இன்னுமே பாலகுமாரன் அவசர சிகிச்சைப் பிரிவில்தான் வைக்கப்பட்டிருந்தார். ஆனால், சக்திவேலரைச் சாதாரண வார்ட்டுக்கு மாற்றியிருந்தார்கள்.
சந்திரமதிக்கு என்னென்னவோ டெஸ்ட்டுகளை எல்லாம் எடுத்துவிட்டு, அதன் பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தனர். பேசுவதற்கு கொஞ்சம் சிரமப்பட்டாலும் விழித்திருந்தார்.
அவரருகில் வந்து அமர்ந்த நிலன், “என்னம்மா இது?” என்றான் அவர் கையைப் பற்றிக்கொண்டு.
பதில் சொல்ல இயலாமல் கண்ணீர் உகுத்தார் அவர்.
“சரி சரி விடுங்கோ. உங்களுக்கு ஒண்டும் இல்ல. நாளைக்கே வீடடை போகலாம், சரியா.” அவர் தலையைத் தடவிச் சொன்னவனின் தேறுதல் அவரைச் சென்றடைந்ததுபோல் இல்லை.
என்னவோ இத்தனை நாள்களும் மனத்தினுள் அடைத்து வைத்தத்தைச் சொல்ல நினைத்தார் போலும். பேசக் கொஞ்சம் சிரமப்பட்டாலும் விடாமல் பேசினார்.
“30 வருசத்துக்கு மேல நானும் ஒருத்தியா இந்தக் குடும்பத்துக்க இருக்கிறன் தம்பி. உங்கட அத்தைக்கு வாய் கொஞ்சம் சரியில்ல, மற்றும்படி எங்கட குடும்பம் அருமையான குடும்பம் எண்டுற எண்ணம் எனக்கு எப்பவுமே இருந்திருக்கு. ஆனா இப்ப… கொஞ்ச நாளா… கேள்விப்படுறது எல்லாம்… நானும் எப்பவோ நடந்து முடிஞ்சதுகளை யோசிக்கக் கூடாது எண்டுதான் நினைப்பன். ஆனா ஆனா நேற்று வஞ்சி…” என்றவரின் கண்ணோரங்களில் கண்ணீர் வழிந்தது.
“அம்மா அதெல்லாம் ஒண்டும் இல்லை. நீங்க எதையும் யோசிக்காதேங்கோ…”
இல்லை என்பதுபோல் மறுப்பாகத் தலையை அசைத்தார் அவர். “எத்தின பேரின்ர சாபத்தையும் பாவத்தையும் சுமந்த குடும்பம் எண்டு இப்பதானப்பு தெரியுது. என்னை மாதிரி ஒரு பொம்பிளை தானேய்யா அந்த வாசவி. அந்த அம்மா தையல்நாயகி… எனக்கு அவாவைப் பெருசா நினைவு கூட இல்ல. ஆனா அவா எங்களால பட்ட துன்பங்கள்… நினைச்சா எனக்கு இப்பவும் நெஞ்சுக்க வலிக்குது. பாவம் வஞ்சி…”
அவர் மயங்கிச் சரிந்தது இன்றைய நாளின் வெளிப்பாடு இல்லை என்று அப்போதுதான் அவன் உணர்ந்தான். சமீப நாள்களில் நடந்த நிகழ்வுகள் அதிகமாக அவரைப் பாதித்திருக்கின்றன. வெளியில் சொல்லாவிட்டாலும் தனக்குள் நிறைய யோசித்திருக்கிறார் என்று அதன் பிறகும் அவர் சொன்னவற்றிலிருந்து புரிந்துகொண்டான்.
குடும்பத்தையே தன் உலகமாக எண்ணி வாழ்ந்த பெண்மணி. அந்தக் குடும்பமே பாவங்களின் மொத்த உருவம் என்கையில் அவரால் தாங்க இயலாமல் போயிற்று. அவனுக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருந்து மௌனமாகக் கண்ணீர் உகுத்த கீர்த்தனாவின் கையை ஆறுதலுக்குப் பற்றிக்கொண்டு அன்னையை மனம் திறந்து கதைக்க விட்டான். அதுவே அவர் பாரத்தைக் குறைத்துவிடுமே.
