சின்னதாய் ஒன்று என்றாலே கத்தி, வீட்டை இரண்டாக்கி, மற்றவர்களைப் பேசவிடாமல் செய்து, தனக்கு நடக்கவேண்டியதை நடத்திக்கொள்வதுதான் ஜானகியின் இயல்பு.
அதே ஜானகி மூச்சு விடக்கூட முடியாத அளவில் இடிந்துபோய் அமர்ந்துவிட்டார். அவரால் யோசிக்கக் கூட முடியவில்லை. சக்திவேலர் பாலகுமாரனை அடித்தது, நிலன் இளவஞ்சியை வெளியே அனுப்பியது எல்லாம் அவர் கண் முன்னே நடந்தாலும் பிடித்துவைத்த சிலைபோல்தான் நின்றிருந்தார்.
மொத்த வீடும் என் கட்டுப்பாட்டின் கீழ் நெஞ்சை நிமித்தியவர். நொடியில் தன்னை மிக மிக அசிங்கமாக உணர்ந்தார்.
இன்னொருத்தியோடு வாழ்ந்தவனோடு அவர் வாழ்ந்திருக்கிறார். ஆரம்ப நாள்களில் இவரோடு வாழ முடியாமல் ஓடி ஒளிந்தாரே. அது இதனால்தானா? இதில் இவர் வேறு அதைத் தந்தையிடம் சொல்லி, தன்னோடு வாழ வைத்தார். மனத்தில் அவளை வைத்துக்கொண்டு என்னோடு… மேலே நினைக்கக் கூட முடியாமல் உடல் பற்றி எரிந்தது.
வாயில்லா பூச்சி, அமைதி என்று நினைத்தார். கடைசியில்… சீ!
நெஞ்சில் நெருப்பெரிய விறுவிறு என்று தந்தையின் முன்னே சென்று நின்று, “இதெல்லாம் உங்களுக்கும் தெரியுமா அப்பா?” என்றார் ஆத்திரத்தையும் அழுகையையும் அடக்கியபடி.
சக்திவேலரால் என்ன சொல்ல முடியும்? அவருக்கு முதலில் பாலகுமாரனை அடித்ததிலும், அறிந்துகொண்ட விடயத்திலும் நெஞ்சு படபடத்துக்கொண்டிருந்தது. பேச முடியாமல் நின்றார்.
“சொல்லுங்க அப்பா! எல்லாம் தெரிஞ்சும் இந்தாளுக்கு என்னைக் கட்டி வச்சிருக்கிறீங்க என்ன? அந்தளவுக்கு என்னை விடத் தொழில் முக்கியம்? இது தெரியாம என்ர அப்பா எனக்காக என்னவும் செய்வார் எண்டு நம்பிக்கொண்டிருந்த நான் எவ்வளவு பெரிய முட்டாள்?” என்று கத்தினார்.
“அத்த, அப்பப்பாக்கு ஏலாம இருக்கு. கொஞ்சம் பேசாம இருங்க.” என்ற நிலனின் பேச்சை அவர் கேட்பதாயில்லை.
இதற்குள் சந்திரமதி அழைத்துச் சொல்லிப் பிரபாகரனும் வந்திருந்தார். தரையில் கிடந்த சக்திவேலரின் ஊன்றுகோல், மூச்சிரைக்க அமர்ந்திருந்த சக்திவேலர், அவர் முன்னே பத்திரகாளியாக நின்ற தங்கை, யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் குறுகிப்போய் அமர்ந்திருந்த பாலகுமாரன் என்று எல்லோரையும் ஒற்றைப் பார்வையில் அளந்தவரின் முன்னே வந்து நின்றார் ஜானகி.
“இந்தக் கேடுகெட்டவன் எவளோ ஒருத்திக்குப் பிள்ளை குடுக்கிற அளவுக்குப் போனது உனக்கும் தெரியுமா அண்ணா?” அங்கிருந்த பாலகுமாரனைக் கையால் காட்டி வினவினார்.
சட்டென்று அமைதியானார் பிரபாகரன். அவர் பார்வை தந்தையிடம் போய்வந்தது.
“அப்ப உனக்கும் தெரியும்.” என்றவர் இப்போது, “உனக்கு நிலன்?” என்றார் அவனைப் பார்த்து.
என்ன சொல்வான்? அவனும் அமைதியாகத்தான் நின்றான்.
“உங்களுக்கு அண்ணி?”
அவர் கணவரையும் மகனையும் மாறி மாறிப் பார்த்தார்.
“அப்ப எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு. தெரிஞ்சும் என்னைக் கட்டி வச்சு இருக்கிறீங்க என்ன?” என்றவராள் தன் ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை.
தன் முன்னே நின்ற தமையனைத் தள்ளிவிட்டுத் தகப்பனிடம் போனவர், அவன் எவளோடேயே வாழ்ந்து பிள்ளையையும் குடுத்துப்போட்டு வருவான், அவனை எனக்குக் கட்டி வைக்கிற அளவுக்கு கேவலமா நான்?” என்று தகப்பனைப் போட்டு உலுக்கினார்.
“அத்த! உங்களுக்கு என்ன விசரா? தள்ளுங்க!” என்று பிடித்துத் தள்ளிவிட்டவனை அவரும் பிடித்துத் தள்ளி விட்டார்.
“அவர் என்ர அப்பா. அவரோட நான் கதைக்கேக்க எவனும் நடுவிக்க வரக் கூடாது!” என்றுவிட்டு, “அந்தளவுக்குத் தொழில் முக்கியம் உங்களுக்கு? மகள் வாழ்க்கை நாசமானாலும் பரவாயில்லை, அவள் எவ்வளவு கேவலமானவனோட வாழ்ந்தாலும் பரவாயில்லை. ஆனால் தொழில் உடையக் கூடாது. நீங்க எல்லாம் அப்பா. வெக்கமா இல்லையா? விட்டா உங்கட தொழிலைக் காக்க வேற ஏதும் வேலையும் பாப்பீங்க போல.” என்றதும் சட்டென்று நெஞ்சைப் பற்றிக்கொண்டு விழிகளை இறுக்கி மூடிக்கொண்டார் சக்திவேலர்.
“அத்த போதும் இனி. எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. உங்கட வாய் என்ன சாக்கடையா? என்ன எல்லாம் கதைக்கிறீங்க சீ!” என்றான் நிலன் வெறுப்புடன்.
“நானாடா சாக்கடை? உங்க எல்லாரையும் நம்பி வாழ்ந்த நான் ஒரு முட்டாள். இவன்தான் சாக்கடை!” என்றவர் பாலகுமாரனிடம் ஓடினார்.
“கேடுகெட்டவனே! வெக்கமே இல்லாம அங்க ஒரு பிள்ளை, இஞ்ச ஒரு பிள்ளை எண்டு பெத்துப் போட்டு இருக்கிறியே. நீ எல்லாம் என்ன ஆம்பிளை?” என்றதன் பிறகு அவர் பாலகுமாரனை நோக்கிக் கேட்டதெல்லாம் காதுகள் கூசும் வார்த்தைகள்.
நல்லகாலம் கீர்த்தனா அங்கில்லை. இல்லையானால் சின்ன பெண் அவளுக்குக் காலத்துக்கும் மறக்க முடியாத காயமாக அன்றைய நாள் மனத்தில் பதிந்துபோயிருக்கும்.
அந்தளவில் பாலகுமாரனின் அன்னையை இழுத்துக் கேவலமாகப் பேசினார். பாலகுமாரனை ஆணே இல்லை என்றார். அசிங்கம் என்றார். இன்னும் ஏன் உயிருடன் இருக்கிறாய் என்று நாக்கைத் பிடுங்கிக்கொள்ளலாம் போல் கேட்டார். பிரபாகரன், நிலன் என்று யாராலும் அவரைத் தடுக்க முடியவில்லை.
குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த மனிதர் திடீரென்று மூக்கிலிருந்து இரத்தம் வழிய மயங்கிச் சரிந்தார். நொடியில் அந்த இடமே களேபரமாயிற்று.
அவரைத் தூக்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓட முனைகையில் சக்திவேலரால் மூச்செடுக்க முடியாமல் போயிற்று. ஒரு கணம் அந்த வீடே ஸ்தம்பித்துப் போயிற்று. சந்திரமதி கூட முடியாமல் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டு அமர்ந்துவிட்டார்.
அவருக்குத் தான் இறந்துவிடுவோமோ என்கிற அளவில் பயமாயிற்று. அந்தளவில் நெஞ்சு வலித்தது. சுவாசிக்க முடியவில்லை. தலையைச் சுற்றியது. கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. “த…ம்…பி.” என்று ஈனமாக முனகினார்.
நல்ல காலமாகச் சரியாக அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் மிதுன். நிலன், அவன், பிரபாகரன் மூவருமாகச் சேர்ந்து மற்ற மூவரையும் கூட்டிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினர்.
