“கீர்த்திக்கு ஏன்?” தட்டுத்தடுமாறிக் கேட்டார் சந்திரமதி.
“நானும் கேட்டனான். எனக்குத் தந்திட்டு அவளுக்கு ஒண்டும் குடுக்காம விட்டா அவள் கவலைப்படுவாளாம் எண்டு சொன்னவா. நாலாவது பங்கு சுதாகருக்காம்.”
சுருக்கமாகச் சொல்லப்போனால் அவள் உழைக்க இவர்கள் அனுபவிக்கப்போகிறார்கள். என் மனைவி எப்படியானவள் என்று இப்போதாவது புரிகிறதா என்று அங்கிருந்த எல்லோரையும் பார்த்தான் நிலன். பிரபாகரனும் அன்று வைத்தியசாலையில் வைத்து அவளிடம் பேசியதைக் குறித்து உள்ளே குன்றிப்போனார்.
அவன் உள்ளம் அந்த நொடியே அவளைப் பார்த்துவிடத் துடித்தது. இத்தனை நல்ல மனத்தை வைத்துக்கொண்டு ஏனடி அடுத்தவரின் சாபங்களை வாங்க நிற்கிறாய் என்று அவளை உலுக்க வேண்டும் போலிருந்தது.
தன்னைச் சமாளிக்க முடியாமல் சட்டென்று எழுந்து, “நான் தனியா போகவோ எண்டு யோசிக்கிறன் அப்பப்பா.” என்றான் நிலன்.
எல்லோருமே அதிர்ந்துபோயினர். “தம்பி?” என்றார் சந்திரமதி சட்டென்று உடைந்துவிட்ட குரலில்.
எல்லோரும் நோயாளர்களாகி அந்த வீடே இருண்டு கிடக்கிறது. மொத்த வீட்டையும் ஒற்றை ஆளாக நின்று இழுத்துக்கொண்டு போகிறவன் அவன். அவன் தனியாகப் போவது என்றால்?
“அம்மா, பயப்பிடாதீங்க. இப்ப இல்ல. இப்ப நான் கொழும்புக்குப் போகோணும். அப்பப்ப இஞ்ச வந்து போவன்தான் எண்டாலும் எப்பிடியும் ஒரு மாதத்துக்கு மேல அங்க வேல இருக்கு. இனி மிதுன் இந்த வீட்டைப் பாப்பான். அவனும் பொறுப்பை எடுத்துப் பழகட்டும். நானும் கொழும்பில எல்லா வேலையையும் முடிச்சு, முத்துமாணிக்கத்த இயங்க வச்சிட்டு வந்து வேற எங்கயும் போகேல்ல. எங்கட பழைய வீட்டுக்குத்தான் போகப் போறன்.”
அவன் என்ன சொல்லியும் சந்திரமத்தியால் ஏற்க முடியவில்லை. அங்கிருந்த எல்லோரையும் பார்த்தார். யாரும் எதுவும் சொல்வதாக இல்லை என்றதும், “சண்டை சச்சரவு எல்லா வீட்டிலயும் தானப்பு வந்து போகும். அதுக்கெல்லாம் தனியா போறன் எண்டு சொல்லுறதா? என்னப்பு இது? நீங்க இல்லாம நாங்க என்ன செய்வம் சொல்லு?” என்றவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் இத்தனை நாள்களும் சொல்லாமல் இருந்ததைச் சொல்கிறவனாக, “எங்களுக்கு எண்டு குழந்தையும் வரப்போகுது அம்மா. இந்த நேரம் அவள் அங்க, நான் இஞ்ச எண்டு இருக்கிறது எனக்கு விருப்பமில்லை. அதே நேரம் இஞ்ச ஒரு சண்டை எண்டு அங்க போய் நான் இருக்கிறதிலையும் விருப்பம் இல்ல. அதான் கொஞ்ச நாளைக்கு ரெண்டு வீட்டில இருந்தும் தள்ளி விருப்பமோ எண்டு நினைக்கிறன்.” என்று எடுத்துச் சொன்னான்.
ஆனால் சந்திரமதியோ அப்போதுதான் இன்னும் உறுதியாக மறுத்தார். “நான் அப்பம்மா ஆகப்போறன். இந்த நேரத்தில தனியா போக நான் கடைசி வந்தாலும் சம்மதிக்க மாட்டன் தம்பி. நீ அவளை இஞ்ச கூட்டிக்கொண்டு வா. நான் வச்சுப் பாக்கிறன்.” என்று படபடத்தார்.
“அது சரியா வராதம்மா.
ஏன்
மேலே சொல்லத்தான் வேண்டுமா என்று அவன் அமைதி காக்க சந்திரமதிக்குப் பொறுமை இல்லை. ஏன் எண்டு சொல்லு தம்பி என்று வற்புறுத்தினார்.
