இளகி மலர்ந்து சிரித்த அந்த முகத்தை ரசித்துவிட்டு, “என்ர மனுசி சும்மாவே வடிவு. இப்ப அம்மாவாகி இன்னும் மின்னுறாள்.” என்றான் அவள் இதழ்களில் ஆழ்ந்து முத்தமிட்டு.
இளவஞ்சியின் முகமும் கனிந்து சிரித்தது. “அங்க துவாரகி அக்கா வீட்டில வச்சு அவேன்ர பேபிய நீங்க வச்சிருக்கேக்க நீங்களும் வடிவா இருந்தனீங்க நிலன்.” என்று சொன்னாள்.
அவனும் அதை உணர்ந்திருந்தான். அதுவும் குழந்தை அவனையும் தந்தையாகவே பாவித்து, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் தோளில் சாய்ந்துகொண்டபோது கிடைத்த பரவசத்தை இப்போதும் அவனால் வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை. அவளின் பிஞ்சுக் கரங்கள், அதில் இருந்த பட்டுப் போன்ற மேன்மை, செப்புச் சின்ன இதழ்கள் அவனில் எங்காவது உரசிவிட்டுப் போகையில் எல்லாம் அவன் புல்லரித்துப்போனான். நெஞ்சுக்குள்ளேயே புதைத்துக்கொள்ள வேண்டும்போல் எழுந்த பேராவலை சின்னவள் பயந்துவிடுவாள் என்றுதான் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தான்.
அந்த உணர்வில் மனையின் மீதான அணைப்பை இறுக்கி அவள் கழுத்தோரத்தில் முகம் புதைத்து, “இன்னும் கொஞ்ச மாதம். பிறகு எங்கட மகளும் என்ர கைல இருப்பா.” என்றதும் சரக்கென்று திரும்பி அவனை முறைத்தாள் இளவஞ்சி.
“பிறகு இந்த வஞ்சிய ஆர் கவனிக்கிறது?” என்றான் கொடுப்புக்குள் சிரிப்பை அதக்கியபடி.
அவள் கோபத்துடன் விலகிப் படுக்கப் போக, அவளைத் தடுத்தபடி, “இன்னும் பிறக்காத பிள்ளையோட போட்டி போடுவியாடி நீ?” என்று நெற்றி முட்டினான்.
“மிஸ்டர் பேரா, காணும் உங்கட நடிப்பு! தள்ளிப் படுங்க. எனக்கு நித்திரை வருது.” என்றதும், “உனக்கு எத்தின தரமடி சொல்லுறது. இப்பிடிச் சொல்லாத, கன்றாவியா இருக்கு எண்டு.” என்று அதட்டினான் அவன்.
“பேராவ பேரா எண்டு சொல்லாம வேற என்ன சொல்லுறது பே…” அவளின் கடைசிப் பேராவை அவன் தனக்குள் விழுங்கியிருந்தான்.
விளையாட்டாக ஆரம்பித்தது வேட்கையில் போய் நின்றது.
“கிஸ் வேணுமெண்டா கேளடி. அத விட்டுட்டு சும்மா என்னை வம்புக்கு இழுப்பியா?” உள்ளத்தில் எழுந்துவிட்ட உல்லாசம் அவளோடு சல்லாபிக்கச் சொல்ல, கைகளால் அவளை நெகிழ்த்த ஆரம்பித்தவன் தன்னை அடக்கி மெல்ல விலகினான்.
கணவனின் கைகளில் மயங்கிக்கொண்டிருந்தவள் என்ன என்றாள் கண்களால்.
“இண்டு முழுக்க உனக்கு அலைச்சல் எல்லா.”
“அதுக்கு?”
“படு!”
“பேரக்கு உடம்பில தெம்பில்ல போல.” என்றவளை அதற்குமேல் பேச விடவில்லை.
“என்னோட மட்டும் எப்ப பாத்தாலும் சேட்டை என்ன ராஸ்கல் உனக்கு!” அவளைத் தனக்கு வாகாக மாற்றியபடி அதட்டியவனின் செய்கைகளில் மருந்துக்கும் கடுமை இல்லை.