தாதி பெண் வந்து அளவுக்கதிகமாகக் கதைக்க வேண்டாம் என்று அவரிடம் சொன்னார். நிலனும் கொஞ்ச நேரம் கண்ணை மூடி உறங்கும்படி அவரிடம் சொல்லிவிட்டு கீர்த்தனாவை வெளியே அழைத்து வந்து, “சும்மா சும்மா அழுறேல்ல கீர்த்தனா. அம்மாக்கு ஒண்டும் இல்ல. சரியா?” என்று அவளையும் தேற்றினான்.
அப்போது அங்கே அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தாள் இளவஞ்சி.
‘இவளை ஆர் இந்த நேரத்தில இஞ்ச வரச் சொன்னது? அதுவும் தனியா.’ என்று மெல்லிய கோபம் மூண்டது நிலனிடத்தில். அவர்கள் வீட்டுக்கு வந்தபோது அணிந்திருந்த அதே சேலை. முகம் கழுவி, தலை மட்டும் இழுத்திருந்தாள்.
மற்றவர்கள் கவனிப்பார்களா தெரியாது, அழுத்திருக்கிறாள் என்று அவன் கண்டுகொண்டான். உள்ளே சுருக்கென்று வலித்தது. அவளையே பார்த்து நின்றான்.
அவளைக் கண்டுவிட்டு முகம் இறுகிப்போன பிரபாகரன், “இன்னும் என்னம்மா வேணும்? என்னத்துக்கு இஞ்ச வந்தனீங்க? மிச்சமா இருக்கிற எங்களையும் படுக்க வைக்கவா?” என்றார் சூடான குரலில்.
அவள் உதட்டோரம் இலேசாக வளைந்து மீள, “சாதாரணமா வந்து ஆஸ்பத்திரில படுத்ததுக்கே இவ்வளவு கோவமா அங்கிள்?” என்றாள் ஒரு மாதிரிக் குரலில்.
அவருக்கு முகம் மாறிப் போயிற்று.
“என்னைக் கண்டா உங்கட அப்பாக்கு இன்னுமே சீரியஸ் ஆகலாம். இப்ப வரைக்கும் இல்லாத நோய்கள் கூட அவருக்கு வாறதுக்கு சான்சஸ் இருக்கு. அதால உங்கட மச்சானாரையும் வைஃபையும் ஒருக்கா பாத்துக்கொண்டு வாறன்.” என்றவள் கீர்த்தனாவிடம் அவள் அன்னை எந்த அறையில் இருக்கிறார் என்று கேட்டுக்கொண்டு அங்கு நடந்தாள்.
“தம்பி! திரும்பவும் தேவை இல்லாமக் கதைக்கப் போறா. என்ன எண்டு பார்.” என்றார் பிரபாகரன் நிலனிடம்.
சுள்ளென்று ஏறியது அவனுக்கு. “என்னவோ அவள் இதே வேலையாவே இருக்கிற மாதிரிக் கதைக்காதீங்க அப்பா. இண்டைக்கு அவள் எல்லாருக்கும் முன்னால எல்லாத்தையும் போட்டு உடைச்சாலும் நடந்த எதுக்கும் அவள் காரணமும் இல்ல, எந்தப் பிள்ளையையும் அவள் செய்யவும் இல்ல. செய்தது முழுக்க உங்கட அப்பாவம் மச்சானாரும். அதுக்கான பலனை அவே இண்டைக்கு அனுபவிக்கினம். அத விளங்கிக்கொள்ளாம சும்மா சும்மா அவளைக் கதைக்காதீங்க.” எரிச்சலை மறைக்காத குரலில் சொல்லிவிட்டு அவனும் அன்னையின் அறைக்கு நடக்க முகம் கறுத்து போனது பிரபாகரனுக்கு.
