பெரும் தப்பினையும் துரோகத்தையும் இழைத்தவர் பாலகுமாரன். அப்படியிருக்க அவருக்கென்றும் ஒரு குரல் இருக்கும் என்று இன்று நேற்றல்ல, இத்தனை வருட காலத்தில் ஜானகி யோசித்ததே இல்லை.
அப்படியிருக்க இன்று என்ன சொல்லிவிட்டார் அந்த மனிதர்? விடுதலையா? இந்த வயதிலா? அதற்குமேல் யோசிக்கக் கூட வரவில்லை அவருக்கு. முதுகெலும்பே இல்லாத புழுப்போல் அவர் பாவித்த ஒருவர், அவர் வாழ்க்கையையே பிரட்டிப் போடுகிறார் என்றால் எப்படி?
தான் பேசிய விடயம் ஜானகியின் காதில் விழ வேண்டும் என்று பாலகுமாரன் நினைக்கவில்லை. அதே நேரத்தில் அவர் கேட்டுவிட்டார் என்பது அவரைப் பாதிக்கவும் இல்லை.
தைரியம் வந்துவிட்டது என்பதை விட இனி என்ன நடந்தாலும் ஒன்றுதான் என்கிற பற்றற்ற, பிடிப்பட்ட நிலைக்கு வந்திருந்தார். அந்த நிலை எதையும் எதிர்கொள்ள வைத்தது.
அதில், “என்ன இருந்தாலும் உனக்கும் நான் செய்தது துரோகம்தான். மாமா என்னைக் கட்டாயப்படுத்தினாலும் நான் அதுக்கு உடன்பட்டிருக்கக் கூடாது. அண்டைக்குக் கோழையாத்தான் இருந்திட்டன். அதால என்னை அறுத்து எறிஞ்சுவிடு.” என்று ஜானகியைப் பார்த்துச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார் மனிதர்.
இன்னுமே நீங்காத திகைப்புடன் அப்படியே நின்றிருந்தார் ஜானகி. அன்று இதே விடுதலையை நிலனிடம் இளவஞ்சி கேட்டாளாம் என்று அறிந்தபோது, அவரின் மருமகனின் வாழ்க்கை ஏன் இப்படியாகிற்று என்று ஒரு ஓரமாய் வலித்ததுதான். அதே நேரத்தில் இது நல்லதுதான் என்று அலட்டிக்கொள்ளாமல் இருந்துவிட்டார். ஆனால் இன்று, அதே நிலை தனக்கு வந்தபோது அவர் உள்ளம் அதிர்ந்தது.
எதையும் பேசமுடியாமல் தந்தையைப் பார்த்தார்.
“எங்க போயிடப்போயினம் எண்டுற அலட்சியம் இருக்கிற வரைக்கும்தான் ஏறிப்பாயிறது, மதிக்காம நடக்கிறது, சீறிச் சினக்கிறது எல்லாம். இப்ப என்ன செய்யப் போறாய்?” என்ற சக்திவேலரின் கேள்வியில் அழுது பழக்கமில்லாத விழிகள் கலங்காவா என்றன ஜானகிக்கு.
“உனக்கு அவனைப் பிடிச்சிருந்தது. எனக்கும் எங்கட வீட்டுச் சொத்து வெளி ஆக்களுக்குப் போறதில விருப்பம் இருக்கேல்ல. அதாலதான் அவனை உனக்குக் கட்டி வச்சனான். இண்டைக்குச் சக்திவேல் இந்தளவில வளந்து நிக்கிறதுக்குக் காரணம் அண்டைக்கு நான் எடுத்த முடிவுதான். எல்லா நேரமும் எல்லாராலயும் எல்லாருக்கும் சரியா நடக்கேலாது ஜானு. நான், என்ர குடும்பம், எங்கட எதிர்காலம் எண்டு வரேக்க ஆரோ ஒருத்தருக்கு நாங்க கெட்ட மனுசராவோ துரோகியாவோதான் இருப்பம். இண்டைக்குச் சொத்து வேணும், சக்திவேலில பங்கு வேணும் எண்டு நிக்கிறியே அதெல்லாம் எங்க இருந்து வந்தது எண்டு நினைக்கிறாய்?” என்றவரின் கேள்விக்கு ஜானகியிடம் பதில் இல்லை.
“அவனுக்கு முதல் ஒரு காதல் இருந்ததுதான். ஆனா உன்னைக் கட்டின பிறகு அவன் எந்தப் பிழையும் செய்யேல்லையே. பிறகும் என்னத்துக்கு அவனைப் போட்டு அந்தப் பாடு படுத்திறாய்? தெரிய வந்த நேரம் கத்தினாய், கோவப்பட்டாய், அவனைப் போட்டு அடிச்சாய். எல்லாம் சரிதான். அதுக்குப் பிறகும் பாக்கிற நேரமெல்லாம் கேவலமா கதைச்சா எப்பிடி ஜானு? இந்த விசயம் தெரிய வரும்வரைக்கும் நீ வாழ்ந்த வாழ்க்கைல உனக்கு ஏதாவது குறை இருந்ததா எண்டு யோசி.” என்றுவிட்டு நடந்தவர் நின்று,
“இந்தக் கத்திறது, சண்டை பிடிக்கிறது எல்லாத்தையும் நிப்பாட்டு ஜானு. உன்ர மரியாதையையும் இந்த வீட்டில உனக்கான இடத்தையும் நீயே கெடுக்காத. முந்தி நாங்க மட்டுமே இருந்தம். எல்லாரும் நீ சொன்னதைக் கேட்டு நடந்திச்சினம். ஆனா இப்ப வெளில இருந்து மருமக்கள் வந்தாச்சு. அவேக்கு முன்னாலயும் நீ இப்பிடியே இருந்தா உன்ர நிலைதான் மோசமாகும். ரெண்டு நாள் போகட்டும். குமாரோட நான் கதைக்கிறன். நீ இனியும் அவனோட சண்டை பிடிக்கக் கூடாது!” என்று கடைசி வாக்கியத்தைச் சற்று அழுத்திச் சொல்லிவிட்டுப் போனார் சக்திவேலர்.
என்னவோ திடீரென்று எல்லோரும் அவரையே குற்றம் சாட்டுவது போலிருக்க அமைதியாகிப்போனார் ஜானகி.
*****
மேலே அவர்களின் அறைக்கு நிலன் வந்தபோது கோப ரேகைகள் முற்றிலும் விலகாத முகத்தோடு படுக்கையில் சரிந்திருந்தாள் இளவஞ்சி.
ஒற்றைப் பார்வையில் அவளை அளந்தபடி அணிந்திருந்த சட்டையைக் கழற்றிவிட்டு வந்து, முதுகுக்குத் தலையணையைக் கொடுத்துக் கால்களை நீட்டி அமர்ந்தான் நிலன்.
அதற்காகவே காத்திருந்தவள் போன்று எழுந்து, அவன் கைகளுக்குள் வந்து, அவன் மார்பில் தன் தலையைச் சாய்த்து அமர்ந்துகொண்டாள்.
அவன் கைகள் தானாக அவளை அவள் வயிற்றோடு சேர்த்து அணைத்துக்கொள்ள, உதடுகள் அவள் உச்சியை முத்தமிட்டு வந்தன.
இருவர் மனத்திலும் கீழே நடந்த சம்பவம்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் அதைப் பற்றிப் பேச விரும்பாது அமைதி காத்தனர்.
அவனுடைய ஒற்றைக் கரத்தை எடுத்து அதனோடு விளையாட ஆரம்பித்தாள் இளவஞ்சி. அவளின் மெல்லிய விரல்களை அவனுடைய வலிவும் வனப்புமான நீண்ட விரல்களோடு பிணைந்தன. விரல்களோடு விரல்களைக் கோர்த்து விளையாடினாள். ஒவ்வொரு விரலாக ஆராய்ந்தாள். பின் அவன் விரலில் கிடந்த அவர்களின் திருமண மோதிரத்தை உருட்டினாள்.
