அவனும் தேடிவந்து பேச முயற்சிக்கவில்லை. விட்டது தொல்லை என்று நினைத்தது ஒரு காரணமென்றால், அவளை யார் என்று கேட்டுத் தெரிந்துகொண்ட சக்திவேல், அவள் பக்கம் திரும்பவே கூடாது என்று அவனிடம் கடுமையாக எச்சரித்துச் சென்றதும் இன்னொரு காரணமாயிற்று.
அவள் எப்படி அப்பம்மாவின் செல்லப் பேத்தியோ அப்படியே அவன் அவனுடைய அப்பப்பாவின் செல்லப் பேரன்.
“சொல்லு வஞ்சி, அந்த ஈர்ப்பு எங்க வந்து நிண்டிருக்கும்?” விடாமல் திரும்பவும் கேட்டான் அவன்.
உண்மை என்று அவன் நினைக்கிற ஒன்றை எப்படியாவது அவள் வாயால் வரவழைத்துவிட அவன் முயல்வது விளங்க, அவளுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலாயிற்று.
அதில், “காலத்துக்கும் எனக்கு உண்மை தெரியாம இருந்திருக்கப் போறதும் இல்ல, நீங்க சக்திவேலரின்ர வாரிசு எண்டுறது மாறுற விசயமும் இல்ல. அதால எப்பயா இருந்தாலும் அது ஒண்டுமில்லாமத்தான் போயிருக்கும்.” என்று சொல்லிவிட்டு எழுந்துபோனாள்.
உண்டு முடித்த தட்டினை அதற்கான இடத்தில் வைத்துவிட்டு அவள் கையைக் கழுவ பின்னால் அவனும் வந்து கையைக் கழுவினான்.
“வா, இஞ்சயே நிக்காம கீழ போவம்.” என்று அவளை விடாமல் அழைத்துக்கொண்டு போனான்.
இன்றைக்கு இதைப் பேசி முடித்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதில் அவளும் மறுக்கவில்லை.
இரண்டாவது தளத்திற்கு வந்ததும், “ஆனா எனக்கு விளங்காத விசயம், உங்களுக்குப் பின்னால சுத்தின நானே நீங்க எனக்கு வேண்டாம் எண்டு விலகி வந்திட்டன். அப்பிடியிருக்க அப்பவே என்னில அப்பிடி எந்த அபிப்பிராயமும் இல்லாம இருந்த நீங்க, ஏன் திடீரெண்டு என்னத்தான் கட்டியே தீருவன் எண்டு நிக்கிறீங்க? தையல்நாயகி வளந்துகொண்டு போறதப் பாக்கப் பயமா இருக்கா? தொழில்ல நேரடியா மோதி வெல்லேலாது எண்டு இப்பிடி ஒரு குறுக்கு வழி முயற்சியா? ஆனா மிஸ்டர் சக்திவேலர் என்னைப் பாக்கிற பார்வையப் பாத்தா இதில அவருக்கு விருப்பம் இல்லை போல இருக்கே.” என்றாள் நேராகவே.
இந்தக் கொஞ்ச நேரத்திற்குள்ளேயே சக்திவேலரைக் கணித்துவிட்டவளின் புத்திகூர்மை இலேசாகத் திகைக்க வைத்ததோடு சேர்த்து, அவள் கேட்டதில் இருந்த உண்மையும் சுட்டுவிட, “வஞ்சி! என்ன பேச்சு இது? அப்பப்பாக்கு எத்தின வயசு? அவரை மரியாதை இல்லாமப் கதைப்பியா?” என்று அதட்டினான்.
“நான் எங்க மரியாதை இல்லாமக் கதைச்சனான். மிஸ்டர் சக்திவேலர்ர்ர்ர் எண்டு போதுமான மரியாதை தந்துதான் கதைச்சனான்.”
“ப்ச் அத விடு! ஏன் இப்பிடி வேண்டவே வேண்டாம் எண்டு நிக்கிறாய். அதச் சொல்லு!”
“நான்தான் வேணுமெண்டு நீங்க ஏன் நிக்கிறீங்க? உங்களுக்கு இந்த ஊர்ல வேற பொம்பிளைகளே இல்லையா?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
அவனால் அவன் நிலையை அவன் வீட்டிலேயே வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்கையில் அவளிடம் எப்படிச் சொல்லுவான்?
அதில், “நான் கேட்டதுக்கு முதல் நீ பதிலச் சொல்லு!” என்று மெலிதாக அதட்டினான்.
அவனையே ஒருமுறை பார்த்துவிட்டு, “பாம்பு எத்தின முறை செட்டைய மாத்தினாலும் பாம்பு பாம்புதான் நிலன்.” என்றாள் நிதானமாக.
“வஞ்சி!”
“அண்டைக்கு நீங்க ஆர் எண்டு உண்மையச் சொல்லாம ஏமாத்தினீங்க. இண்டைக்கு நான் பேசி முடிச்ச கார்மெண்டக் காசு கூடக் குடுத்து வாங்கி இருக்கிறீங்க. நடுவுக்க என்ர கஷ்டமர்ஸ உங்கட பக்கம் இழுக்கப் பாக்கிறீங்க. இப்பிடி என்னை நசுக்க நினைக்கிற ஒருத்தர் எனக்கு வேண்டாம் நிலன். எனக்கு நிம்மதியான, சந்தோசமான, அமைதியான ஒரு வாழ்க்கை வேணும். அதுக்கு நீங்க சரியா வர மாட்டீங்க.” என்றவளை முறைத்தான் அவன்.
“கம்பஸ்ல நான் உனக்கு சீனியர், நீ எனக்கு ஜூனியர். அவ்வளவுதான் எனக்கும் உனக்குமான தொடர்பு. எனக்குப் பின்னாலேயே சுத்துற உன்ர குணமும் அப்ப எனக்கு ஒருவித எரிச்சலத்தான் தந்திருக்கு. அத நான் உன்னட்ட நேரடியாக் காட்டியும் இருக்கிறன். இப்பிடிப் பின்னால சுத்தி படிப்பை விட்டுடாத எண்டு சொல்லியும் இருக்கிறன். இதத் தாண்டி உன்னட்ட வந்து என்னப் பற்றிச் சொல்லோணும் மாதிரி எனக்கு இருக்கேல்ல. அப்பிடிச் சொன்னா நீ என்னை விட்டு ஓடியிருப்பாய் எண்டு தெரிஞ்சிருந்தா, முதல் வேலையா அதத்தான் செய்திருப்பன். இதுதான் அப்ப இருந்த என்ர மனநிலை.” என்றான் கோபம் தீராமலேயே.
‘நீங்க எனக்குச் சரியா வரமாட்டீங்க’ என்று அவள் சொன்னது அந்தளவில் அவனை எரிச்சல் படுத்திற்று.
அவளால் அவன் சொன்னதை முழுவதுமாக ஒப்ப முடியவில்லை. சாதாரணமாக அவன் சொல்வது சரிதான். ஆனால் இங்கே தொழில் போட்டியால் எந்தக் காலத்திலும் இரு குடும்பத்திற்கிடையேயும் நல்ல நிலை இருந்ததேயில்லை. அப்படியிருக்க அவள் அவன் மீது ஆர்வம் காட்டுகிறாள் என்கையில், அவன் யார் என்பதை ஏதோ ஒரு வகையில் அவளுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என்றே எண்ணினாள்.
அதே நேரத்தில் அவளே தூக்கிப் போட்டுவிட்டுக் கடந்து வந்துவிட்ட ஒன்றைப் பற்றி இன்றைக்குப் பேசுவதில் அர்த்தமே இல்லை என்பதும் விளங்க, அவனிடம் மறுத்து வாதாடப் போகவில்லை அவள்.
ஆனால், “இது தொழில் வஞ்சி. முடிஞ்சவரை கஸ்டமரை பெருக்க நினைக்கிறதும், தொழிலைப் பெருப்பிக்கப் பாக்கிறதும் சாதாரணமான ஒண்டு. அதுக்காக வாழ்க்கைலயும் அப்பிடித்தான் இருப்பன் எண்டு நினைப்பியா?” என்று கேட்டவனுக்குப் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“அது பிழை இல்லை. ஆனா அந்தப் பக்கம் கலியாணத்துக்குக் கேட்டுட்டு இந்தப் பக்கம் இப்பிடி நடக்கிறதுதான் உதைக்குது.” என்றவள் அவன் என்னவோ சொல்ல வரவும் கையை நீட்டித் தடுத்து,
“அவரவர் நியாயம் அவரவருக்கு. தொழில்ல நீங்க என்ன செய்தாலும் அத எதிர்த்து நிக்க நான் தயார். சோ அதுக்கான பதில் எனக்குத் தேவை இல்ல. எனக்குத் தெரிய வேண்டியது ஒண்டே ஒண்டுதான். நானேதான் வேணும் எண்டு நிக்கிறதுக்குப் பின்னால இருக்கிற உண்மையான காரணம் என்ன?” என்றாள் நேராக அவனை நோக்கி.
“அத என்னால இப்ப சொல்லேலாது.” என்றான் அவளிடமிருந்து பார்வையைத் திரும்பியபடி. “அதுக்காகப் பிழையான நோக்கம் ஏதுமோ எண்டு நினைச்சிடாத. அப்பிடி எதுவுமே இல்ல. அதே நேரம் எனக்கு உன்னை இப்ப பிடிச்சுத்தான் இருக்கு.” என்றவனைப் பார்த்து இலேசாக முறுவலித்தாள் அவள்.
காலம் எப்படிச் சுழல்கிறது என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அப்படியே, “எனக்கு உங்களோட ஒரு வாழ்க்கை வேண்டாம் எண்டுறது நான் எப்பவோ எடுத்த முடிவு. இப்பவும் அதில மாற்றமில்லை.” என்றுவிட்டுப் புறப்பட ஆயத்தமானாள்.
புத்தியில் அது பட்டாலும் அவளையே பார்த்து நின்றான் அவன்.
இவ்வளவு நேரமாக இருவரும் பேசியது அவர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து. ஆனால், ஒரு தொழில்துறை பேச்சு வடிவத்தில் மட்டுமே நடந்திருந்தது. உள்ளங்களின் மென் உணர்வுகள் அங்கே குறுக்கிடவே இல்லை.
அதுவும் அவள், தன் உணர்வுகளை நடுவுக்குள் கொண்டு வரவேயில்லை. உற்சாகமும் துள்ளலும் துடிப்பும் நிறைந்த பழைய வஞ்சி கண்முன்னே வந்து நிற்க, “எனக்குப் பழைய வஞ்சியப் பாக்கோணும் மாதிரி இருக்கு.” என்றான்.
உனக்கு என்ன விசரா என்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஓடர் போடுங்க. தயாரிச்சு அனுப்புறன்.” என்றாள் கேலியாக.
உதட்டோரம் குமிழியிட்ட குறுஞ்சிரிப்புடன், “உன்ன மாதிரியே ஒரு ஜூனியர் நீதான் தயாரிச்சுத் தரோணும். அது சரிதான். அதுக்கு முதல் எங்களுக்குக் கலியாணம் நடக்கோணும்.” என்றான் அவன்.
பார்வையாலேயே அவனை எரித்துவிட்டு விடுவிடு என்று கீழ்த்தளம் நோக்கிப் போனவள் அப்படியே சந்திரமதியிடம் சொல்லிக்கொண்டு வெளி வாசலையும் நோக்கி நடக்க, “அப்பப்பாக்கு சொல்லிப்போட்டுப் போ வஞ்சி!” என்று தடுத்தான் அவன்.
அவள் முகத்தில் மறுப்பைக் காட்ட, “கோபதாபம் வேற. வயதான மனுசனுக்குக் குடுக்கிற மரியாதை வேற. வந்து சொல்லிப்போட்டுப் போ!” என்று பிடிவாதமாக அழைத்துக்கொண்டு போனான்.
அவளும் மரத்த குரலில் அவரிடம் வந்து புறப்படுவதாகச் சொன்னாள்.
அப்போதும் சரி என்று தலையைக் கூட அசைக்காமல், எதையோ அளவிட முயல்கிறவர் போன்று அவளையே கூர்மையாகப் பார்த்தார் மனிதர்.
சட்டென்று தொற்றிக்கொண்ட சினத்துடன், “நாறல் மீனைப் பூனை பாக்கிற மாதிரி என்னையே என்னத்துக்குப் பாக்கிறீங்க? உங்கட பேரனக் கட்டுற ஐடியா எனக்குக் கொஞ்சமும் இல்ல. ஆனா, அவசரமா ஆராவது ஒருத்தியப் பாத்து அவருக்குக் கட்டி வைங்க. இல்ல வேலிக்க நிக்கிற மாடு எங்கயாவது பாஞ்சிரப் போகுது.” என்றுவிட்டு நடந்தாள் அவள்.
சக்திவேலர் பேரனைத்தான் முறைத்தார். அவனால் அவள் பேச்சினால் அரும்பிவிட்ட முறுவலை மறைக்க முடியாமல் போனது. இது பழைய வாஞ்சியின் சாயல். “ஒரு நிமிசம் அப்பப்பா.” என்றுவிட்டு அவளுக்கென்று எடுத்து வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு அவளிடம் விரைந்தான்.
அதற்குள் அவள் கார் புறப்படத் தயாராகியிருந்தது. அவள் பக்கக் கதவைத் திறந்து, “இந்தா, இது உனக்கு.” என்று நீட்டினான்.
அப்போதுதான் திறப்புவிழா கண்ட கடையில் முறைக்கு என்று எதையும் வாங்காமலேயே வந்துவிட்டது புத்திக்கு உறைக்க, “சொறி, இத நான் மறந்திட்டன்.” என்றுவிட்டுக் கைப்பையிலிருந்து பணம் எடுக்கப்போனாள்.
“கோபம் வர வைக்காத வஞ்சி!” என்று அதட்டி, அவள் மடியிலேயே பையை வைத்துக் கதவைச் சாற்றிவிட்டு, விசாகனை எடுக்குமாறு கையால் காட்டினான் நிலன்.
அவள் கார் மெல்ல நகர்ந்து, அவன் பார்வையிலிருந்து மறைந்து போனது.