பாலகுமாரன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட சக்திவேலரும் அவசரமாக உள்ளே எடுக்கப்பட்டுக் கவனிக்கப்பட்டார். இன்னொரு பக்கம் சந்திரமதி.
மற்ற மூவரும் பதற்றத்தை உச்சியில் இருந்தனர். ஜானகியை அழைத்து வரவில்லை. அதே நேரத்தில் அவரைத் தனியாக விட்டுவிட்டு வந்தது பயத்தையும் கொடுத்தது. ஏதாவது முட்டாள்தனமான காரியம் எதையாவது செய்துவிட்டார் என்றால்?
அதில் மிதுனை அவரிடம் போகச் சொல்லி அனுப்பி வைத்துவிட்டு வந்தார் பிரபாகரன். சந்திரமதிக்கு இதயத்தில் ஏதும் பிரச்சனை இருக்குமோ என்று வைத்தியர் சந்தேகப்படுவதாகச் சொல்லவும் முற்றிலுமாக நிலைகுலைந்துபோனார் மனிதர்.
நிலனுக்கும் என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியா நிலை. நெஞ்செல்லாம் பதறியது. அவனைப் பார்த்த பிரபாகரனுக்கு அவரின் மொத்த இயலாமையும் ஆத்திரமாக அவன் புறம் திரும்பிற்று.
“இப்ப உனக்குச் சந்தோசமா தம்பி? இதுக்குத்தானேடா இந்தக் கலியாணம் வேண்டாம் எண்டு சொன்னனான். கேட்டியா? நீ கட்டிக் கூட்டிக்கொண்டு வந்த ஒருத்தியால வீடு என்ன நிலமைல இருக்கு எண்டு விளங்குதா உனக்கு? இப்ப சந்தோசமா உன்ர மனுசிக்கு? இனி எங்கட வீடு நிம்மதியா இருக்குமா? ஒருத்தரின்ர முகம் பாத்து இன்னொருத்தர் இனி எப்பிடிக் கதைக்கிறது? முகம் பாத்துச் சிரிக்கேலுமா? நிம்மதியா ஒரு வாய் சோறு சாப்பிடேலுமா? ஒரு பொம்பிளைக்கு இது ஆகாது நிலன்.” என்றதும், “அப்பா!” என்றான் அதட்டலாக.
“என்ன அப்பா? ஒரு குடும்பத்தைக் குலச்சு என்ன காணப்போறா உன்ர மனுசி? பேரப்பிள்ளைய காணப்போற வயசில சந்திக்கிற பிரச்சினையா இது? இனி உன்ர அத்தையும் மாமாவும் நிம்மதியா இருப்பினமா? இல்ல இஞ்ச படுத்துக்கிடக்கிற மூண்டு உயிர்கள்ள ஏதாவது ஒண்டு இல்லை எண்டுற நிலை வந்தா என்ன செய்வாய்? ஆர் அதுக்குப் பதில் சொல்லுறது?” என்றதும் விருட்டென்று எழுந்து வெளியே வந்துவிட்டான் நிலன்.
அவனுக்குச் சுவாசக்குழாய் அடைத்த நிலை. இத்தனைக்குப் பிறகும் அவளைத் தன் தந்தையேயானாலும் ஒரு வார்த்தை சொல்வதைக் கேட்க முடியவில்லை. தடுத்துப் பேசவும் கோபப்படவும்தான் வந்தது. பிரச்னைக்கு மேல் பிரச்சனை வேண்டாம் என்று எழுந்து வந்துவிட்டான்.
ஆனால், அவர் சொல்வதுபோல் ஒன்று நடந்துவிட்டால்? நினைக்க முடியாமல் நெஞ்சு நடுங்கியது. தீராத பழியைச் சுமந்துவிடுவாளே அவன் வஞ்சி. இவளுக்கு இந்த பாவம் எல்லாம் தேவையா? இதற்குத்தானே அவனும் பயந்தான்.
அன்று ஜானகி அவன் முன்னாலேயே இளவஞ்சியைக் குறித்து ஜானகி அவ்வளவு பேசியும் அவன் வாயை மூடிக்கொண்டு இருந்ததே இப்படி எதுவும் அசம்பாவிதமாக நடந்துவிடக் கூடாது என்றுதான்.
அது பார்த்தால் சீனாவிலிருந்து மெனக்கெட்டு வந்து அதைச் சொல்லிவிட்டு போய்விட்டாள் அவள். ஆத்திர மிகுதியில் அவளுக்கு அழைத்தான்.
*****