நிலன் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த இளவஞ்சி என்ன நடந்தது என்று கேட்ட தாய் தகப்பனிடம் ஒன்றுமே சொல்லவில்லை. தன் அறைக்குள் புகுந்துகொண்டிருந்தாள்.
குளிக்கவில்லை, உடை மாற்றவில்லை, சீனாவிலிருந்து பயணித்து வந்த களைக்கு ஓய்வு எடுக்கவும் இல்லை.
தன் அப்பம்மாவின் அந்தக் கொப்பியை எடுத்துக்கொண்டு சென்று தன்னுடைய கூடை நாற்காலிக்குள் புதைந்துகொண்டாள்.
என் அன்புக் கண்மணிக்கு இந்த அப்பம்மாவின் அன்பும் ஆசியும் என்கிற அந்த வரி இப்போதும் அவள் விழிகளில் கண்ணீரை மல்க வைத்தன.
என் பேத்தியின் கண்ணீர் துடைக்க நானில்லா நாள்களில் நீ கலங்கிவிடக் கூடாது என்று நினைத்தேன். அதனால்தான் என்றும் உனக்கு இது தெரிய வந்துவிடக் கூடாது என்று உன் அப்பாவிடம் சொல்லியிருந்தேன். என்கிற இடத்தை வாசிக்கையில் அவள் கன்னங்களைக் கண்ணீர் நனைத்தது.
அவருக்கு அழுவது என்றுமே பிடிக்காதுதான். அவரோடு இருந்த காலத்தில் அழுகையை வடிகாலாக நினைப்பாள் அவள். அவரோ கோபமோ கவலையோ கண்ணீரோ மனத்தினுள் வைத்திரு, அதை ஆக்கமாக வெளியே கொண்டு வா என்பார். உன்னை ஆத்திரப்படவோ அழவோ வைத்தவருக்கு உன் செயலால் திருப்பியடி என்பார்.
அவர் இருக்கும் வரையில் அதை அவள் கடைப்பிடித்தது மிகவும் குறைவு. அதுவே அவர் இறந்த பிறகு அவளும் அப்படித்தான் மாறியிருந்தாள். அவரின் இந்தக் கொப்பியும், நிலன் மீது அவள் கொண்ட நேசமும் அதற்கு விலக்காகிப் போயின. இரண்டுமே அவளை மிகவுமே பலகீனமானவளாக மாற்றிவிடும்.
கண்களில் கண்ணீர் தளும்ப தளும்ப முழுமையாக மீண்டுமொருமுறை அனைத்தையும் வாசித்தாள். அந்த வலியும் வேதனையும் கொஞ்சமும் குறையாமல் இப்போதும் அவளைத் தாக்கின.
உன் அப்பா குணாளன்தான்! என்றைக்கும் அவன் மட்டும்தான் உன் அப்பா! மணமாக முதலே உன்னை மகளாக வரித்தவன். ஒருவன் தந்தையாக இருக்க இதைவிட வேறென்ன தகுதி வேண்டும் சொல்? இந்த வரிகளில் மீண்டும் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது.
உண்மைதான். அவள் தந்தை குணாளன்தான். அதில் அவளும் உறுதியாகவும் தெளிவாகவும்தான் இருக்கிறாள்.
ஆனால் இன்று அவள் அதைப் பட்டவர்த்தனமாகியது தன் தந்தை யார் என்று உலகிற்கு அறிவிக்கும் நோக்கிலோ, ஜானகி அவள் மீது சுமத்திய பழியைத் தீர்க்கும் நோக்கிலோ அன்று!
கூடவே, தையல்நாயகியின் நிலத்தைத் திருப்பித் தந்து, தன் சொத்து முழுவதையும் அவளிடமே தந்து அந்த மனிதர் தனக்கான குற்ற உணர்விலிருந்து கொஞ்சமேனும் வெளியில் வருவதிலும் அவளுக்கு உடன்பாடில்லை.
அவளுக்குப் பாலகுமாரனையும் சக்திவேலரையும் தண்டிக்க வேண்டும். சும்மாவன்று! மரணிக்கும் வரை சிறை போன்று வாழ்நாள் தண்டனை கொடுக்க விரும்பினாள்.
அந்தத் தண்டனையை அவர்களுக்குக் கொடுக்கத் தகுந்தவர் ஜானகி.
அவள் பிறக்கக் காரணமான மனிதர் யார் என்பதை ஜானகியிடம் வெளிப்படுத்த வேண்டும். அது சக்திவேலருக்கும் தெரியும் என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் ஜானகியின் கோபம் அவர்கள் இருவர் புறமும் திரும்பும்.
அது மாத்திரமன்றி தையல்நாயகியின் நிலப்பத்திரம் பாலகுமாரனிடமிருந்து என்னிடம் வந்துவிட்டது என்று சொல்லி, சக்திவேலரின் கோபத்தையும் பாலகுமாரன் பக்கம் திருப்பிவிட வேண்டும். அதே நேரத்தில் தையல்நாயகியை அழிக்கும் ஆயுதம் கைக்குள் இருந்தும் கோட்டை விட்டுவிட்டேனே என்று கடைசி வரையில் அந்த மனிதர் புழுங்க வேண்டும் என்றும் நினைத்தாள்.
அவரின் மருமகனுக்கு வாசவியை கட்டிக்கொடுக்க அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம், அதனாலேயே மறுத்திருக்கலாம், அவர்களைப் பிரித்திருக்கலாம், சொத்தைப் பாதுகாக்க நினைத்திருக்கலாம். அது எல்லாம் வேறு.
அதற்காக இரண்டு பெண்களிடமும் கேளாத கேள்விகளைக் கேட்டு, வார்த்தைகளால் வதைத்து, காலத்திற்கும் அழியாத காயத்தைக் கொடுக்க அவருக்கு உரிமை இல்லையே.
வாசவியும் கோழைதான். அவர் மீது அவளுக்கும் பெரிய அபிப்பிராயம் இல்லை. தையல்நாயகி மாதிரியான ஒரு பெண்மணிக்கு மகளாகப் பிறந்துவிட்டு, வாழ்வில் எதிர்நீச்சல் போடத் தைரியம் இல்லாமல், தன் உயிரைத் தானே மாய்த்து, தன்னைத் தானே தண்டித்ததும் அல்லாமல் அவரைப் பெற்ற பெண்மணியையும் தண்டித்துவிட்டாரே.
ஏமாறுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? அவரைப் போன்றவர்கள் ஏமாறுவதற்குத் தயாராக இருந்தால் பாலகுமாரனைப் போன்றவர்களுக்கு அது எத்தனை வசதியாகிவிடுகிறது?
ஆனால், இரும்புப் பெண்மணி அவளின் அப்பம்மாவை வதைத்தவர்களை அவள் எப்படிச் சும்மா விடுவாள்?
அதுதான் கொளுத்திப்போட்டுவிட்டு வந்தாள்.
மற்றும்படி ஜானகியின் வார்த்தைகள் எல்லாம் அவளைச் சேரவே இல்லை. அன்பின் வடிவமான குணாளனின் மகள் அவள். தையல்நாயகியின் பேத்தி. அவளுக்கு அவள் இந்தப் பூமிக்கு வருவதற்கு காரணமாக இருந்த ஒருவனின் முகவரி தேவையே இல்லை. அதைக் குறித்த வார்த்தைகள் அவளைப் பாதிக்கவும் இல்லை.
ஜானகி குணாளனுக்கு எடுத்துப் பேசியதை அறிந்திருந்தவள் அவர் இப்படி எல்லாம் கதைப்பார் என்று எதிர்பார்த்துதான் போனாள்.
அவள் நினைத்தபடியே அனைத்தையும் முடித்துவிட்டாள். கூடவே சக்திவேலின் பாதிக்குச் சொந்தக்காரி அவள். அவள் இல்லாமல் அங்கு அணுவையும் அசைய விடமாட்டாள் அவள்.
இதையெல்லாம் நினைக்க நினைக்க இத்தனை நாள்களாக அவள் நெஞ்சில் எரிந்துகொண்டிருந்த தீயின் சுவாலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது.
“உங்களுக்கு நான் செய்தது பிடிக்காம இருக்கும் அப்பம்மா. ஆனா நாங்க தரத்தோட நடக்கிறதுக்கு அவேயும் கொஞ்சமாவது தரமான மனுசரா இருக்கோணும். இண்டைக்கு கூடத் தையல்நாயகிய அழிக்கச் சான்ஸ் கிடைக்காதா எண்டு நினைக்கிற மனுசரை என்னால மன்னிக்க முடியேல்ல. உங்கள மாதிரிப் பரந்த மனதோட நடக்கிற அளவுக்கு நான் நல்லவள் இல்ல அப்பம்மா.” மடியில் கிடந்த அவர் கொப்பியை எடுத்து மார்போடு அணைத்தபடி மனத்தால் அவரோடு பேசினாள்.
ஆனால் நிலன்? அவளின் ஆருயிர்க் கணவன். இதுவரையில் அவளுக்குத் தூணாக நின்றவன். அவள் செய்கையினால் அவன் நிச்சயம் பாதிக்கப்படுவான் என்பதும், அவன் கோபம் அவள் புறம் திரும்பும் என்பதும் அவளுக்குத் தெரியாமல் இல்லை.
இன்றும் மனத்திலிருந்து எதையும் பேசியிருக்க மாட்டான் என்று தெரியும். இதையெல்லாம் சொல்வது அவள் மூளை. ஆனால் மனம்?
அது அவனை உயிராக நேசிக்கிறதே. அவனை மட்டுமே தன் வாழ்வாக நினைக்கிறதே. அது காயப்பட்டுப் போயிற்று.
பலமுறை இந்தத் திருமணம் நடந்ததே பிசகு என்று இத்தனை நாள்களும் அவள்தான் சொல்லியிருக்கிறாள்.
இன்று அவனும் சொல்லிவிட்டான். தெரியாமல் அவளைக் கட்டிவிட்டானாம். அவளைக் கட்டியதால் அவன் பட்டவைகள் போதுமாம். இதழோரம் அழுகையில் நடுங்கிற்று.
சந்திரமதியும் அவளை அந்த வீட்டிலிருந்து அகற்றத்தான் முயன்றார். சக்திவேலர் அவளிடமே வெளியே போ என்றார். அதெல்லாம் அவளைப் பாதிக்கவேயில்லை.
ஆனால் அவன் வேறல்லவா அவளுக்கு.
இருண்டு கிடந்த வானத்தைப் பார்த்தாள். அவள் வாழ்க்கையும் இனி அப்படித்தான் போலும். இல்லை இல்லற வாழ்வுக்கு அவள் இலாயக்கு இல்லாதவள் போலும்.
இல்லாமல் 28 வயதுவரை காத்திருந்து அமைந்த மணவாழ்க்கை. உறுதியான அடித்தளம் அமையும் முன்னரே இந்தளவில் ஆட்டம் ஆடுமா என்ன?
இப்படி இருக்கையில்தான் நிலன் அழைத்தான். சில கணங்களுக்கு மேசையில் கிடந்த கைப்பேசியையே வெறித்துவிட்டு, ஒற்றை விரலால் அந்தப் பச்சையைத் தள்ளி அழைப்பை ஏற்று, மைக்கில் போட்டுவிட்டுக் கூடை நாற்காலியில் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.
“மூண்டு உயிர் ஆஸ்பத்திரில கிடந்து துடிக்குது. போதுமா உனக்கு? நெஞ்சில நெருப்பு எரிஞ்சுகொண்டு இருக்கு எண்டு சொல்லுவியே. இப்ப அணஞ்சிட்டா? தப்பித் தவறி இந்த மூண்டுபேர்ல ஒரு ஆள் இல்லாம போயிற்றாலும் அதுக்குப் பிறகு உன்னால சந்தோசமா இருக்கேலுமா? இல்ல அதுக்கு ஆசைப்பட்டுத்தான் இவ்வளவையும் செய்தியா? இதுக்குத்தானே வேண்டாம் வேண்டாம் எண்டு சொன்னான். கேட்டியா? தாங்கமாட்டாயடி. நீ அவேக்குக் குடுக்க நினைச்ச தண்டனை உனக்கு வாழ் நாள் தண்டனையா மாறிடக் கூடாது எண்டு கடவுளைக் கேளு வஞ்சி. நீ அதத் தாங்குவியோ தெரியா. சத்தியமா என்னால ஏலாது!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன்.