அவளின் கண் பார்த்து நடந்தான். காதல் புரிவது கூட ஒரு கலைதான் என்று அவனை வைத்துத்தான் அவள் அறிந்ததே. அவளை நெகிழ்த்தி அவன் நெகிழ்ந்து அவன் நிகழ்த்துவது ஒரு பேரின்பக் கூடல். வானோடு கலக்கும் நீலம்போல் ஆற்றோடு கலக்கும் அருவிபோல் அவளோடு சேர்ந்தான்.
அடுத்தநாள் தொழிற்சாலையில் வைத்துத்தான் பாலகுமாரன் பிரிவைப் பற்றிப் பேசியத்தைக் குறித்துச் சொன்னார் பிரபாகரன். அதுவரை அந்த விடயம் நிலனுக்குத் தெரியாது.
“என்னப்பா சொல்லுறீங்க? உங்களுக்கு ஆர் சொன்னது?” என்றான் அதிர்வுடன். என்னவோ தொடர்ந்து தன் குடும்பத்தினுள் ஒன்று மாற்றி ஒன்று என்று நடந்துகொண்டிருப்பது அவனுக்கு மிகுந்த வேதனையளித்தது.
“அப்பாதான் இரவு சொன்னவர். நீ ஒருக்கா மாமாவோட கதை தம்பி. என்ன எண்டு கேளு. கோவத்துல கதைச்சிருக்கலாம்.”
அவனும் இரண்டு நாள்கள் பொறுத்துப் பார்த்துவிட்டு அவரிடம் பேசினான். அப்போதுதான் கோபத்தில் சொல்லவில்லை, அவர் அதில் உறுதியாக இருக்கிறார் என்று தெரியவந்தது.
உள்ளூர அதிர்ச்சிதான். அதைக் காட்டிக்கொள்ளாமல், “அத்தைக்குக் கொஞ்சம் வாய் சரியில்லத்தான் மாமா. அதுக்காகப் பிரிவைப் பற்றிக் கதைக்கிறது எல்லாம் என்ன மாமா? இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்கோ. அப்பப்பா அத்தையோட கதைச்சவராம். எல்லாம் பழையபடி மாறும்.” என்றவனைப் பார்த்துக் கசப்புடன் சிரித்தார் பாலகுமாரன்.
“அண்டைக்கு என்ர மகளைக் கட்டு தம்பி எண்டு நான் கேட்ட நேரம் என்ன சொன்னனி எண்டு நினைவு இருக்கா?”
அவன் திகைப்புடன் பாக்க, “என்ன காரணமா இருந்தாலும் பிடிக்காம கட்டேலாது மாமா எண்டு சொன்னீயா இல்லையா? பிறகும் அவாவைப் பிடிச்சதாலதானே கட்டினனீ. ஆனா நான் பிடிக்காமக் கட்டினது மட்டுமில்ல, வாழ்ந்து இத்தின வருசத்த ஓட்டியும் இருக்கிறன்.” என்றார் கசந்த குரலில்.
“ஒண்டுக்கு ரெண்டு பொம்பிளைகளுக்குச் செய்த பாவத்துக்கும், அந்தத் தையல்நாயகி அம்மாவை நிம்மதியா வாழ விடாமச் செய்ததுக்கும் இது தண்டனையா இருக்கட்டும் என்டுதானப்பு நினைச்சனான். ஆனா இனியும் இந்தத் தண்டனையை அனுபவிக்க ஏலும் மாதிரி இல்லை அப்பு. இத்தின வயசுக்குப் பிறகு இந்த விடுதலையை வாங்கி நான் எதுவம் செய்யப் போறேல்ல. ஆனா என்ர மனசுக்கு ஒரு விடுதலை வேணுமா இருக்கு. எனக்கு என்ர மூச்சு நிக்க முதல் சுதந்திரமா மூச்செடுக்கோணும் மாதிரி இருக்கு.” என்றவரிடம் என்ன சொல்லுவான்?
என்ன சொல்ல இயலும்? இங்கே யாரைப் பாவம் பார்ப்பது, யாருக்காக நிற்பது என்று ஒன்றும் புரியமாட்டேன் என்றது அவனுக்கு.
