அழகென்ற சொல்லுக்கு அவளே 33 – 1

ஒரு நொடி அசையக்கூட முடியாதவனாக நின்றுவிட்டான் நிலன். மனைவியின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் நெஞ்சில் சூட்டுக்கோலினால் கோடிழுத்ததைப் போன்று மிக ஆழமாகவே பதம் பாத்திருந்தன. அதுவும் கடைசியாக அவள் சொன்னது?

அந்த வீட்டின் பொறுப்பு அவன் கையில். அவள் சொன்னாள் என்பதற்காகக் குணாளன் வீட்டிலேயே இருந்துகொண்ட மிதுனைப் போன்று அவனால் பொறுப்பற்று எதிலிருந்தும் விலகி நிற்க முடியாது.

மிதுனுக்கும் சேர்த்து வீட்டின் பொறுப்பைக் கவனிக்கும் இடத்தில் இருப்பவன். இன்னுமே சொல்லப்போனால் அவன் இருக்கிறான் என்கிற நம்பிக்கையில்தான் அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு மிதுன் அங்கே இருந்திருப்பான்.

அப்படி இருக்கையில் அன்று மாலையில் சூழ்நிலை அவன் கட்டுப்பாட்டை மீறிப் போயிற்று. அதைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டிய கட்டாயம் அவனுக்கு. அதனால்தான் எரியும் அடுப்பின் தணலை அணைக்க வேண்டுமானால் எரியும் கட்டையைப் பிடுங்க வேண்டும் என்று சொல்வதைப் போன்று, சூழ்நிலையைச் சூடாக்கியவளை, இன்னுமே சூடாக்கக் கூடியவளை அங்கிருந்து அகற்றும் நோக்குடன் அவளைப் போகச் சொன்னான்.

இதெல்லாம் வேண்டாம், நடந்து முடிந்தவைகள் அனைத்தும் பெரும் வேதனைக்குரியவைதான் என்றாலும் இறந்தகாலத்திற்காக அழுது, எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் நரகமாக்க வேண்டாம் என்று அவன் சொன்ன எந்தச் சமாதானங்களையும் கேளாமல், அதுவும் அவர்களுக்குள் பிரச்னையை உருவாக்க வேண்டும் என்கிற நோக்குடனேயே வந்து, அவள் நடந்துகொண்ட விதம் அவனைக் கோபப்படுத்தியது உண்மை.

அதில் ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டதும் உண்மை. அதற்கென்று என்ன சொல்லிவிட்டாள்? முற்றிலுமாக விடுதலை தருகிறாளாமே. எப்போதுமே இப்படி எதையாவது சொல்லித்தானே அவனை வேரோடு சாய்க்கிறாள்.

அதற்கா படாத பாடெல்லாம் பட்டு அவளை மணந்தான்? அதற்கா அவளோடு ஆசையாசையாக வாழ்ந்தான்? ஆனால், இப்போது யோசிக்கையில் அதையெல்லாம் செய்தது அவன்தானே என்று அவன் உள்ளம் விரக்தியோடு எண்ணிக்கொண்டது.

சட்டென்று தன்னை அழுத்தும் இந்த விடயங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அவளிடம் விரைந்தான். அதற்குள் காரை நெருங்கியிருந்தாள் அவள். வேகமாகச் சென்று அவள் கையில் இருந்த கார் திறப்பைக் கைப்பற்றினான்.

திகைத்துத் திரும்பிப் பார்த்தவளிடம், “அந்தப் பக்கம் போய் ஏறு!” என்றான்.

“வந்த எனக்குப் போகத் தெரியும்!” என்றாள் அவள் இறுக்கமான குரலில்.

“இந்த நேரத்தில நீ வந்ததே பிழை. இதுல போகவும் தெரியுமா உனக்கு?” என்று சீறினான் அவன்.

அவள் உதட்டோரம் இலேசாக வளைந்தது. “துணையா நிக்க வேண்டிய நேரத்தில நிக்காத உங்கட துணை எனக்கு இப்ப மட்டுமில்ல, இனி எப்பவும் தேவையே இல்ல நிலன்.” என்றாள் உறுதியான குரலில்.

திரும்பவும் அவனை வேண்டாம் என்கிறாள். அப்படியே நின்றுவிட்டான் நிலன். அவன் விழிகள் எங்கும் அசையாமல் அவள் முகத்திலேயே நிலைத்தன.

அந்த இருளில், வைத்தியசாலையிலிருந்து கசிந்த வெளிச்சத்திலிருந்து அவன் விழிகளில் தென்பட்ட ஏதோ ஒரு பாவம், அவளை அடித்துச் சாய்க்க முனைந்தது. சட்டென்று அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி, “திறப்பைத் தாங்க.” என்றாள்.

அவன் கொடுக்கவில்லை. “போய் ஏறு!” என்றுவிட்டு ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

மாட்டேன் என்று சொல்வதுபோல் பிடிவாதமாக நின்ற இடத்திலேயே நின்றாள். அவனும் முடிவை மாற்றுவதாக இல்லை. அவளுக்காகக் காரிலேயே காத்திருந்தான். இளவஞ்சிக்கு மெல்லிய கோபம் உண்டாயிற்று. அது கொடுத்த சினத்துடன் சென்று ஏறி அமர்ந்துகொண்டு கதவை அடித்துச் சாற்றினாள்.

பயணம் முழுக்க அமைதி. முதலில் அவன் பிடிவாதம் கொடுத்த சினத்தில் விறைப்புடன்தான் அமர்ந்திருந்தாள். ஆனால், நேரமாக நேரமாக அவளினுள் ஒரு தவிப்பு. ஏதாவது கதைப்பான், கோபப்படுவான் என்று எதிர்பார்த்தாள். அவள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை.

ஒருவித ஏமாற்றம் மனத்தைச் சூழ்ந்தது. இருக்கையில் தலையைச் சாய்த்து, வேகமாக நகரும் அந்த நகரத்தையே வெறித்திருந்தாள்.

அவள் உள்ளத்தின் பரிதவிப்பு அதிகரித்துப் போயிற்றே தவிர வேறு மாற்றமில்லை. அவன் அண்மையும் அமைதியும் அவளின் கட்டுப்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைக்க ஆரம்பித்தன. அடி வயிற்றிலிருந்து கேவல் ஒன்று பெரிதாகப் புறப்பட்டு வந்தது. கண்ணோரங்கள் சூடான கண்ணீரால் நிரம்ப ஆயத்தமாகின.

இல்லை, நான் அழக் கூடாது, இனி நான் தனிதான் என்று எத்தனை சொன்னாலும் அவள் உணர்வுகள் அவன்பால் பொங்கி எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.
இதற்குள் அவள் வீடு வந்திருந்தது. அவள் இறங்க அவனும் கூட வந்தான். ஏனோ என்று உள்ளே ஓடினாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை அவள்.

அங்கே அந்த நேரத்திலும் உறங்கப் போகாமல் கலக்கத்துடன் அமர்ந்திருந்தார் குணாளன். “என்ன தம்பி, ஏதும் பிரச்சனையா?” மகளோடு வந்த மருமகனையும், இருவரினதும் சரியில்லாத முகங்களையும் கண்டுவிட்டுக் கலக்கத்துடன் வினவினார்.

அவளையும் வைத்துக்கொண்டு வேறு எதைப் பற்றியும் பேச விரும்பாமல், வீட்டினரின் சரியில்லாமல் போன உடல் நிலையைக் குறித்து மட்டும் பகிர்ந்துகொண்டான் நிலன்.

பதறிப்போன குணாளன், “எங்கட மகளாலயா தம்பி?” என்றார் அவசரமாக.

அதில் தகப்பனை முறைத்துவிட்டு விடுவிடுவென்று மாடியேறித் தன்னறைக்கு சென்றாள் இளவஞ்சி. அதன் பிறகுதான் நடந்தவற்றைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டான் நிலன்.

குணாளனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நிச்சயம் அவர் இதை விரும்பவில்லை. எல்லாவற்றையும் விடப் பெண்ணின் வாழ்க்கை முக்கியமாயிற்றே. “மகளுக்காக நான் மன்னிப்பு…” என்றவரை இடையிட்டு, “அவள் ஒரு பிழையும் செய்யேல்ல மாமா.” என்றான் அவன்.

அப்போதும் அவர் சமாதானமாகாமல் பார்த்தார்.

“சீரியஸா ஒண்டும் இல்லை மாமா. எல்லாருக்கும் சுகமாகிடும். அதைவிட இப்பிடி நடந்ததும் ஒரு வகைல நல்லதுதான். அவளின்ர மனமும் கொஞ்சம் ஆறுமே.” என்றவனுக்கு நானும் இடையில் போய்விடுவேனோ என்று பயமாக இருப்பதாக அவள் சொன்னது நினைவில் வந்து தொண்டையை இறுக்கிப் பிடித்தது.

மேலே வந்த இளவஞ்சி எதைப் பற்றியும் யோசிக்க இயலாதவளாகக் குளியலறைக்குள் நுழைந்துகொண்டாள். தண்ணீரின் அடியில் நின்றவள் உள்ளம் இன்னுமே நிலைகொள்ளாமல் தவித்தது. நிலன் கோபப்பட்டிருந்தாலோ, அவளோடு சண்டைக்கு வந்திருந்தாலோ கூட இந்தளவில் பாதித்திராது.

அவனுடைய இந்த அமைதியும் இறுக்கமும்தான் அவளை மீறி அவளைக் கவலையில் ஆழ்த்தின. கூடவே ஒரு வகைப் பதற்றமும்.

அவள் குளித்து முடித்து அன்றுபோலவே பாத் ரோப் அணிந்து, தலை முடியைத் துவாயினால் சுற்றிக் கட்டிக்கொண்டு வெளியே வந்தபோது, அவள் கட்டிலில் குறுக்காக மல்லாந்து படுத்திருந்தான் நிலன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock