அழகென்ற சொல்லுக்கு அவளே 30 – 1

அத்தியாயம் 30

மிதுனுக்கு அன்று தன் திருமணத்தைத் தடுத்து, சுவாதியைக் கூட்டிக்கொண்டு வந்தவள் மீது ஆத்திரமும் எரிச்சலும்தான் இருந்தன. ஆனால், அன்று அவள் அவர்கள் வீட்டுப் பிள்ளை இல்லையாம் என்று அறிந்தது பெரும் அதிர்ச்சி. அவனால் அப்படியான விடயங்களை எல்லாம் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

ஆனால், அவன் வெறுக்கும் அந்த இளவஞ்சி அப்போதும் உடையாமல் நின்றதும், அதுவரையில் சீறும் சிங்கமாக நின்றவள் அமைதியான குரலில் அவனிடம் கூட மன்னிப்பைக் கேட்டுவிட்டுப் போனதும் அவனைப் பெருமளவில் பாதித்திருந்தன.

அதன் பிறகுதான் விருப்பு வெறுப்புகள் எதுவுமில்லாது அவளைக் கவனிக்க ஆரம்பித்தான். அத்தனை காலமும் நான் என்று வாழ்ந்த பெண், எந்த நிபந்தனைகளும் இல்லாது தையல்நாயகியை விட்டு விலகியது, வளர்த்தவர்கள் வேண்டுதலுக்காகத் தன் மொத்த எதிர்காலத்தையும் அவர்கள் சொன்ன நிலனிடம் ஒப்படைத்தது, அதன் பிறகும் அதை ஏற்று அமைதியாக இருந்தது என்று அவள் அவனிடம் காட்டியது எல்லாம் அவன் பிரமித்துப் போகும் முகங்களை.

என்ன மாதிரியான பெண் இவர் என்றுதான் பலமுறை நினைத்திருக்கிறான். இப்படி இருக்கையில்தான் அடுத்த அதிர்ச்சியாக அவள் தன் தமக்கை என்று அறிந்துகொண்டான். அதை அறிந்த நிமிடம் எந்த உணர்வு அவனை உந்தியது என்றெல்லாம் தெரியாது. அக்கா என்று ஓடிப்போய் அவள் மடிக்குள் புகுந்துவிடலாமா என்று நினைத்திருக்கிறான்.

அவள் அதை விரும்பமாட்டாள் என்பதிலும், தான் அவள் வெறுக்கும் அந்தப் பாலகுமாரனின் மகன் என்பதிலும்தான் அமைதியாக இருந்தான்.

கூடவே அனைத்தையும் அறிந்துகொண்டபோது தன் தந்தை, தாத்தா மீதான பற்றுதல் குறைந்துபோன உணர்வு. எப்படி இப்படி இவர்களால் நடக்க முடிந்தது என்று ஜீரணிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு இளவஞ்சியைப் பார்க்கிற பொழுதுகளில் எல்லாம் ஏன் என்றில்லாமல் அவனுக்குத் தொண்டை அடைத்துக்கொள்ளும். தன்னை மீறியே பார்வையால் அவளைத் தொடர்வான்.

இப்படி இருக்கையில்தான் அவனுடைய கனவுக்கு அவன் கேட்காமலேயே வழி காட்டினாள். அதனை விடவும் அவனை நெகிழ்த்தியது, யாரிடமும் அவனும் சுவாதியும் பகிர்ந்துகொள்ளாத அவர்களுக்குள் உண்டாகியிருந்த அந்த இடைவெளியைக் கவனித்து, அதைக் குறித்து பேசியது. அது மட்டுமல்லாது குழந்தையைப் பற்றி அவள் சொன்னதுதான் அவனை ஒரு ஆட்டு ஆட்டியிருந்தது.

அவர்களின் குழந்தையை அவள் தன்னோடு ஒப்பிட்டுச் சொன்னபோதுதான், உடையாமல் நடமாடும் அவள் உள்ளுக்குள் எந்தளவில் உடைந்துபோயிருக்கிறாள் என்றே அவனுக்குத் தெரிந்தது.

அவளுக்குள் இருப்பவை முழுக்க முழுக்க காயங்களும் வலிகளும் மட்டுமே. நிலனுடனும் அவளுக்கு முழுமையாக எதுவும் சரியில்லை என்று அவர்களின் நடவடிக்கைகளை வைத்தே அவனால் கணிக்க முடிந்தது. தன்னை அறியாமலேயே அவளுக்கு அனுசரணையாக நடக்க ஆரம்பித்தான்.

இப்படி இருக்கையில்தான் அவனை அழைத்து சொத்து விசயத்தில் தான் செய்யப்போவதைப் பற்றிப் பேசினாள் இளவஞ்சி.

