ஆச்சரியமும் வார்த்தைகளில் வடிக்க முடியா அற்புத உணர்வுமாக அவளைப் பார்த்தான். அவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. இப்படி வெட்கப்பட வைக்கிறானே என்கிற அவஸ்தையுடன், “நிலன்!” என்றாள் தன் இரு கரங்களாலும் அவன் கரம் பற்றி, அதன் அசைவை நிறுத்த முயன்றபடி.
“ஏன், நான் தடவிப்பாக்கக் கூடாதா?” என்றான் செல்லக் கோபத்தோடு.
“இவ்வளவு நாளும் பாக்க வராதவர் பாக்கக் கூடாது!” என்றாள் அவளும் தன் ஊடலைக் காட்டி.
“அநியாயமா கதைக்காதபடி கொடுமைக்காரி! வரவிடாமச் செய்ததே நீதான்!” என்றான் அவன் உடனேயே.
“அப்ப நான் சொல்லாம நீங்களா வரமாட்டீங்க?”
அவளையே சில கணங்களுக்குப் பார்த்த நிலன், அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து, அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, “வரமாட்டன்.” என்றான், இது அவளைக் காயப்படுத்தும் என்று தெரிந்தே.
சில கணங்களுக்கு இளவஞ்சியால் பேசமுடியாமல் போயிற்று. நெஞ்சில் ஒருவிதத் தவிப்பு. விழிகள் மீண்டும் கரிக்கும் நிலைக்கு உள்ளாயின. ஆனாலும் தன்னை அடக்கி, “பிறகேன் இண்டைக்கு வந்தனீங்க?” என்றாள் கோபத்தோடு.
அவன் பதில் சொல்லவில்லை. இன்னுமின்னும் அவளோடு ஒன்றினான்.
“பிள்ளைக்காகவா?” என்றதும் நிமிர்ந்து அவள் முகத்தையே பார்த்தான்.
மூக்கும் முகமும் சிவந்திருக்க, விழிகளில் இலேசான கண்ணீரின் படலம். அவன் பார்க்கிறான் என்றதும் முகத்தை அவனுக்கு எதிர்ப்புறம் திருப்பிக்கொண்டாள்.
அவள் முகத்தைத் தன் புறம் திருப்பி, விழிகளோடு தன் பார்வையைக் கலந்து, “பிள்ளையைச் சாட்டா வச்சுப் பாக்க வந்தது உன்னை.” என்றான் அவன் கரகரத்த குரலில்.
சட்டென்று உடைந்துபோனாள் இளவஞ்சி. அவளாகவே அவனைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள். என்னவோ அவன் என்று வந்துவிட்டாலே அவளின் நியாய அநியாயங்கள் அத்தனையும் வித்தியாசமாகிப் போகின்றன. அவளின் புத்திசாலித்தனங்களும், புத்தி சாதுர்யமும் மங்கிப்போய்விடுகின்றன.
தவறு செய்தவள் அவளாயினும் தாங்கிப் பிடிக்கிறவன் அவனாக மட்டுமே வேண்டும் என்று நிற்கிறாள். ஏன் இப்படி என்று அவளுக்குப் புரிவதில்லை.
அவனுக்கும் வேறென்ன வேண்டும்? அவள் முகம் பற்றி நிமிர்த்தி நனைந்திருந்த அந்த அழகிய நயனங்களின் மீது இதழ்களைப் பூவாக ஒற்றி எடுத்தான்.
“என்னை அப்பா ஆக்கப்போறவளே நீதான். நீ எனக்கு முக்கியம் இல்லையா வஞ்சி?” என்றான் அவளைத் தன்னைப் பார்க்க வைத்து.
அவள் பதில் சொல்லாதிருக்க, “இந்தளவுக்கு என்னத் தேடியும் உன்னால என்னைப் பாக்காம, என்னோட கதைக்காம, என்னட்ட வராம இத்தின நாளும் இருக்க முடிஞ்சிருக்கு என்ன?” என்றான் ஆதங்கமாக.
முடிந்ததா என்ன அவளால்? அவள் விழிகளில் சூடான கண்ணீர் அரும்பிற்று. அதை உள்ளுக்கு இழுக்க முயன்றபடி அவனையே பார்த்தாள்.
“என்ன வஞ்சி?”
“நான் இன்னும் கோவமாத்தான் இருக்கிறன்.” என்றாள் அவள் முறைப்புடன்.
சட்டென்று சிரித்துவிட்டான் நிலன். பின்னே அவன் மீதான நேசத்தின் அறிகுறியாகக் கண்ணீரைச் சுமந்தபடி இப்படிச் சொன்னால் அவனும் வேறு என்னதான் செய்ய?
“சமாதானமா வா எண்டு இப்ப ஆர் உன்னட்டக் கேட்டது?” என்று அவள் நெற்றி முட்டினான்.
படார் என்று அவன் தோளிலேயே ஒன்று போட்டாள் இளவஞ்சி. அதைச் சந்தோசமாக வாங்கிக்கொண்டு அவள் கன்னங்களில் முத்தமிட்டான் நிலன்.
“எப்பிடி இருக்கிறாய்?” என்றான் அவள் மூக்கு நுனியில் முத்தமிட்டு.
“எனக்கு என்ன குறை? நான் நல்லாத்தான் இருக்கிறன்!” என்றாள் அவள் முறைப்போடு.
“ம்ஹூம்?”
அவள் முறைக்க, “இந்த ரோசத்துக்கு ஒண்டும் குறைச்சல் இல்ல!” என்று அவளைக் கொஞ்சினான்.
அதைத் தாண்டி இருவரிடமும் வேறு பேச்சில்லை. என்னதான் பொய்யாக முறுக்கிக்கொண்டாலும் ஒருவரின் அண்மை மற்றவருக்குப் பராமசுகமாய் இருந்ததில் மௌனத்திலேயே மனங்களைப் பரிமாறிக்கொண்டனர்.
எழ வேண்டும், தயாராக வேண்டும், வைத்தியசாலை செல்ல வேண்டும் என்று சிந்தனைகள் அதுபாட்டுக்கு ஓடினாலும் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள் இளவஞ்சி.
“என்ன?”
“சக்திவேல் பங்க மாத்தித் தரவா?”
அவளையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, “எனக்கு வேண்டாம். கீர்த்தின்ர பங்க அவளுக்குக் குடு. அது அவளுக்குச் சேர வேண்டிய சீதனம்.” என்றான் அவன்.
“ஏன் உங்களுக்கு வேண்டாம்?”
“எனக்கு நீ மட்டும் போதும்.”
எப்போதும் அவன் தன் மனத்தைச் சொல்லத் தயங்கியதே இல்லை. இந்த இவனிடம்தான் விழுந்துபோய்க் கிடக்கிறாள், எழும் வழி மொத்தத்தையும் தொலைத்துத் தூர எறிந்துவிட்டு.
மகப்பேறு வைத்தியரைப் பார்த்துவிட்டு வந்தார்கள். குழந்தை மிக ஆரோக்கியமாக வளர்ந்துகொண்டிருந்தது. கணவன் மனைவி இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
அவளைத் தையல்நாயகியில் விட்டுவிட்டு வீடு வந்தவனிடம், “எப்ப அப்பு சொத்தை மாத்தப்போறம்?” என்று வினவினார் ஜானகி.
இந்த அத்தை ஏன் இப்படி தன்னைத் தானே தரமிறக்கிக்கொண்டு போகிறார் என்று தோன்றினாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல், “அந்த வேலையையும் முடிச்சுப்போட்டுத்தான் அத்த கொழும்புக்கு போவன்.” என்றவன் சொன்னதுபோலவே, இன்னும் சொல்லப்போனால் அவர் ஆசைப்பட்டது போன்று சக்திவேலரின் பெயரில் இருந்த பங்கை அப்படியே மிதுன் பெயருக்கு மாற்றிவிட்டான்.
