கொஞ்சம் திகைத்துப்போனாள். அவள் மொத்தமாக விடுதலை தருகிறேன் என்று சொன்னபிறகும் அறை வரை வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. கீழே தந்தையோடு பேசிவிட்டுப் புறப்பட்டுவிடுவான் என்றுதான் நினைத்திருந்தாள்.
கிட்டத்தட்ட ஒரு மாதம். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அன்று நெருங்கிவிட்டு நிறுத்திய நாளுக்குப் பிறகு இன்றுதான் அவள் அறையில் அவனைக் காண்கிறாள்.
கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. கூடவே அன்று தான் இதேபோல் வந்ததும், அவளை அவன் கொஞ்சிக் கொண்டாடித் தீர்த்த நிகழ்வும் நினைவில் வந்து தொண்டையை அடைக்க வைத்தன.
உடை மாற்ற வேண்டும், வெளியே போ என்று அவனிடம் சொல்வதே அர்த்தமற்றதாகப் பட்டது. அதைவிட, கால்கள் இரண்டும் தரையில் இருக்க, மல்லாந்து கிடந்தவன் ஒற்றைக் கையைக் கண்கள் மேல் போட்டிருந்தான்.
பேசாமல் அவனுக்கு முதுகு காட்டி நின்று உடையை மாற்றினாள். உள்ளே ஒரு படபடப்பு. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அவன் அசையக்கூட இல்லை.
அவள் உடை மாற்றி முடிப்பதற்காகவே காத்திருந்தது போன்று, “அக்கா!” என்று வெளியில் நின்று அழைத்தான் சுதாகர். நிலனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்க் கதவைத் திறந்தாள்.
“அத்தான் கொண்டு வரச் சொன்னவர்.” என்று உணவுத் தட்டு ஒன்றை நீட்டிக்கொண்டிருந்தான் அவன்.
அதை வாங்கிக்கொண்டு கதவை அடைத்தாள். “சாப்பாடு வந்திட்டுது.” என்றாள் அவனுக்காகத்தான் சொன்னானோ என்றெண்ணி.
“உனக்குத்தான் சாப்பிடு.” என்றான் அவன் அசையாமல்.
கண்களை மூடி அசையாமல் படுத்துக் கிடந்தவனிலேயே ஒரு கணம் பார்வை நிலைத்துவிட, “உங்களுக்கு?” என்றாள் அவள்
“நான் சாப்பிட்டன்.”
“இல்ல, நீங்களும் வாங்க.” தயக்கம் இருந்தாலும் அழைத்தாள். எப்படி அப்படி அவனுக்குக் கொடுக்காமல் உண்பாள்?
“நீ சாப்பிடு எண்டு சொன்னனான் வஞ்சி!” என்றான் அவன் சரக்கென்று திரும்பி.
அவள் பயந்துபோனாள். அவன் விழிகளில் அப்படி ஒரு கோபம்.
அவள் அவனையே பார்த்தபடி நிற்க, “உனக்குத்தான் நான் தேவையே இல்லையே. பிறகு என்னத்துக்கு என்னைப் பற்றி யோசிக்கிறாய். கெதியா சாப்பிட்டு வா. உன்னோட கதைச்சிட்டு நான் திரும்ப ஆஸ்பத்திரிக்கு போகோணும்.” என்றான்.
அவன் எப்படியும் வரப்போவதில்லை என்று தெரிந்துபோயிற்று. அவளுக்கும் சாப்பிட மனமே இல்லை. ஆனால், அவள் உண்ணாமல் இருக்க முடியாது. அவனும் அவள் உண்டு முடிக்காமல் அசையப்போவதில்லை என்பதில் சாப்பிட்டாள். முழுமையாக முடிக்க முடியவில்லை. ஓரளவிற்கு சாப்பிட்டுவிட்டுப் போய்க் கையைக் கழுவிக்கொண்டு வந்தாள்.
அவன் எழுந்து அமர்ந்தான். அப்போதும் அவளைப் பார்க்கவில்லை. தொடையில் முழங்கையை ஊன்றி, அதே கையால் தலையைப் பற்றியிருந்தான். என்னவோ தாங்க முடியாத ஏதோ ஒரு பாரத்தைச் சுமக்கிறவன் போன்று அவன் அமர்ந்திருந்த அந்தக் கோலத்தைக் காண்கையில் அவளுக்குள் முணுக்கென்று ஒரு வலி.
இப்படி இருக்க மாட்டானே என்று அவள் பரிதவிக்க ஆரம்பிக்கையிலேயே அவன் நிமிர்ந்தான். அந்த விழிகளில் எந்த உணர்வுமே இல்லை.
“நேற்றைய பிரச்சினை எதேற்சையா நடக்கேல்ல. பிளான் பண்ணியே வந்து, நீ நினைச்ச மாதிரியே வீட்டுக்குள்ள பெரிய சண்டையை உருவாக்கிப்போட்டாய். அதுக்கு முதல் இருந்தே வீடு நரகமாத்தான் இருந்தது. நீ சொன்ன மாதிரி இதுக்கெல்லாம் காரணம் என்ர வீட்டு ஆக்கள்தான் எண்டாலும் என்னால பாத்துக்கொண்டு இருக்க ஏலாது வஞ்சி.” என்றுவிட்டு நெடிய மூச்சு ஒன்றை இழுத்துவிட்டான்.
இந்த இடம்தான் அவனும் அவளும் முட்டிக்கொள்ளும் இடம். இப்போதும் அவன் அதையே சொல்ல, ஒருவித வலியுடன் அவனையே நோக்கினாள் அவள்.
