ஊருக்குள் பாயும் வெள்ளம் எங்குப் போகலாம், எங்குப் போகக் கூடாது என்று கேட்டுக்கொண்டா பாய்கிறது? அது போலத்தானே காதலும். பாலகுமாரனுக்கும் அதுதான் நடந்தது.
மாமனின் தயவில்தான் வாழ்க்கை. ஜானகியைத்தான் கட்டிவைப்பார்கள் என்றும் தெரியும்.
ஆனாலும் சுட்டித்தனமும் சூட்டிகையும் நிறைந்த வாசவி மீது கொண்ட நேசம் உண்மையானது. ஆனால்,
ஒரு அறியாப் பெண்ணிடம் ஆசை கொள்ளவும், அவளிடம் மோகம் கொள்ளவும் இருந்த தைரியம், அவளைத் தன் வீட்டினரை எதிர்த்து மணமுடிப்பதில் இருக்கவில்லை.
நேசத்துக்கும் மாமன் மீதான பயத்துக்கும் நடுவில் தடுமாறிக்கொண்டேதான் அந்த நேரத்தில் அவர் காலம் பயணித்தது.
குழந்தையின் வரவு, வாசவியின் விடாத தொந்தரவு எல்லாம் இன்னுமே நடுக்கத்தை விளைவித்தது. தன்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று எண்ணித்தான் நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டார்.
எண்ணியது போலவே தன்னைப் பாதுகாத்தும் கொண்டார். ஜானகி வரையில் விடயத்தைப் போகவிடாமல் தடுத்துமிருந்தார்.
ஆனால், வாசவி உயிரையே மாய்த்துக்கொள்வார் என்று அவர் கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்கவில்லை. துடித்தே போனார். ஏற்கனவே சின்ன பெண்ணிற்குப் பெரும் பாவம் இழைத்துவிட்டோம் என்று தனக்குள் கிடந்து மருகிக்கொண்டிருந்தார். இதில் குழந்தையின் நிலை என்னாயிற்று என்றும் அவருக்குக் கடைசி வரையிலும் தெரியவேயில்லை. அதுவும் சேர்ந்து இறந்துவிட்டதாகத்தான் எண்ணினார்.
எதையும் விசாரிக்கவோ, அறிந்துகொள்ளவோ அந்த நாள்களில் முடியவில்லை. அவ்வளவில் தன் கட்டுப்பாட்டின் கீழ் அவரை வைத்திருந்தார் சக்திவேலர்.
ஏற்கனவே ஜானகியோடு வாழ முடியாமல் தப்பி ஓடிக்கொண்டிருந்தவர், அதை ஜானகி சக்திவேலரிடம் கொண்டுபோய், அவர் திட்டி, பின் வாழ ஆரம்பித்த காலங்களில் முழு நரகத்தை அனுபவித்திருக்கிறார்.
மனத்தில் ஒட்டவே ஒட்டாத பெண்ணுடன் இல்லற வாழ்க்கையை எப்படிக் கொண்டுபோவது? தாம்பத்யம் எதன் அடிப்படையில் நிகழும்? தினம் தினம் நரகம். தினம் தினம் நெருப்பில் அமிழ்ந்து எழுந்தார்.
வாழப் பிடிக்கவில்லை. வாழ்க்கை பிடிக்கவில்லை. வாசவி நெஞ்சிலேயே நின்றார். உன்னை நம்பிய என்னை என்ன செய்தாய் என்று கேட்டார். குழந்தை உன்னுடையதுதானே, அதைக் கண்டுமா உனக்கு இரங்கவில்லை என்று தினம் தினம் வந்து அழுதார்.
பலமுறை வாசவிக்குப் பதிலாகத் தான் வாழ்க்கையை முடித்துக்கொண்டிருக்கக் கூடாதா என்று எண்ணியிருக்கிறார். அதற்கும் தடையாக நின்றது அவர் கோழைத்தனம்தான்.
தையல்நாயகி வந்து நிலத்திற்காகச் சண்டை பிடித்தபோது கொடுக்க விடாமல் செய்ததும் இந்தக் கோழைத்தனம்தான். அவ்வளவில் சக்திவேலருக்கு மிகவுமே பயந்தார். அவர் கொடுத்தபிறகு தையல்நாயகி மூலம் ஜானகிக்கு வாசவியைப் பற்றித் தெரிய வந்தாலும் பிரச்சனை.
பத்திரத்தை வாங்கிவிட்டு தையல்நாயகி தன் மேல் இருக்கும் கோபத்தில் அதைச் சக்திவேலரிடம் போட்டுக்கொடுத்தாலும் அவர் வாழ்க்கை இன்னுமே நரகமாகிவிடும். கூடவே, அது தன்னிடம் இருப்பது எந்தக் காலத்திலும் சக்திவேலருக்கு தெரிய வந்துவிடவும் கூடாது என்று நினைத்தார்.
தெரிந்தால் நிச்சயம் தையல்நாயகியை உய்யவே விட்டிருக்க மாட்டார். செய்த பாவங்கள் போதாதா?
யாரிடமும் சொல்லி ஆற வழியும் இல்லை. இது சொல்லி ஆறுகிற விடயமும் இல்லை.
பல இடங்களில் அவர் சுபாவம் அடங்கிப்போக வைத்தது என்றால் இன்னும் பல இடங்களில் தான் ஜானகிக்கும் நேர்மையாக இல்லை என்கிற கசப்பு அடங்கிப்போக வைத்தது.
வாசவி இறந்துவிட்டார். அவர் உயிரோடு இருக்கிறார். அவர்கள் இருவருக்குமான வித்தியாசம் அது மட்டும்தான். அவர் வாழ்வதே அவருக்கான தண்டனை. இப்படித்தான் தனக்குத் தானே தண்டனை கொடுப்பதாக எண்ணிக்கொண்டார்.
குழந்தை வேறு நிறையக்காலமாக இல்லை. செய்த பாவத்திற்குத்தான் பிள்ளையே இல்லாமல் போய்விட்டது போலும் என்றெண்ணி அதற்கும் மருகினார்.
மிதுன் பிறந்த பிறகு ஒரு ஆசுவாசம். அவன் மழலையில் தன்னைத் தேற்றிக்கொள்ள முயல்வார். அதைக் கூட முழுமையாக அனுபவிக்க முடிந்ததில்லை. துணிச் சுருளுக்குள் அன்னையின் மார்போடு ஒன்றிக் கிடந்த ஒரு பச்சிளம் குழந்தை வந்து அவர் நெஞ்சை கசக்கிப் பிழிந்தாள்.
அவரால் அவரைத் தின்னும் இந்தக் குற்ற உணர்ச்சிகளிலிருந்து வெளியே வர முடியவேயில்லை. இப்படியேதான் காலம் ஓடியது.
ஒரு நாள் இலங்கை முழுவதிலுமான ஆடைத் தொழிற்சாலை நடத்துவோருக்கான கூட்டம் நடந்தது. கழிவுகளைக் கொட்டுவதை முறைப்படுத்த, சாயம் போகும் துணிகளைப் பாவிப்பதைத் தவிர்க்க, தரமற்ற உடைகளின் உற்பத்திகளைத் தடை செய்ய, சுற்றிச் சூழல் பாதுகாப்புக்கான வழிகளைக் கண்டுபிடிக்க போன்ற விடயங்களை உள்ளடக்கிப் பேசுவதற்காக அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் அது.
பிரபாகரனும் அவரும் போயிருந்தார்கள். அன்றுதான் அவர் முன்னே ஒருத்தி நடந்து வந்தாள். நேர் கொண்ட பார்வை, நிமிர்ந்த நடை, பார்வையில் கூர்மை என்று தையல்நாயகியின் மறு வார்ப்பாக இருந்தவளைக் கண்டு அசந்து நின்றுவிட்டார்.
தையல்நாயகியின் பேத்தி தையல்நாயகியைப் பொறுப்பெடுத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாள் என்று கேள்வியுற்றிருந்தாலும் அன்றுதான் நேரில் கண்டார். அவர் நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
ஓடிப்போய் என் கண்ணே என்று உச்சி முகர உடலும் உள்ளமும் துடித்தன. விழிகளில் கண்ணீர் தானாக மல்கிப் போயிற்று.
அந்த நாள்களில் காலங்கள் ஓடிவிட்டது காரணமா, இல்லை வாசவி, தையல்நாயகி என்று யாருமே இல்லை என்பது காரணமா தெரியாது. அவர் மீதான தன் பார்வையை சக்திவேலர் முற்றிலுமாக அகற்றிக்கொண்டிருந்தார்.
அந்தத் தைரியத்தில் அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். குணாளனின் மகள் அவள் என்றால், வாசவி கருக்கொண்ட காலத்திலேயே குணாளனின் மனைவியும் கருக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அந்தக் காலத்தில் குணாளன் மணக்கவில்லை என்று வாசவி மூலம் அவருக்கு நன்றாகவே தெரியும்.
அதுவே அவள் தன் மகளோ என்கிற சந்தேகத்தை அவரினுள் கிளப்பிவிட்டது. நாளாக நாளாக அவளைக் காண்கிற பொழுதுகளில் எல்லாம் அவர் இதயம் துடிக்கிற துடிப்பிலேயே அவள் தன் மகள்தான் என்று உணர்ந்துகொண்டார்.
நீ வேண்டாம் என்று சொன்னாயே நான் எப்படி வந்து நிற்கிறேன் பார் என்று, பார்க்கிற ஒவ்வொரு பொழுதுகளிலும் அவர் முகத்தில் அறைந்து சொல்லிக்கொண்டிருந்தாள் அவர் மகள்.
அவளின் தைரியம், சக்திவேலர் போன்ற பொல்லாத மனிதர்களையே தன் சுண்டு விரலால் கையாளும் அவளின் பாங்கு எல்லாம் அவரைப் பரவசமாக்கின.
இப்படி இருக்கையில்தான் நோய்வாய்ப்பட்டார். பயம் பிடித்துக்கொண்டது. இப்போது தையல்நாயகி அவரின் மகளின் தொழில். அதற்கு அவரே அள்ளி வைப்பதா? அவர் இருக்கையிலேயே நிலப் பாத்திரங்களை அவளிடம் சேர்ப்பித்துவிட வேண்டும். எப்படி?
நிலன் அவர்கள் வீட்டின் அருமை பெருமையான பிள்ளை. பொறுப்பும் பாசமும் நிறைந்தவன். எதையும் நிதானமாகக் கையாளும் திறன் வாய்ந்தவன்.
‘அவள் எங்கட கம்பசிலதான் படிச்சவள் மாமா. அப்ப சரியான குழப்படி. இப்ப பெரிய மனுசி மாதிரி திரியிறாள்.’ என்று எதேற்சையாக அவன் சொன்னதை, எங்காவது சிறு துளி தண்ணீராவது தன் தாகத்திற்கு கிடைத்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருந்த மனிதர் சட்டென்று பிடித்துக்கொண்டார்.
அவர் அனுபவித்தது, அனுபவித்துக்கொண்டிருப்பது சாகும் வரையிலான தண்டனையை.
அதைச் சொல்கையில் இயல்பாய் அவள் என்று அவன் சொன்னதா, இல்லை ஏதோ நெருங்கிப் பழகிய மனிதரைக் குறித்து பேசுகையில் தெரியும் நெருக்கம் அவன் பேச்சில் தெரிந்ததா, இல்லை இதற்காகவே காத்துக்கொண்டிருந்தவருக்கு அப்படிப் பட்டதா தெரியாது.