வேறு வழியில்லாமல் அவனிடமிருந்து விலகி, அணிந்திருந்த சேலையைச் சரி செய்துகொண்டு, “மாமாவை ஒருக்கா கூட்டிக்கொண்டு வாங்க நிலன்.” என்றாள் அவனிடம்.
அவளைக் கேள்வியாகப் பார்த்தாலும் அங்கே ஜானகியும் இருப்பதில் அவரை மட்டும் போய் அழைத்துக்கொண்டு வந்தான்.
“அண்டைக்கு கோவத்துல கதைச்சதுக்கு சொறி மாமா. உங்களில் எனக்கு எந்தக் கோவமும் இல்ல.” என்ன பேச அழைக்கிறாள் என்கிற கேள்வியுடன் வந்த மனிதரிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் மன்னிப்பை வேண்டினாள்.
நெகிழ்ந்து போனார் மனிதர். கூடவே தான் அவளைக் குறித்துப் பலமுறை அதிருப்திப்பட்டதையும், அதை மறைக்காமல் மகனிடம் காட்டியதையும் எண்ணி வெட்கினார்.
அதில், “எந்தப் பிழையுமே செய்யாத நீங்க ஏனம்மா மன்னிப்புக் கேக்கிறீங்க? வாசவி, பாலகுமாரன் விசயம் நடந்த நேரம் எனக்குத் தெரியாது. நான் குடும்பத்தோட கொழும்பில இருந்தனான். அந்தக் காலம் அப்பா இஞ்ச இருந்து உடுப்புகள் அனுப்பிவிடுவார். அத அங்க இருக்கிற கடைகளுக்குப் போட்டுக் காசாக்கிறது என்ர பொறுப்பு. ஜானுவுக்கும் குமாருக்கும் கலியாணம் நடந்த பிறகுதான் தெரிய வந்தது.
அதுவும் குமாருக்கு முதல் ஒரு காதல் இருந்திருக்கு எண்டுற அளவிலதான். அதுக்கு முதல் தெரிஞ்சிருந்தாலும் அண்டைய நிலையில நானும் பெருசா எதுவும் செய்திருப்பேனா தெரியாது. நான் அப்பாக்கு அடங்கின பிள்ளை. அவர் சொல்லுறதச் செய்து மட்டும்தான் பழக்கம். அதால உங்களில எந்தப் பிழையும் இல்லை. இப்பவும் எனக்கு உங்களில கோவம் வரக் காரணம், சரியோ பிழையோ எப்பவோ நடந்ததுகளுக்காக இப்ப பிரச்சினைப் பட்டு என்ன காணப்போறம் எண்டு யோசிச்சுத்தான். ஆனா அண்டைக்கு நீங்க சொன்ன பிறகுதான் உங்கட இடத்தில இருந்து நானும் யோசிச்சனான். அதால எங்கட குடும்பத்தால உங்கட குடும்பம் அனுபவிச்ச துன்ப துயரங்களுக்கு நீங்கதான் எங்களை மண்ணிக்கோணும்.” என்றதும், “அப்பா!” என்றான் நிலன் வேகமாக. 
“இல்லை தம்பி. இது கேக்க வேண்டிய மன்னிப்புத்தான். எங்கட வீட்டில இருந்து வேற ஆரும் கேக்காயினம். அதால நான் கேக்கிறதுதான் முறை.” என்றவரை இப்போது இளவஞ்சி நெகிழ்ந்துபோய்ப் பார்த்தாள்.
அதைப் பற்றி மேல பேச விரும்பாமல், “நான் வச்சிருக்கிற பங்கு நிலனுக்கும் கீர்த்தனாவுக்கும்தான் வந்து சேரும் மாமா. ஆனா, உங்கட அப்பா இருக்கிற வரைக்கும் மாத்தித் தரமாட்டன். அதால எதைப்பற்றியும் யோசிச்சுக் கவலைப் படாதீங்க. இந்தச் சக்திவேலில சரி பாதிச் சொந்தக்காரன் நீங்கதான்.” என்று சொல்லி முறுவலித்தாள் அவள்.
ஒன்றும் சொல்லாமல் அவள் அருகில் வந்து அவள் தலையைத் வருடிக்கொடுத்தார் பிரபாகரன். வாய்விட்டுச் சொல்ல முடியாது போனாலும் அவள் அவரின் இரத்தமாயிற்றே. இத்தனை நாள்களும் அவள் மீதான அதிருப்தி அந்தப் பாசத்தை மழுங்கடித்திருந்தது. இன்று அவள் மனத்தின் அழகை அறிந்த மனிதரால் தன் பாசத்தைக் காட்டாமல் இருக்க முடியவில்லை.
அங்கிருந்த மற்ற இருவருக்குமே அவர் மனநிலை புரிந்தாலும் உடைத்துப் பேசப் போகவில்லை. “உங்களிட்ட இருக்கிறதால எனக்கு எந்தக் குறையும் இல்லையம்மா.” என்று சொல்லிவிட்டுப் போனார் அவர்.
கூடவே வந்து, கவனம் சொல்லி அவளைக் காரில் ஏற்றி அனுப்பிய பிறகே கூட்டம் நடக்குமிடத்துக்கு நடந்தான் நிலன்.
முக்கியமானவற்றைப் பேசி முடித்ததுமே தன் குடும்பத்தினரை வீட்டுக்கு அனுப்பியிருந்தான் நிலன். முழுமையாக மீட்டிங் முடிவதற்கு மாலையாகியிருந்தது. அதன் பிறகும் ஒன்றுகூடல் பற்றி எடுக்கப்பட்ட குறிப்பை அன்றே சரி பார்த்து, சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்து, திருத்த வேண்டியவற்றைத் திருத்தி முடித்துவிட்டு நிலன் வீடு திரும்பியபோது இரவு எட்டைத் தாண்டியிருந்தது.
முற்றிலுமாகக் களைத்துப்போயிருந்தான். தலை வேறு விண்விண் என்று வலித்தது. அறைக்குப் போய் நன்றாகக் குளித்தான். சாதாரண பேண்ட் சட்டையில் கீழ இறங்கி வந்து அவன் உணவை முடித்தபோது, குணாளன் ஜெயந்தியோடு அங்க வந்தாள் இளவஞ்சி.
மொத்த வீடும் ஒருகணம் ஸ்தம்பித்துப் போயிற்று. ஏன் வந்திருக்கிறார்கள், எதற்கு வந்திருக்கிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை.
அவர்கள் முகங்களைக் கவனித்துவிட்டு, “இந்த நேரத்தில அதுவும் சொல்லாமக் கொள்ளாம வந்திருக்கிறம் எண்டு குறையா நினைக்காதீங்கோ. மகள்தான் திடீரெண்டு வாங்கப்பா எண்டு கூட்டிக்கொண்டு வந்தவா. உங்களுக்குச் சொல்லவும் விடேல்ல. சரி நேர்ல வந்தே சொல்லுவம் எண்டு வந்திட்டன்.” என்று முதல் வேலையாக அவர்களின் பதற்றத்தைத் தணித்தார்.
“எல்லாம் சந்தோசமான விசயம்தான். அவாக்குத் தனியா போக விருப்பம் இல்லையாம். எப்பிடியும் குழந்தை பிறக்கிற நேரம் திரும்ப இஞ்சயோ, அங்க எங்கட வீட்டுக்கோ வரத்தானே வேணும். அதால இப்பவே இஞ்ச வரப்போறன் எண்டா. நானும் நல்லதை ஏன் தள்ளிப்போடுவான் எண்டு கூட்டிக்கொண்டு வந்திட்டன்.” என்றதும் நம்ப முடியாமல் மனைவியைப் பார்த்தான் நிலன்.
எல்லோருக்குமே மனம் நெகிழ்ந்துபோயிற்று. பாலகுமாரனும் சக்திவேலரும் உடல்நிலை காரணமாக நேரத்திற்கே உறங்கப் போயிருந்தார்கள். மற்றவர்கள் எல்லோரும் அங்கேதான் இருந்தார்கள்.
ஜானகிக்கு அவள் ஏன் இப்படித் திடீரென்று வந்திருக்கிறாள் என்கிற ஆராய்ச்சி என்றால், கலங்கிவிட்ட விழிகளோடு வந்து அவள் கரம் பற்றிக்கொண்டார் சந்திரமதி.
“சந்தோசமாச்சி. முழு மனசாத்தான் தனியா போங்கோ எண்டு சொன்னனான். ஆனா இப்ப…” என்றவருக்கு மேலே பேச முடியவில்லை. கண்ணீர் மட்டும்தான் வந்தது.
சிறு புன்னகை ஒன்றைச் சிந்தி, “மொத்தமா விலகிறது எப்பவுமே சரிவராதுதானே மாமி. சந்திக்கிறத எப்பவாவது சந்திச்சுத்தான் ஆகோணும். அதான் இப்பவே சந்திப்பமே எண்டு நினைச்சு வந்திட்டன்.” என்றாள் அவள்.
எல்லோர் பார்வையும் சட்டென்று ஜானகியிடம் ஓடிவிடப் பார்த்தது. ஆனாலும் அப்படிப் பார்த்துவிடக் கூடாது என்கிற கவனத்தில் இருக்க, ஜானகி முகம் கடுத்துப்போயிற்று. ஆனாலும் அமைதியாகவே இருந்தார்.