வேறு வழியற்று, “அவள் என்னட்ட டிவோர்ஸ் கேட்டிருக்கிறாள்.” என்று போட்டுடைத்தான்.
“என்ன?” என்று நெஞ்சை பற்றிக்கொண்டார் அவர்.
அத்தனை நேரம் அமைதியாக இருந்த ஜானகிக்கு உள்ளம் அப்படியே குளிர்ந்து போயிற்று. அந்த உற்சாகத்தில், “அதுதானே பாத்தன். அவளுக்கு எல்லாம் கலியாணம் ஒரு கேடு. அவள் எல்லாம் ஒழுங்கா குடும்பம் நடத்திறவள் இல்ல.” என்று சொல்லி முடிக்க முதலே,
“அத்த!”, “அம்மா!” என்று குரல்கள் ஓங்கி ஒலித்தன.
நிலனுக்குக் கோபத்தில் முகமே சிவந்து போயிற்று. “இதான் கடைசித் தரம். இனி ஒரு வார்த்தை அவளைப் பற்றிப் பிழையா வந்துது, சத்தியமா அத்தை எண்டு பாக்கவே மாட்டன். மரியாதை கெட்டுடும் சொல்லிட்டன்!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு,
சக்திவேலர் பக்கம் திரும்பி, “அப்பப்பா உங்கட மகளிட்டச் சொல்லி வைங்க. இல்லையோ அப்பா அம்மா கீர்த்தனா எண்டு மொத்தமா வெளில போயிடுவன். பிறகு சக்திவேலையும் சேர்த்து அவாவே பாப்பா.” என்று சீறிவிட்டு விடுவிடுவென்று மாடியேறிப் போயிருந்தான்.
ஆத்திரத்தில் அவனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. எவ்வளவு பெரிய மனம் இருந்தால் தொழிலைப் இப்படிப் பிரித்துக் கொடுக்க நினைத்திருப்பாள்? அப்படியானவளைப் போய் என்ன சொல்லிவிட்டார். அவனுக்குச் சீ என்று இருந்தது.
அன்று நடந்த பிரச்சனையின் போதே இந்த எண்ணம் அவன் மனத்தில் வந்துவிட்டது. ஆனாலும் எல்லோருமே வயதான மனிதர்கள். கூடவே நோயும். இவ்வளவு காலமும் ஓடியாடி மொத்த வீட்டையும் கவனித்துக்கொண்டிருந்த அன்னையும் முன்னர் போல் இல்லை என்கையில் தனியாகப் போகத்தான் வேண்டுமா, அந்த முடிவு சரிதானா என்று தனக்குள் மிகவுமே தடுமாறிக்கொண்டிருந்தான்.
அவர்கள் நன்றாக இருந்த காலத்தில் சேர்ந்து இருந்துவிட்டு, அவர்களுக்கு முடியாத காலத்தில் பிரிந்து போய்த் தன்னால் நிம்மதியாக இருந்துவிட முடியுமா, தப்பித்தவறி அவன் தனியாகப் போன பிறகு சக்திவேலருக்கோ, பாலகுமாரனுக்கோ ஒன்று நடந்துவிட்டால் காலத்துக்கும் அவன் மனமே அவனைக் குத்தாதா என்று ஓராயிரம் கேள்விகளும் குழப்பங்களும்.
ஆனால் இன்று, எடுத்த முடிவு சரிதான் என்று தோன்றிற்று. ஆனாலும் கூட இத்தனைக்கு மத்தியிலும் ஒன்றுமே பேசாமல் இருந்த சக்திவேலர் கண்ணுக்குள்ளேயே நின்றார்.
முன்னராக இருந்திருக்க அவன் சொன்னதற்கு ‘என்னடா பேரா கதைக்கிறாய். என்ன விட்டுட்டு போயிடுவியா நீ?’ என்று கேட்டுத் தன் ஊன்றுகோலினால் அவனுக்கு இரண்டு போட்டிருப்பார்.
அப்படியானவரின் இன்றைய அமைதி அவரும் எல்லாவற்றுக்கும் தயாராகிவிட்டாரோ என்றே எண்ணி அவனை வதைத்தது.
ஆனால் அவனும் என்னதான் செய்வான்? குழந்தையைச் சுமக்கும் அவன் மனைவியும் அங்கே சந்தோசமாய் இல்லையே. அன்று தடுமாறி அவளிடம் தன் ஏக்கங்களைப் பகிர்ந்தவன் அதன் பிறகு அவளைப் பார்க்கப் போகவே இல்லை. தினமும் ஒருமுறைக்குக் குறையாமல் அழைத்து அவள் நலன் அறிந்துகொள்வான். மிச்சம் மிகுதிக்கு விசாகணும் ஆனந்தியும் இருந்தனர்.
