இன்னுமே சோகத்துடன் அமர்ந்திருந்த சந்திரமதியைக் கவனித்துவிட்டு, “விடு மதி. தம்பியாவது நிம்மதியா இருக்கட்டும். நானும் எல்லாத்தையும் சமாளிச்சுப் போவம் எண்டுதான் நினைச்சன். அது நடக்காது போல இருக்கு. இஞ்ச ஆருமே திருந்திற மாதிரி இல்ல. இத்தின வயசுக்குப் பிறகு திருந்தப்போற ஆக்களும் இல்ல.” என்றார் மனம் விட்ட நிலையில்.
அந்தளவில் ஜானகியின் இளவஞ்சி குறித்தான தரமற்ற பேச்சில் காயமுற்றிருந்தார் பிரபாகரன். இளவஞ்சி மீது அவருக்கும் கோபம் இருந்தது உண்மை. அது, நடந்தவை அனைத்தும் மன்னிக்கவே முடியாத பெரும் தப்புகளாக இருந்தபோதிலும் நடந்து முடிந்தவற்றுக்காக உயிரோடு இருப்பவர்களை வதைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்கிற கோபம்.
அதுகூட வைத்தியசாலையில் வைத்து அவள் தன் தரப்பைச் சொன்னதில் அப்படியே கரைந்துபோயிற்று. அதுவும் ‘எனக்கும் எதுவும் நடந்துவிடுமோ என்று பயமாயிருக்கிறது’ என்று அவள் சொன்னபோது ஆடிப்போனார். மருமகள் என்றால் என்ன மகளுக்கு ஒப்பானவள்தானே? வாழ வேண்டிய வயதில் அவளுக்கு எதுவும் நடப்பதை அவரால் யோசிக்கக் கூட முடியவில்லை.
தொழில் என்று வந்துவிட்டால் அவள் அவர்களுக்குச் சிம்ம சொப்பனம். அப்படியானவள் இன்று அவர்கள் வீட்டுக்கு மருமகளாகிவிட்டால் என்பதற்காக எப்படியும் கதைக்க முடியுமா?
அதே நேரத்தில் ஜானகி மாதிரியான பெண்களிடம் எல்லாம் பேசவே முடியாது. இவர்கள் ஒன்று சொன்னால் அதற்கு ஆயிரம் திரும்பிச் சொல்லுகிற ரகம். கூடவே எந்தளவுக்கும் தரம் இறங்கிப் பேசுவார்கள். அதெல்லாம் அவரால் முடியாது. அதில் அமைதியாக இருந்துவிட்டாலும் மனம் மொத்தமாகக் கசந்து போயிற்று.
அதைவிட அன்று மணமுறிவு குறித்து இளவஞ்சி பேசியதும் அவருக்குப் பெரும் அதிர்ச்சி. இதுவரையில் அவர்களின் குடும்பத்தில் அப்படி ஒரு மோசமான நிலை உண்டானதே இல்லை. அப்படியிருக்க இன்னும் வாழவே ஆரம்பிக்காத மகன் வாழ்க்கை, மணமுறிவில் சென்று முடிவதா என்று கலங்கிப்போனார்.
இப்போது குழந்தையும் வந்திருக்கிறது என்கையில் அவன் எடுத்த முடிவு சரியாகவே பட்டது.
இத்தனையையும் பொறுமையாக மனைவிக்கு எடுத்துச் சொன்னார் பிரபாகரன். எல்லாம் புரிந்தாலும் சந்திரமதி சும்மா இருக்கவில்லை. அடுத்த நாள் காலையிலேயே கீர்த்தனாவுடன் இளவஞ்சி வீட்டுக்குப் புறப்பட்டார்.
*****
அன்று அவள் முகத்தை ஏந்தி முத்தங்களாகப் பதித்த கணவன், தன் ஏக்கத்தையும் ஆசையையும் சொன்னது பொய்யோ என்று நினைக்குமளவில் விலகி நின்று, இளவஞ்சிக்குச் சினத்தையும் சீற்றத்தையும் கொடுத்துக்கொண்டிருந்தான். இதில் கடமை தவறாத கணவனாகத் தினமும் அழைத்து நலன் விசாரித்துவிடுவான்.
அது யாருக்கு வேண்டுமாம்? இதில் நான்கு பிள்ளை வேண்டுமாம் அவனுக்கு. ஒற்றைப் பிள்ளைக்கே இங்கு ஒன்றையும் காணவில்லை. அடுத்த பிள்ளைக்கு வரட்டும் அடித்தே விரட்டுகிறேன் என்று கருவிக்கொண்டாள், தான் அவனிடம் நிரந்தரப் பிரிவைக் கேட்டிருக்கிறோம் என்பதை மறந்து.
அன்று இரவும், “இன்னும் கொஞ்ச நேரத்தில கொழும்புக்கு வெளிக்கிட்டுடுவன் வஞ்சி. எப்ப திரும்பி வரக் கிடைக்கும் எண்டு தெரியாது. கவனமா இரு. என்ன சின்ன விசயம் எண்டாலும் சொல்ல மறக்காத. நான் அங்க திரும்பி வாற வரைக்கும் விசாகனை லீவு எண்டு எங்கயும் அனுப்பாத. அவனுக்கும் சொல்லி இருக்கிறன். கவனமா இரு.” என்று குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.