இவனுக்குள் குட்டியாய் ஒரு குதூகலம். அவள் அவனைத் தம்பியாகப் பார்க்கிறாளா, இல்லை சுவாதியின் கணவனாக எண்ணி அக்கறை காட்டுகிறாளா என்று அவனுக்குத் தெரியாது.

ஆனால் அவனை நம்புகிறாள். அது போதுமே அவனுக்கு. கூடவே, அவள் கட்டிக்காத்த தையல்நாயகியை விட்டே ஒதுங்கிப்போன பெண், தனக்கு வரவேண்டியதைக் கேட்கிறார் என்றால் நிச்சயம் பேராசையில் இல்லை என்று யாராவது வந்து அவனுக்குச் சொல்லத்தான் வேண்டுமா என்ன?

“நீங்க என்ன சொன்னாலும் எனக்கு ஓகேதான் அக்கா. அதுக்குப் பதிலா நீங்க என்ன உங்கட தம்பியா ஏற்ப்பீங்களா?” என்று கேட்டான் அவன்.

“என்ன பிசினஸ் பேசுறியா?”

கேள்வியே அதட்டலாக வந்தது. உள்ளே இலேசாக ஆடினாலும், “இல்ல. எனக்கு என்ர அக்கா வேணும் எண்டு கேக்கிறன்.” என்றான் தைரியத்தை வளர்த்துக்கொண்டு.

“இல்லை எண்டு சொன்னா என்ன செய்வாய்?”

“அப்பவும் நீங்க சொல்லுற இடத்தில எல்லாம் வந்து கையெழுத்துப் போடுவன்.” என்றான் சிரித்துக்கொண்டு.

சில கணங்களுக்கு அவனையே இமைக்காமல் பார்த்தவள், “போ!” என்றாள்.

“நான் கேட்டது…”

“போடா!”

அது போதுமே அவனுக்கு. என்னவோ அவள் தன்னை அணைத்து உச்சி முகர்ந்த சந்தோசம் அவனுக்கு. “தேங்க்ஸ் அக்கா!” என்றுவிட்டு ஓடி வந்துவிட்டான்.

சீனாவிலிருந்து புறப்பட்ட இளவஞ்சி யாழ்ப்பாணம் வந்து சேர்வதற்கு இரண்டு நாள்கள் பிடித்திருந்தன. அந்த இரண்டு நாள்களும் பாலகுமாரனை உண்டில்லை என்று ஆகியிருந்தார் ஜானகி.

முதல் நாள் பொறுத்து பொறுத்துப் பார்த்த சந்திரமதி முடியாமல் ஜானகி வார்த்தைகளால் பாலகுமாரனை பந்தாடிக்கொண்டே இருக்கிறார் நிலனுக்கு அழைத்துச் சொன்னார். அப்போதே வந்தவன் பாலகுமாரனையும் அழைத்துக்கொண்டு சக்திவேலரின் பெற்றவர்கள் வாழ்ந்த வீட்டில் போய் இருந்துகொண்டான்.

சக்திவேலர் எப்படியும் கோயில் குளம், தன் அலுவல்கள் என்று வீட்டில் இருக்க மாட்டார். அப்படியே இருந்தாலும் ஒரு அளவு தாண்டித் தந்தையோடு ஜானகி சண்டைக்குப் போகவும் மாட்டார். இன்னும் சொத்தின் பிடி முழுமையாக அவர் கைக்கு வரவில்லையே.

பிரபாகரன் சந்திரமதி ஏன் சக்திவேலர் கூப்பிட்டும் அவன் வீட்டுக்கு வரவில்லை. அவ்வளவு ஆத்திரம். அவனால் ஜானகி விட்ட வார்த்தைகளை ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

அன்று குணாளனிடம் கத்திவிட்டு வைத்தபிறகும் கத்திக்கொண்டே இருந்தார் ஜானகி. அவர் மீதிருந்த கோபத்தையும் தாண்டிக்கொண்டு சக்திவேலருக்கும் பாலகுமாரனுக்கும் ஏதும் ஆகிவிடுமோ என்று பயந்தான் நிலன்.

அந்தளவில் செய்வதறியாமல் நின்ற பிரபாகரன், மருமகளைக் குறித்து ஜானகி சொன்ன வார்த்தைகளைத் தாங்க முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுத அன்னை, வீட்டில் நடக்கும் கலவரத்தில் அஞ்சி நடுங்கிய தங்கை, இனித் தன் தொழில் என்னாகுமோ என்கிற பயத்தில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்ட சக்திவேலர், ஜானகியின் வார்த்தைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுத பாலகுமாரன் என்று அவனுக்கு யாரைப் பார்ப்பது என்று தெரியவேயில்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல், “இப்ப என்ன, பாதிப் பங்குதானே அவள் வாங்கியிருக்கிறாள். மிச்சப் பாதி எங்களிட்டத்தானே இருக்கு. அதை உங்களுக்கே மாத்தி தாறம். பேசாம இருங்க அத்தை!” என்று அவன் சொன்னதைக் கூட அவர் கேட்கவில்லை.

“நீ தாறன் எண்டு சொன்னது நியாயமா எனக்குச் சேர வேண்டியது. இது எனக்குச் சொந்தமானது. ரெண்டுமே எனக்கு வேணும். என்ன, இதத் தந்துபோட்டு அத எடுத்தா உன்ர அப்பா சொன்ன மாதிரி எனக்கு என்ர வீட்டுச் சொத்தில பங்கில்லாம ஆக்கிற பிளானா உனக்கு?” என்று அதற்கும் சண்டை போட்டார்.

கூடவே, “அவளைத் தட்டிக் கேக்க உனக்குத் துப்பில்லை. என்னைச் சமாதானப்படுத்த வாறாய் என்ன?” என்று ஒரே காத்தல்.

அவனுக்கு வெறுத்தே போனது. இத்தனை கேவலமான பெண்மணியையா அத்தை அத்தை என்று வாய் நிறைய அழைத்தான்? அவரிடம் நின்று பேசுவதே அசிங்கமாகப் பட அதன் பிறகு அவன் அங்கு நிற்கவில்லை.

சக்திவேலரை அழைத்துப் போய்த் தன்னால் முடிந்தவரையில் ஆற்றுப்படுத்தினான். அப்போதும், “என்ர தொழிலை விட்டுடாத பேரா. நான் படாத பாடெல்லாம் பட்டுக் கட்டிக் காத்தது. இப்பிடிச் செய்தவள நீ மன்னிக்கவே கூடாது. அவள் நல்லவள் இல்ல. காத்திருந்து கருவருத்துப்போட்டாள். எனக்கு என்ர தொழில் வேணும். அவள் அழிச்சுப்போடுவாள். எனக்குத் தெரியும். விட்டுடாத.” என்றவரை முகம் இறுக ஆற்றுப்படுத்தி, அவருக்குத் துணையாகப் பிரபாகரனை இருத்தினான.

இங்கே வந்து பாலகுமாரனை எழுப்பித் தன் அறைக்குக் கூட்டிக்கொண்டு போனான். முகமெல்லாம் இரத்தப்பசை இழந்து, ஒற்றை நாளில் பல வயதுகள் மூத்துப்போய், அவனை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியாத அவமானக் கன்றலோடு அமர்ந்திருந்த மனிதரைக் கண்டு, பாவம் பார்ப்பதா பரிதாபம் பார்ப்பதா என்று அவனுக்கு விளங்கவேயில்லை.

அவரையும் கொஞ்சம் ஆற்றுப்படுத்தி, அவருக்குத் துணையாகக் கீர்த்தனாவை அமர்த்திவிட்டு வந்து அன்னையைக் கவனித்தான்.

“என்னய்யா இதெல்லாம்? என்னப்பு கத பேச்சு? எனக்கு நெஞ்செல்லாம் கூசுதப்பு.” என்று அழுதார் அவர்.

அவனும்தானே கண்மண் தெரியாத ஆத்திரத்தில் இருக்கிறான். “விடுங்கம்மா. கொழுத்திப் போட்டவள் அங்க நிம்மதியா இருக்கிறாள். நாங்க அனுபவிக்கிறம். நீங்க அழாதீங்க. வாங்க வந்து கொஞ்சம் படுத்து எழும்புங்க.” என்று அவரையும் படுக்க விட்டுவிட்டு வெளியே வந்து மிதுனுக்கு அழைத்தன.

“நீ ஏனடா வீட்டுக்கு வரேல்ல.” இத்தனை நடந்தும் இந்தப் பக்கம் எட்டியும் பாராதவனின் செய்கையில் அவள் என்னவோ சொல்லியிருக்க வேண்டும் என்று கணித்தாலும் கேட்டான்.

“அக்காதான் போக வேண்டாம் எண்டு சொன்னவா.”

“ஏனாம்?”

“அங்க நடக்கிற சண்டையில அவசரப்பட்டு நான் எதையும் சொல்லிப்போடுவானாம்.”

‘இவளை!’ என்று பல்லைக் கடித்தான். இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்தும் நடக்கட்டும் என்று நினைத்திருக்கிறாள். வரட்டும்!

“வேற என்ன சொன்னவள்?”

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock