அழகென்ற சொல்லுக்கு அவளே 3 – 2

“ஏனோ விசாகன்?” வேடிக்கையாகப் பேச்சுக்கொடுத்தாள்.

“மேம்!” என்று அவள் புறம் திரும்பியவனுக்கும் அவர்களுக்குள் நடக்கும் தொழில் போட்டியும் திருமணப் பேச்சும் தெரியாமல் இல்லையே. அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் நின்றான்.

இப்போது அரும்பியே விட்ட முறுவலோடு, “நான் ஓகேதான். நீங்க போங்க.” என்று அவனை அனுப்பிவிட்டாள்.

எண்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் சக்திவேல் ஐயாவால் மாடிகள் ஏற முடியாது. அவர் ஒரு புறமாக அமர்ந்துவிட, தந்தையோடு சேர்ந்து நகரசபைத் தலைவரோடு இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு நிலன் ஆளானான். அதில் அன்னையிடம் அவளைக் கண்ணால் காட்டிவிட்டு அவரோடு நடந்தான்.

அவரும் எப்போதடா அவளோடு பேசலாம் என்று காத்துக்கொண்டு இருந்தவராயிற்றே.

மகள் கீர்த்தனாவோடு அவளிடம் வந்தார். இப்போது என்ன என்று ஒரு சலிப்புத் தட்டினாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் ஒட்டவைத்துக்கொண்ட முறுவலுடன் அவரை எதிர்கொண்டாள் இளவஞ்சி.

“எப்பிடி இருக்கிறீங்கம்மா?”

“நல்லாருக்கிறான். நீங்க?”

“சுகத்துக்கு என்னம்மா? கொஞ்ச நாளா இந்தக் கடையால வேலையே ஒழிய மற்றும்படி எல்லாரும் நல்லாருக்கிறம்.”

அந்தச் சம்பிரதாயப் பேச்சைத் தாண்டிப் பெண்கள் இருவருக்கும் வேறு பேச்சு வருவேனா என்றது.

ஆனாலும் மகனுக்குப் பிடித்த பெண்ணோடு கதைக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவதற்குச் சந்திரமதிக்கு மனமில்லை. “உங்களுக்கும் இஞ்ச கடை இருக்காம் எண்டு தம்பி சொன்னான். நல்லா போகுதாம்மா?” என்று விசாரித்தார்.

“இஞ்ச மட்டுமில்ல யாழ்ப்பாணம் திருகோணமலைலயும் இருக்கு. நல்லாப் போகுது.”

கீர்த்தனாவிற்கு இளவஞ்சிக்கும் தமையனுக்கும் திருமணப் பேச்சு நடப்பதும், அதற்கு இளவஞ்சி மறுப்பதும் தெரியும்.
அப்படித் தன் தமையனை மறுக்கும் இளவஞ்சியோடு பெரிதாக ஒட்டமுடியவில்லை. அதில் அவர்கள் பேசுவதைக் கவனித்தபடி கூடவே நின்றாள்.

அவளை, “இவா என்ர மகளம்மா.” என்று அறிமுகப்படுத்திவிட்டு, கண்ணால் தேடி மிதுனைக் கண்டுபிடித்து அழைத்தார்.

வந்தவனைக் காட்டி, “இவன் இவரின்ர தங்கச்சி மிதுன். தம்பிக்கு முடிச்சுப்போட்டு இவனுக்கும் முடிக்கோணும் எண்டா எங்க?” என்று இயல்பாகச் சொல்லிக்கொண்டு வந்தவர், அவள் முகம் மாற ஆரம்பிக்கவும் சட்டென்று பேச்சை நிறுத்தினார்.

அப்போதுதான் அவளிடம் போய் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. உடனேயே சமாளித்து, “இவாதான் தையல்நாயகி ஓனர். காட்டத்தான் கூப்பிட்டனான். போய்த் தாத்தாவைக் கவனிங்கோ அப்பு. ஒரு கரையா இருந்திட்டார்.” என்று மிதுனை அனுப்புவதுபோல் பேச்சை மாற்றினார்.

இளவஞ்சியும் அங்கே கைக்கு எட்டிய ஒரு உடையைப் பார்ப்பதுபோல் அவரிடமிருந்து நழுவ நினைத்தாள். அவர் விட வேண்டுமே.

“அப்பாக்கு நரம்புத்தளர்ச்சியாம் எண்டு கேள்விப்பட்டன். இப்ப எப்பிடி இருக்கிறாரம்மா?”

“இருக்கிறார். அது சுகமாகிற வருத்தம் இல்லைதானே. அதால மருந்து மாத்திரை எண்டு போகுது.”

இதற்குள், “ஒருத்தரோடயே கதைச்சுக்கொண்டு இருந்தா எப்பிடி அண்ணி? மற்ற ஆக்களையும் பாருங்கோ.” என்று அதட்டலாகச் சொல்லிக்கொண்டு அவ்விடம் வந்தார் ஜானகி.

அவர் பார்வை ஒரு விதமாக இளவஞ்சியை அளவிட்டது. அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அழையா விருந்தாளி போன்று அவளைப் பாவித்து, சந்திரமதியை அங்கிருந்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்.

“நீயும் ஏனம்மா இஞ்ச நிக்கிறாய். வா, அங்க முக்கியமான ஆக்கள் நிறையப்பேர் வந்திருக்கினம். அவேயக் கவனிப்பம்.” என்று கீர்த்தனாவையும் அவர் இழுத்துக்கொண்டு போக, சந்திரமதிக்கு முகம் மாறாமல் காப்பது சிரமமாகப் போயிற்று.

அதைக் கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல், “நீங்க பாருங்கோ அன்ட்ரி. நான் சும்மா ஒருக்கா மூண்டு மாடியையும் பாத்துக்கொண்டு வரப்போறன்.” என்று சிறு முறுவலுடன் இளவஞ்சியே அவரிடமிருந்து விலகி நடந்தாள்.

எதிர்ப்பட்ட பாலகுமாரன் இவளைக் கண்டதும் நின்றுவிட்டார். தவிப்பும் தடுமாற்றமுமாக அவள் பார்வையைச் சந்திக்கவே திணறினார் மனிதர்.

இவர் ஏன் இப்படிப் பார்க்கிறார் என்று உள்ளூர ஓடினாலும் சிறு முறுவலும் தலையசைப்புமாக அவரையும் கடந்தவளுக்கு அங்கு ஒரு நொடி கூட இயல்பாக இருக்க முடியவில்லை. அந்தளவில் எல்லா மூலைகளில் இருந்தும் முதுகைத் துளைத்தன பார்வைகள்.

இரண்டாவது தளம் பெண்களுக்கானது என்று பார்த்ததுமே தெரிந்தது. கீழேயும் கவனித்தாள். வேலைக்கு ஆட்களை நியமித்து, வருகிற வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் எடுத்துக் காட்டுவது போல் அல்லாமல், எல்லா உடைகளும் சுழற்றிப் பார்க்கும் ஸ்டாண்டுகளில் தொங்கவிப்பட்டிருந்தன.

ஜீன்ஸ் வகையறாக்கள் ஒவ்வொன்று மட்டும் சாம்பிலுக்கு தொங்கவிடப்பட்டிருக்க, மற்றையவை சுவற்றில் ராக்கைகள் அமைத்து மடித்து வைக்கப்பட்டிருந்தன.

அதோடு குழந்தைகள் பகுதி, சிறுவர் பகுதி, பெண்கள் பகுதி ஆண்கள் பகுதி, நீச்சலுடைகளுக்கான பகுதி, பெண்களின் உள்ளாடைகளுக்கான பகுதி என்று மேலே அட்டையில் எழுதி ஒட்டப்பட்டிருக்க, அவை எல்லாமே தனித்தனியாக இருப்பதுபோல் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தான்.

கூடவே ஒவ்வொரு தளத்திலும் மூன்று இடங்களில் ‘பில்லிங் செக்க்ஷன்’ வேறு.

தப்பித்தவறி யாராவது பணம் செலுத்தாமலோ, களவாக எடுத்துக்கொண்டோ கடையை விட்டு வெளியேற முயன்றால் அதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு வாயிலை(Anti-theft protection gate) கடையின் வாசலில் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மாடியில் இருந்தும் படியில் இறங்கும் ஆரம்பப் பகுதியிலும் நிறுவியிருந்தான்.

நிறைய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் அவசியம் இல்லாத, அதே வேளையில் கடைக்கான முழுமையான பாதுகாப்பையும், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் கருத்திற்கொண்டு அவன் கடையை வடிவமைத்திருப்பதைக் கண்டு, அதே தொழிலையே உயிராக நேசிக்கும் அவளால் புருவங்களை உயர்த்தாமல் இருக்க முடியவில்லை.

இரண்டாம் மாடி பெண்கள் பகுதி என்பதில் உடை மாற்றும் பகுதி எப்படி இருக்கிறது என்று பார்க்கத் திறந்து பார்த்தாள்.

“உன்ர பிளவுசின்ர முதுகு டிசைன் அருமையா இருக்கு வஞ்சி.” திடீரென்று அவளுக்குப் பின்னிருந்து நிலனின் குரல் கேட்டது.

வேகமாகத் திரும்பி அவனைக் கண்டிக்கும் பார்வை பார்த்தவள் யாராவது கவனித்தார்களா என்று தம்மைச் சுற்றிப் பார்வையைச் சுழற்றினாள்.

“அப்பிடிக் கவனமில்லாமக் கதைப்பனா?” என்றான் அவன் அவள் பார்வையின் பொருள் அறிந்து.

“முதுகு டிசைன் தெரியோணும் எண்டுதானே நீ கொண்டையே போட்டிருக்கிறாய். பிறகு என்ன முறைப்பு?” என்றான் அப்போதும் அவள் பார்வைக்கு அடங்காமல்.

அவனிடம் பேச்சை வளர்க்க விரும்பாமல் அவள் அங்கிருந்து நகர, “இதப் பாத்திட்டுப் போ.” என்று, உடை மாற்றும் அந்தக் குட்டி அறையின் சுவரில் இடையளவு உயரத்தில் சின்னதாக ஜன்னல் கதவுபோல் இருந்ததைத் திறந்து காட்டினான்.

அந்தக் கதவினூடு சதுர வடிவக் குழாய் ஒன்று சறுக்கியைப் போல் சரிவாக்கப் போனது. எட்டிப் பார்த்துவிட்டு அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“போட்டுப் பாக்க எண்டு எடுத்துக்கொண்டு வாற உடுப்புகளை இதுக்கால போட்டுட்டுப் போயிடலாம். அந்தப் பக்கம் ஒரு வாளி இருக்கு. இஞ்ச இருந்து போடுறது எல்லாம் அங்க போய் விழும். அதைப் பிறகு வேலைக்கு இருக்கிறவே எடுத்துக்கொண்டு வந்து திரும்பவும் கடைக்குள்ள மாட்டிவிடுவினம்.”

“இது வேலை கூட இல்லையா?”

“இல்லவே இல்ல. இந்தக் கடை முழுக்க முழுக்க செல்ஃபா வாற கஸ்ட்மர்ஸே பாத்து எடுக்கிற மாதிரி இருக்கிறதால, வேண்டாம் எண்டு நினைக்கிற உடுப்புகளைக் கைக்கு எட்டின இடத்தில போட்டுட்டோ, தொங்க விட்டுட்டோ போயிடுவினம். அதத அந்தந்த இடத்தில கடசிவந்தாலும் வைக்காயினம். பிறகு அதையெல்லாம் தேடிப் பிடிச்சுச் சரியா மாட்டுறதோட ஒப்பிடேக்க இது ஈஸி.” என்றான் அவன்.

“அதவிட எங்கட சனம் எடுத்த மாதிரியே திருப்பி வைக்கவும் மாட்டினம். பட்டன் திறந்தபடி, சிப் போடாம, ஹேங்கர்ல ஒழுங்கா கொழுவாம எண்டு கண்டபாட்டுக்குத் தொங்கவிட்டுட்டுப் போயிடுவினம். ஏன், சில நேரம் லிப்ஸ்டிக், பவுடர், கண் மை எண்டு உடுப்பில அப்பியும் இருக்கும். அதையெல்லாம் கண்டு பிடிக்கிறது சரியான கஷ்டம். இது அதையெல்லாம் செக் பண்ணி, திரும்பவும் நீற்றாவே கொண்டு வந்து கொழுவ வசதி.” என்று விளக்கிச் சொன்னான்.

“நல்ல ஐடியாதான்.” என்று தன்னை மீறியே பாராட்டினாள் இளவஞ்சி.

ஆனாலும் அவனோடு அப்படித் தனியாக நின்று பேசிக்கொண்டிருப்பது வேண்டாம் என்று அறிவு எடுத்துச் சொல்ல, கையில் இருந்த கைப்பேசியைத் திருப்பி நேரத்தைப் பார்த்துவிட்டு, “வெளிக்கிடப்போறன்.” என்றான்.

“வந்ததே இப்பதான். இன்னும் சாப்பிடவும் இல்ல. அதுக்குள்ளே போவியா? முதல் எனக்கு உன்னோட கதைக்கோணும். சாப்பாடு மேல மூண்டாவது மாடில அரேஞ்ச் பண்ணியிருக்கு. போய்ச் சாப்பிட்டுக்கொண்டு இரு. வாறன்.” என்றான் அவன் விடாமல்.

அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவள் மூன்றாம் மாடியை நோக்கி நகர, “இந்த பிளவுஸ் எங்க எடுத்தனி எண்டு நீ இன்னும் சொல்லேல்ல.” என்றான் திரும்பவும்.

திரும்பவும் திரும்பி அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள் இளவஞ்சி.

“வஞ்சி! சும்மா சும்மா என்னவோ நான் கேக்கக் கூடாத கேள்வியைக் கேட்டமாதிரிப் பாக்காத. உண்மையா அவ்வளவு வடிவா இருக்கு. என்ர கண்ணே அங்கதான் போகுது எண்டேக்க கீர்த்தி கட்டாயம் உன்னைக் கவனிச்சிருப்பாள். வீட்டுக்குப் போனதும் முதல் கேள்வியே இதாத்தான் இருக்கும். அதாலதான் கேக்கிறன்.”

“இது என்ர தொழில் ரகசியம். அதச் சொல்லுவன் எண்டு நினைக்கிறீங்களா? அதுவும் எங்கடா சான்ஸ் கிடைக்கும் எண்டு காத்திருந்து, என்ர காலப் பிடிச்சு இழுத்துவிடப் பாத்துக்கொண்டு இருக்கிற உங்களிட்ட?” என்று கேட்டுவிட்டுப் போனாள் அவள்.

அப்படியே நின்றுவிட்டான் நிலன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock