“என்ன?” அப்படி ஒரு விடயத்தை இம்மியளவும் எதிர்பாராதவள், தான் கேட்டதைத்தான் அவள் சொன்னாளா என்று குழம்பி அதிர்ந்தாள்.
“இஞ்ச ரெஜிஸ்ட்டர் ஒபீஸுக்கு வந்திருக்கிறன் அக்கா, ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய.”
“என்ன சொல்லுறாய்? உனக்கு என்ன விசரா?” முதற்கட்ட அதிர்வு நீங்க, அந்த இடத்தை ஆத்திரம் பற்றிக்கொள்ளச் சீறினாள் தமக்கை.
“அக்கா சொறி அக்கா!”
சும்மா விளையாடுகிறாளோ என்று நினைக்க முடியாதபடிக்குச் சுவாதியின் கலங்கிய குரலும் திணறிய பேச்சும் இவளைப் பதற வைத்தன. இப்படி ஒரு சூழ்நிலையை அதுவரையில் கையாண்டிராததில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாது இவளும் கலங்கி நின்றாள்.
“அக்கா…”
“அக்காவோ? செய்றதையும் செய்துபோட்டு இப்பதான் உனக்கு அக்கான்ர நினைவு வந்ததா? அறிவிருக்காடி உனக்கு? ஆர் அவன்? வீட்டில சொல்லாமச் செய்ற அளவுக்கு என்ன அவசரம்? முதல் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்தளவு தூரத்துக்குப் போவாய்?” இதற்குள் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அலுவலக அறையை விட்டு விரைந்து வெளியே வந்து நடக்க ஆரம்பித்திருந்தாள்.
இவளைக் கண்டுவிட்டு ஓடி வந்தான் விசாகன்.
‘காரை எடு!’ என்று அவனிடம் சைகையில் சொல்லிவிட்டு, “சொல்லு! ஆர் அவன்? ஒருத்தருக்கும் தெரியாம கலியாணம் கட்டுற அளவுக்கு அப்பிடி என்ன அவசரம் உங்களுக்கு?” என்று குரலை அடக்கிச் சீறினாள்.
“அக்கா… அது மிதுன்…” அவளின் இரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்லும் தைரியம் அவளுக்கு இல்லை.
“எந்த மிது…” எனும்போதே பிடிபட்டுவிட இளவஞ்சியின் நடை நின்றுபோயிற்று. இது அடுத்த அதிர்ச்சி. “நிலன்ர machchaan மிதுனா?” என்றாள் அப்படி இருந்துவிடக் கூடாது என்கிற படபடப்புடன்.
“ஓ…ம் அக்கா…”
“உன்ன!” அந்த நிமிடமே அவளைக் கன்னம் கன்னமாக அறையும் ஆத்திரம் எழுந்தது. போயும் போயும் அந்த ஊர் மேய்கிறவனைக் காதலித்திருக்கிறாளே! அவனுக்கு ஓராயிரம் பெண் தோழிகள்.
யாப்பாணத்தில் புதிது புதிதாக உதயமாகியிருக்கும் அத்தனை இரவு நேரத்துக் கேளிக்கை விடுதிகளுக்கும் தவறாது போகிறவன். அப்படியானவனைக் காதலித்தது போதாது என்று கலியாணம் வரை போயிருக்கிறாள்.
அவள் புத்தி வேகமாக வேலை செய்தது. ஆத்திரப்படுவதை விட நடக்கவிருக்கும் அபத்தத்திலிருந்து தங்கையைக் காப்பதே முதன்மையானது என்று புரிய, வேகமாகப் பேசினாள்.
“சுவாதி, நீ பிழை விட்ட வரைக்கும் போதும். இனியாவது அக்கா சொல்லுறதக் கேள். அவசரப்படாத. ஆசைப்படுறது வேற. அதுக்காக இப்பிடி வீட்டுக்குத் தெரியாமக் கலியாணம் செய்ய நினைக்கிறது பெரிய பிழை. அவனுக்குத்தான் அறிவில்ல எண்டா உனக்குமா என்ன செய்யோணும், என்ன செய்யக் கூடாது எண்டு தெரியாது?” அதட்டல் பாதி அனுசரணை மீதியாக அவளுக்குப் புத்தி சொல்லியபடி, விசாகனை வேகமாகப் பதிவாளர் அலுவலகத்துக்குப் போகச் சொன்னாள்.
“அக்கா… அது அவர்தான் ரெஜிஸ்ட்ரேஷன மட்டும் முடிச்சுப்போட்டுச் சொன்னா ஒருத்தராலயும் எங்களப் பிரிக்கேலாது எண்டு சொன்னவர்.”
‘ராஸ்கல். நன்றாகத் திட்டமிட்டுக் காரியம் சாதிக்கப் பார்த்திருக்கிறான்.’ பல்லைக் கடித்தாலும் அவளிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
“சரி விடு, ஏதும் நடக்க முதல் எடுத்துச் சொன்னியே. அந்தளவுக்குப் புத்தி இருந்திருக்கு உனக்கு. இப்ப அக்கா அங்கதான் வந்துகொண்டு இருக்கிறன். நான் வாறதுக்கிடையில எங்கயும் சைன் போட்டுடாத. விளங்குதா உனக்கு? நான் வாறதையும் அவனிட்டச் சொல்லாத. உன்ர ஃபிரெண்ட்ஸ் வரோணும் எண்டு ஏதாவது சொல்லு. திரும்ப திரும்பச் சொல்லுறன், அவசரப்பட்டுடாத. எங்கட மொத்த வீட்டின்ர மானம் மரியாதையும் போயிடும். என்னவோ நீதான் தங்கட வீட்டுப் பெடியனக் கெடுத்துக் காரியம் சாதிச்ச மாதிரி அவன்ர வீட்டில சொல்லுவினம். இதெல்லாம் தேவையா உனக்கு? நான் லைன்லயே இருக்கிறன். எங்க அவன்?” என்று அவளை வேறு சிந்திக்கவே விடவில்லை அவள்.
பேசி பேசித் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தாள்.
நெஞ்சு பதைக்க, இதயம் துடிக்க, ஆத்திரத்தில் இரத்தம் கொதிக்க அங்கே அவள் சென்று சேர்ந்தபோது, மாலை, தாலி என்று முழுமையான ஒரு திருமணத்திற்கான தயார்படுத்தல்கள் நடந்துகொண்டிருந்தன.
இவள் கார் உள்ளே நுழையவும், அவ்வளவு நேரமாக நடுங்கிக்கொண்டு நின்ற சுவாதி, “அக்கா!” என்றுகொண்டு ஓடி வந்தாள்.
இறங்கிய வேகத்திலேயே பளார் என்று அவள் கன்னத்தில் ஒன்று போட்டுவிட்டு, திறந்திருந்த கார் கதவு வழியாக அவளைத் தள்ளிக் கதவை அறைந்து சாற்றினாள் இளவஞ்சி.
இந்தத் திருப்பத்தை மிதுன் எதிர்பார்க்கவில்லை. யாருடன் பேசுகிறாய் என்று கேட்டபோது தோழியோடு என்று பொய் சொன்னவள் மீது சினம் பொங்கிற்று. இந்தப் பக்கம் திருமணத்திற்கு தன்னிடம் சம்மதித்துவிட்டு அந்தப் பக்கம் தமக்கையிடம் சொல்லியிருக்கிறாள்.
வந்ததும் வராததுமாக இளவஞ்சியின் செய்கை வேறு ஆத்திரத்தை உண்டாக்க, “நீங்க ஆரு அவளக் கூட்டிக்கொண்டு போக? அவள் மேஜர். எங்கட கலியாணத்தத் தடுக்க உங்களுக்கு ரைட்ஸ் இல்ல.” என்று கொதித்துக்கொண்டு வந்தான்.
அவன் இளவஞ்சியை நெருங்க விசாகன் விடவில்லை. “என்ன கதைக்கிறதா இருந்தாலும் தள்ளி நிண்டு கதைக்கோணும்!” என்று தள்ளிவிட்டான்.
“விடுங்க விசாகன். அப்பிடி என்ன கிழிக்கிறான் எண்டு நானும் பாக்கிறன். இந்த ஊர் மேயிற பரதேசிக்கு என்ர தங்கச்சி கேக்குதா? நீ மேஜரோ? அவ்வளவு பெரிய மனுசன் என்னத்துக்கடா ஒளிச்சு மறச்சு அவளக் கட்ட நினைச்சனி? இருக்கடா உனக்கு!” என்றுவிட்டு அவள் காரை நோக்கி நடக்க, சரக்கென்று வந்து நின்றது நிலனின் கார்.
பதற்றத்துடன் இறங்கி ஓடி வந்தவனிடம், “அப்பிடி என்ன அண்ணனுக்கும் தம்பிக்கும் எங்கட வீட்டுக்கையே பொம்பிள கேக்குது? ரெஜிஸ்ட்ரேஷன முடிச்சுப்போட்டுச் சொன்னா ஒருத்தராலயும் ஒண்டும் செய்யேலாது எண்டு சொன்னவனாம். எவ்வளவு தைரியம் அவனுக்கு?” என்று அவனிடமும் கொதித்தாள்.
“வஞ்சி! கொஞ்சம் நிதானமா இரு. எனக்கும் ஒண்டும் விளங்கேல்ல.” என்று அதட்டினான் நிலன்.
“சந்தி சிரிக்கப் பாத்தது என்ர தங்கச்சின்ர வாழ்க்கை. நான் அமைதியா இருக்கோணுமோ? என்ன வேணும் உங்க எல்லாருக்கும்? என்னத்துக்கு இப்பிடி எங்களையே சுத்தி சுத்தி வாறீங்க? ஒருத்தியத் தொழில்ல நேருக்கு நேர் நிண்டு வெல்ல முடியேல்ல எண்டதும் இந்தளவுக்கு மோசமா இறங்குவீங்களா? கேவலமா இல்ல? தரம் கெட்ட குடும்பம்!” என்று சீறிவிட்டு அவள் காரில் பறந்துவிட, “என்னடா இது?” என்றான் நிலன், மிதுனிடம் வெறுப்பும் வேதனையுமாக.
“அண்ணா…” முறையின்படி நிலன் மிதுனுக்கு மச்சான் என்றாலுமே சின்ன வயதிலிருந்தே அண்ணா என்றே கூப்பிடப் பழகியிருந்தான் மிதுன்.
“என்ன வேலை பாத்து வச்சிருக்கிறாய் மிதுன்? பிடிச்சிருந்தா வீட்டில சொல்ல மாட்டியா? என்னட்டயாவது சொல்லியிருக்கலாமே.” இனித் தான் இளவஞ்சியை மணக்க முடியாதே என்கிற வேதனை இந்தப் பிரச்னைக்கு மத்தியிலும் அவனை அரித்தது. உறவு முறை பிழைத்துவிட்டதே!
“அண்ணா…”
“அப்பப்பா எப்பிடியடா இதத் தாங்குவார்? அவர் செல்லம் குடுக்கிறதாலதான் நீ கெட்டுப்போறாய் எண்டு அத்த சொன்னாலும், என்ர பேரன் அப்பிடியெல்லாம் இல்ல எண்டு நிக்கிற மனுசன். உன்ர அப்பா அம்மாவப் பற்றிக் கூட யோசிக்கேல்லையா நீ? அத்தை கத்தப்போறா.”
“அண்ணா…” அவனும் நெஞ்சு முழுக்கக் கலக்கத்தோடுதான் அத்தனை ஆயத்தங்களையும் செய்தான். இப்போது தமையனும் இப்படிக் கேட்கக் குன்றிப்போனான்.
“என்ன சொல்லிப்போட்டுப் போனவள் எண்டு பாத்தாய்தானே? உன்னை நம்பின எங்க எல்லாரையும் கேவலப்படுத்திப்போட்டாய்.” என்றதும் மிதுனின் விழிகள் கலங்கிப் போயிற்று.
அவன் நண்பர்களுக்குக் கூட என்ன செய்வது என்று தெரியாத நிலை.
ஆனால், இனியும் எதையும் சொல்லாமல் இருக்க முடியாது என்று தெரிய, தமையனை நெருங்கி, “அண்ணா, அவள் பிரக்னென்ட்டா இருக்கிறாள்…” என்று எச்சில் விழுங்கினான்.
உச்சபட்ச அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டான் நிலன். மிதுனின் முகம் பார்க்கக் கூட விருப்பம் இல்லாது போயிற்று. என்னவோ எல்லாமே வெறுத்த நிலை.
அதைவிட, இளவஞ்சி இனித் தனக்கில்லை என்கிற நிஜம் திரும்ப திரும்ப அவன் முகத்தில் அறைந்தது. அதைச் சமாளிக்க முடியாமல் அப்படியே தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டார். அப்போதுதான் தனக்கு அவளை எந்தளவில் பிடித்திருக்கிறது என்பதையும் உணர்ந்தான்.
‘வஞ்சி!’ அவன் மனம் அரற்றியது.
மிதுனுக்கும் மச்சானின் நிலை விளங்கிற்று. இன்னுமே குன்றிப்போனான். அவன் இளவஞ்சியை மணக்கக் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று இவனுக்கும் தெரியுமே.
முதலில் தன்னைக் கட்டுக்குள் வைத்திருக்கத்தான் நினைத்தான். ஆனால், சுவாதியின் மீதான ஆர்வமும் ஆசையும் அதையும் தாண்டியதாக இருந்ததில் மனத்தைப் பறிகொடுத்திருந்தான்.
திருமணத்தை நடத்திவிட்டே இரு வீட்டிலும் சொல்வோம் என்று அவன் நினைத்ததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால், இப்போது உடைந்துபோய் அமர்ந்திருக்கும் சகோதரனுக்கு ஒப்பானவனைக் காண்கையில் நெஞ்சு குத்தியது.
“சத்தியமா உன்னைக் கன்னம் கன்னமா அறையோணும் மாதிரி இருக்கு. நீயும் கேவலப்பட்டு அந்தப் பிள்ளையையும் ரெண்டு வீட்டுக்கும் முன்னால கூனிக்குறுகி நிக்க வச்சிருக்கிறாய். என்ர கண்ணுக்கு முன்னால நிக்காம அங்கால போ!” என்று அவனைத் துரத்தி விட்டுவிட்டுத் தனியாக வந்து தந்தைக்கு அழைத்தான் நிலன்.
அவசரப்பட்டு ஜானகியிடம் விடயத்தைக் கொண்டுபோக அவன் விரும்பவில்லை. சுவாதி இருக்கும் நிலைக்குப் பேசக் கூடாத முறையில் பேசி எல்லாவற்றையும் கெடுத்துவிடக்கூடியவர்.
அதில் நடந்ததையெல்லாம் தந்தையிடம் சொல்லி, அவரின் அதிர்ச்சியையும் கோபத்தையும் சமாளித்து, அவரை இளவஞ்சி வீட்டுக்கு அன்னையையும் அழைத்துக்கொண்டு வரச் சொன்னான்.
சொல்லாமல் கொள்ளாமல் திருமணத்தைப் பதிவு செய்கிறவரை வந்ததற்கே கொதிநிலையின் உச்சத்திற்குச் சென்றுவிட்ட இளவஞ்சி, இதையும் அறிந்தால் என்ன செய்வாள் என்று அவனால் கணிக்கவே முடியவில்லை. என்ன நடந்தாலும் சமாளிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு மிதுனோடு தானும் இளவஞ்சி வீட்டிற்குப் புறப்பட்டான்.