அவர் ஒன்றும் நியாயம் இல்லாமல் நடக்கும் மனிதர் இல்லைதான். நடந்த களேபரங்கள் கோபத்தை தந்திருந்தன. அதுவே மகன் சுடுவதுபோல் சொல்லிவிட்டுப் போகவும் ஒரு மாதிரி ஆகிப்போயிற்று.
அங்கே இன்னுமே சந்திரமதி விழித்துத்தான் இருந்தார். இவளைக் கண்டதும் மறுபடியும் அவர் விழிகள் கலங்கின.
வேக அடி வைத்துச் சென்று அவர் கரத்தைப் பற்றிக்கொண்டு, சற்று முன்னர் நிலன் அமர்ந்திருந்த அதே நாற்காலியில் தானும் அமர்ந்துகொண்டு, “என்ன அன்ட்ரி இது? எவ்வளவு ஸ்ட்ரோங்கான ஆள் நீங்க. நீங்க வந்து இப்பிடிப் படுக்கலாமா சொல்லுங்க.” என்று இலகு குரலில் வினவினாள் அவள்.
அந்த நேரத்திலும் அன்று மாலை மாமி என்று அழைத்தவள் இப்போது ‘அன்ட்ரி’என்று சொல்வது அவர் கருத்தில் பதிந்தாலும், “உங்கள் அளவுக்கெல்லாம் எனக்குத் தைரியம் இல்லை அம்மாச்சி.” என்றார் கலங்கிய குரலில்.
“நானெல்லாம் தைரியமா இருந்தாகோணும். இல்லை அப்பிடி இருக்கிற மாதிரிக் காட்டிக்கொள்ளவாவது வேணும். இல்லையா வந்தவன் நிண்டவன் எல்லாம் போட்டு அடிச்சிட்டுப் போயிடுவான். உங்களுக்கு அப்பிடியா? என்ன நடந்தாலும் விட்டுக் குடுக்காம, மலை மாதிரி நிண்டு தன்ர குடும்பத்தத் தாங்கிற மகன இருக்கிறார். நீங்களே இப்பிடி உடஞ்சா, நான் எல்லாம் என்ன செய்றது? நான் விழுந்தா தூக்கிறதுக்கு ஆளே இல்ல.” சின்ன சிரிப்புடன் அவள் வினவ, நிலனின் நெஞ்சில் சரக்கென்று கத்தி ஒன்று ஆழமாய்ப் பாய்ந்தது. துடித்துப்போய் அவளைப் பார்த்தான்.
அவள் அங்கே சாதாரண முகத்தோடு இன்னும் என்னவோ சந்திரமதியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“உங்களுக்கு என்னைப் பிடிக்கும் எல்லா? தையல்நாயகின்ர நிர்வாகியா, தைரியமா நிமிந்து நிக்கிறா எண்டு எப்பவும் என்னை உயர்வா நினைப்பீங்கதானே? நான் அத உங்கட முகத்தில பாத்திருக்கிறன்.”
கண்ணீரும் புன்னகையுமாக ஆம் என்று தலையை அசைத்தார் சந்திரமதி.
“அந்த உயரத்துக்குப் பின்னால இருக்கிறது முழுக்க வலி, வேதனை, துரோகம் மட்டும்தான் அன்ட்ரி. அதையெல்லாம் தாங்கி, தாண்டிப் போகேக்கைதான் அந்த உயரம் எங்களுக்குக் கிடைக்கும். ஆனா என்ன, வெளில இருந்து பாக்கிறவேக்கு அந்த உயரம் மட்டும்தான் தெரியும். இவ்வளவு காலமும் தூர இருந்து என்னைப் பாத்துப் பிரமிச்ச நீங்க, பக்கத்தில பாத்ததும் பயந்திட்டீங்க. இதுதான் நான். இப்பிடித்தான் என்ர வாழ்க்கை. அதையெல்லாம் நீங்க யோசிக்க வேண்டாம். எப்பவும் போலச் சிரிச்ச முகமா, மங்களத்தோட, எல்லாரையும் அனுசரிச்சுப் போற அந்த அன்பான மனுசியா உங்களை நான் பாக்கோணும், சரியா?” என்றாள் கண்களில் கனிவைத் தேக்கி.