அடுத்த நாள் காலை முதல் வேலையாக மகப்பேறு மருத்துவரிடம் இளவஞ்சியைக் காட்டுவதற்கு நேரம் குறித்தான. அப்படியே நேரத்தையும் எழுதி, “வெளிக்கிட்டு நில்லு. ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வருவம்.” என்று குறுந்தகவல் அனுப்பிவிட்டான்.
பார்த்தவளுக்குச் சட்டென்று விழிகள் பனித்துப்போயின. குழந்தை என்று தெரிந்தும் ஒன்றும் சொல்லவில்லையே, தன் சந்தோசத்தைக் கூடப் பகிரவில்லையே என்று இரவிரவாகப் பரிதவித்துக்கொண்டிருந்தவளாயிற்றே.
வீம்புக்கேனும் மறுக்க முடியவில்லை. நீண்ட பயணம் செய்திருக்கிறாள். கடந்த நாள்கள் முழுக்க உணர்வுகளின் கொந்தளிப்புக்குள் ஆட்பட்டு, மன அழுத்தத்தில் இருந்தாள். இன்னுமே அப்படித்தான் இருக்கிறாள்.
முதலில் குழந்தைதானா என்கிற கேள்விக்குப் பதில் வேண்டும். உறுதியாகத் தெரியாமல் சந்தோசப்படவும் முடியவில்லை. சந்தோசப்படாமல் இருக்கவும் முடியவில்லை.
அன்று அவள் தையல்நாயகிக்குப் போகவும் இல்லை. ஏற்கனவே ஒன்றரை மாதத்திற்கான ஏற்பாடு செய்துவிட்டுப் போனதால் அவசரமாகச் செல்லும் அவசியமும் இல்லை. அவன் சொன்ன நேரத்திற்கு அவள் புறப்பட்டுக் கீழே வந்தபோது அவன் அங்கே வந்து காத்திருந்தான்.
காரணம் புரியாதபோதும் அப்படி அவளைத் தேடி அவனே வந்ததில் குணாளனுக்கும் ஜெயந்திக்கும் மிகுந்த நிம்மதி. நன்றாகவே மருமகனைக் கவனித்துக்கொண்டார்.
அவள் காரில்தான் வந்திருந்தான். அதிலேயே மகப்பேறு மருத்துவரைப் பார்க்கச் சென்றார்கள். இருவர் மனத்திலும் படபடப்பும் பதற்றமும். மருத்துவர் சொன்ன இரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர்ப் பரிசோதனையை மேற்கொள்ளச் செல்வதற்கு முதல் திரும்பிக் கணவனைப் பார்த்தாள் இளவஞ்சி.
அவள் விழிகளில் மெல்லிய கலக்கம். அவள் மேற்கொண்ட பயணத்தினால் அவனுக்குள்ளும் படபடப்புத்தான். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல்அவள் கரம் பற்றி அழுத்திக்கொடுத்துவிட்டு, “பயப்பிடாம போயிட்டு வா. முடிவு நல்லதாத்தான் வரும். இல்லாட்டியும் காலம் இருக்குதானே எங்களுக்கு.” என்றான் தன் பதற்றத்தை மறைத்துக்கொண்டு.
நேற்றிரவு வேறு சொன்னானே என்று பார்த்தாள் அவள். ஒரு கணம் அவள் பார்வையின் பொருள் புரியாமல் புருவங்களைச் சுருக்கியவன் புரிந்ததும், “பேசாம போடி!” என்றான் சட்டென்று உண்டான கடுப்பும் சிரிப்புமாக.
ஆரம்பித்து வைத்ததே அவள்தான். இதில் பார்வை வேறு பார்ப்பாளா?
நொடியில் இருவர் மனநிலையுமே மாறிப்போயிற்று. இருந்த அத்தனை பிரச்சனைகளையும் தாண்டிக்கொண்டு இருவர் மனத்திலும் இதம் படர்ந்தது. அவள் உள்ளே செல்ல, இவன் வெளியே காத்திருந்தான்.
பரிசோதனைகளின் பெறுபேறு கிடைக்கப் பெற்று, உள்ளே அழைத்த மருத்துவர் குழந்தைதான் என்று உறுதி செய்தபோது என்னவோ காடு மலையெல்லாம் தாண்டி வந்த ஆசுவாசம் இருவரிடமும். இலேசாகப் படர்ந்துவிட்ட கண்ணோரக் கசிவுடன் தாம் அன்னை தந்தையாகப் போகிற மகிழ்வை மௌனமாகவே பரிமாறிக்கொண்டனர்.
ஸ்கான் செய்து, அவள் கருவறையில் குழந்தை குடிகொண்டிருக்கும் இடத்தை மருத்துவர் காட்டியபோது இருவருக்குமே புல்லரித்துப்போயிற்று. வைத்தியருக்கு நன்றி சொல்லி விடைபெற்று வந்தனர்.
பயணம் முழுக்க மௌனம்தான். ஆனால், அவளோடு கூடவே அவள் அறை வரைக்கும் வந்தவன், “நான் இன்னும் உனக்கு மனுசன்தானே?” என்றான் அவள் முன்னே வந்து நின்று.
இருந்த பூரிப்பு புல்லரிப்பு எல்லாம் மறைய, என்ன விசர் தனமாகக் கேட்கிறான் என்று சினத்துடன் பார்த்தாள் அவள்.
“இல்ல இதுக்குத்தான்.” என்றவன் அவள் முகத்தைத் தன் இரு கைகளிலும் ஏந்தி, முகம் முழுக்க முத்தமிட்டான்.
பயணம் முழுவதிலும் அமைதியாக வந்தவன் அறைக்குள் வந்ததும் இப்படிச் செய்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. முகம் முழுக்க அவன் பதித்த ஈர முத்தங்களில் நிலைகுலைந்துபோனவள், “நிலன்!” என்றாள் கண்ணீருடன்.
அவனும் மொத்தமாகத் தன் கட்டுப்பாட்டு உடைந்திருந்தான். “நிலனுக்கு என்ன வஞ்சி? விடுதலை தாறன் எண்டு நீ சிம்பிளா சொல்லுற அளவுக்குத்தானா நான் உனக்கு? அவ்வளவு ஈஸியா உன்னால என்னைத் தூக்கி எறிய முடியுதா? என்ன நடந்தாலும் அதத் தாண்டி என்னோட வாழோணும் எண்டுற ஆசை இல்லவே இல்லையா உனக்கு?” கோபமும் ஆதங்கமுமான அவன் கேள்விகளில் இன்னுமே நிலைகுலைந்துபோனாள் அவள். கண்ணீர் வேறு பெருகி வழிந்தது.
அதைத் தன் உதடுகளாலேயே துடைத்து எடுத்தவன், “உனக்கு நான் வேண்டாமா வஞ்சி? நான் இல்லாம நீ வாழ்ந்திடுவியா? என்னால ஏலாம இருக்கேக்க. எனக்கு நான் சாகிர வரைக்கும் நீ வேணும். உன்னோட திகட்ட திகட்ட வாழோணும். எங்கள சுத்தி என்ன பிரச்சினை வந்தாலும் அத எனக்கும் உனக்கும் நடுவில வர விடாம நானும் நீயும் வாழோணும். நான் கேட்ட அந்த நாலு பிள்ள, நீ கேட்ட அந்த நிம்மதியான வாழ்க்கை எதுவுமே வேணாமா உனக்கு?” என்று ஆத்திரமா அழுகையா என்று பிரித்தறிய முடியாக் குரலில் படபடத்தான்.
அப்போதும் அவள் பதில் எதுவும் சொல்லாமல் கண்ணீர் உகுக்கவும்தான் நேற்றுச் சொன்னதற்கு நேர்மாறாக நடக்கிறோம் என்று அவனுக்குப் புரிந்தது. புரிந்த கணம் சட்டென்று அவளை விட்டு விலகினான் அவன்.
“இல்ல அது குழந்தை எண்டதும்…” என்றவன் நிறுத்தி ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுத் தன்னை நிதானப்படுத்திக்கொள்ள முயன்றான்.
முடியவில்லை போலும். வேகமாகச் சென்று பால்கனியில் நின்றுகொண்டான். ஒருவித அதிர்வும் இதயத்தின் அளவுக்கதிகமான துடிப்புமாக அவனையே பார்த்து நின்றாள் இளவஞ்சி.
பால்கனி சுவரில் கைகள் இரண்டையும் ஊன்றி, தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நின்றான். எவ்வளவு நேரம் கடந்ததோ. திரும்பி வந்தவனின் முகம் மொத்தமாக அவன் உணர்வுகளை மறைத்துக்கொண்டிருந்தது.
“இனியும் நேரம் கெட்ட நேரத்தில திரியாத. எல்லா வேலையையும் நீயே பாக்கோணும் எண்டும் நினைக்காத. சுவாதியாலயும் இனி உனக்கு ஹெல்ப் பண்ணேலாது. நானே இன்னும் ரெண்டு பேர பாத்து எடுத்து அனுப்பி வைக்கிறன். அவேக்கு வேலையப் பழக்கிப்போட்டு நீ கொஞ்சம் ஃபிரீயாகு.” என்றுவிட்டுப் புறப்பட்டிருந்தான் அவன்.
அவள் எங்கே அதையெல்லாம் மூளைக்கு எடுத்தாள். சற்றுமுன்னர் தன் கட்டுப்பாட்டை இழந்து அவன் குமுறியதிலேயே அவள் உள்ளம் சிக்குப்பட்டு நின்றது.