கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடியே போயிற்று. கணவன் மனைவி இருவருக்குமே மிகக் கடினமான நாள்கள் அவை. இடையில் வந்து போவேன் என்று அன்னையிடம் சொன்ன நிலன் வரவில்லை.
வந்தால் இளவஞ்சியைப் பாராமல் தன்னால் இருக்க முடியாது என்று அவனுக்குத் தெரியும். அந்தளவில் அவளுக்காக ஏங்கிப்போனான். அதே நேரத்தில் தான் எடுத்த முடிவிலிருந்து அவன் மாறுவதாகவும் இல்லை.
அவள் கதைக்கிறாளோ முறைக்கிறாளோ, காலையும் மாலையும் வீடியோ கோலில் பார்த்துப் பேசிவிடுவான். அன்று அவன் அத்தனை முறை அழைத்தும் அவள் அழைப்பை ஏற்காமல் இருந்ததைக் கவனத்தில் வைத்து, அடுத்த முறை பேசியபோது, “தூரத்தில நிக்கிறன் வஞ்சி, என்ன கோபம் எண்டாலும் இப்பிடி கோல் எடுக்காம இருக்காத. நான் எதை எண்டு யோசிச்சுப் பயப்பிட? நீயும் குழந்தையும் எந்த ஆபத்தும் இல்லாம இருக்கிறீங்க எண்டு தெரிஞ்சாத்தானே நான் இஞ்ச நிம்மதியா இருப்பன்.” என்று தன்மையாகவே கேட்டதிலிருந்து அவளும் அழைப்பை ஏற்காமல் இருப்பதில்லை.
ஆனால், அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று அவன் எதையாவது வற்புறுத்துகிற பொழுதுகளில் அவளிடமிருந்து பயங்கரமான முறைப்பு வரும். அப்போதெல்லாம் அவனுக்குச் சிரிப்பு வந்துவிடும். ஆனாலும் அடக்கிக்கொண்டு நல்ல பிள்ளையாக இருந்துவிடுவான்.
என்னவோ தெரியவில்லை, தன்னிடம் மாத்திரம் சிறுபிள்ளை முகம் காட்டும் அவளை இன்னுமின்னும் அள்ளிக் கொஞ்சும் ஆசைதான் கூடிற்று. அதற்கு அவள் அனுமதி தர வேண்டுமே.
இளவஞ்சிக்குள்ளும் நிறைய மாற்றங்கள். அதுவரையில் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுகிறவள் போன்று என்னால் அந்த வீட்டில் வாழ முடியாது, அந்த வீட்டின் தலைமகனாக இருக்கிறவனைத் தனியாக வா என்று அழைப்பது நியாயமாகாது, கூடவே அங்கே அவன் தேவை அவர்களுக்கு இருக்கையில் இங்கே என்னோடு வந்திரு என்று சொல்லவும் முடியாது என்று தனக்குள் அல்லாடிக்கொண்டிருந்தாள்.
கூடவே, அன்று அவன் வீட்டில் பிரச்சனை என்றதும் அவளை இழுத்து வந்து வீட்டுக்கு வெளியில் விட்டு, போய்விடு என்று சொன்னது சூட்டுக் கோலினால் நெஞ்சில் கீறியதைப் போன்று காயம் உண்டாக்கிற்று.
பிரச்சனையைத் தணிக்கவும், வீட்டு நிலையைக் கட்டுக்குள் கொண்டு வரவும்தான் அவன் அப்படிச் செய்தான் என்று புரியாமல் இல்லை. விட்ட வார்த்தைகள் கூட அந்தச் சூழ்நிலையின் கொதி நிலையினால் தவறி விழுந்தவை என்று அறிவுக்குப் புரிந்தாலும் மனம் காயப்பட்டுக் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருந்தது.
அன்றைய நாளில் என்றுமே தனக்குத் தான் எதிர்பார்த்தது போன்ற ஒரு வாழ்க்கை அவனோடு அமையவே அமையாது என்றெண்ணி மனம் விட்ட நிலையில் இருந்தாள். அதனால்தான் விடுதலை என்கிற பேச்சையே எடுத்தாள்.