தற்போதைக்கு இதைப் பற்றி மிதுன் சுவாதியிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று மட்டும் எல்லோரிடமும் சொல்லி வைத்தான். அவன் வாழ்க்கையில் முக்கியமான திருப்பத்தில் இருக்கிறான் மிதுன். அவன் மனத்தை உடைப்பதில், அதனால் அவன் கவனம் வேலையிலிருந்து சிதறுவதில் நிலனுக்கு உடன்பாடில்லை.
இளவஞ்சிக்குமே இது கொஞ்சம் அதிர்ச்சிதான். அவர்கள் இருவரையும் கொஞ்சம் விட்டுப்பிடிக்கச் சொன்னாள்.
ஏகன் இங்கிருந்த இரண்டு வாரங்களும் அவனோடுதான் இருந்தான் மிதுன். ஏகனுக்கு அவன் வேலையில், அதில் அவன் காட்டும் ஈடுபாட்டில் மிகுந்த திருப்தி. அதில் அருணைக் கொண்டே இவனுக்கான விசா எடுக்கும் வேலைகளைப் பார்த்தான்.
ஏகன் இந்தியா சென்ற அடுத்த மாதம் மிதுன் புறப்பட்டான். ஜானகி பெரிதாக ஒன்றும் சொல்ல வரவில்லை. அன்றைய பாலகுமாரனின் பேச்சிற்குப் பிறகு அவர் தனக்குள் இறுகிப்போயிருந்தார்.
எல்லோருக்கும் அவரைக் குறித்து ஒரு கலக்கம் இல்லாமல் இல்லை. காட்டிக்கொள்ளாமல் இருந்தனர். அதே நேரத்தில் அன்று கோபமாக எழுந்துபோனவரைத் தனியாக இருக்க நிலன் விடவில்லை. வலுக்கட்டாயமாக இங்கேயே வரவைத்து உணவு முதற்கொண்டு அனைத்தையும் பார்த்துக்கொண்டான்.
இந்த நேரத்தில் எந்தப் பிரச்சனைகளும் வேண்டாம் என்றெண்ணி அவர் இங்கு வரும் பொழுதுகளில் அவரோடு இருப்பதை, நேருக்கு நேர் பார்ப்பதை எல்லாம் இளவஞ்சியும் கொஞ்சம் கவனமெடுத்துத் தவிர்த்துக்கொள்ள ஓரளவிற்கு எல்லாம் சமூகமாகவே போயிற்று.
பிரிவில் காதல் பெருக்கும் என்பது எத்தனை உண்மை என்பதை நிறைமாதத்தை நெருங்கும் சுவாதி உணர்ந்தாள்.
பிள்ளை பிறக்கையில் கணவன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பது எல்லா பெண்களினதும் ஆசை. அது நடக்காதோ என்று கலங்கினாள்.
“அப்பிடி எல்லாம் யோசிக்காத. நாள் நெருங்கேக்க கட்டாயம் நான் வருவன். பிறக்கிற எங்கட பிள்ளையை நான்தான் முதல் முதல் தூக்குவன் சரியா?” என்று அவளைத் தேற்றிவிட்டுப் புறப்பட்டான் மிதுன்.
குணாளன் ஜெயந்தி தம்பதியருக்கு இந்த நேரத்தில் மருமகன் புறப்படுவது குறித்துக் கவலைதான். அவன் தன் எதிர்காலத்தை நோக்கிப் போகிறான் என்பதில் தம்மைத் தேற்றிக்கொண்டனர்.
நிலனும் விசாகனுமாகச் சென்று அவனை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தார்கள்.
இங்கே ஆண்களுக்கான தையல்நாயகியின் புதுத் தொழிற்சாலை இளவஞ்சியின் சூல்கொண்ட வயிற்றினைப் போலவே மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டிருந்தது.
ஒரு நாள் சுவாதிக்குப் பெண் குழந்தை பிறந்தாள். சொன்னது போலவே மிதுன்தான் தன் மகளை முதன் முதலில் தூக்கினான்.
சொந்த அனுபவம் பலமாக இருந்ததில் சுவாதிக்குக் குழந்தை பிறக்க ஒரு வாரம் இருந்த நிலையில் ஏகனே அவனைப் பிடித்து விரட்டாத குறையாக இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தான்.


