சந்திரமதி அருகில் அவளுக்கும் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டான் நிலன். அவள் அமர்ந்ததும் அவளருகில் தானும் அமர்ந்துகொண்டு, “தொடங்கலாம் அப்பப்பா.” என்றான் நிலன்.
சக்திவேலரால் தொடங்கவே முடியவில்லை. இளவஞ்சியின் வருகை அந்தளவில் அவரை இறுகச் செய்தது.
பாலகுமாரனின் பார்வை தன்னை மீறி மகள் மீது நெகிழ்ச்சியோடு படிந்து விலகியது. நெஞ்செல்லாம் ஒரு துடிப்பு. என்னை மன்னிக்கமாட்டாயா என்று கேட்கும் ஆவல்.
அவர் ஒருவர் அங்கிருக்கிறார் என்று காட்டிக்கொள்ளாத அவள் இறுக்கமே அதற்கு வழியில்லை என்று சொல்லிற்று. அவள் வந்ததும் வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டார் ஜானகி. மற்றவர்கள் எல்லோருமே அவளைக் கண்டு முகம் மலர்ந்தனர்.
சந்திரமதி சில நேரங்களில் கீர்த்தனாவோடும் சில நேரங்களில் பிரபாகரனோடும் சென்று அவளைப் பார்த்துவிட்டு வருவார்தான் என்றாலும் கண்டதும் அவள் நலனை விசாரித்துக்கொண்டார்.
இன்னுமே சக்திவேலர் அமைதியாக இருக்க, எழுந்து வந்து அவரருகில் நின்றுகொண்டு அவருக்காகப் பேச ஆரம்பித்தான் நிலன்.
“வஞ்சி, இவ்வளவு காலமும் அப்பப்பாதான் தலைமைப் பொறுப்பில இருந்தவர். இனி அவர் ஓய்வில இருக்கப் போறாராம். அதால தலைமைப் பொறுப்பை நீயா மிதுனா எடுக்கப்போறீங்க எண்டு தீர்மானிக்கோணும்.” என்று முடித்தான் அவன்.
அதற்குள், “இதுல தீர்மானிக்க என்ன இருக்கு? அப்பான்ர சொந்தப்பேரன், முறையான வாரிசு என்ர மகன்தான். அவனுக்குத்தான் தலைமைப் பொறுப்பும்.” என்றார் ஜானகி முந்திக்கொண்டு.
இதென்ன பேச்சு என்று எல்லோருமே அதிர்ந்துபோயினர். வஞ்சி என்ன சொல்லப் போகிறாளோ என்று எல்லோரும் அவளைப் பார்க்க, “தலைமைப் பொறுப்பில போய் இருக்கிற அளவுக்குப் பெரிய மனுசனா நீ மிதுன்?” என்றாள் இளவஞ்சி நேராக மிதுனிடம்.
“அக்கா, எனக்கு என்ன தெரியும் எண்டு நான் அந்தப் பொறுப்பை எடுக்க? நீங்களே இருங்கோ. எனக்கு வேண்டாம்.” என்றான் அவன்.
“அப்ப நான் இருக்கிறன்.” என்றார் ஜானகி இப்போதும் வேகமாக இடையிட்டு.
“இதென்ன மியூஸிக்கல் சேர்ஸ் (Musical chairs) விளையாட்டா அவன் இல்லாட்டி நீங்க எண்டு ஓடிப்போய்க் குந்த?” என்றாள் அவள் நேரடியாக.
“அப்ப என்ன நீ இருக்கப் போறியா?” என்றார் அவர்.
அவருக்குப் பதில் சொல்லாமல், அங்கே சற்றுத் தள்ளித் தனியாக அமர்ந்திருந்து, இங்கு நடப்பவற்றைக் குறிப்பெடுத்துக்கொண்டிருந்த ஆனந்தியைத் திரும்பிப் பார்த்து, அதைத் தா என்பதுபோல் இலேசாகக் கையை மாத்திரம் நீட்டினாள் இளவஞ்சி.
வேகமாக எழுந்து ஒரு பேப்பரை கொண்டுவந்து கொடுத்தாள் அவள். இன்னொருமுறை அதில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு இப்போது பேனைக்காகக் கையை நீட்டினாள்.
அதைக் கொடுத்துவிட்டுக் கூடவே அவளின் பெயர் பொறித்த முத்திரையை மைப்பெட்டியில் தோய்த்து எடுத்துத் தயாராக வைத்திருந்தாள் ஆனந்தி.
அந்த ஒற்றையில் நிதானமாகக் கையொப்பம் இட்டுவிட்டு, அதற்கு மேலே தன் முத்திரையையும் அழுத்திப் பதித்துவிட்டு அதைப் பிரபாகரனிடம் நீட்டினாள் இளவஞ்சி.
அதில், சக்திவேலில் இருக்கும் தன் பங்கினைத் தன் கணவனான நிலன் பிரபாகரனிடம் முழுமையாகப் பொறுப்புக் கொடுப்பதாகவும், அதன்படி சக்திவேலின் வளர்ச்சிக்காக எந்த முடிவுகளை எடுப்பதற்கும் அவனுக்கு அதிகாரம் உண்டு என்றும், அது எதிலும் தன் தலையீடு இருக்காது என்றும் என்றும் எழுதிக் கையொப்பம் இட்டிருந்தாள் இளவஞ்சி.
பார்த்த பிரபாகரன் நெகிழ்ந்துபோனார். என்னதான் அந்த வீட்டின் வாரிசாக வந்து அங்கே அவர் அமர்ந்திருந்த போதிலும் அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் அந்தச் சக்திவேலின் ஒரு துளி சொந்தமில்லை என்கிற உணர்வு அவரை அழுத்தாமல் இல்லை.
மகன் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்கிற ஒன்றுக்காகவே அமைதியாக இருந்தார். இப்போதும் அவள் ஒன்றும் அந்தச் சொத்துகளை அவர்களுக்குத் தந்துவிடவில்லை. அதன் மீதான பொறுப்பைத்தான் தந்திருந்தாள்.
அதன் பொருள், இங்கே நடக்கிற அனைத்தைப் பற்றியும் அறிவதற்கு அவளுக்கு உரிமை உண்டு. அவள் கேட்டால் அவர்களின் அத்தனை இரகசியங்களையும் சொல்லியே ஆக வேண்டும்.
அதையெல்லாம் அறிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் அவள் தையல்நாயகியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து, மிக இலகுவாகச் சக்திவேலைத் தட்டி வீழ்த்துவதற்கு முயலலாம்.
அப்படி எதையும் செய்யாமல் சக்திவேலை விட்டுத் தள்ளி நிற்க நினைக்கிறாள். நேர் வழியில் மாத்திரமே மோத முயல்கிறாள். எத்தனை அழகிய மனம் அவளுக்கு?
தகப்பனிடமிருந்து வாங்கிப் பார்த்த நிலனுக்கு அதெல்லாம் பெரிதாகத் தெரியவேயில்லை. அவள் அப்படித்தான் என்று அவனுக்குத்தான் தெரியுமே. அவன் இமைக்க மறந்து பார்த்தது ஒரேயொரு இடத்தை. அது அவளின் கையொப்பம். அங்கே இளவஞ்சி நிலன் என்று போட்டிருந்தாள்.
மறைமுகமாக என்ன சொல்ல வருகிறாள் அவன் மனைவி? அந்தப் பேப்பரை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு அவளைப் பார்த்தான் நிலன். ஒன்றும் விளங்காமல், “என்ன பேரா?” என்றார் சக்திவேலர்.
அதன் சாராம்சத்தைச் சுருக்கமாகச் சொன்னான் நிலன். மெல்லிய அதிர்வுடன் சக்திவேலர் அவளைப் பார்க்க, அவள் அவர் புறம் திரும்பவே இல்லை.
“இனி என்ர பங்குக்கு நிலனும் மாமாவும்தான் பொறுப்பு. அவே ரெண்டுபேரும்தான் சக்திவேலுக்காக உழைக்கிறதும். அனுபவ அடிப்படையிலையும் முறையின்படியும் இனி சக்திவேலின்ர தலைமைப் பொறுப்பை மாமா எடுப்பார். அதே நேரம், மிதுனுக்கும் சேர்த்து அவே ரெண்டுபேரும் உழைக்கிறதால அவன்ர பங்கு லாபத்தில இருந்து ஒரு பங்கு மாமாக்கும் நிலனுக்கும் போகோணும்.” என்றதும் கொதித்துப்போனார் ஜானகி.