இப்படி இருக்கையில் தந்தையின் பேச்சு மிகப்பெரிய கண்திறப்பு. விடுதலை கொடுக்கிற அளவுக்கு அவன் என்ன தவறு செய்தான் என்கிற அவர் கேள்வி, அவள் முகத்தில் அறைந்திருந்தது.
இன்று யோசிக்கையில் கொஞ்சம் கூட யோசிக்காமல், இன்னுமே சொல்லப்போனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயற்படுகிறவளாக, அவ்வளவு பெரிய முடிவை எடுத்ததை எண்ணி மிகவுமே வெட்கினாள்.
இதனால்தான் எந்தப் பெரிய முடிவுகளை எடுப்பதானாலும் அதைக் கொஞ்சம் ஆறப்போட்டு, உன்னையும் கொஞ்சம் நிதானப்படுத்திக்கொண்டு எடு என்று அவளின் அப்பம்மா சொன்னாரோ?
இதனால்தான் அவனும் இத்தனை பிடிவாதமாக விலகி நிற்கிறானோ? இல்லாமல் அவள் அடித்துத் துரத்தாத குறையாகத் துரத்திய பொழுதுகளில் எல்லாம் அவளையே சுற்றி சுற்றி வந்தவன், அவன் குழந்தையைச் சுமக்கும் இந்த நேரத்தில் தள்ளி நிற்பானா?
கண்ணோரம் கணவனின் நேசத்தை எண்ணிக் கண்ணீர் கசிந்து போயிற்று. இந்தளவில் சிந்தை பிறழ்ந்தவள் போல் அவளை நடக்க வைத்ததே அந்த அதி நல்லவனின் நேசம்தான் என்று அந்தக் கோபமும் அவன் மீது திரும்பிற்று.
அவளை அறிந்தவனாக அவன் தனியாக வர முயன்றது மிகப் பெரிய ஆறுதல். அவன் அவளுக்காகவும் யோசிக்கிறான். அதுதானே அவளுக்கு வேண்டுமாய் இருந்தது.
காசோ, பணமோ, வழி நடத்துதலோ அவளுக்குத் தேவையே இல்லை. அவளுக்குத் தேவை உனக்கு நான் இருக்கிறேன் என்கிற நம்பிக்கை. அவளும் ஆறுதலாகச் சாய ஒரு தோள். வீட்டின் மூத்த மகள், தையல்நாயகியின் பொறுப்பான நிர்வாகி என்கிற எந்த அடையாளங்களும் இல்லாமல், ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண ஒருத்தியாய் அவள் இருக்க ஒரு கூடு.
தள்ளியே நின்று நீ கேட்கும் அத்தனையையும் நான் தருகிறேன் என்று சொல்கிறான் அவள் கணவன்.
அவள் ஆரம்பிக்கப்போகிற ஆண்கள் தொழிற்சாலை பற்றி எதையுமே அவள் அவனிடம் பகிர்ந்துகொண்டதில்லை.
அதை எப்படியெல்லாம் பிரிக்கப் போகிறாள் என்றும் சொன்னதில்லை. ஆனாலும் கூட என்னிடம் நீ ஒரு வார்த்தையேனும் சொல்லவில்லையே என்று கூடக் கேட்காத கணவனை மிகவுமே பிடித்தது.
தங்கள் பங்கை ஜானகிக்குத் தந்துவிடுவதாக நிலன் சொன்னதும் சுவாதி மூலம் அவள் காதிற்கு வந்து சேர்ந்திருந்தது. ஒரு பாதி தன்னிடம் இருப்பதால்தான் எதையும் யோசிக்காமல் கொடுத்திருக்கிறான் என்று புரிந்தது.
இன்றைய நிலையில் சக்திவேலில் ஒரு துளியும் அவனுக்கென்று இல்லை. அதைப் பற்றியெல்லாம் அவன் யோசித்ததாகவே தெரியவில்லை.
இதையெல்லாம் யோசிக்க யோசிக்க அவனைப் பார்க்க மனம் உந்திக்கொண்டிருந்தது. கூப்பிட்டால் ஓடி வருவான். என்றாலும் அந்த மாதத்திற்கான செக்கப் நாளுக்காகக் காத்திருந்தாள். என்னதான் தள்ளி இருந்தாலும் அன்றைக்கு அவள் அனுமதியைக் கேளாமலேயே வந்து நிற்பான் என்று அவளுக்குத் தெரியும்.
அவள் எண்ணியது போலவே வந்து நின்றான் அவன்.
அன்று காலையில் அவள் கண் விழிக்கையில் குளித்ததின் பயனாகப் புத்துணர்ச்சி ததும்பும் முகத்துடன் அவளருகில் சரிந்திருந்தான் அவன்.
வருவான் என்று தெரியும். விழிக்கையிலேயே இருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் விரித்த விழிகளை விரித்தபடியே வைத்திருந்தாள் அவள்.
அவளாகவே விழிக்கட்டும் என்று வந்ததிலிருந்து காத்திருந்த அவனுக்கும் அந்த நொடியில் அவளிடம் எதையும் பேசத் தோன்றவில்லை. கவ்வி நின்ற பார்வைகள் பரிமாறிக்கொண்ட செய்தியே போதுமாயிற்று.
தான் எழுந்த பின்னும் அப்படி அவன் தள்ளியே இருந்தது அவளுக்குக் கோபத்தைக் கிளப்பியது போலும். அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பிப் படுக்க முயன்றாள். அதற்கு விடாமல் தடுத்து, சிறு சிரிப்புடன் அவளைத் தன் புறமே திருப்பித் தன்னிடமே கொண்டுவந்து, அவள் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான் நிலன்.
அவன் உதட்டின் ஈரம் அவள் நெஞ்சில் பிசுபிசுக்க, அவளுக்கு விழிகள் ஈரமாகிவிடும் போலாயிற்று. விழிகளை இறுக்கி மூடித் தன்னுணர்வுகளை அவனிடமிருந்து மறைக்க முயன்றாள்.
ஆனால், அந்த விழிகளைப் பார்த்தால்தான் அவனால் அவள் உள்ளத்தின் அலைப்புறுதல்களைப் படிக்க முடியுமா என்ன? அவனுக்குள்ளும் அதே உணர்வுகளின் போராட்டம்தானே.
குழந்தையைத் தோள் சாய்த்துத் தட்டிக்கொடுப்பது போன்று அவளையும் தன் அணைப்பினுள் அடக்கி, அவள் முதுகை இதமாக வருடிக்கொடுத்தான். அவனைக் காணாத தவிப்பு, அதனால் உண்டான அழுகை, இப்போது மட்டும் எதற்கடா வந்தாய் என்கிற குழந்தைக் கோபம் என்று இளவஞ்சியின் உணர்வுகள் எல்லாம் வெடித்துவிடுகிறேன் என்கிற விளிம்பு நிலைக்கு வந்து நிற்கவும் தன் முகத்தை இன்னும் அவன் தோள் வளைவில் அழுத்தினாள்.
அவனுக்கும் புரிந்தது போலும். அவள் கன்னக் கடுப்பில் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, அவள் தலையை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தான்.
அவள் ஓரளவிற்குத் தன்னைச் சமாளித்துக்கொண்டதும் அவளைத் தன்னிலிருந்து பிரித்துக் கட்டிலிலேயே கிடத்தி, அவள் வயிற்றை இலேசாகத் தடவினான்.
இளவஞ்சிக்கு மொத்த உடலும் கணத்தில் சிவந்து புது இரத்தம் பாய்ந்தது. அவன் கரம் பற்றித் தடுக்க முயன்றாள். முடிய வேண்டுமே!
அவன் அணைக்கையிலும் தன் ஆளுகைக்குள் அவளைக் கொண்டு வருகையிலும் அந்த வயிறு எப்படிக் குழைந்து நடுங்கும் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் இன்று அதே வயிறு, அப்பச் சோடா போட்டுக் குழைத்து வைத்த மாக்கலவை இலேசாகப் பொங்குமே, அப்படி மிக மிக இலேசாக உப்பியிருந்ததைக் கண்டு அவனுக்குள் ஒரு பரவசம். அங்கே கருக்கொண்டிருக்கும் அவன் குழந்தை மெல்ல மெல்ல வளர்வதின் அறிகுறியாயிற்றே அது.