அவளை ஆச்சரியமாகப் பார்த்த நிலன், “வஞ்சிம்மா, என்ன?” என்றான்.
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “கீழ நான் சொன்ன மாதிரி வேலைக்கு ஆக்களைப் போடுங்க நிலன். எப்பிடியும் பிள்ளைகள் பிறந்த பிறகு இன்னுமே வேலை கூடும். மாமி பாவம்.” என்றாள்.
“இப்ப நான் அதுக்கு ஒண்டும் சொல்லேல்லையே.”
“ஏன் சொல்லித்தான் பாருங்களன்.” திரும்பி அவனை முறைத்தாள்.
அவனை முறைத்தே ஈர்க்கும் அந்த விழிகளில் முத்தமிட்டு, “இப்ப என்ன வேணும் உனக்கு? என்னோட சண்டை பிடிக்கோணுமா?” என்று அதட்டினான்.
“உங்கட அத்த கதைக்கிற கதைக்கு உங்களக் கொஞ்சவா சொல்லுறீங்க?”
“அவாக்கு குணம் சரியில்ல எண்டுறது உண்மைதான். அதுக்காக மனம் எண்டுற ஒண்டும் அவாக்கு இருக்கே வஞ்சி. ஒரு வகைல பாத்தா அவா சொன்னது எல்லாம் உண்மை. ஆரம்ப காலத்தில இருந்தே ஏதோ ஒரு வகைல ஏமாந்திருக்கிறா. இப்பவும்…” என்றவன் அதை நிறுத்திவிட்டு, “முந்தி எல்லாம் அவா இப்பிடி இல்ல வஞ்சி. கொஞ்சம் நான் எண்டு நிப்பாவே தவிர இந்தளவு மோசமா நடந்தது இல்ல. பாசமாத்தான் இருப்பா.” என்று ஜானகியை அவளுக்குப் புரியவைக்க முயன்றான்.
“எனக்கும் விளங்குது நிலன். அதுக்காக மாமிய வருத்திறது நியாயம் இல்லைதானே?”
“எனக்கும் அது கோவம்தான். எண்டாலும் பிரிச்சுக் கதைக்காத வஞ்சி. மாமாவோட ஒற்றுமையா இல்ல. மிதுன் இந்தியா போகப்போறான். வெளில காட்டாட்டியும் தனிச்சுப் போனேனே, இனி எனக்கு ஆர் இருக்கினம் எண்டு யோசிக்க மாட்டாவா? கொஞ்சம் சமாளிச்சுப் போ ப்ளீஸ்.”
அப்படித் தன்னிடம் கெஞ்சிய கணவனையே பார்த்தாள் இளவஞ்சி. அப்பழுக்கு இல்லாத ஒரு குடும்பத்துப் பிள்ளை அவன். எல்லோரையும் சமாளித்து, குடும்பத்தைக் குலையாமல் காக்கப் பிரியப்படுகிறான். அவன் மீதான பிரியம் வலுக்க இலேசாக எக்கி அவன் தாடையில் உதடுகளை ஒற்றி எடுத்தாள் இளவஞ்சி.
தன் மீதான பிரியம் வலுக்கிற பொழுதுகளில் இப்படி முத்தமிடுவது அவள் வழக்கம் என்று அறிந்திருந்தவன் இலேசாகத் தன் அணைப்பை இறுக்கி, “என்ன?” என்றான் நெருக்கமான குரலில்.
“இந்தக் கலியாணம் என்னத்துக்கு நடந்தது நிலன்?”
நிறைய நாள்களுக்குப் பிறகு மறுபடியும் வந்த கேள்வியில் அலமலந்து போனான் நிலன். பழையபடி ஆரம்பிக்கிறாளே என்று பார்க்க, அவள் கண்ணால் சிரித்துக்கொண்டிருந்தாள்.
“கொன்றுவன் உன்னை! ஒரு நிமிசம் எனக்கு உயிரே போயிற்றுது!” என்றவனின் பேச்சில் கலக்கலத்துச் சிரித்தாள் இளவஞ்சி.


