அழகென்ற சொல்லுக்கு அவளே 6 – 1

இளவஞ்சியை நிலன் வீட்டினர் திருமணத்திற்கு கேட்டுவிட்டிருந்ததில் இருந்துதான் மிதுன் என்கிற பெயர் சுவாதிக்கு அறிமுகமானது. அதுவும் அவன் சுகவாசி, பெண்களோடு சுற்றுபவன், உல்லாசி என்றெல்லாம் காதில் விழுந்தபோது, அப்படி என்ன பெரிய மன்மதக் குஞ்சு என்கிற குறுகுறுப்போடுதான் இன்ஸ்டாவில் அவனைத் தேடினாள்.

அங்கே அவனைப் பார்த்த கணம் அவளுக்குள் என்னவோ நிகழ்ந்தது உண்மை. அட்டகாசமாக, பார்க்கிற பெண்களின் இதயங்களைக் கொள்ளை கொள்கிறவனாக, நவயுக நாயகனாக, மிகுந்த வசீகரனாக இருந்தான்.

அத்தனை புகைப்படங்களிலும் பெரும் நண்பர்கள் கூட்டமொன்று அவனைச் சுற்றியிருக்க, மலை உச்சியிலிருந்து விழும் அருவி போன்று உற்சாகமாகக் காட்சி தந்தான்.

வாயில் ஏதோ ஒரு கோக் டின்னை சரித்தபடி, யாரோ ஒருவரின் கழுத்தைச் சுற்றிக் கையைப் போட்டு இறுக்கியபடி, யாரையாவது தூக்கியபடி, கூட்டமாக உணவு உண்டபடி, எங்காவது டூர் செல்வது என்று அவன் உலகமே வண்ணமயமாயிருந்தது.

வசதி வாய்ப்புகள் அனைத்தும் இருந்தும் அவளுக்கு மறுக்கப்பட்ட அவள் விரும்பும் அந்த உல்லாச வாழ்க்கையைத் தன் புகைப்படங்களில் அப்படியே அச்சொட்டாகக் காட்டிக்கொண்டிருந்தான் அவன்.

என்னால் இப்படியெல்லாம் நண்பர்களோடு நேரம் செலவழிக்கவோ, ஊர் சுற்றவோ முடியவில்லையே என்கிற ஏக்கம், அவனைத் தேடி தேடிப் பார்க்க வைத்தது.

அந்தளவில் கட்டுப்பாடு விதிப்பதிலும் கடுமை காட்டுவதிலும் இளவஞ்சி தையல்நாயகியின் நேரடி வார்ப்பு.

நாளடைவில் இவளாகத்தான் அவனைப் பின்தொடர ஆரம்பித்தாள். அதுவும் ஒவ்வொருவரின் கருத்துகளுக்கும் அவன் கொடுக்கும் பதில்களை வாசித்து ரசிப்பதில் அலாதிப் பிரியம் அவளுக்கு.

இப்படி, நாளாந்தம் அவனைப் பார்த்து பார்த்து, அவளுக்கு மிகவுமே தெரிந்த ஒருவன் போன்ற மாயை, அவள் மனத்தில் அவளறியாமலேயே வந்துவிட்டிருந்தது.

ஒருமுறை அவன் மாலைதீவின் கண்ணாடி போன்ற கடற்கரையில் ஒரு வாரத்தைக் கூத்தும் கும்மாளமுமாகக் கழித்துவிட்டு வந்ததைப் பார்த்தவளால் சும்மா இருக்க முடியாமல் போயிற்று.

‘ஹேய் மேன், ஊர்ல உள்ளவன்ர வயித்தெரிச்சல எல்லாம் வாங்கிக் கட்டாம போய்ப் பாக்கிற வேலையப் பாரடா!’ என்று எரிச்சலும் சிரிப்புமாகக் கருத்திட்டிருந்தாள்.

போட்ட பிறகு போட்டிருக்க வேண்டாமோ என்று நினைத்தாலும் என்ன பதில் வரும் என்று ஒரு குறுகுறுப்பு. அந்தளவில் யார், என்ன மாதிரியாகக் கருத்திட்டாலும் சிரித்துக்கொண்டே பதிலடி கொடுப்பதில் அவன் வல்லவன் என்று அவளுக்குத் தெரியும்.

அவனும் அவளை ஏமாற்றவில்லை. ‘ஓகே அன்ட்ரி. டன் அன்ட்ரி. தேங்க் யு அன்ட்ரி. எப்பவும் உங்கட சப்போர்ட் எனக்கு வேணும் அன்ட்ரி.’ என்று போட்டுவிடவும் கொதித்து எழுந்துவிட்டாள் சுவாதி.

பதிலுக்குப் பதில் என்று ஆரம்பித்த வம்புச் சண்டை உள்பெட்டிக்குச் சென்று உள்ளூரில் சந்திப்பதில் வந்து முடிந்தது மாத்திரமல்லாமல், ஈராயிரக் குழவியான அவள், மணிக்கு இரண்டாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் காதலில் பயணித்ததன் பலன், காதலில் விழுந்த வேகத்திலேயே கட்டிலிலும் விழுந்திருந்தாள்.

அதுவரையிலும் கனவுலகில் மிதந்துகொண்டிருந்தவள் அப்போதுதான் பூமிக்கு வந்து சேர்ந்தாள். பயம், பதற்றம், வீட்டினரின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாத குற்றவுணர்ச்சி எல்லாம் மெல்ல மெல்லத் தலையை நீட்டின.

இதெல்லாம் போதாது என்று கருத்தரித்துவிட்டோம் என்று அறிந்த நிமிடத்தில் அவளுக்குள் பெரும் பூகம்பமே நிகழ்ந்திருந்தது. வெளியில் சொல்லத் தைரியமற்று, யாருக்கும் தெரியாமல் எங்காவது ஓடிவிடலாமா என்று அவள் அழுது புலம்பியதில்தான் மிதுன் திருமண முடிவுக்கு வந்தான்.

அவனும் இப்படியாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அவனுக்கும் தன் வீட்டினரிடம் இதைச் சொல்லத் தைரியமில்லை. விரைந்து திருமணத்தை முடித்துவிட்டு, நேசித்தோம், மணந்துகொண்டோம் என்று முடித்துவிட்டால் குழந்தையைக் கூட அதன் பிறகு உண்டானது என்று சமாளித்துவிடலாம் என்று எண்ணினான்.

அதைச் சொல்லித்தான் அவளிடம் சம்மதமும் வாங்கினான்.

இளவஞ்சி நிலனோடான திருமணத்தை முற்றிலுமாக மறுத்துவிட்டதால் அதைக் குறித்து சுவாதி பெரிதாக யோசிக்கவில்லை.

ஆனால், மிதுன் அதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிய கணத்திலிருந்து, மிக அதிகமான குற்றவுணர்ச்சி சுவாதியைப் போட்டுக் கரையானாகத் தின்ன ஆரம்பித்திருந்தது. தன்னோடு தானே போராடி போராடிக் களைத்துப்போனாள்.

அறிவு வேறு, நீ செய்தவை எல்லாம் பெரும் தவறுகள் என்றால் இனிச் செய்யப்போவது அவற்றின் உச்சம் என்று அறிவுறுத்திக்கொண்டே இருந்தது. கடைசியில் இந்த மன அழுத்தங்களை எல்லாம் சமாளிக்க முடியாமல் தமக்கைக்கு அழைத்து அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

இப்போது இளவஞ்சி சொன்ன விடயத்தைக் கேட்டு மொத்த வீடும் மூச்சடைத்துப்போய் நின்றது. ஜெயந்தி சுவாதியைப் போட்டு அடித்தார். குணாளன் வார்த்தைகளற்று அப்படியே அமர்ந்துவிட்டார். பிள்ளை வளர்ப்பில் மொத்தமாகத் தோற்றுவிட்டது போன்ற உணர்வு அவரைப் போட்டு வதைத்தது.

அது போதாது என்று என்னவோ ஆழ்துளைக்குள் விழுந்துவிட்டது போன்று மூச்சடைத்த நிலை.

அந்த வீட்டின் கடைக்குட்டி சுதாகரை வந்ததும் வராததுமாக விசாகனோடு தொழிற்சாலைக்கு அனுப்பியிருந்தாள் இளவஞ்சி. சுவாதி அவன் தமக்கை. அவள் பற்றின பிழையான பிம்பம் அவனுள் விழ வேண்டாம் என்று நினைத்தாள்.

அப்போது நிலனின் காரும், அதற்குப் பின்னால் பிரபாகரனின் காரும் வந்து அவர்களின் வீட்டின் முன்னே நின்றன.

வீட்டினுள் வந்தவர்களை அங்கே நின்ற யாரும் வரவேற்கத் தயாராயில்லை. தொட்டதும் வெடிக்கக் காத்திருக்கும் கண்ணிவெடியின் நிலையில் இருந்தது அந்த வீடு.

அதுவும் சினத்திலும் சீற்றத்திலும் சிவந்து கொதித்துக்கொண்டிருந்த இளவஞ்சியின் முகத்தைக் கண்டு, பிரபாகரனே பேச்சை ஆரம்பிக்கத் தயங்கினார்.

ஆனால் இளவஞ்சி, “இஞ்ச என்னத்துக்கு வந்திருக்கிறீங்க?” என்று அவர்கள் முகத்துக்கு நேராகவே கேட்டாள்.

பிரபாகரனுக்கு முகம் கறுத்துவிட, “வஞ்சி!” என்று அதட்டினான் நிலன்.

“அம்மாச்சி!” என்றார் குணாளன் இறைஞ்சலாக.

“என்னப்பா என்ன? வீடு தேடி வந்த மனுசர் விரோதியா இருந்தாலுமே இப்பிடிக் கேக்கக் கூடாது எண்டு எனக்கும் தெரியும். ஆனா, தாங்க நினைச்சது நடக்கோணும் எண்டுறதுக்காக எவ்வளவு கீழவும் இறங்குவம் எண்டுற இந்தக் குடும்பத்தை என்னால அப்பிடி வரவேற்க்கேலாது!” என்று அவரிடம் பதிலிறுத்துவிட்டு,

அவர்கள் புறம் திரும்பி, “உடச்சுச் சொல்லுங்க. என்ன வேணும் உங்களுக்கு? உங்கட வீட்டிலயும்தானே ஒரு பொம்பிளைப் பிள்ளை இருக்கிறா. அப்பிடி இருந்தும் இன்னொரு பொம்பிளைப் பிள்ளையின்ர மானத்தோட விளையாடுவீங்களா? எதையும் நேரா கதைக்கத் தைரியம் இல்லாம ஏன் இவ்வளவு கேவலமா நடக்கிறீங்க?” என்று சீறினாள்.

அவள் பேச்சில் சந்திரமதிக்குக் கண்ணீரே வந்துவிட்டது. அதைக் கண்ட மிதுனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பதிவாளர் அலுவலகத்தில் வைத்து அவள் நடந்துகொண்ட விதத்திலேயே மிகுந்த கோபம் கொண்டிருந்தான். இப்போது தன் வீட்டினரையும் அவள் அவமானப்படுத்தவும் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை.

“ஹல்லோ! பிழை செய்தது நான். என்ன கதைக்கிறதா இருந்தாலும் என்னோட கதைங்க. என்ர மாமாட்ட இல்ல!” என்றவனிடம், “நீ வாயை மூடு!” என்று குரலை உயர்த்தினாள் அவள்.

“உன்ர வீட்டாக்களை இந்த நிலைல நிப்பாட்டினவனே நீதான். நீ கோவப்படுவியோ என்னட்ட? அந்தளவுக்கு உன்ர குடும்பமும் குடும்பத்தின்ர மரியாதையும் உனக்கு முக்கியம் எண்டா வாலச் சுருட்டிக்கொண்டு இருந்திருக்கோணும். என்ர தங்கச்சியோட பழகி இருக்கக் கூடாது.”

“நான் மட்டுமா பழகினனான்? அவளும்தானே என்னோட பழகினவள். என்னவோ அவள் பேபி மாதிரியும் நான் அவளை ஏமாத்தின மாதிரியும் கதைக்கிறீங்க?” என்றவனை அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் சுவாதி.

இளவஞ்சிக்கோ கண்மண் தெரியாத ஆத்திரம். “சொன்னன் பாத்தியா? எப்பிடிப் பேச்சு மாறுது எண்டு பார். தேவையா உனக்கு இது?” என்று கேட்ட தமக்கைக்குப் பதில் சொல்ல இயலாமல் கண்ணீர் உகுத்தாள் சுவாதி.

மிதுனை அவள் கண்ணீர் சுடாமல் இல்லை. ஆனாலும் அவள் புறம் திரும்பவில்லை அவன். தப்புச் செய்தது இருவரும். அதை முடிந்தவரையில் நேராக்கிச் சீராக்க முயன்றான் அவன்.

அவன் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையை தலையை ஆட்டிவிட்டுக் கடைசியில் காரியத்தையே கெடுத்தது அவள். இதில், அவன் குடும்பத்தினர் அவன் முன்னாலேயே அவமானப்பட்டு நிற்க அவனால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?

நிலனுக்கு அத்தனையும் கையை மீறிக்கொண்டிருப்பது தெரிய, “வஞ்சி! கொஞ்சம் நிதானமா இரு. என்ன எண்டு கதைப்பம்.” என்று சமாதானம் செய்தான்.

“இதுல கதைக்க என்ன கிடக்கு? தொழில்ல போட்டி போடத் தைரியம் இல்லாம இப்பிடி எல்லாம் நடக்க வெக்…” என்றவளை, “வஞ்சி!” என்று உயர்ந்து ஒலித்த நிலனின் குரல் அடக்கிற்று.

“ஆத்திரப்பட்டு வார்த்தைகளை விடாத. நாங்களும் உன்ர நிலமைலதான் இருக்கிறம். இதுக்கும் தொழிலுக்கும் எந்தச் சம்மந்தமுமில்ல.” என்றான் அவன்.

அதை நம்ப அவள் தயாராயில்லை.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock