‘உங்கள நான் அப்பம்மா எண்டு சொல்லக் கூடாதோ? என்னை வளத்த அம்மா எண்டு சொல்லோணுமோ?’
சட்டென்று அவரைக் கடந்து சென்று, அவளின் அலுவலக அறைக்குள் நுழைந்து கைப்பையை வைத்துவிட்டு, தொழிற்சாலையினுள் விடுவிடு என்று நடக்க ஆரம்பித்தாள்.
இதுவரை காலமும் அவள் தையல்நாயகியின் பேத்தி. குணாளன் ஜெயந்தியின் மூத்த மகள். சுவாதி, சுதாகரின் தமக்கை. தையல்நாயகி ஆடைத் தொழிற்சாலையின் முதலாளி. மதிப்பும் மரியாதையும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்தவள்.
இன்றானால் இது எதுவும் அவள் அடையாளங்கள் இல்லையாம். அநாதையாம். எடுத்து வளர்த்தார்களாம். எல்லோரும் அவளைத் தையல்நாயகியின் வார்ப்பு என்பார்களே. அது பொய்யா என்ன?
நடையின் வேகத்தைக் கூட்டித் தன்னைத் துரத்தி துரத்தி வதைக்கும் மனத்தின் போராட்டத்திலிருந்து தப்பிக்க நினைத்தாள். முடியவேயில்லை.
இத்தனை வருடத்து வாழ்க்கையில் மேடு பள்ளங்களை அவள் பெரிதாகப் பார்த்ததில்லை. ஆனால், தொழிலில் வயதுக்கு மீறிய சவால்களைச் சந்தித்தவள். அத்தனையையும் நல்ல முறையில் கடந்து வந்தவளும் கூட.
ஆனால் இன்று, அவளுக்குக் கிடைத்த அதிர்ச்சி அவை அத்தனையையும் மீறியதாய் இருந்தது. மலையின் உச்சியில் இருந்தவளைப் பிடித்து யாரோ அதலபாதாளத்தில் தள்ளிவிட்டாற்போல் வலித்தது.
அவளைப் பெற்றவர்கள் யார்? அவளை ஏன் தூக்கி எறிந்தார்கள்? அவள் எப்படி இவர்கள் கையில் வந்தாள்? ஓராயிரம் கேள்விகள் அவளைச் சுற்றிவளைத்தன. அத்தனைக்குமான பதில்களைச் சொல்ல வேண்டியவர் குணாளன். ஆனால், அவளால் அவர் முகம் பார்த்து இதையெல்லாம் கேட்க முடியும் போல் இல்லை.
அங்கிருந்த யாரினதும் இரக்கப் பார்வையையோ, பரிதாபப் பார்வையையோ எதிர்கொள்ள இயலாமல்தான் மன்னிப்பைக் கேட்டுவிட்டு ஓடி வந்திருந்தாள்.
ஆனால், அவளைக் கொல்லும் இந்தக் கழிவிரக்கத்தை என்ன செய்ய?
இன்னும் வேகமாக நடந்தாள். எதிர்ப்பட்ட ஊழியர்கள் மிகுந்த பணிவுடன் நடந்துகொண்டனர்.
இத்தனை நாள்களும் அதையெல்லாம் அன்போடு ஏற்றுக்கொண்டவளின் உள்ளம் இன்று, இதெல்லாம் உனக்கானது இல்லை, உனக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை, நீயும் இவர்களில் ஒருத்தி என்று அறைந்து சொன்னது.
அவள் யாரில் ஒருத்தியாக இருக்கிறாள் என்பது அவளுக்கு ஒரு விடயமே இல்லை. ஆனால், இத்தனை நாள்களும் என்னுடையது என்கிற சொந்தத்தோடும் உரிமையோடும் நடந்த இடத்தில் இன்று கால்கள் கூசின. உரிமையற்ற உணர்வொன்று அவளைச் சூழ்ந்தது.
சொல்லி ஆறுவதற்கோ, தோள் சாய்வதற்கோ யாருமே இல்லாமல் தனித்தே நிற்கிறாள். அப்படி யாரிடமும் சொல்வதோ, ஆறுதல் தேடுவதோ அவளுக்குப் பழக்கமும் இல்லாத ஒன்றாயிற்றே.
*****
இங்கே அவள் வீட்டில் யாருக்கு என்ன கதைப்பது என்று தெரியாத நிலை. குணாளன் மொத்தமாய் இடிந்து போயிருந்தார். ஜெயந்தியின் புறம் திரும்பவேயில்லை. சுவாதிக்குமே இளவஞ்சி தன் தமக்கை இல்லை என்கிற விடயம் பெரும் அதிர்ச்சியாய் இறங்கியிருந்ததில் அப்படியே அமர்ந்திருந்தாள்.
பிரபாகரன் குடும்பத்தினருக்கு வந்தபோது இருந்ததை விடவும் தற்போதைய நிலவரம் மிகுந்த இறுக்கமாக இருப்பது நன்றாகவே தெரிந்தது. அதைவிட இந்த நேரத்தில் திருமணம் குறித்துப் பேசுவது அநாகரீகம் என்று புரிந்துகொண்ட பிரபாகரன், “எல்லாம் சரியாகும் குணாளன். ரெண்டு நாள் போகட்டும். எல்லாரும் அமைதியா இருந்து கதைங்கோ.” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டார்.
இனி எதுவும் சரியாகும் என்கிற நம்பிக்கை குணாளனுக்கு இல்லை. அவருக்கு இளவஞ்சியைத் தெரியும். இனி அவர்களை எல்லாம் அரவணைத்துப் போன அந்த மகள் அவருக்குக் கிடைக்கவே மாட்டாள்!
கலங்கிப்போன மனமும் விழிகளுமாக அவர்களை நோக்கி, “உங்கட வீட்டில எல்லாரோடயும் கதைச்சு எவ்வளவு கெதியா ஏலுமோ அவ்வளவு கெதியா இந்தக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்ங்கோ. நடத்தி வைப்பம்.” என்று சொன்னார்.
“இளவஞ்சி?” என்றார் பிரபாகரன் கேள்வியாக.
“அவா என்ர மகள்தான். ஆனா இனி அது எனக்கு மட்டும்தான். அதால அவாட்ட இருந்து இனி ஒரு வார்த்த மறுப்பா வராது.” வேதனை மிகவுறச் சொன்னார்.
சரி என்பதுபோல் தலையசைத்த பிரபாகரன் நிலனைப் பார்த்தார். வரும்போது இளவஞ்சியை மணக்க அவ்வளவு பிடிவாதமாக இருந்தானே இனி என்ன செய்யப்போகிறான் என்று மிகுந்த மனக்கவலையோடு வந்தவர் இப்போது மகன் மனநிலை என்ன என்று தெரியாது நின்றார்.
நிலனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. அவன் தன் முடிவில் தெளிவாக இருந்தான். அதைவிட அவர்களிடம் மன்னிப்பைக் கேட்டுவிட்டுப் போனவள் பின்னாலேயே அவன் எண்ணம் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தது.
அந்த நிமிடமே அவளைப் பார்க்கத் துடித்தவன் தன் வீட்டினரை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
ஆனால், அவன் நினைத்ததை அவனால் செயலாற்ற முடியவே இல்லை.
அவளின் அலுவலகத்திற்கே நேராகச் சென்றவனைச் சந்திக்க மறுத்தாள் இளவஞ்சி. அன்று மட்டுமன்று. அதன் பிறகு வந்த நாள்களிலும் அவனால் அவளைப் பார்க்க முடியவில்லை.
தன்னைத் தானே தனிமைச் சிறையில் போட்டுப் பூட்டியிருந்தாள்.
அன்று மாலை வீடு வந்தவள், “நான் இந்த வீட்டில இருக்கலாமா? இல்லை, வெளில போகோணுமா?” என்றாள் குணாளனிடம்.
துடித்துப்போனார் மனிதர். “அம்மாச்சி, அப்பா ஏற்கனவே நல்லா உடஞ்சிட்டனம்மா. நீங்களும் சேர்ந்து நோகடிக்காதீங்கோ. இப்பவும் சொல்லுறன். நீங்க எனக்குப் பிறக்காம இருக்கலாம். ஆனா என்ர பிள்ளதான். இளவஞ்சிதான் என்ர மூத்த மகள்.” என்றார் தழுதழுத்த குரலில்.
அதன் பிறகு அவள் அந்த வீட்டில் யாரோடும் எதுவும் கதைப்பதேயில்லை.
*****