அது மட்டுமல்லாமல் பரம்பரை பரம்பரையாக அது அவன் பிள்ளைகளுக்குப் போகுமே தவிர்த்து, யாருக்கும் விற்கவோ, மாற்றிக் கொடுக்கவோ அவனால் முடியாது என்றும் எழுத வைத்தான்.
சக்திவேலருக்கு இரண்டு பேரன்களும் உயிர். மிதுன் அவரின் செல்லக் குழந்தை என்றால், நிலன் அவரின் பொறுப்பான பாசமான பேரன். அப்படி இருக்க ஒரு பேரனுக்குச் சக்திவேலின் பாதியைக் கொடுத்துவிட்டு இன்னொரு பேரனை வெறும் கையுடன் விட்டுவிட்டேனோ என்று அவர் உள்ளம் கிடந்து பிசைந்தது. அவன் மனைவியிடம்தானே மறு பாதி என்று அவரால் அமைதிகொள்ள முடியவில்லை.
இன்றைய நிலையில் முத்துமாணிக்கம் தவிர்த்துப் பெரும் சொத்து என்று சொல்கிற அளவுக்கு அவனிடம் வேறு எதுவும் இல்லை.
சக்திவேல் மீது அக்கறையே இல்லாத மிதுன் பெயரில் சக்திவேலின் பாதி என்றால், சக்திவேலை மொத்தமாக அழித்துவிடுவாள் என்று அவர் நினைக்கும் இளவஞ்சியின் பெயரில் மிகுதிச் சொத்து.
இனி சக்திவேல் வளரும் என்கிற நம்பிக்கை அவருக்கு ஏனோ வரமாட்டேன் என்றது. பரிதவிப்புடன் பெரிய பேரனைத்தான் அடிக்கடி பார்த்தார். அவரின் முழுமுதல் நம்பிக்கை அவன் ஒருவன்தானே!
நிலனும் அவரைக் கவனிக்காமல் இல்லை. கொழும்பு புறப்படுவதற்கு முன் அவரிடம் வந்தான்.
“அப்பப்பா, உங்களுக்கு நான் சொல்லுறதில நம்பிக்கை வருமா தெரியாது. ஆனாலும் சொல்லுறன். உங்களிலயும் மாமாவிலயும் இருக்கிற கோவத்துல வச்சிருக்கிறாளே தவிர வஞ்சி சக்திவேலை ஒண்டுமே செய்யமாட்டாள். அது அவளின்ர பெயர்ல இருந்தாலும் என்ர பெயர்ல இருந்தாலும் ஒண்டுதான். அதே மாதிரி சக்திவேல் அடுத்தடுத்த கட்டம் நோக்கி வளரும். அதுக்கு நான் பொறுப்பு. அதுக்கான வேலையைத்தான் முத்துவேலில பாத்துக்கொண்டு இருக்கிறன். தயவு செய்து கண்டதையும் யோசிச்சு, கவலைப்பட்டு உடம்பக் கெடுக்காதீங்க. ஒண்டுக்கு ரெண்டு பூட்டப்பிள்ளைகள் வரப்போயினம். உடம்பையும் மனதையும் நல்லா வச்சிருந்து, அவயலோட எப்பிடி எல்லாம் விளையாடலாம் எண்டு யோசிங்கோ.” என்று அவரை ஆற்றுப்படுத்தினான்.
ஆனாலும் மனம் அமைதியடையாமல், “சக்திவேலை விட்டுட மாட்டியே பேரா?” என்று கேட்டார் சக்திவேலர்.
“என்ன நடந்தாலும் உங்களை நான் விடுவனா அப்பப்பா?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
இல்லை என்று சொல்வது போன்று மறுப்பாகத் தலையை அசைத்தார் அவர்.
“அப்ப அந்தச் சக்திவேலயும் விடமாட்டன்.” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.


