அழகென்ற சொல்லுக்கு அவளே 7 – 1

தன் வாழ் நாளில் எந்த நிலையில் அவளைப் பார்த்துவிடவே கூடாது என்று குணாளன் நினைத்திருந்தாரோ, அந்த நிலையில் பார்த்த மனிதர் துடித்துப்போனார். அவர் உள்ளத்தோடு சேர்ந்து உயிரும் அழுதது.

தன்னோடு சேர்ந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விட வேண்டும் என்று அவர் நினைத்த உண்மை, இப்படித் தன் மனைவியாலேயே வெளியில் வரும் என்று நினைக்கவே இல்லை.

அவளுக்குத் தெரிந்தது போதாமல் நிலன் வீட்டினருக்கும் தெரிந்துபோயிற்றே. அதை அவரால் இன்னுமே தாங்கிக்கொள்ள முடியவில்லை. இத்தனை வருடங்களாக இரகசியமாக இருந்த ஒன்று இனிப் பரகசியமாகிவிடும். அவர் சீராட்டிப் பாராட்டி வளர்த்த மகள், இனிப் பலர் வாயிலும் விழுந்து எழும்பப்போகிறாள். அதுவும் அந்தச் சக்திவேலர் ஒருவர் இதை அறிந்தால் போதுமே! இனி என்னவெல்லாம் நடக்குமோ! நினைக்கவே நெஞ்சு நடுங்கியது. மனைவியின்பால் ஆத்திரமும் வெறுப்பும் உண்டாயிற்று.

இப்படி பல விடயங்கள் புழையைப் போன்று அவருக்குள் முட்டி மோதினாலும், “அம்மாச்சி! ஆர் என்ன சொன்னாலும் நீ என்ர மகள்தானம்மா.” என்றார் கண்ணீரோடு.

அவர் என்னவோ நான் பெறாவிட்டாலும் நீ என் மகள்தான் என்று அடித்துச் சொல்லத்தான் அப்படிச் சொன்னார். அதன் மூலம் அவரும் அவரை அறியாமலேயே அவள் தன் மகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டதை உணரவில்லை. உணர்ந்தவள் அவள் நெஞ்சின் உள்ளே சுருக்கென்று ஆழமாய் எதுவோ பாய்ந்தது.

எப்போதும் எதிரில் நிற்பவர் தன் உணர்வுகளைப் படித்துவிடவோ, தன் மனத்தில் ஓடுவதைக் கணித்துவிடவோ கூடாது என்பதில் மிகுந்த கவனமாய் இருப்பாள் இளவஞ்சி. கம்பீரம் அவளது கவசமென்றால் நிதானம் எப்போதும் அவளோடு கூடவே இருப்பது.

இன்றைய அவளின் கட்டுப்பாடு உடைந்ததற்குக் காரணம், தன்னிடம் அவர்களின் தந்திரம் எடுபடவில்லை என்றதும் சுவாதியை வலை போட்டுச் சிக்கவைத்துவிட்டார்களே என்கிற சினம்.

காதல் என்கிற பெயரில் அவள் மனத்தைக் கலைத்தது போதாது என்று வயிற்றில் குழந்தையையும் கொடுக்கிற அளவுக்குக் குடும்பமே இறங்குமா என்கிற வெறுப்பு. இத்தனை கீழ்த்தரமான குடும்பத்தில் போய் அவள் வாழ்வதா என்கிற கோபம்.

முதலில் அவள் மிதுன் சுவாதியைக் காதலிப்பதாக நம்பவில்லை. அவன் சுவாதியை அப்படி நம்ப வைத்து ஏமாற்றியிருக்கிறான் என்றே உறுதியாக எண்ணினாள். அதனாலதான் அப்படிச் சொன்னாள்.

கடைசியில் என்னாயிற்று? அவள் இவளின் தங்கையே இல்லையாம். இல்லை, அப்படிச் சொல்வது கூடத் தவறு! இவள் அந்த வீட்டின் பிள்ளையே இல்லையாம்.

உள்ளே உள்ளம் அழ நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டாள்.

அப்படி நிலைகுலைந்து நின்றவளை நிலனால் பார்க்க முடியவில்லை. என்னவோ தானே நொடியில் யாருமில்லாமல் தனித்துவிடப்பட்டதுபோல் உணர்ந்தான். ஓடிப்போய், ‘யார் இல்லாவிட்டால் என்ன, நான் இருக்கிறேன் உனக்கு’ என்று சொல்ல நினைத்தான். தன் கைகளுக்குள் வைத்து அவள் மனத்தின் காயத்தை ஆற்றத் துடித்தான். அத்தனை பேரின் முன்னாலும் முடியாதே!

அதே நேரத்தில் அவள் சுவாதியின் தமக்கை இல்லை என்கிற உண்மை அவனுக்குள் பெரும் ஆசுவாசத்தத்தைத் தந்தது. இனி எப்படியாவது அவளைத் தன்னுடையவளாக்காமல் ஓய்வதில்லை என்று முடிவு கட்டிக்கொண்டான்.

அந்த முடிவு தந்த உந்துதலில், “வஞ்சி!” என்றபடி அவளிடம் வந்தான்.

அவ்வளவு நேரமாக நிமிர்ந்து நின்று அவர்களைப் பந்தாடிக்கொண்டிருந்தவள் வார்த்தைகள் அற்ற ஊமையாக அவனைப் பார்த்தாள். அப்போதுதான் அவன், அவர்கள் இங்கே வந்திருக்கும் காரணம், தன் நிலை, தான் இந்த இடத்தில் அதிகப்படி என்பதெல்லாம் உறைத்தன.

ஆழ மூச்சு ஒன்றை எடுத்துவிட்டுத் தன்னை நிதானப்படுத்தினாள். பின் பிரபாகரனை நோக்கி, “நான் கதைச்ச எல்லாத்துக்கும் சொறி அங்கிள். சுவாதிய என்ர தங்கச்சி எண்டு நினைச்சுத்தான் கதைச்சனான். ஆனா, எனக்கும் இந்த வீட்டுக்கும் உறவே இல்லை எண்டு இப்பதான் தெரிய வந்திருக்கு. அதால என்ன எண்டாலும் அவேயலோடயே கதச்சு முடிவெடுங்கோ.” என்று குணாளன் ஜெயந்தியைக் காட்டிச் சொல்லிவிட்டு நடந்தவள் நின்று, “சொறி மிதுன்!” என்று மிதுனிடமும் மன்னிப்பை வேண்டிவிட்டுப் போகவும் மிதுனுக்கே ஒரு மாதிரியாகிற்று.

குணாளன் உடைந்தே போனார். “அம்மாச்சி இளவஞ்சி!” தன்னை மறந்து அவளைத் தடுக்கப் போனவர் தடுமாறி விழப்போனார். ஓடிப்போய் அவரைப் பற்றி அமர்த்தினான் நிலன்.

“நீங்க இருங்க அங்கிள். நான் பாக்கிறன்.” என்றுவிட்டு அவன் வெளியே வந்து பார்ப்பதற்கிடையில் அங்கே வந்த விசாகனோடு காரில் புறப்பட்டிருந்தாள் இளவஞ்சி.

இன்னுமே அவள் உள்ளம், தான் அறிந்துகொண்ட உண்மையை ஜீரணிக்க முடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தது. நெஞ்செல்லாம் விண்டு விண்டு வலித்தது.

எத்தனை சாதாரணமாக ஆரம்பித்த நாள், எவ்வளவு பெரிய அதிர்ச்சிகளை எல்லாம் அவள் தலையில் கொட்டிவிட்டது? நான் தையல்நாயகியின் பேத்தி இல்லையா, குணாளனின் மகள் இல்லையா என்கிற கேள்விகளே இன்னும் அவளைப் போட்டு உலுக்கிக்கொண்டிருந்தன.

அவளின் அடித்தளமே ஆட்டம்கண்டுவிட்டதே. இனி என்ன செய்வாள்? நெஞ்செல்லாம் பெரும் இரைச்சல். தொண்டைக்குள் வெளியிட முடியா ஒரு துயர். அப்படியே தனக்குள் விழுங்க முயன்றுகொண்டிருந்தாள். முடிய வேண்டுமே!

அவள் சரியில்லை என்று காரில் ஏறுகையிலேயே விசாகன் கவனித்திருந்தான். அவளாக ஏதாவது சொல்வாள் என்று அவன் காத்திருக்க, அவள் இங்கேயே இல்லை என்பதை அதன் பிறகுதான் கண்டுகொண்டான்.

என்னாயிற்று? அதை எப்படிக் கேட்பது என்று அவன் யோசித்துக்கொண்டிருக்க, “விசாகன், உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? இந்தப் பூமிப் பந்தே எங்களுக்குச் சொந்தமில்லையாம். அப்ப சொந்தமெண்டு நாங்க நினைச்சுக்கொண்டு இருக்கிறதெல்லாம்?” என்றாள் அவள் திடீரெண்டு.

“மேம்!”

“ஆரை நம்புறது, ஆரைச் சொந்தம் எண்டு நினைக்கிறது எண்டு ஒண்டுமே விளங்கேல்ல விசாகன்.” என்றாள் விரக்தியோடு.

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாது அவளைப் பார்த்தான் விசாகன்.

இதற்குள் தொழிற்சாலை வந்திருந்தது. காரிலிருந்து இறங்கியவள் ஒரு கணம் அப்படியே நின்றாள்.

அங்கிருந்து ஓடி வந்துவிட்டாள். இங்கு மட்டும் அவளுக்கு உரிமை உண்டா என்ன? அவர்களுக்குச் சொந்தமான சொத்து சுகத்தை எல்லாம் ஆண்டு அனுபவிக்கிறவள் அவளாமே! அப்படி எதை ஆண்டு அனுபவித்தாள் என்று அவளுக்கு விளங்கவேயில்லை.

இப்படியே எங்காவது போய்விடலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். அப்படியே போவதாக இருந்தால் கூட அத்தனையையும் முறையாக அவர்களிடம் ஒப்படைக்காமல் முடியாதே!

தன்னைச் சமாளித்துக்கொண்டு உள்ளே நடந்தாள்.

எப்போதும்போல் அவளை வரவேற்க வாசலிலேயே புன்னகை முகமாகக் காத்திருந்தார் தையல்நாயகி. அவரைப் பார்த்த நொடியில் முற்றாக உடைந்துவிடப்பார்த்தாள் இளவஞ்சி.

‘என்னச் சுத்தி என்ன நடக்குது அப்பம்மா? நீங்க கூட இதைப் பற்றி ஒரு வார்த்த சொல்லேல்லையே?’ அவள் உள்ளம் அழுதது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock