி வேலை பார்த்திருப்பதை நினைத்துச் சிரிப்பு உண்டாயிற்று.
அந்தச் சிரிப்புடனேயே, “என்னடி வேல பாத்து வச்சிருக்கிறாய்?” என்று கேட்டு ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்டான்.