கைப்பேசியைத் தூக்கிப் போட்டு அடிக்கும் அளவுக்கு அவளுக்கு ஆத்திரம். அதில் பதில் அனுப்பவில்லை. அவளிடமிருந்து ஒன்றும் வரவில்லை என்றதும் அவன் அழைத்தான். அழைப்பை ஏற்றவள் மூச்சுக்கூட விடவில்லை.
“வஞ்சி, இருக்கிறியா? உனக்கு ஒண்டும் இல்லையே? ஏதாவது கதையனடி!” என்று இவன்தான் கத்தி கத்தி ஓய்ந்துபோனான். கடைசியில் அழைப்பைத் துண்டித்துவிட்டு வீடியோ கோலில் வந்தான்.
இன்றும் கையில்லாத ஒரு சாம்பல் நிற நைட்டியில், அவளின் ஆஸ்தான கூடை நாற்காலிக்குள், வெட்டி வெயிலில் வீசிய வாழைமரம் போன்று வாடிப்போய், சோர்வுடன் தலை சாய்த்து அமர்ந்திருந்தவளைக் கண்டு அவனால் பேச முடியாமல் போயிற்று.
“என்ன வஞ்சி, ஏலாம இருக்கா?” என்றான் கரகரத்த குரலில்.
அவள் எதுவும் பேசவே இல்லை. அவனையே இமைக்காது பார்த்தாள்.
அந்தப் பார்வையே அவனைக் குற்றம் சாட்டுவது போலிருந்தது. நான் சொன்னால் நீ விலகி நிற்பாயா என்று கேட்டாளா, இல்லை உன் கருவைச் சுமக்கிறவளை உன்னால் நெஞ்சில் சுமக்க முடியாமல் போனதா என்று கேட்டாளா தெரியவில்லை. அவனுக்கு அந்த நொடியே அவள் அருகில் வேண்டும் போலாயிற்று.
சட்டென்று பார்வையை அகற்றித் தலையைக் கோதிக்கொடுத்தான். அவன் ஆதரவும் அன்பும் முழுமையாக அவளுக்குத் தேவையான நேரமிது. ஆனால், தள்ளி நிற்கும் நிலையில் இருக்கிறான்.
ஒருவித ஆதங்கம் அவனுக்குள்ளும் மேலெழுந்தது. குழந்தையே வரப்போகிறது. ஆனால், அப்படி என்ன வாழ்ந்தார்கள் என்று யோசித்தால் எதுவுமே இல்லை.
அந்தக் கொஞ்ச நாள்களைத் தவிர்த்து வேறு ஒன்றுமில்லை.
அப்போதும் ஒரு கவனத்துடன் பேசியதும் பழகியதும் மட்டும்தான். அவர்கள் மட்டுமாக ஒரு பயணம் இல்லை. எந்தத் தடைகளுமற்றுப் பேசிச் சிரித்ததில்லை. அவர்களுக்கே அவர்களுக்கென்று நேரம் செலவளித்ததும் இல்லை.
அதெல்லாம் போதாது என்று இப்போதும் ஆளுக்கொரு திசையில் பிரிந்து நிற்கிறார்கள். பிரிவு வேண்டும் என்று கேட்டவள் நீதானேடி என்று கத்தவும் முடியவில்லை. பிரிவைக் கேட்டவளும் அங்கே ஒன்றும் மகிழ்ச்சியாய் இல்லையே.
“களைப்பா இருக்கா?” என்றான் தன்னைக் கொஞ்சம் சமாளித்துக்கொண்டு.
அப்போதும் அவள் பார்வையில் மாற்றமில்லை. அவனையேதான் இமைக்காது பார்த்திருந்தாள்.
“வஞ்சி!” என்றான் உள்ளம் தவிக்க.
“அங்க வரவா?”
“வஞ்சிம்மா…”
“அடியேய் ராணி! ஏதாவது சொல்லன்.” என்றவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அழைப்பைத் தண்டித்தவள்தான். அதன் பிறகு அவன் எத்தனையோ முறை அழைத்தும் ஏற்கவில்லை.
சோர்ந்துபோனான் நிலன். கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அவளிடம் ஓடிவிடத் துடிக்கும் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மிகவுமே போராடினான். இல்லை, இந்த முறை அவளாகத்தான் வர வேண்டும் என்று உருப்போட்டபடி கொழும்புக்குப் புறப்பட்டான்.
ஆனால், அவன் தன்னைத் தேடிக்கொண்டு வருவான் என்று இளவஞ்சி பெரிதும் எதிர்பார்த்தாள். அவனோ, “கொழும்புக்கு வெளிக்கிட்டுட்டன்.” என்று குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.
அழுகையா ஆத்திரமா என்று பிரித்தறிய முடியா உணர்வு அவளைப் போட்டு ஆட்டியது. ஏன் இப்படி ஒரு நிலையாக இல்லாமல் அப்படியும் இப்படியுமாக அலைபாய்கிறோம் என்று அவளுக்குப் புரியவேயில்லை. பிரிந்து போ என்று சொன்னவள் அவள்தான். அவன் அழைத்தபோது சரியாகப் பேசாமல் இருந்தவளுக்கு அவள்தான். இப்போது அவன் தன்னைத் தேடி வராமல் போகிறான் என்று கொதிப்பவளும் அவள்தான்.


