தன் தமையன் அப்படியெல்லாம் நினைப்பானா, நடப்பானா என்று அவர் தங்கை யோசிக்கவே இல்லையே.
ஜானகியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் தனக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் வாங்கித் தராமல் எல்லோரும் அமைதியாக நிற்கவும் அவரின் அகங்காரமும் ஆத்திரமும் இன்னுமின்னும் உச்சிக்குப் போயின.
“படுபாவி மனுசா சொல்லு. எப்பிடி உன்ர சொத்து அவளிட்டப் போனது? அவள் ஆர் உனக்கு? இல்ல அவளுக்கும் உனக்கும்…” என்றவரை முழுமையாகச் சொல்ல விடாமல், “அத்த!” என்று உறுமியிருந்தான், அப்போதுதான் வீட்டுக்குள் வந்த நிலன்.
என்ன வார்த்தை சொல்லப் பார்த்தார்? அவனுக்கு மொத்தத் தேகமும் நடுங்க ஆரம்பித்தது.
“என்னடா அதட்டுறாய்? என்ன அதட்டுறாய்? மொத்தமா குடுத்துப்போட்டு நிக்கிறன் நான். உனக்கு அவளைப் பற்றி ஒண்டு சொன்னதும் கோவம் வருதோ? அந்தக் கேடு கெட்டவள் ஒழுங்கானவள் எண்டா இந்த வேலை பாத்திருப்பாளா? உனக்கு என்னத்த காட்டி வளச்சவள். அதே மாதிரி இந்தக் கிழவனை…” என்றவரை இப்போதும் பேச விடாமல், “அத்தை! இனி ஒரு வார்த்த அவளைப் பற்றிப் பிழையா வந்துது…” என்றவன் முடிக்காமல் ஆட்காட்டி விரலை ஆட்டிக் காட்டினான்.
அவனுக்கு ஆத்திர மிகுதியில் கண் முகமெல்லாம் சிவந்து, தணலெனக் கொதித்தது.
“என்னடா செய்வாய்? சொல்லு! என்ன செய்வாய்? அத்தை அத்தை எண்டு சொல்லி எல்லாத்தையும் வறுகிப்போட்டு எங்களை நடுத்தெருவில விட எத்தின நாளா பிளான் போட்டனீங்க? அப்பனும் மகனும் தொழிலைப் பாக்கிறம் எண்டு சொல்லிச் சொல்லியே என்னை மொட்டை அடிச்சுப் போட்டீங்களே. கடவுளே! இந்த அநியாயத்தை நான் எங்க போய்ச் சொல்லுவன்?” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
“அப்பப்பா உங்கட மகளை அமைதியா இருக்கச் சொல்லுங்க!” என்றான் நிலன் அவரிடம் உத்தரவாய். ஆத்திரம் அளவு மீறிப் போய், அத்தை என்றும் பாராமல் கையை நீட்டி விடுவோமோ என்கிற அளவுக்கு அவனுக்குப் பயமாயிற்று.
“நான் அமைதியா இருக்க மாட்டான். எனக்கு என்ர சொத்துத் திருப்பி வேணும். அவளைத் தரச் சொல்லு. சொல்லாம கொள்ளாம அவள் நாட்டை விட்டு ஓடேக்கையே இத நான் யோசிச்சு இருக்கோணும். வெக்கமா இல்லையாடா அவளுக்கு. இப்பிடித்தான் தையல்நாயகிய வளத்தவளாமா?” என்றவரின் பேச்சை கேட்க முடியாமல் அங்கிருந்த பூச்சாடியை எடுத்து நிலத்தில் அடித்திருந்தால் நிலன்.
அவன் தேகம் முழுமையும் கிடு கிடு என்று ஆடிற்று. சத்தியமாக இளவஞ்சி பக்கத்தில் இருந்திருக்க கன்னம் கன்னமாக அறைந்திருப்பான். அந்தளவில் அவன் நெஞ்சு ஆத்திரத்திலும், ஜானகியின் வாயை அடக்க முடியா ஆவேசத்திலும் நடுங்கிற்று.
மொத்தமாகக் கூனிக் குறுகிப்போனார் பாலகுமாரன். ஜானகி தன்னைத் திட்டுவார், வார்த்தைகளால் குத்தி கிழிப்பார், பாம்பாய்க் கொத்துவார் என்றெல்லாம் எதிர்பார்த்தார்தான். என்றாலும் தன்னைத் தன் மகளுடன் சேர்த்து அசிங்கமாகப் பேச முனைவார் என்று நினைக்கவே இல்லை. அவர் இதயம் துடித்தது. அந்த நிமிடமே தன் இயக்கத்தை நிறுத்திவிட எண்ணிப் படபடத்தது.
செய்த பாவத்தின் கணக்கு இன்னும் முடியவில்லை போலும். அவர் உடலில் அத்தனைக்குப் பிறகும் உயிர் இருந்தது.
ஜானகிக்கு இன்னுமே ஆத்திரம் அடங்கவில்லை. மருமகனின் செயலில் சில கணங்கள் அமைதியாக நின்றாலும் விறுவிறு என்று கைப்பேசியை எடுத்துக் குணாளனுக்கு அழைத்தார்.
அந்தப் பக்கம் எடுத்த மனிதரைப் பேச விடவேயில்லை. நாக்கைப் பிடுங்கிக்கொள்வதுபோல் கேள்விகளாகக் கேட்டுவிட்டுப் படார் என்று அழைப்பைத் துண்டித்தார்.
குணாளனுக்கு நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது. ஐந்தும் கெட்டு அறிவும் கெட்ட நிலை. ஒன்றுமே புரியவில்லை. சுவாதியையும் மிதுணையும் அழைத்து என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்துகொண்டவருக்குக் கொஞ்ச நேரத்திற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியவே மாட்டேன் என்றது. மகள் மீது மிகுந்த ஆதங்கம். இந்த வீட்டின் ராணி அவள். அவளுக்கு இதெல்லாம் தேவையா என்ன?
பேசாமல் அவளுக்கு அழைத்து, “என்னம்மா செய்து வச்சிருக்கிற? இது தேவையா பிள்ளை உனக்கு?” என்றவரிடம், “நான் வெளிக்கிட்டன் அப்பா. வைங்க வாறன்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் அவள்.
இது தெரியவந்தால் மிகப்பெரிய பூகம்பமே வெடிக்கும் என்று அவளுக்குத் தெரியும். என்ன, அது இத்தனை விரைவாய் நிகழும் என்று எதிர்பார்க்கவில்லை. இனி அவள் அங்கே நின்றேயாக வேண்டும். இல்லையானால் அவள் மீதிருக்கும் ஆத்திரத்தில் நிலனோடு சேர்த்து அவளின் மொத்தக் குடும்பத்தையும் கடித்துக் குதறுவார் ஜானகி. அதற்கு விட முடியாதே. இங்கே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பாலகுமாரனும் சக்திவேலரும் மட்டுமே! உடனேயே கிடைத்த அடுத்த விமானத்தில் புறப்பட்டுவிட்டாள்.
அவளுக்கு அந்த மனிதரைப் பார்ப்பதோ, அவரிடம் தன் காரியம் ஆவதற்காகப் பேசுவதோ பிடிக்கவேயில்லை. ஆனால், நிலன் சொன்ன வார்த்தை அவள் நினைவில் நின்றது. எல்லா நேரமும் நமக்குப் பிடித்த மனிதர்களோடு மட்டுமே சந்திப்புகள் நிகழ்வதில்லையே.
ஒருவரை அடி நெஞ்சிலிருந்து வெறுத்தாலும் நேரில் கண்டுவிட்டால் புன்னகை முகம் காட்டிப் பேசுவதில்லையா. அப்படி, தன்னைப் பெரும்பாடு பட்டுத் தயார்படுத்திக்கொண்டுதான் பாலகுமாரனைச் சென்று சந்தித்தாள்.
அந்த மனிதர் சட்டென்று சம்மதித்தது அவள் எதிர்பாராததுதான். கூடவே, சொன்னதுபோல் வந்து கையெழுத்துப் போட்டதையும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், அவர் சம்மதித்தபோதும் சரி, சம்மதித்தது போலவே வந்து கையெழுத்துப் போட்டபோதும் சரி அவள் மனம் இரங்கவேயில்லை.
இதற்காகவெல்லாம் விட முடியாது என்றுதான் நினைத்தாள்.
தொடரும்…