“என்ன விளையாடுறியா? அவர் என்ர அண்ணா. அவன் என்ர மருமகன். அவே ரெண்டு பேரும் எங்கட குடும்பம். அவேக்கு என்ர மகன் சம்பளம் குடுக்கோணுமா? நல்லாருக்கு உன்ர கதை!” என்று சீறினார்.
“அதே அண்ணரிட்டயும் மருமகனிட்டயும் இருந்துதான் சொத்தைத் தா எண்டு கேட்டு வாங்கி இருக்கிறீங்க. அப்ப எங்க போனது இது உங்கட குடும்பம் எண்டுற நினைப்பு? நான் சொன்ன மாதிரி நடக்கோணும். இல்லையா அவே ரெண்டு பேரும் சக்திவேலை விட்டு வெளில வருவினம். தேவை எண்டு வந்தா அவே ரெண்டு போரையும் தையல்நாயகிக்கே கூட்டிக்கொண்டு போவன். இல்லையா புதுசா ஆரம்பிக்கப்போற கார்மெண்ட்ஸ்க்கு இன்னுமே எல்லாம் பேச்சிலதான் இருக்கு. மொத்தமா மாமான்ர பெயருக்கே எழுதி அவேற்ற குடுத்திடுவன். அதுக்குப் பிறகு சக்திவேல் சரிஞ்சு படுத்திடும்.” என்றாள் ஈவிரக்கம் காட்டாத குரலில்.
“என்னப்பா இது? எப்ப பாத்தாலும் இதையே சொல்லி மிரட்டுறது? முதல் இவள் ஆர்…” என்றவரை, “அத்த போதும்.” என்று தடுத்திருந்தான் நிலன்.
சக்திவேலரைப் பார்த்து, “வஞ்சி சொல்லுறதும் சரிதான் அப்பப்பா. குடும்பத்துக்காக எண்டு நாங்க உழைச்சது போதும் எண்டு நினைக்கிறன். சொத்து எண்டு வரேக்க எல்லாரும் தங்க தங்க பிடில கவனமாத்தானே இருக்கினம். அதால நானும் இதுக்கு உடன்படுறன்.” என்றதும் ஜானகியால் பேச முடியாமல் போயிற்று.
கடைசியில் அப்படியே முடிவாயிற்று. இனிப் போன வருடத்தின் இலாபத்தைப் பற்றியும், அதை எப்படி எப்படிப் பிரிப்பது, எதிலெதில் முதலீடு செய்வது என்று பேசப்போகிறார்கள் என்றதும், “அப்ப நான் வெளிக்கிடப்போறன்.” என்றாள் இளவஞ்சி நிலனைப் பார்த்து.
“என்ன அவசரம். இதுவும் உனக்குத் தெரியத்தான் வேணும். இரு.” என்றான் நிலன்.
“இல்ல. உங்களுக்குத் தெரிஞ்சா போதும். நீங்களே எனக்கும் சேத்துப் பாருங்க.” என்று முடித்தாள் அவள்.
அவனுக்கு அவளை அனுப்ப மனமில்லை. என்னதான் நடக்கும் விடயத்தில் கவனம் இருந்தாலும் அவளின் ‘இளவஞ்சி நிலன்’ என்கிற கையொப்பத்திலேயே அவன் உள்ளம் சிக்குப்பட்டு நின்றது.
சக்திவேலரும் அவள் முன்னால் எதையும் இலகுவாகப் பேசும் நிலையில் இல்லை என்றதும், “சரி, சாப்பிட்டு போ.” என்று எல்லோருக்கும் சேர்த்துச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்தான். அவளுக்கு மட்டும் எண்ணெய் எதுவும் இல்லாத உணவு வந்தது.
“ஏனப்பு?” என்றார் சந்திரமதி.
“அவளுக்கு ஒத்து வாறேல்ல அம்மா. செமிக்காம மேல மேல வரும் எண்டு சொல்லுறவள்.” என்றவன் வந்து அவளருகில் அமர்ந்துகொண்டான். குறைந்த பட்சமாக மனைவியின் கையையாவது பற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. கீர்த்தனாவும் அங்கிருப்பதில் அவனால் முடியவில்லை.