இனியும் எதற்கும் அவளை நெருக்க விருப்பமில்லை. தன் மன இறுக்கங்கள் அகன்று, அவளாகவே ஒரு முடிவை எடுக்கட்டும் என்று எண்ணினான். அவளிடம் அப்படிச் சொன்னாலும் என்றுமே அவன் அவளை விட்டுவிடப் போவதில்லை. அது வேறு. அதே முடிவை அவளுக்கும் எடுக்க வேண்டுமே.
இன்றுவரை குணாளன் அழைத்துக் குழந்தையைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை என்பதில் இருந்தே அவள் இன்னும் தன் வீட்டில் சொல்லவில்லை என்று புரிந்தது. சில நேரம் அவன் வீட்டில் எல்லோரும் வைத்தியசாலையில் படுத்திருக்கையில் சொல்ல வேண்டாம் என்று எண்ணியிருக்கலாம். அங்குச் சொன்னால் இங்கும் செய்தி வருமே.
இவனுக்கும் வீடு இருக்கும் நிலையில் தன் சந்தோசத்தைப் பகிர்ந்துகொள்ளும் மனநிலை இல்லை.
இன்று நடந்த பிரச்சனை சொல்ல வைத்திருந்தது. அதற்கு இளவஞ்சி குறித்து ஜானகி பேசியது? என்றைக்குமே அவர் திருந்தப்போவதில்லை என்கையில் அவன் தனியாகப் போவதுதான் சரி என்று திரும்பவும் தோன்றிற்று.
தொழிற்சாலைக்குச் செல்லத் தயாராகி கீழே வந்தான். சந்திரமதி இன்னுமே அவன் தந்த அதிர்ச்சியிலிருந்து நீங்காமல் அழுதுகொண்டிருக்கவும், “அவளின்ர காயம் இப்போதைக்கு ஆறும் எண்டுற நம்பிக்கை இல்லையம்மா. அவளும் இஞ்ச இருக்கிற மனுசரின்ர முகம் பாக்க விருப்பம் இல்லை எண்டு சொல்லிப்போட்டாள். சரி, எதையாவது செய்து அவளைத் திரும்பவும் இஞ்ச கூட்டிக்கொண்டு வாறன் எண்டு வைங்க. அதுக்குப் பிறகு எல்லாம் சரியாகும் எண்டு நினைக்கிறீங்களா? இண்டைக்கே அத்தை என்ன சொன்னவா எண்டு பாத்தனீங்கதானே. அப்பிடி அத்தை ஏதும் கதைக்க அவளும் சும்மா இருக்க மாட்டாள். கடைசில திரும்ப எல்லாரும் போய் ஆஸ்பத்திரில படுக்கிற நிலைதான் வரும். இத நான் அவளுக்காக மட்டும் சொல்லேல்ல. அப்பப்பா, மாமா எண்டு எல்லாருக்காகவும்தான் சொல்லுறன்.” என்று தன்மையாகவே தன் நிலையை எடுத்துரைத்தான்.
சந்திரமதிக்கு அவனை விளங்காமல் இல்லை. ஆனாலும் ஒரு பிரச்சனையில் மகன் தம்மை விட்டுப் போவதை அப்போதும் ஏற்க முடியவில்லை.
“எனக்கு என்ர குடும்பம் பிரியிறதில விருப்பம் இல்லை அம்மா. அவளும் முழு மனதோட அதைக் கேட்டிருக்க மாட்டாள். என்னில இருந்த கோவம், அவளுக்காக நான் நிக்கேல்ல எண்டுற ஏமாற்றம், எண்டைக்கும் அவளுக்கு இந்த வீட்டோட ஒத்துப் போகாது எண்டெல்லாம் யோசிச்சிட்டுத்தான் டிவோர்ஸ் பற்றிச் சொல்லி இருப்பாள். நான் தனியா போனா அவள் சமாதானம் ஆகலாம். என்னோட சேர்ந்து இருக்க வரலாம் அம்மா.”
புரிகிறது என்பதுபோல் கண்ணீருடன் தலையாட்டினார் சந்திரமதி.
“பாப்பம், எதிர்காலத்தில் அவள் மாறினா, ஓம் எண்டு சொன்னா திரும்ப இஞ்ச வாறன். என்ன எண்டாலும் இப்ப இல்ல. நான் கொழும்பில வேலைய முடிச்சுப்போட்டு வந்த பிறகுதான். அதால அழாதீங்க.” என்றவன் அவர் அருகில் அமர்ந்திருந்த கீர்த்தனாவிடம் அவரைக் கவனித்துக்கொள்ளும்படி கண்ணால் காட்டிவிட்டுத் தொழிற்சாலைக்குப் புறப்பட்டான்.