“இதையே கொஞ்சம் மாத்தி யோசி. உன்ர வீட்டு ஆக்கள் எனக்கோ என்ர வீட்டுக்கோ ஏதோ ஒரு பிழை செய்து, அந்தக் கோவத்துல நான் அவேட்ட கோபப்பட்டாலோ, பழி வாங்கிறான் எண்டு வெளிக்கிட்டாலோ நான் செய்றதுதான் சரி எண்டு நீ ஒதுங்கி இருப்பியா, இல்ல வேற வழி இல்லாம அவேக்காக என்னட்ட வந்து கதைப்பியா எண்டு யோசி.” என்றவனை ஒருவித அதிர்வுடன் பார்த்தாள் அவள்.
நிச்சயம் அவளால் அப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியாதுதான்.
“உன்ர கோவத்துல ஒரு நியாயம் இருக்கிற மாதிரி, நான் என்ர குடும்பத்துக்காக நிண்டதுக்கான காரணம் இது. ஆனா அதையெல்லாம் மனதுக்கையே வச்சிருந்தா உனக்கு ஏதும் நடந்திடுமோ எண்டு நீ பயப்பிடுற அளவுக்கு, அந்தப் பிரச்சினை உன்னைப் போட்டு வாட்டியிருக்கு எண்டுறதும் எனக்குத் தெரியாமத்தான் போச்சு. அந்தளவுக்கு நான் யோசிக்கேல்லத்தான்.” என்றவனுக்கு இப்போதும் அந்தளவில் தான் யோசித்திருந்தால் கூட, நடப்பதெல்லாம் நடக்கட்டும் என்று பேசாமல் இருந்திருக்க முடியும் என்று தோன்றவில்லை.
“எப்ப எனக்கும் உனக்கும் சண்டை வந்தாலும் கலியாணம் நடந்தது பிழை, நானும் நீயும் சேந்தது பெரிய பிசகு எண்டுதான் சொல்லுவாய். அது எப்பவுமே என்னை ஆழமா காயப்படுத்தும். அதாலயோ என்னவோ டக்கெண்டு என்ர வாயிலயும் அது வந்திட்டுது. பிழைதான். கோவத்துல எண்டாலும் அப்பிடி எல்லாம் நான் கதைச்சிருக்கக் கூடாது. ஆனா அதுக்காக இண்டைக்கு நீ கதைச்ச பார்…” என்றுவிட்டு அவளைப் பார்த்து அவன் வெறுமையாகச் சிரித்த சிரிப்பில் பரிதவித்துப்போனாள் இளவஞ்சி.
“உன்ர குடும்பத்துக்கு நீ முக்கியம். அப்ப எனக்கு? என்னைப் பற்றி நீ யோசிக்கேல்லையா? இல்ல, கிடைக்கிற வரைக்கும் அனுபவிச்சிட்டுப் போவம் எண்டு நினைச்சு உன்னைக் கட்டினனான் எண்டு நினைச்சியா?” என்றதும் அதிர்ந்து பார்த்தாள் அவள்.
அப்படி ஏதும் சொல்வாளானால் அவள் வாய் மொத்தமும் அவிந்துவிடும்.
“நீ என்னோட சந்தோசமா இல்லையோ, எனக்கும் உனக்குமான வாழ்க்கை உனக்குப் பிடிக்கேல்லையோ, நான்தான் ஒவ்வொரு முறையும் உன்ன வலுக்கட்டாயமா அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டு போறேனோ எண்டு இந்தக் கொஞ்ச நாளா எனக்குள்ள நிறைய கேள்விகள்…” என்றவன் எழுந்து வந்து அவள் முன்னே நின்றான்.
அதிர்ந்து விரிந்த விழிகளோடு அவள் அவனையே பார்த்து நிற்க, “உனக்கு உண்மையிலேயே என்னோட வாழுற இந்த வாழ்க்கை பிடிக்கேல்லையா எண்டுற கேள்விக்கு எனக்குப் பதில் வேணும் வஞ்சி. எவ்வளவு பிரச்சினை வந்தாலும், கோவத்துல உன்னட்டகே கத்தினாலும் பிரிவைப் பற்றி நான் யோசிச்சதே இல்லை. ஆனா நீ.” என்றவன் நிறுத்திவிட்டு, “உனக்கும் எனக்குமான முடிச்சைப் போட்டவன் நான். அதால எனக்கும் உனக்குமான விடுதலைக்கான வேலையப் பாக்கிற பொறுப்பை உன்னட்டையே தாறன். எந்த இடத்திலயும் வந்து நான் தடுக்க மாட்டன். நீ கேக்கிறதை நான் தருவன்.” என்றான் அவள் கண்களையே பார்த்து.
இன்னுமே அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் அவள்.
“ஒரு அமைதியான நிம்மதியான வாழ்க்கையக் கேட்டாய். அத என்னால தரேலாம போச்சு. அந்த விசயத்தில நான் தோத்திட்டன் வஞ்சி. இதுலயாவது நீ ஆசைப்பட்டதைத் தரப்பாக்கிறன்.”
நொடியில் அவள் முகம் மொத்தமாகக் கலங்கிச் சிவந்து போயிற்று.
“உன்ர காரைக் கொண்டுபோறன். மிதுன் திருப்பிக் கொண்டுவந்து தருவான்.” என்றுவிட்டு வாசல்வரை நடந்தவன் நின்று, “எனக்கும் உனக்குமிடையில என்ன நடந்தாலும் சரி. பிறக்கப்போற பிள்ளை ரெண்டு பேருக்கும் சொந்தமானது. அத மட்டும் மறந்திடாத.” என்றுவிட்டு போகவும் ஒரு நொடி தடுமாறி, நாற்காலியைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டாள் அவள்.