சுவாதி வீட்டுக்கு வந்த கொஞ்ச நாள்களில் மனமே இல்லாமல் மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டான் மிதுன். சுவாதி மகளோடு தன் பெற்றவர்கள் வீட்டில் இருந்துகொண்டாள்.
மூன்று மாதங்கள் கழிந்தபிறகு சுவாதி குழந்தையோடு ஜெயந்தியும் இந்தியா சென்று கொஞ்ச நாள்கள் இருந்துவிட்டு வருவதாகவும், அதுவரையில் குணாளன் இங்கே இளவஞ்சியோடு இருப்பதாகவும் முடிவு செய்திருந்தார்கள்.
சக்திவேலருக்கு பூட்டக்குழந்தையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அடிக்கடி சுவாதியைக் குழந்தையோடு வரவழைத்துப் பார்த்துக்கொண்டார்.
இத்தனை காலமும் பெரிதாகத் தெரியாதபோதும் சின்ன பேரனின் குழந்தை, பெரிய பேரனின் குழந்தையின் வரவை அவரை ஆவலாக எதிர்நோக்க வைத்திருந்தது.
இந்தக் கால இடைவெளிக்குள் பாலகுமாரன் முடிவை மாற்றிக்கொண்டிருப்பார் என்று எல்லோரும் நினைத்திருக்க, நிலனிடம் பிரிவிற்கான ஏற்பாட்டைப் பார்க்க முடியுமா என்று அவர் கேட்டது, எல்லோரையும் திரும்பவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதுவரை காலமும் இதைப் பற்றி நேரடியாகப் பாலகுமாரனிடம் எதுவும் கதைக்காமல் இருந்த ஜானகி, அன்று அவர் முன்னே சென்று நின்றார்.
திருமணமானதில் இருந்தே இருவருக்குள்ளும் நெருக்கமான அன்னியோன்யம் இருந்ததா தெரியாது. அதைக் குறித்து அவர்கள் கவலை கொண்டதும் இல்லை. திருமணமானது, வாழ்ந்தார்கள், பிள்ளை இல்லையே என்கிற ஏக்கம் கொஞ்சக் காலம் இருந்தது, மிதுன் பிறந்தான், காலம் ஓடிவிட்டது. இதுதான் அவர்களின் வாழ்க்கை வரலாறு.
ஆனால் இப்போது, வெட்ட வெளிச்சமாக இருவருமே ஒருவர் மற்றவரிடமிருந்து முற்றிலுமாக விலகிவிட்டது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. அந்தளவில் ஒருவர் மற்றவருக்கு அந்நியமாகத் தெரிந்தனர்.
எந்தச் சலனமும் இல்லாது அவரையே பார்த்த ஜானகி, “உள்ளுக்க எல்லாமே உடைஞ்சு போச்சு. அது இனி ஒரு காலத்திலயும் ஒட்டாது. அதுக்காக அதை உலகத்துக்கும் காட்டி என்னால கேவலப்பட்டு நிக்கேலாது. இந்த விவாகரத்துக் கேக்கிற கதையை இதோட நிப்பாட்டுங்க!” என்று உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
சாய்மனை நாற்காலியில் சரிந்திருந்த பாலகுமாரன், ஒரு வித இயலாமையுடன் விழிகளை மூடிக்கொண்டார். அதன் பிறகு அவர் அந்தப் பேச்சை எடுக்கவில்லை.
இளவஞ்சி பெறுமாதத்தை நெருங்கியிருந்தாள். வீட்டில் ஓய்வாக இரு என்று நிலன் சொன்னதை அவள் கேட்பதாக இல்லை. அவள் வேலை நெருக்கடியைப் பற்றி அறிந்திருந்தவனால் ஒரு அளவு தாண்டி வற்புறுத்தவும் முடியவில்லை.
அவன் ஏற்கனவே அமர்த்திய ஆட்கள் பொறுப்பில் இருந்ததில் அவள் தன் டிசைன்களை உருவாக்கும் பிரத்தியேகமான அறையில் ஓய்வு எடுப்பதற்கான வசதிகளைச் செய்தான்.
எப்போதும் ஆனந்தியை அவளுடனேயே இருக்கும்படி பணித்தான். கீர்த்தனாவையும் சும்மா ஒரு வேலையைப் போட்டு அங்கேயே இருக்க வைத்தான். விசாகணும் பக்கத்திலேயேதான் இருந்தான்.
கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் தொழிற்சாலையின் முழுப் பொறுப்பையும் நிலன் எடுத்திருந்தான். “இவ்வளவு காலமும் விசாகனை வச்சு வேவு பாத்தது காணாது எண்டு இப்ப நீங்களே நேரடியா இறங்கிட்டீங்க போல.” என்று அடிக்கடி இளவஞ்சி அவனைச் சீண்டுவதுண்டு.
“நீயே எனக்குத்தான் சொந்தம். இதுல நீ நடத்திற தொழில் உனக்காடி சொந்தம்?” என்பான் அவன். முடிகிற பொழுதுகளில் எல்லாம் தையல்நாயகிக்குச் சென்று அவளையும் பார்த்து வருவான்.
எப்போது வேண்டுமானாலும் பிள்ளைப் பேற்று வலி வரலாம் என்றதில் இளவஞ்சி தொழிற்சாலைக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டிருந்தாள். நிலனும் அவசியம் தாண்டி வீட்டில்தான் இருந்தான்.
அவனுடைய தொழிற்சாலையில் இருப்பது போன்ற, அளவுகளை மாத்திரம் கொடுத்துவிட்டால் அதன் டிசைனை உருவாக்கி, தானாகவே துணிகளை அளந்து வெட்டித் தரும் மெஷின் தனக்கும் வேண்டும் என்று கேட்டிருந்தாள் இளவஞ்சி.
அதற்கான மெயில் வந்திருக்கவும் அதைத் திறந்து பார்த்துவிட்டு, “வஞ்சி நீ கேட்ட மெஷின் ஓஃபர்ல வந்திருக்கு. உன்ர பிரைவேட் மெயில் ஐடி சொல்லு. அனுப்பிவிடுறன்.” என்றான்.
அலுவலக மெயிலுக்கு அனுப்ப அவனுக்கு விருப்பமில்லை. இப்போது பலர் தையல்நாயகியில் பொறுப்பில் இருப்பதால் இது வெளியில் கசிவதற்குச் சாத்தியம் உண்டு.
“போடா எருமை அற் ஜிமெயில் டொட் கொம்.(podaerumai@gmail.com)”
வலக்கையால் மடிக்கணணியில் வேலை பார்த்தபடி இடக்கையில் தேநீர் வைத்துப் பருகிக்கொண்டிருந்த நிலனுக்குப் புரையேறிப்போயிற்று. மடிக்கணனி முழுவதும் தேநீர் தெறித்திருந்தது.
“என்னடி சொல்லுறாய்?” இருமலும் சிரிப்பும் கலந்துக்கட்ட நம்ப முடியாமல் கேட்டான்.
“உண்மையா அதுதான் என்ர பிரைவேட் ஐடி!” என்று கண்ணடித்தாள் அவள்.
இந்த சேட்டைக்கார வஞ்சிதான் முதன்முதலில் அவனுக்கு அறிமுகமானவள். அவளை மீட்டுக்கொண்டதில் அவனுக்கு மிகுந்த ஆனந்தம்.
அடுத்த வாரத்திலேயே ஒரு நாள் அவளுக்கு வயிற்று வலி வந்தது. வைத்தியசாலைக்கு கொண்டு ஓடினான். ஒரு நாள் முழுக்க அன்னையைப் படாத பாடெல்லாம் படுத்திய பிறகே நிலனின் பெண்குழந்தை அவன் கையில் தவழ்ந்தாள்.
இளவஞ்சி முற்றிலும் சோர்ந்துபோயிருந்தாள். கையில் மகளோடு வந்த கணவனைக் கண்டு சோர்வுடன் புன்னகைத்தாள். நிலனால் முறுவலிக்க முடியவில்லை. கண்கள் கலங்கின. “செத்தே போய்ட்டன்.” என்றான் அவள் நெற்றியில் முத்தமிட்டு.
“நாலு பிள்ளை வேணும் எண்டு கேட்டீங்க.”
“இவாவே காணும் எனக்கு. இன்னொருக்கா நீ துடிக்கிற இந்தத் துடிப்பைப் பாக்கற தைரியம் சத்தியமா எனக்கு இல்ல.” என்றான் கரகரத்த குரலில்.
சின்ன முறுவலோடு, “கடைசிப் பிள்ளைக்கு ஏன் அந்தப் பத்து வருச இடைவெளி?” என்று வினவினாள் அவள்.
“அடுத்தடுத்துப் பிறந்தா வளந்த பிறகு அடுத்தடுத்து ஒவ்வொருத்தரா தங்க தங்கட வாழ்க்கையப் பாக்கப் போயிடுவினம். பிறகு நானும் நீயும் தனிச்சுப் போவம். கடைசிப் பிள்ளை இடைவெளி விட்டுப் பிறந்தா அந்தத் தனிமை எங்களுக்கு வராது எண்டு நினைச்சன்.” என்றவன் பேச்சில் இப்போது அவள் விழிகள் இலேசாகக் கரித்தன.
தலையசைப்பால் அவனைத் தன்னிடம் அழைத்தான்.
“என்னம்மா?” என்று நெருங்கியவன் நெற்றியில் முத்தமிட்டு, “தேங்க்ஸ்! பிடிவாதமா நிண்டு என்னைக் கட்டினதுக்கு, இவ்வளவு அன்பா என்னைப் பாக்கிறது, நான் கேட்ட நிம்மதியான சந்தோசமான வாழ்க்கையத் தந்தத்துக்கு.” என்றாள் மலர்ந்த சிரிப்போடு.
“போடி லூசு!” என்று கண்ணீரோடு சிரித்தான் அவன்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அவர்களின் செல்லப்பெண்ணைச் சுற்றியே மொத்த வீடும் இயங்க ஆரம்பித்தது. ஜானகி கூடப் பேத்தியைச் சொந்தம் கொண்டாடுவதில் இளவஞ்சியோடு போட்டி போட ஆரம்பித்தார்.
சக்திவேலரைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. அச்சு அசல் நிலனின் பிரதியாக இருந்த பூட்டக்குழந்தை அவர் உலகமானாள். விறாந்தையிலேயே அவளுக்கான ஒரு கட்டில், அவளுக்குத் தேவையான பொருள்கள் எல்லாம் குடி வந்தன.
அன்றும் மடியில் வைத்திருந்த பேத்தியில் கவனமிருக்க, “பேரா என்ர பூட்டுக்குட்டிக்கு என்ன பெயர் யோசிச்சிருக்கிறாய்?” என்று கேட்டார்.
நிலனை முந்திக்கொண்டு, “தையல்நாயகி” என்றாள் இளவஞ்சி சத்தமாக.
என்ன என்று அதிர்ந்து நிமிர்ந்த மனிதர் பூட்டக்குழந்தையையும் நிலனையும் மாறிமாறிப் பார்த்தார்.
விதி வலியதாயிற்றே!
முற்றும்.


