சற்று நேரத்தில் பாத் ரோப் அணிந்து வெளியே வந்தவளைத் தன்னிடம் கொண்டு வந்த நிலன் அதன் பிறகு நைட்டி அணியவேண்டிய அவசியத்தை அவளுக்குக் கொடுக்கவேயில்லை.
தெரிந்த மனைவிதான். அறிந்த சுகம்தான். ஆனாலும் ஆசைக்கு என்றைக்கு அளவிருந்திருக்கிறது? இத்தனை நாள் பிரிவு வேறு நடுவில் உண்டே.
தாய்மை உற்றிருந்தவளின் தேகம் நோகாதபடிக்கு ஆரத்தழுவி ஆக்கிரமித்தான். ஓராயிரம் முத்தங்கள். அத்தனையும் அவன் அன்பைக் சொல்லி அவள் வசம் சேர்ந்தன.
அவளுக்காக ஏங்கிக்கொண்டிருந்தான் என்று அவனுக்குத் தெரியும். ஆனால், எத்தனை தூரத்திற்கு ஏங்கிப்போனான் என்று அறிந்து அவனுக்கே ஆச்சரியமாயிற்று.
விலக மனமேயில்லை. அவள் சற்று விலகினாலும் இழுத்தணைத்தான். கணவனின் நிலை அறிந்தவளாக அவளும் அவனோடு ஒட்டிக்கொண்டாள். அவளின் அணைப்பும் ஆதரவான தலைகோதலும் சேர்ந்து அவனை இன்னுமே பித்தனாக்கின. அவன் முகம் தாங்கி அவள் பொழிந்த முத்தங்கள் அவள் பெயர் சொல்லிப் பிதற்ற வைத்தன.
*****
காலையிலேயே எழுந்துவிடும் பழக்கம் சக்திவேலருக்கு எப்போதுமே உண்டு. அதன் பிறகு உறக்கம் வராது என்பார். அன்றும் அப்படித்தான். நேரத்திற்கே எழுந்து குளித்து, கோயிலுக்குப் போவதற்குத் தயாராக வந்தவரிடம் இளவஞ்சி இங்கே வந்துவிட்ட விடயத்தைப் பகிர்ந்துகொண்டார் சந்திரமதி.
கோபப்படப்போகிறார் என்று சந்திரமதி காத்திருக்க, அவர் ஒன்றுமே சொல்லவில்லை. அவர் கோயிலுக்குப் போய்விட்டு வந்தபோது இங்கே எல்லோரும் எழுந்திருந்தார்கள்.
உணவு மேசையில் எல்லோருடனும் இளவஞ்சியும் அமர்ந்திருந்தாள். பார்த்தாலும் ஒன்றும் சொல்லாமல் அவரும் சென்று அமர்ந்தார்.
அங்கே கைப்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த நிலனைப் பார்த்து, “மிஸ்டர் பேரா!” என்று அழைத்தாள் இளவஞ்சி.
திகைத்துப்போன நிலன் வேகமாகத் திரும்பிப் பார்த்தான். ஆட்காட்டி விரலினால் அவனைத் தன்னை நோக்கி இளவஞ்சி அழைக்க, நிலன் வேகமாகச் சக்திவேலரைத்தான் பார்த்தான்.
அவரோ படுபயங்கரமாக அவனை முறைத்துக்கொண்டிருந்தார்.
‘இவள் ஒருத்தி வந்ததும் வராததுமா ஆரம்பிக்கிறாள்!’ அவளை உள்ளே வறுத்தெடுத்தபடி அவளிடம் வந்தான்.
“என்ன வஞ்சி?”
“சாப்பிடேல்லையா, நேரமாகுது.” ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல் இயல்பாய் வினவினாள் அவள்.
‘நான் உனக்குப் பேரனாடி?’ வாய் விட்டுக் கேட்க முடியாமல் பார்வையால் அவளை எரித்தபடி அவளருகில் அமர்ந்தான்.
எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு ஜானகியும் அங்கேதான் இருந்தார். பாலகுமாரன் மட்டும் மனைவிக்குப் பயந்து வரவில்லை.
அவளுக்கு மட்டும் எண்ணெய் இல்லாத உணவு தந்தார் சந்திரமதி. ஆனாலும் காலையிலேயே அவளால் உண்ண முடியவில்லை. “என்ன, சாப்பிடேலாம இருக்கா?” என்றான் நிலன் கவலையோடு.
“ம், சத்தி(வாந்தி) வாற மாதிரி இருக்கு.” என்று எழுந்துகொண்டாள் அவள். அவள் பின் பக்கம் விரியவும் தானும் ஓடினான் நிலன்.
இளம் சூட்டில் ஒரு குவளை தண்ணீருடன் பின்னால் விரைந்தார் சந்திரமதி. அவள் வாந்தி எடுத்து முடித்ததும் அமர வைத்து, ஆற்றுப்படுத்தி, இளம் சூட்டுத் தண்ணீரை அறுந்தக கொடுத்து அவளை அழைத்து வருகையில் மற்றவர்கள் உணவை முடித்திருந்தார்கள்.
சில மாதங்களுக்கு முதல்தான் சுவாதி இதையெல்லாம் கடந்து வந்தாள் என்பதில் ஒரு தேசிக்காயைக் கொண்டுவந்து மணக்கும்படி தமக்கையிடம் கொடுத்தாள்.
அவள் படும் பாட்டைக் கண்டு நிலனுக்குச் சாப்பிடும் மனநிலையே இல்லாது போயிற்று. இந்த நிலையில் இருந்தவளையா தனியாக விட்டுவிட்டு இருந்தோம் என்று இன்னுமே வருத்தமாயிற்று.
ஆனால் இளவஞ்சி அவனை விடவில்லை. “நான் கட்டிக்கொண்டு போய்க் கொஞ்சம் கொஞ்சமா எண்டாலும் சாப்பிட்டுடுவன். நீங்க சாப்பிடுங்க.” என்று அவனை உண்ணவைத்தே விட்டாள்.
அதைக் கண்டபிரபாகரனுக்கும் சந்திரமதிக்கும் மிகுந்த நிறைவு. ஆளுமையான பெண் அவள். மகனுக்கு இணையாகத் தொழில் நடத்துகிறவள். அதில் அவர்களின் மகனைக் கவனிக்காமல் விட்டுவிடுவாளோ என்கிற கவலை, இத்தனை நாள்களும் அவர்களுக்குள் இருந்திருக்கிறது.
ஆனால் இன்று அவன் அவளையும் அவள் அவனையும் கவனித்துக்கொண்டு பங்கைத் கண்டு நெகிழ்ந்துபோயினர்.
இதையெல்லாம் நாடகம் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்த ஜானகி, சக்திவேலர் காலையில் எடுக்கும் மாத்திரைகளை எடுத்துவிட்டு வரவும், “அப்பா, முத்துமாணிக்கம் கார்மெண்ட்ஸ் லாபநட்டம் என்னமாதிரி?” என்று நைச்சியமாக விசாரிக்கவும் சக்திவேலருக்கே சுர் என்று ஏறிப்போயிற்று.
“சும்மா சும்மா சொத்துக்குச் சாகாத ஜானு. அது பெரிய பேராக்கு மட்டும்தான்.” என்றார் பட்டென்று. என்னவோ தெரியவில்லை. வரவர அவருக்கே ஜானகியின் இந்தப் போக்குப் பிடிக்கவில்லை.
அதைவிட பேரனைப் பிரிந்து அவரால் இருக்கவே முடியாது. அன்று அவன் தனியாகப் போகப் போகிறேன் என்று சொன்னபோது, அவனைத் தனியாகப் பிடித்து அப்படிச் செய்யாதே என்று கெஞ்சிக் கேட்டிருந்தார்.
இளவஞ்சியை மணந்ததைத் தவிர்த்து அதுநாள் வரை அவர் சொன்னதை மீறாத அவனோ, “சில நேரங்கள்ல தள்ளி இருக்கிறதுமே உறவை உடைய விடாம செய்யும் அப்பப்பா.” என்று சொல்லி அவர் வாயை அடைத்திருந்தான்.
அன்றிலிருந்தே இந்தப் பிரிவு நிரந்தரமாகி தனக்குப் பிறகான காலத்தில் இந்தக் குடும்பம் பிளவு கண்டுவிடுமோ, சக்திவேல் உடைந்துவிடுமோ என்று கலங்கிப்போயிருந்தார்.
அப்படியிருக்க அவர் பேரன் தனியாகப் போகாமல் மனைவியோடு இங்கேயே இருக்கிறான். அதைக் கெடுப்பதுபோல் ஜானகி பேசினால் அவரும் என்னதான் செய்ய?


